Wednesday, July 5, 2017

03.04.052 - சிவன் - தச்சன் - சிலேடை

03.04 – சிவன் சிலேடைகள்

2006-05-21

3.4.52 - சிவன் - தச்சன் - சிலேடை

-------------------------------------------------------------

பலகைகள் கொண்டு படைப்பான் அனைத்தும்

நலம்திகழ் சக்கரம் நல்குவான் நல்ல

நிலைபெறலாம் நேரிழை சாதனமுண் டென்னில்

தலைமாலை சூடிதச் சன்.


சொற்பொருள்:

பலகை - 1. மரப்பலகை; / 2. பல + கை;

நிலை - 1. கதவு நிலை (Door frame); / 2. நிலைமை; கதி;

நேர் - செவ்வை;

இழை - ஆபரணம்;

இழைத்தல் - செதுக்குதல்; (To plane, scrape off);

சாதனம் - 1. கருவி; / 2. உருத்திராக்ஷம்;

நேரிழை - பெண்;

நேரிழை சாதனம் - நேராக இழைக்கும் கருவி = இழைப்புளி;

என்னில் - என்றால்;


தச்சன்:

பலகைகள் கொண்டு படைப்பான் அனைத்தும் - மரப்பலகைகளைக் கொண்டு பல்வேறு பொருள்கள் செய்வான்;

நலம் திகழ் சக்கரம் நல்குவான் - நமக்கு மிகவும் பயனுள்ள சக்கரம் செய்து தருவான்;

நல்ல நிலை பெறலாம் - நல்ல கதவு நிலையும் (Door frame) (அவனிடமிருந்து) கிடைக்கும்;

நேரிழை சாதனம் உண்டு - (அவனிடம்) நேராக இழைக்கும் கருவி (இழைப்புளி) உண்டு;

என்னில் தச்சன் - என்றால், அவன் தச்சன் (Carpenter);


சிவன்:

பல கைகள் கொண்டு படைப்பான் அனைத்தும் - பல கைகள் இருக்கும்; எல்லாம் படைப்பவன்;

நலம் திகழ் சக்கரம் நல்குவான் - (அன்று திருமால் வேண்ட) சக்கரப் படை அளித்தான்;

நல்ல நிலை பெறலாம் - (அவனை வேண்டினால் நாம்) நல்ல நிலையை அடையலாம். (அப்பர் தேவாரம் - 6.31.3 - "நிலைபெறுமாறு எண்ணுதியேல் நெஞ்சே நீவா");

நேரிழை சாதனம் உண்டு - (அவன் திருமேனியில்) பார்வதியும் உருத்திராக்ஷமும் இருக்கும்;

என்னில் தலைமாலை சூடி - என்றால், அவன் மண்டையோட்டு மாலை அணிந்த சிவபெருமான்;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment