03.04 – சிவன் சிலேடைகள்
2006-03-25
3.4.10 - சிவன் - தென்னைமரம் - சிலேடை
-------------------------------------------------------------
இலையென்றும் உண்டென்றும் சொல்வதால் என்றும்
நிலையாகி நிற்பதால் நீரைத் தலையினில்
தாங்குவதால் பிள்ளையுருத் தான்கொண்டு கோடில்லாப்
பாங்குளதெங்(கு) ஈசன் பகர்.
இலை = 1) இலை; 2) இல்லை;
நிலை = 1) கதவு நிலை; தூண்; 2) மாறாத, அழியாத தன்மை;
பிள்ளை - 1) தென்னம்பிள்ளை; 2) மகன்;
கோடு - 1) மரக்கிளை; 2) நடுநிலை நீங்குதல்; பாரபட்சம் / பட்சபாதம்;
பாங்கு - இயல்பு;
தெங்கு - தென்னை;
பகர்தல் - சொல்தல்;
தென்னைமரம்:
(இலையுதிர்காலத்தில் பல மரங்கள் இலைகளே இன்றி இருக்கும். அவ்வாறன்றித் தென்னையின் இயல்புகளைக் கூறும்பொழுது இம்மரத்தில்) எப்பொழுதும் இலை உண்டு என்றும் சொல்வார்கள். வீடுகளில் கதவுக்கு இருக்கும் நிலையாக இருக்கும். (அல்லது - 1. தூணாக இருக்கும் - அல்லது - 2. நகராமல் ஒரே இடத்தில் இருக்கும்). உச்சியில் இளநீரைத் தாங்கியிருக்கும். தென்னம்பிள்ளை உருவும் ஆகும். கிளைகளின்றி இருக்கும்.
சிவன்:
(கடவுள்) இல்லை என்றும் உண்டு என்றும் (முறையே, நாத்திகர், ஆத்திகர்) சொல்வார்கள். என்றும் அழியாமல் நிலைத்து இருப்பவன். தனது தலையில் கங்கையைத் தாங்கியவன். முருகனாகப் பிள்ளை உரு ஆனவன். என்றும் நடுநிலை நீங்காத குணம் உடையவன்;
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
No comments:
Post a Comment