Sunday, July 16, 2017

03.04.063 - சிவன் - வில் - சிலேடை

03.04 – சிவன் சிலேடைகள்

2006-06-10

3.4.63 - சிவன் - வில் - சிலேடை

-------------------------------------------------------------

சிலையெனச் சொல்வர் சிலர்நாண் அரவம்

பலசெய்யும் திண்டோட் பவனியறி வோம்பேர்

உலகு படைஎன் றுரைக்கும் பெருமை

இலகும்வில் முக்கண் இறை.


சொற்பொருள்:

சிலை - 1. வில்; / 2. விக்கிரஹம்;

நாண் - 1. வில்லின் நாண்; / 2. கயிறு;

அரவம் - 1. ஒலி; / 2. பாம்பு;

திண்டோட் பவனி - திண் + தோள் + பவனி;

பவனி - உலா;

பேர் - 1. பெரிய; / 2. பெயர்;

உலகு - உலகம்; உலக மக்கள்;

படை - ஆயுதம்;

இலகுதல் - விளங்குதல்;

இறை - இறைவன்;


வில்:

சிலைனச் சொல்வர் சிலர் - வில்லுக்குச் சிலை என்ற சொல்லைச் சிலர் பயன்படுத்துவர்.

நாண் அரவம் பல செய்யும் - (வில், நாண் இவற்றின் வடிவம், பயன்படுத்திய பொருள்கள் போன்றவற்றை ஒட்டி) நாணைச் சுண்டினால் எழும் ஒலி பலவகைப்படும்.

திண்டோட்-பவனி அறிவோம் - (வீரர்களது) வலிமைமிக்க தோளில் அமர்ந்து பவனி வருவது நாம் அறிந்ததே.

பேர்உலகு படை என்று உரைக்கும் பெருமை இலகும் - இந்தப் பெரிய உலகத்து மக்கள் வில்லை ஆயுதம் என்று சொல்லும் பெருமையை உடையது;

வில் - வில்;


சிவன்:

சிலை எனச் சொல்வர் சிலர் - சிலர் (நாத்திகர்கள்) (தெய்வம் இல்லை, அது) வெறும் சிலை என்று சொல்வார்கள்.

நாண் அரவம் பல செய்யும் - சிவனுக்குப் பல பாம்புகள் கயிறு ஆவன. (அரைநாண், தலைமாலையைக் கோக்கும் கயிறு, முப்புரம் எரித்தபொழுது மேருமலையால் ஆன வில்லுக்கு நாண், முதலியன); (திருநாவுக்கரசர் தேவாரம் - 4.107.7 - "பன்னக மாலை பணிகயிறா உடைதலை கோத்துழல் மேனியன்");

திண்டோட்-பவனி அறிவோம் - (உற்சவ மூர்த்தியாகப்) பக்தர்களது உரம் மிக்க தோளில் பவனி வருவான்.

பேர் உலகு படை என்று உரைக்கும் - உலகத்தவர் அவனது நாமத்தைக் காக்கும் ஆயுதமாக உச்சரிப்பர். (--அல்லது-- பிரமனைத் தோற்றுவித்து அவனை 'உலகங்களைப் படைப்பாயாக' என்று சொல்வான்). (திருநாவுக்கரசர் தேவாரம் - 4.81.8 - "படைக்கலமாக உன் நாமத்து எழுத்தஞ்சு என் நாவிற் கொண்டேன்");

பெருமை இலகும் முக்கண் இறை - இத்தைய பெருமை உடையவன் நெற்றிக்கண் உடைய கடவுளான சிவன்;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

03.04.062 - சிவன் - விசிறி - சிலேடை

03.04 – சிவன் சிலேடைகள்

2006-06-09

3.4.62 - சிவன் - விசிறி - சிலேடை

-------------------------------------------------------------

கையேறும் ஓரோலை கல்யாணப் பந்தலில்

மெய்வேர்த்து வேண்டிப் பலர்இருப்பர் பொய்யன்று

சுட்டெரிகண் ணுண்டு சுழலுமும்பர் இன்புறவில்

தொட்டெயிலட் டான்விசிறி சொல்.


