Saturday, November 12, 2016

03.04.007 - சிவன் - கணக்கன் (Accountant) - சிலேடை

03.04 – சிவன் சிலேடைகள்


2006-03-22
7) சிவன் - கணக்கன் (Accountant) - சிலேடை
---------------------------------------------------------
என்றும் கணக்கை எழுதி இரண்டினுள்
ஒன்றை உணர்த்துவதால் எண்குணம் என்பதால்
நட்டமு மாறு மதியுள்ள தால்கணக்கன்
சிட்டன் சிவனுக் கிணை.



எண்குணம் - 1) எண்ணுகின்ற குணம்; 2) எட்டுக் குணங்கள்; (இறைவனது எண்குணங்கள் - "தன்வயம், தூய உடம்பு, இயற்கை உணர்வு, முற்றுணர்வு. இயல்பாகவே பாசம் இன்மை, பேரருள், முடிவிலாற்றல், வரம்பில் இன்பம்" என்பன);
நட்டமு மாறு மதி = 1) நட்டமும் மாறும் மதி; / 2) நட்டமும் ஆறும் மதி
நட்டம் = 1) நஷ்டம்; / 2) நடனம்;
கணக்கன் - கணக்கு எழுதுவோன்;
சிட்டன் = சிரேஷ்டன்; உயர்ச்சியுடையோன் = ஈசன்



கணக்கன் (Accountant):
எப்பொழுதும் வரவுசெலவுக் கணக்கை எழுதுவார். இலாப நஷ்டம் என்னும் இரண்டுள் ஏதாவது ஒன்றை நமக்குத் தெரிவிப்பார். எப்பொழும் எதனையும் எண்களாகவே நோக்கும் குணம் உடையவர். ("எண்ணுகின்ற (counting) குணம் உடையவர்" என்றும் பொருள்கொள்ளலாம்). (சில சமயம் அவருடைய) சாமர்த்தியத்தால் நஷ்டமும் (இலாபமாக) மாறும்.



சிவன்:
நாம் செய்யும் பாவ புண்ணியக் கணக்கை எப்பொழுதும் எழுதுவான். அவ்விரண்டுள் எது அதிகம் செய்திருக்கிறோம் என்பதை (நாம் அனுபவிக்கும் இன்பதுன்பங்கள் மூலம்) நமக்கு உணர்த்துவான். எட்டுக் குணங்கள் உடையவன். திருநடனமும், (கங்கை) ஆறும், சந்திரனும் உள்ளவன்.



(திருநாவுக்கரசர் தேவாரம்: திருக்குறுந்தொகை - திருமுறை # 5.21.8 -
தொழுது தூ மலர் தூவித் துதித்து நின்று
அழுது காமுற்று அரற்றுகின்றாரையும்
பொழுது போக்கிப் புறக்கணிப்பாரையும்
எழுதும் கீழ்க்கணக்கு இன்னம்பர் ஈசனே.
)

அன்போடு,

வி. சுப்பிரமணியன்

No comments:

Post a Comment