03.04 – சிவன் சிலேடைகள்
2006-03-23
8. சிவன் - மரம் - சிலேடை
--------------------------------------------
காடிடம் ஆவதால் காற்றூக் கிடுவதால்
தேடிப் பலரடி சேர்வதால் வாடியோர்க்(கு)
இன்பம் பயத்தலால் ஏறுகொடி மேவுதலால்
மன்புகழ்மா தேவன் மரம்.
காடு = 1) கானகம்; / 2) சுடுகாடு;
காற்றூக்கிடுவதால் = 1) காற்று ஊக்கிடுவதால்; / 2) கால் தூக்கிடுவதால்; (கால் தூக்கிடுவதால் = காற்றூக்கிடுவதால் - றகர ஒற்று விரித்தல் விகாரம்)
ஊக்குதல் = ஆட்டுதல்;
ஏறு - 1) ஏறுதல்; 2) இடபம்;
கொடி - 1) தாவரவகை; 2) துவஜம்;
மேவுதல் - பொருந்துதல்; விரும்புதல்;
மன் - நிலைத்த; அரசன்;
மரம்:
காட்டில் இருக்கும். காற்று (அதனை) ஆட்டும். (வெயிலில்) மரத்தடியைத் தேடிப் பலர் வருவார்கள். (அவ்வாறு வெயிலில்) வாடியவர்களுக்கு (நிழலால்) இன்பம் அளிக்கும். அதன் மேல் ஏறுகின்ற கொடிகள் பொருந்தியிருக்கும்.
சிவன்:
சுடுகாடு அவன் இருக்கும் இடம். கால் தூக்கி நடம் இடுவான். அவனது திருவடியைப் பலர் தேடி அடைவார்கள். (வினையின் வெம்மையால்) வாடி அவ்வாறு திருவடியை அடைந்தவர்களுக்கு (வினையைத் தீர்த்து) இன்பம் அளிப்பான். இடபம் கொடியில் பொருந்தியிருக்கும் (இடபக் கொடியை உடையவன்). நிலைத்த புகழ் உடைய மகாதேவன்.
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
No comments:
Post a Comment