சொற்பொருள்:

ஓலை - 1. பனையோலை; / 2. பனையோலையில் எழுதப்பெற்ற பத்திரம்;

மெய் - 1. உடல்; / 2. உண்மை; சத்தியம்;

வேர்த்தல் - 1. வியர்த்தல்; / 2. அஞ்சுதல்;

வேண்டுதல் - 1. விரும்புதல்; / 2. பிரார்த்தித்தல்;

கண் - 1. இடம்; / 2. கண் என்ற உறுப்பு; விழி;

சுட்டெரிகண் - 1. சுட்டு எரிக்கின்ற இடம்; / 2. சுட்டு எரிக்கின்ற நெற்றிக்கண்;

சுழலுதல் - 1. வட்டமாகச் சுற்றுதல்; / 2. மனம் கலங்குதல்; சஞ்சலப்படுதல்;

உம்பர் - 1. மேலிடம்; / 2. தேவர்கள்;

எயில் - மதில்; கோட்டை; ஊர்;

அடுதல் - அழித்தல்;


விசிறி:

கைறும் ஓர் ஓலை - (மக்களது) கையில் சேரும் ஓர் ஓலையால் ஆன பொருள்.

கல்யாணப் பந்தலில் மெய் வேர்த்து வேண்டிப் பலர் இருப்பர் பொய்யன்று - திருமணப் பந்தலில் உடல் வியர்க்க, (விசிறியை) விரும்பிப் பலர் இருப்பார்கள். இது உண்மைதான்.

சுட்டு எரி-கண் உண்டு - வெப்பம் மிக்க இடத்தில் இருக்கும் பொருள். (குளிர்ச்சி மிக்க பிரதேசங்களில் தேவை இல்லை). (திருவாசகம் - திருவெம்பாவை - 8.7.18 - "கண்ணார் இரவி கதிர் வந்து கார் கரப்பத்" - கண் ஆர் இரவி - இடம் நிறைந்த சூரியன்);

சுழலும் உம்பர் இன்புற - (இக்காலத்தில் மின்விசிறி வடிவத்தில் அது) உயரமான இடத்தில் (மக்கள்) இன்புறச் சுற்றுவதும் உண்டு.

விசிறி சொல் - விசிறி.


சிவன்:

கை ஏறும் ஓர் ஓலை கல்யாணப் பந்தலில் - (சுந்தரரது) திருமணப் பந்தலில் சிவபெருமான் தனது கையில் ஓர் ஓலையை வைத்திருந்தான்.

மெய் - (அவன்) மெய்ப்பொருள்.

வேர்த்து வேண்டிப் பலர் இருப்பர் - (துன்பங்களை) அஞ்சிப் பலர் பிரார்த்திப்பார்கள்.

பொய் அன்று சுட்டு எரி-கண் உண்டு - (அவனுக்குச்) சுட்டெரிக்கும் (நெற்றிக்) கண் இருப்பது உண்மையே.

சுழலும் உம்பர் இன்புற வில் தொட்டு எயில் அட்டான் - மனம் கலங்கிய தேவர்கள் மகிழும்படி ஒரு வில்லைத் தொட்டு முப்புரங்களை எரித்து அழித்தவன்; (சுந்தரர் தேவாரம் - 7.24.10 - "ஏரார் முப்புரமும் எரியச் சிலை தொட்டவனை")


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

Saturday, July 8, 2017

03.04.061 - சிவன் - காற்பந்து ஆட்டம் (Soccer/Football) - சிலேடை

03.04 – சிவன் சிலேடைகள்

2006-06-09

3.4.61 - சிவன் - காற்பந்து ஆட்டம் (Soccer/Football) - சிலேடை

-------------------------------------------------------------

World Cup 2006 special edition!


கைவைக்குங் கால்நிறுத்திக் காலால் உதைப்பருள்

நையுமே காண்பவர்க்கு மூன்றுமெட்டும் ஆகுமணி

வையம் அறிந்ததே மாதரும் பங்கேற்பர்

பையர வார்த்தவர்காற் பந்து.


