03.04 – சிவன் சிலேடைகள்
2006-04-09
3.4.19 - சிவன் - தணல் - சிலேடை
-------------------------------------------------------------
வெளியில் விரவிடும் வெண்பொடி ஆயின்
ஒளிதிகழ் உண்மை உருவும் தெளியலாம்
தெண்புனல்தன் மேல்விழச் சீறும் அரவமுண்டு
தண்மதி சூடி தணல்.
வெளி - 1) புறம்; / 2) ஆகாசம்;
விரவுதல் - 1) பொருந்துதல்; / 2) கலத்தல்;
வெண்பொடி - 1) சாம்பல்; 2) திருநீறு;
ஆய்தல் - ஆராய்தல்;
ஆயின் - 1) ஆனால்; / 2) ஆய்ந்தால் - ஆராய்ந்தால்; சிந்தித்தால்;
தெண்புனல் - 1) தெளிந்த நீர்; / 2) கங்கை;
மேல் - 1) ஏழாம் வேற்றுமை உருபு; / 2) தலை;
அரவம் - 1) ஒலி; 2) பாம்பு;
தண் - குளிர்ந்த;
சூடி - சூடியவன்;
தணல் - கனிந்த நெருப்பு (Live coals, embers, cinders);
தணல்:
புறத்தில் சாம்பல் பொருந்தியிருக்கும். ஆனால், ஒளிவீசும் நெருப்பு வடிவமும் ஐயமின்றித் தெரிந்துகொள்ளலாம். அதன்மேல் நீர் விழுந்தால் (புஸ்ஸென்று) சீறுகின்ற ஓசை எழும்; நீறு பூத்த நெருப்பு;
சிவன்:
பஞ்சபூதங்களில் ஒன்றான ஆகாயத்திலும் கலந்திருப்பான். திருமேனியின் மேல் திருநீறு இருக்கும். (இவ்வாறு - "வெளியில் விரவிடும்" - என்ற சொற்றொடரை இருமுறை இயைத்துப் பொருள்கொள்ளல் ஆம்). (ஞானிகள்) ஆழ்ந்து சிந்தித்தால் (அவனது) உண்மை வடிவான ஒளிதிகழும் சோதி வடிவத்தையும் உணரல் ஆம். திருமுடிமேல் கங்கை விழும்; தன்மேல் கங்கைநீர்த் திவலைகள் விழக்கண்டு சீறுகின்ற பாம்பும் அங்கே உண்டு. ( இவ்வாறு - "தெண்புனல்தன் மேல்விழ" - என்ற சொற்றொடரை இருமுறை இயைத்துப் பொருள்கொள்ளல் ஆம்). குளிர்ந்த திங்களை அணிந்தவன்.
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
No comments:
Post a Comment