03.04 – சிவன் சிலேடைகள்
2006-04-05
3.4.16 - சிவன் - வாழை - சிலேடை - 1
-------------------------------------------------------------
தண்டுளதால் கன்றுளதால் தாருளதால் பூவையும்
கொண்டொரு கூட்டுரு வாவதால் உண்டியிலை
என்பதால் ஓர்கிளை இன்மையால் இவ்வாழை
என்பணியும் முக்கண் இறை.
தண்டு = 1) (வாழைத்) தண்டு; / 2) தண்டாயுதம் (**1 அப்பர் தேவாரம் 6.97.9)
கன்று = 1) (வாழைக்) கன்று; / 2) (மான்) கன்று;
தார் = 1) (தாறு = ) குலை; / 2) (பூ) மாலை;
பூவை = 1) பூவினை; மலரை; 2) பெண்;
கூட்டு = 1) கூட்டு என்னும் உணவுவகை; / 2) கலப்பு;
உரு - வடிவம்;
உருவாதல் - வடிவுறுதல் (To assume a form, take shape);
உண்டியிலை = 1) உணவு இலை; / 2) உணவு இல்லை; (**2 அப்பர் தேவாரம் 6.55.11)
கிளை = 1) (மரக்)கிளை; / 2) சுற்றம்;
என்பு - எலும்பு;
வாழை:
(உள்ளே) தண்டு இருக்கும். (அருகே) கன்று இருக்கும். குலை இருக்கும். வாழைப்பூவைக் கொண்டு ஒரு கூட்டுச் செய்வார்கள். சாப்பாட்டு இலை ஆகும். கிளை எதுவும் இல்லாமல் இருக்கும். வாழை மரம்.
சிவன்:
தண்டாயுதம் ஏந்தியவன். (**1). (மான்) கன்று ஏந்தியவன். (கொன்றை) மாலை அணிந்தவன். பார்வதியையும் (உடனாகக்) கொண்டு ஒன்றாக இணைந்த உரு ஆனவன். (அவனுக்கு) உணவு இல்லை. (**2). உறவினர் இல்லாதவன். (**3). எலும்பை அணிந்த, முக்கண்ணனான இறைவன்.
பிற்குறிப்புகள்:
**1 - அப்பர் தேவாரம் - திருமுறை 6.97.9 -
விரையுண்ட வெண்ணீறு தானு முண்டு
.… வெண்டலைகை யுண்டொருகை வீணை யுண்டு
சுரையுண்டு சூடும் பிறையொன் றுண்டு
.… சூலமுந் தண்டுஞ் சுமந்த துண்டு
அரையுண்ட கோவண ஆடை யுண்டு
.… வலிக்கோலுந் தோலு மழகா வுண்டு
இரையுண் டறியாத பாம்பு முண்டு
.… இமையோர் பெருமா னிலாத தென்னே.
**2 - அப்பர் தேவாரம் - திருமுறை 6.55.11 -
உண்ணா துறங்கா திருந்தாய் போற்றி
.… ஓதாதே வேத முணர்ந்தாய் போற்றி
எண்ணா இலங்கைக்கோன் றன்னைப் போற்றி
.… இறைவிரலால் வைத்துகந்த ஈசா போற்றி
பண்ணா ரிசையின்சொற் கேட்டாய் போற்றி
.… பண்டேயென் சிந்தை புகுந்தாய் போற்றி
கண்ணா யுலகுக்கு நின்றாய் போற்றி
.… கயிலை மலையானே போற்றி போற்றி.
**3 – திருவாசகம் - திருச்சாழல் - 8.12.3
கோயில் சுடுகாடு கொல்புலித்தோல் நல்லாடை
தாயுமிலி தந்தையிலி தான்தனியன் காணேடீ
தாயுமிலி தந்தையிலி தான்தனியன் ஆயிடினுங்
காயில் உலகனைத்துங் கற்பொடிகாண் சாழலோ
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
No comments:
Post a Comment