சொற்பொருள்:

கால் - 1. கால்; பாதம்; / 2. a. சமயம்; பொழுது; b. காலன்; இயமன்;

உள் - மனம்;

நைதல் - 1. வாடுதல்; நிலைகெடுதல்; 2. கனிதல்; தன்னை மறத்தல்;

காணுதல் - 1. பார்த்தல்; / 2. ஆராய்தல்; தரிசித்தல்; அனுபவித்தல்;

ஆகுமணி - 1. ஆகும் அணி; / 2. ஆகும் மணி;

அணி - 1. குழு; / 2. ஆபரணம்;

மணி - சிறந்த மணி போன்றவர்;

அறிந்ததே - 1. அறிந்தது + ; / 2. அறிந்த தே; (தே - தெய்வம்);

மாதரும் - 1. மாதர் + உம் ; / 2. மாது + அரும்;

பையரவு - படத்தையுடைய பாம்பு;

ஆர்த்தல் - கட்டுதல்;


காற்பந்து (Soccer / Football):

கை வைக்குங்கால் நிறுத்திக் காலால் உதைப்பர் - (ஆடுபவர் பந்தின்மேல்) கையை வைத்தால் (ஆடுபவரது கை பந்தின்மேல் படும் சமயத்தில்), (ஆட்டத்தை / பந்தை) நிறுத்திப் பந்தைக் காலால் உதைப்பார்கள்.

உள் நையுமே காண்பவர்க்கு - (அந்த விஷயம் தாம் ஆதரிக்கும் அணிக்கு எதிராக இருந்தால்) பார்ப்பவர்களது மனம் வாடும். (Especially, if it happens to be a penalty kick);

மூன்றும் எட்டும் ஆகும் அணி, வையம் அறிந்ததே - ஒரு அணியில் (8+3) பதினொருவர் இருப்பார்கள். (இதனை) உலகு அறியும்.

மாதரும் பங்கேற்பர் - பெண்களும் (இவ்விளையாட்டை) ஆடுவார்கள்.

காற்பந்து - காற்பந்து (soccer / football);


சிவன்:

கைவைக்குங்கால் நிறுத்திக் காலால் உதைப்பர் - (தமது அடியவரான மார்க்கண்டேயர் மேல் எமன்) கையை வைத்த சமயத்தில் தடுத்து நிறுத்தி (அவனைக்) காலால் உதைத்தார்.

உள் நையுமே காண்பவர்க்கு - (ஈசனை எண்ணி) ஆராயும் பக்தர்களது உள்ளம் கனியும்.

மூன்றும் எட்டும் ஆகும் மணி - மூன்றும் எட்டும் ஆகத் தோன்றுகின்ற (மும்மூர்த்தி, அஷ்டமூர்த்தி), மணி போன்றவர்;

வையம் அறிந்த தே - உலகம் அறிந்த தெய்வம்;

மாது அரும் பங்கு ஏற்பர் - பார்வதியைத் தம் உடலின் அரிய பங்காக ஏற்பவர்.

பையரவு ஆர்த்தவர் - நாகப்பாம்பை அரைநாணாகக் கட்டியவர்;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

03.04.060 - சிவன் - ஒற்றி (அடைமானம்) - சிலேடை

03.04 – சிவன் சிலேடைகள்

2006-06-05

3.4.60 - சிவன் - ஒற்றி (அடைமானம்) - சிலேடை

-------------------------------------------------------------

ஒருவரிடம் உள்ளவர் என்றறிந் தற்றார்

வருவரே பத்திரம் ஈவர் திருவுடைச்

செல்வர் அவர்கொடுப்பார் தேவையறிந் திவ்வுலகோர்

சொல்வரொற்றி ஈசர் துணை.


