03.04 – சிவன் சிலேடைகள்
2006-04-06
3.4.17 - சிவன் - வாழை - சிலேடை - 2
-------------------------------------------------------------
பூவனும் பச்சையும் போற்றுதலால் மங்கலம்
ஆவதால் சாலவளிந் தற்றோர்கை சேர்வதால்
ஏழை யிடமிருக்கும் என்பதால் வான்கனியாம்
வாழை வடகயிலை மன்.
பூவன் = 1) வாழை வகை; / 2) பிரமன்;
பச்சை = 1) வாழை வகை; / 2) விஷ்ணு;
போற்றுதல் = 1) பாதுகாத்தல்; வளர்த்தல்; / 2) வணங்குதல்;
மங்கலம் = சிவம்;
அளிதல் = 1) கனிதல்; / 2) உள்ளம் குழைதல்;
அற்றோர் = 1) ஒன்றும் இல்லாதவர்; / 2) ஆழ்ந்த பக்தி உடையவர்கள்;
கை சேர்தல் = 1) கையில் சேர்தல்; / 2) கைகூப்புதல்;
ஏழை = 1) வறியவர்; / 2) பெண்;
இடம் - 1) ஏழாம் வேற்றுமை உருபு; / 2) இடப்பக்கம்;
வான் - பெருமை; நன்மை; வானுலகம்;
வான்கனி = 1) சிறந்த பழம்; / 2) வானுலகக் கனி - கற்பகக் கனி; (**1)
மன் - அரசன்; தலைவன்;
வாழை:
பூவன், பச்சை, முதலிய வகைகளை மக்கள் விரும்பி வளர்ப்பார்கள். (திருமணம் போன்ற சுபகாரியங்கள் சமயத்தில்) மங்கலச் சின்னமாகக் கருதுவார்கள். (வாயிலில் கட்டி வைப்பார்கள்). (அதன் பழம்) மிகவும் கனிந்து அளிந்துவிட்டல், பிச்சைக்காரனுக்கு இடுவார்கள். வறியவர்களிடமும் இருக்கும் பழம்; (குறைந்த விலையில் கிட்டும் பழம்); சிறந்த பழம் ஆகும். வாழை.
சிவன்:
பிரமனும் விஷ்ணுவும் (அடிமுடி அறியாது) வணங்கினார்கள். மங்கல ஸ்வரூபி. பக்தர்கள் மிகவும் மனம் குழைந்து கைகூப்புவார்கள். உமை இடப்பக்கம் இருப்பாள். (பக்தர்களுக்குத்) தேவலோகக் கனி (**1) போன்றவன். வடக்கே உள்ள கயிலைமலை நாதன்.
பிற்குறிப்புகள்:
**1 – சேந்தனார் - திருவிசைப்பா - 9.5.2 -
கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியைக்
.. கரையிலாக் கருணைமா கடலை
மற்றவர் அறியா மாணிக்க மலையை
.. மதிப்பவர் மனமணி விளக்கைச்
செற்றவர் புரங்கள் செற்றஎம் சிவனைத்
.. திருவீழி மிழலைவீற் றிருந்த
கொற்றவன் றன்னைக் கண்டுகண் டுள்ளம்
.. குளிரஎன் கண்குளிர்ந் தனவே
**1 - திருநாவுக்கரசர் தேவாரம் - போற்றித் திருத்தாண்டகம் - திருமுறை 6.32.1 -
கற்றவர்கள் உண்ணும் கனியே போற்றி
.. கழலடைந்தார் செல்லும் கதியே போற்றி
அற்றவர்கட்கு ஆரமுதம் ஆனாய் போற்றி
.. அல்லல் அறுத்து அடியேனை ஆண்டாய் போற்றி
மற்றொருவர் ஒப்பில்லா மைந்தா போற்றி
.. வானவர்கள் போற்றும் மருந்தே போற்றி
செற்றவர்தம் புரமெரித்த சிவனே போற்றி
.. திருமூலட் டானனே போற்றி போற்றி.
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
No comments:
Post a Comment