சொற்பொருள்:

ஒருவர் - 1. ஒரு மனிதர்; / 2. ஒப்பற்றவர்;

இடம் - 1. ஏழாம் வேற்றுமை உருபு; / 2. இடப்பக்கம்; ஆகாயம்;

உள்ளவன் - பணக்காரன்;

அற்றார் - 1. வறியவர்; / 2. துறவிகள்; பக்தர்கள்;

பத்திரம் - 1. (வீடு, நிலம் போன்றவற்றின்) சாசனம்; / 2. பாதுகாப்பு;

திரு - 1. செல்வம்; / 2. பாக்கியம்; தெய்வத்தன்மை;

ஒற்றி - 1. அடைமானம் (Pledge, property mortgaged or hypothecated); / 2. திருவொற்றியூர்;

துணை - 1) ஒப்பு; 2) காப்பு;


ஒற்றி (அடைமானம்):

ஒருவரிடம் உள்ளவர் என்று அறிந்து அற்றார் வருவரே - (ஒருவரைப்) பணம் உள்ளவர் என்று அறிந்து அவரிடம் பணமுடை உள்ளவர்கள் வருவார்கள்.

பத்திரம் ஈவர் - (தங்களுக்குச் சொந்தமான நிலம், வீடு போன்றவற்றின்) பத்திரத்தைக் கொடுப்பார்கள்.

திருவுடைச் செல்வர் அவர் கொடுப்பார் தேவை அறிந்து - (அதனைப் பெற்றுக்கொண்டு) அச்செல்வர் வந்தவருடைய தேவையைத் தெரிந்துகொண்டு (அடைமானம் வைத்ததன் மதிப்பையும் கருத்திற்கொண்டு) பணம் கொடுப்பார்.

இவ்வுலகோர் சொல்வர் ஒற்றி - உலகோர் இதனை ஒற்றி (அடைமானம்) என்பார்கள்;


சிவன்:

ஒருவர் இடம் உள்ளவர் என்று அறிந்து அற்றார் வருவரே - "ஒப்பற்றவர், ஒருவரை (உமையை) இடப்பக்கம் கொண்டவர்" என்று உணர்ந்து (அப்பெருமானாரை நாடி) அடியவர்கள் வருவார்கள்.

பத்திரம் ஈவர் - (அவர்களுக்கு அப்பெருமானார்) பாதுகாப்பு அளிப்பார்.

திருவுடைச் செல்வர் அவர் கொடுப்பார் தேவை அறிந்து - சகல செல்வங்களுக்கும் உறைவிடமான அவர் பக்தர்களுடைய தேவையை அறிந்து கொடுப்பார். (திருவாசகம் - குழைத்த பத்து - திருமுறை 8.33.6 - வேண்டத் தக்க தறிவோய்நீ வேண்ட முழுதும் தருவோய்நீ");

இவ்வுலகோர் சொல்வர் ஒற்றி ஈசர் துணை - உலகோர், ஒற்றியூர் உறையும் சிவபெருமானாரைத் "துணை" என்று சொல்வார்கள்.


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

03.04.059 - சிவன் - வைத்தியர் - சிலேடை

03.04 – சிவன் சிலேடைகள்

2006-06-02

3.4.59 - சிவன் - வைத்தியர் - சிலேடை

-------------------------------------------------------------

பித்தர் பிணிக்குப் பெருமருந்து நல்குவார்

சத்தியுட னாநட மாடமகிழ் கின்றவர்

வித்தகர் பற்று வியாதியெலாம் போக்குவார்

அத்தரொரு வைத்தியர் ஆங்கு.


சொற்பொருள்:

பித்தர் - 1. மனநோய் உள்ளவர்; / 2. சிவபெருமான் திருநாமங்களுள் ஒன்று = பேரருளாளர்;

மருந்து - 1. ஔஷதம்; / 2. அமுதம்;

சத்தியுடனாநடமாட - 1. சத்தியுடன் நாம் நடமாட; / 2. சத்தி உடனா() நடம் ஆட;

நடமாடுதல் - 1. உலாவுதல்; / 2. கூத்தாடுதல்;

உடனாதல் - கூடிநிற்றல்;

மகிழ்தல் - 1. சந்தோஷப்படுதல்; / 2. விரும்புதல்;

வித்தகர் - 1. கல்வியிற் சிறந்தவர்; / 2. வல்லவர்;

பற்று வியாதி - 1. பற்றுகின்ற நோய் (infectious diseases); / 2. பாசமும் (உலகப் பற்று), நோய்களும்;

பற்று - பற்றுக்கோடு (Support) - ஆதாரம்; தஞ்சம்;

அத்தர் - தந்தையார்;

ஆங்கு - 1. உவம உருபு; 2. அசை;


இலக்கணக் குறிப்புகள்:

1. உடனா = உடனாக என்பது கடைக்குறையாக வந்தது;

2. ஆறுமுக நாவலரின் இலக்கணச் சுருக்கம் - "146. மகரத்தின் முன் மெல்லினம் வரின், இறுதி மகரம் இரு-வழியிலும் கெடும்".


வைத்தியர்:

பித்தர் பிணிக்குப் பெருமருந்து நல்குவார் - மனநோய் உள்ளவர்களது நோய்க்குத் தக்க மருந்து அளிப்பவர்.

சத்தியுடன் நாம் நடமாட மகிழ்கின்றவர் - நாம் (முன்பு நோயாளிகளாக இருந்து, பிறகு அவருடைய மருத்துவத்தால் நலம்பெற்றுச்) சக்தியுடன் நடமாடக் கண்டு, (தமது திறமையின் வெற்றியை எண்ணி) மகிழ்வார்.

வித்தகர் - நிரம்பப் படித்தவர்.

பற்று வியாதியெலாம் போக்குவார் - பற்றுகின்ற ('infectious') வியாதிகளை எல்லாம் போக்குவார்.

ஒரு வைத்தியர் - ஒரு மருத்துவர்;


சிவன்:

பித்தர் - பித்தர் (பேரருளாளர்) என்ற திருநாமம் உடையவர்.

பிணிக்குப் பெருமருந்து நல்குவார் - பிறவிப் பிணி தீர அருளமுதத்தை வழங்குபவர். (திருநாவுக்கரசர் தேவாரம் - 5.60.4 - "நோய்பிணி போகத் துரப்பதோர் மருந்தும் ஆகுவர் மன்னு மாற்பேறரே");

சத்தி உடனா நடமாட மகிழ்கின்றவர் - பார்வதி சேர்ந்திருக்கத் திருக்கூத்தை விரும்பிச் செய்பவர்.

வித்தகர் - எல்லாம் வல்லவர்.

பற்று வியாதியெலாம் போக்குவார் - (பக்தர்களுக்குத்) தஞ்சம் (ஆக விளங்குபவர்). பக்தர்களது பற்றுகளையும் உடல்நோய்களையும் போக்குவார் ("வைத்தியநாதர்").

அத்தர் - எம் தந்தை ஆனவர்;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

03.04.058 - சிவன் - பானை - சிலேடை

03.04 – சிவன் சிலேடைகள்

2006-05-30

3.4.58 - சிவன் - பானை - சிலேடை

-------------------------------------------------------------

பெண்ணிடஞ்சேர் பெற்றி பிறங்கும் எரிவென்ற

வண்ணமுருக் காட்டும் வடிவுபல எண்ணில்

வரும்தண்ணீர் தாங்கும் உடைதலையும் காண்போம்

கருங்களன் மட்பானை காண்.


சொற்பொருள்:

இடம் - 1. ஏழாம் வேற்றுமை உருபு; / 2. இடப்பக்கம்;

பெற்றி - தன்மை; பெருமை;

பிறங்குதல் - விளங்குதல்;

எரி - நெருப்பு; தீ;

வெல்தல் - 1. ஜெயித்தல் (To conquer, overcome); / 2. ஒத்தல் (To resemble);

எண்ணில் - எண்ணினால்; தியானித்தால்;

உடைதலை - 1. உடைபடுவதை; / 2. உடைபட்ட தலை;

கருங்களன் - நீலகண்டன்; (களம் - கண்டம்);

மட்பானை - மண்ணால் ஆன பானை;

காண் - முன்னிலை அசை;


பானை:

பெண்ணிடம் சேர் பெற்றி பிறங்கும் - பெண்களிடம் சேர்கின்ற தன்மை இருக்கும்;

எரி வென்ற வண்ணம் உருக் காட்டும் - நெருப்பை வென்ற (தீயினாற் சுடப்பட்டும் அதனால் எரிக்கப்படாத) சிறப்பை அதன் உருவம் காட்டும்;

வடிவு பல எண்ணில் வரும் - எண்ணினால் பல வடிவங்களில் உள்ள பானைகள் நினைவிற்கு வரும்;

தண்ணீர் தாங்கும் - தண்ணீரைத் தன்னுள் தாங்கும்;

உடைதலையும் காண்போம் - (கீழே விழுந்தால்) உடைவதையும் காணலாம்;

மட்பானை - மண்ணால் ஆன பானை;


சிவன்:

பெண் இடம் சேர் பெற்றி பிறங்கும் - இடப்பக்கம் உமை சேர்கின்ற பெருமை திகழும்;

எரி வென்ற வண்ணம் உருக் காட்டும் - தீப் போன்ற செம்மேனியன்;

வடிவு பல - அவன் வடிவங்கள் பல;

எண்ணில் வரும் - தியானித்தால் காட்சி கொடுப்பான்;

தண்ணீர் தாங்கும் - கங்காதரன்;

உடைதலையும் காண்போம் - அவன் கையில் (பிரமனது) உடைந்த மண்டையோட்டையும் காணலாம்;

கருங்களன் - நீலகண்டன்; (திருஞானசம்பந்தர் தேவாரம் - 3.113.9 - "கடல்விடம் உண்ட கருங்களனே");


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

03.04.057 - சிவன் - வேலி - சிலேடை

03.04 – சிவன் சிலேடைகள்

2006-05-29

3.4.57 - சிவன் - வேலி - சிலேடை

-------------------------------------------------------------

எல்லை எனநிற்கு முள்ளிருக்கும் காத்திடும்

நல்ல அரணாகி நம்மனோர் செல்லும்

வழிகாட்டும் ஏறுகொடி மன்னுமொரு வேலி

விழிகாட்டும் நெற்றியுடை வேந்து.


சொற்பொருள்:

எல்லை - வரம்பு;

நிற்குமுள்ளிருக்கும் - 1. நிற்கும் முள் இருக்கும் ; / 2. நிற்கும் உள் இருக்கும்;

உள் - உள்ளே; உள்ளம்;

அரண் - பாதுகாவல்; கோட்டை;

நம்மனோர் - எம்மனோர் - எம்மை ஒத்தவர்; நாங்கள்;

ஏறு - 1) ஏறுதல்; / 2. இடபம்;

கொடி - 1. படர்கின்ற தாவரம்; / 2. சின்னமாகப் பறக்கவிடுகின்ற கொடி;

மன்னுதல் - 1. மிகுதல்; 2. தங்குதல்; நிலைபெறுதல்;

வேந்து - அரசன்;


வேலி:

எல்லை என நிற்கும் - (ஓர் இடத்தைச் சுற்றி) எல்லையாக இருக்கும்.

முள் இருக்கும் - அதனில் முள் இருக்கும்.

காத்திடும் நல்ல அரண் ஆகி - நல்ல பாதுகாவலாகிக் காக்கும்.

நம்மனோர் செல்லும் வழி காட்டும் - நம் போன்றோர் செல்ல வழி இருக்கும்.

ஏறு கொடி மன்னும் - அதன்மேல் ஏறுகின்ற கொடிகள் படர்ந்திருக்கும்.

ஒரு வேலி - (வீடு முதலிய இடங்களைச் சுற்றி இருக்கும்) வேலி.


சிவன்:

எல்லை என நிற்கும் - (எல்லாவற்றுக்கும் - இப்பிரபஞ்சத்தின்) எல்லையாக இருப்பவன்.

உள் இருக்கும் - (அவ்வாறு இருந்தாலும்) உள்ளே இருப்பான். (இப்பிரபஞ்சத்தினுள்ளும், நம் மனத்திலும் இருப்பவன்).

காத்திடும் நல்ல அரண் ஆகி - (பக்தர்களுக்கு) நல்ல பாதுகாவல் ஆகிக் காப்பான்.

நம்மனோர் செல்லும் வழி காட்டும் - நாம் செல்லும் நெறியைக் காட்டுவான்.

ஏறு கொடி மன்னும் - (அவனது) கொடியில் இடபச் சின்னம் இருக்கும்.

விழி காட்டும் நெற்றியுடை வேந்து - நெற்றியில் கண் உடைய அரசனான சிவபெருமான். (சம்பந்தர் தேவாரம் - 2.48.1 - "கண்காட்டு நுதலானும் ... விடைகாட்டும் கொடியானே").


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

03.04.056 - சிவன் - சவுக்காரம் (soap) - சிலேடை

03.04 – சிவன் சிலேடைகள்

2006-05-29

3.4.56 - சிவன் - சவுக்காரம் (soap) - சிலேடை

-------------------------------------------------------------

நிறையும் அழுக்ககற்றும் நீரோடு சேரும்

கறைமறையா தென்றும் இருக்கும் குறையும்

பறையுநங்கை சேரப் படுநோய் தவிர்க்கும்

இறைவன் சவுக்காரம் ஈங்கு.


சொற்பொருள்:

அழுக்கு - 1. புற அழுக்கு; / 2. மன அழுக்கு; ஆணவம் முதலிய மும்மலங்கள்;

நீர் - 1. ஜலம்; / 2. ஆறு; கடல்;

ஓடு - 1. மூன்றாம் வேற்றுமையுருபு; / 2. மண்டையோடு;

சேர்தல் - கலத்தல்; ஒன்றுகூடுதல்;

கறை - 1. துணிகளில் நிரந்தரமாகப் படியும் மாசு (stain); / 2. கறுப்புநிறம்; விஷம்;

பறைதல் - அழிதல்;

பறையுநங்கை - பறையும் நம் கை;

இலக்கணக் குறிப்பு: ஆறுமுக நாவலரின் இலக்கணச் சுருக்கம்: "146. மகரத்தின் முன் மெல்லினம் வரின், இறுதி மகரம், இருவழியிலுங் கெடும்."

நங்கைசேர - 1. நம் கை சேர; / 2. நங்கை சேர; (நங்கை - பெண்);

படுநோய் - 1. கொடிய வியாதி; / 2. கொடிய பிறவிப்பிணி;

தவிர்த்தல் - 1. தடுத்தல்; / 2. நீக்குதல்;

ஈங்கு - இவ்விடம்; இப்படி;


சவுக்காரம் (soap):

நிறையும் அழுக்கு அகற்றும், நீரோடு சேரும் - (அது) நீருடன் சேரும்; (துணிமேல், நம்மேல்) நிறைகின்ற அழுக்கைப் போக்கும்;

கறை மறையாது என்றும் இருக்கும் - (ஆயினும், துணிமேல் இருக்கும் சில) கறைகள் எப்போதும் மறையாமல் இருக்கும்;

குறையும் பறையும் நம் கை சேரப் - (அது) நம் கையை அடைந்து (கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்து) குறையும்; (பிறகு முற்றிலும்) அழிந்துவிடும்;

படுநோய் தவிர்க்கும் - கொடிய வியாதிகளைத் தடுக்கும்;

சவுக்காரம் ஈங்கு - சோப்பு (soap);


சிவன்:

நிறையும் அழுக்கு அகற்றும் - நிறைகின்ற (நமது மன) அழுக்கை அகற்றுவான்; (அல்லது - மும்மலங்களைப் போக்குவான்);

நீர் ஓடு சேரும் - (சடையில்) கங்கையும், (கையில்) மண்டையோடும் சேரும்;

கறை மறையாது என்றும் இருக்கும் - (கண்டத்தில்) கறை மறையாது எப்பொழுதும் இருக்கும். (-அல்லது- "நீரோடு சேரும் கறை..." - கடலோடு கலந்த விஷம் அவன் கண்டத்தில் என்றும் திகழும்); (சம்பந்தர் தேவாரம் - 3.4.1 - "கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை மிடறினில் அடக்கிய வேதியனே:):

குறையும் பறையும் நம் கை சேரப் - நாம் கரம்குவித்து வணங்க, நமது குறைகள் எல்லாம் அழியும்;

படுநோய் தவிர்க்கும் - கொடிய பிறவிப்பிணியைத் தீர்ப்பான்;

இறைவன் ங்கு - சிவபெருமான்;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

03.04.055 - சிவன் - சீப்பு - சிலேடை

03.04 – சிவன் சிலேடைகள்

2006-05-28

3.4.55 - சிவன் - சீப்பு - சிலேடை

-------------------------------------------------------------

வண்ணம் வடிவம் பலகொள்ளும் ஆடிமுன்

கண்டுநின்று கையேந்தும் இவ்வுலகு முண்டர்

அணுகார் அரிவையர் என்றும் பிரியார்

அணுஅண்டம் ஆம்அரன்சீப் பாங்கு.


சொற்பொருள்:

வண்ணம் - 1. நிறம்; / 2. குணம்;

ஆடி - 1. முகம் பார்க்கும் கண்ணாடி; / 2. கூத்து ஆடுபவன்;

முண்டர் - 1. மொட்டை அடித்துக்கொண்டவர்; / 2. முரடர்; (முண்டு - முருட்டுத்தனம்; மடமை);

அரிவை - பெண்;

ஆம் - ஆகும்;

ஆங்கு - ஓர் உவம உருபு ; அசைச்சொல்;


சீப்பு:

வண்ணம் வடிவம் பல கொள்ளும் - நிறத்திலும் வடிவத்திலும் பலவிதமாக வரும்;

ஆடிமுன் கண்டு நின்று கை ஏந்தும் இவ்வுலகு - கண்ணாடி முன்னால் நின்று பார்த்து மக்கள் கையில் அதனை ஏந்துவார்கள்;

முண்டர் அணுகார் - தலையை ஒட்ட மழித்துக்கொண்டவர் அதன் அருகில் வரமாட்டார்கள்;

அரிவையர் என்றும் பிரியார் - பெண்கள் அதனைப் பிரியமாட்டாரகள்; (தங்கள் கைப்பையில் எப்பொழுதும் எடுத்துச் செல்வார்கள்);

சீப்பு ஆங்கு - சீப்பு ;


சிவன்:

வண்ணம் வடிவம் பல கொள்ளும் ஆடி முன் கண்டுநின்று கையேந்தும் இவ்வுலகு - எல்லாக் குணங்களும் வடிவங்களும் கொள்கின்ற, கூத்தன் (சன்னிதி) முன் நின்று தரிசித்து மக்கள் (வரங்கள் வேண்டிக்) கையை ஏந்தி நிற்பார்கள்;

முண்டர் அணுகார் - முரடர்கள் அவரை அடையார்; ("தலை பறித்த சமணர்கள் அவரை அடையார்" என்றும் கொள்ளல் ஆம்);

அரிவையர் என்றும் பிரியார் - பார்வதி, கங்கை என்ற இருவரையும் எப்போதும் பிரியாதவர்; (பின்னர் அரன் என்று வந்ததால், இங்கே சிலேடை நோக்கிப் "பிரியார்" என்று வந்தது ஒருமைபன்மை மயக்கம்);

அணு அண்டம் ஆம் அரன் - அணுவும் ஆகி அண்டமும் ஆகின்ற அரன்; (ஓர் அணுவையே அண்டம் போல் தோன்றச் செய்யுமாறு மிக நுண்ணியன் என்றும் பொருல்கொள்ளல் ஆம்); (கருவூர்த் தேவர் - திருவிசைப்பா - 9.13.6 - "அண்டம்ஓர் அணுவாம் பெருமைகொண் டணுஓர் அண்டமாம் சிறுமைகொண்டு")


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------