Thursday, November 24, 2016

03.04.021 - சிவன் - வெளி (ஆகாசம்) - சிலேடை

03.04 – சிவன் சிலேடைகள்

2006-04-11

3.4.21 - சிவன் - வெளி (ஆகாசம்) - சிலேடை

-------------------------------------------------------------

அனைத்தையும் தன்னுள் அடக்கினும் அங்கோர்

தினையணு உள்ளும் திகழ்ந்து தனக்கொரு

தோற்றம் முடிவின்றித் தோன்றுவதால் செஞ்சடையில்

ஆற்றன் வெளியென் றறி.


சொற்பொருள்:

தோற்றம் - 1. வடிவம்; / 2. பிறப்பு;

முடிவு - 2. எல்லை; / 2. இறப்பு;

ஆற்றன் - கங்காதரன்;

வெளி - ஆகாசம் (space);


வெளி (ஆகாசம் - ஐம்பூதங்களில் ஒன்று):

எல்லாவற்றையும் தன்னுள் கொண்டிருந்தாலும், தினை அணு இவைபோன்ற நுண்ணிய பொருள்களின் உள்ளேயும் (- அல்லது - தினையிலுள்ள அணுவின் உள்ளேயும்) அஃது உள்ளது. அதற்கு ஒரு வடிவம், எல்லை போன்றவை இல்லை. ஆகாசம்.


சிவன்:

(இப்பிரபஞ்சத்தில் உள்ள அண்டங்கள்) எல்லாம் அவனுள் அடங்கும். ஆயினும், அவன் தினை அணு இவைபோன்ற நுண்ணிய பொருள்களின் உள்ளேயும் (- அல்லது - தினையிலுள்ள அணுவின் உள்ளேயும்) இருக்கின்றான். அவனுக்குப் பிறப்பும் இறப்பும் இல்லை. ("வடிவம், அளவு இல்லை" - என்றும் பொருள்கொள்ளல் ஆம்). சிவந்த சடையில் கங்கையை உடைய சிவன்.


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

03.04.020 - சிவன் - காற்று - சிலேடை

03.04 – சிவன் சிலேடைகள்

2006-04-09

3.4.20 - சிவன் - காற்று - சிலேடை

-------------------------------------------------------------

உண்ணின் றுயிர்களை ஓம்புவதால் மெய்யுணர்வாய்க்

கண்ணினாற் காணற் கருமையினால் பண்ணிய

வானூர்தி ஏறுதலால் வையம்சூழ் மாண்பினால்

ஆனூர் அரன்காற் றறி.


சொற்பொருள்:

உண்ணின்று - உள் நின்று;

ஓம்புதல் - பாதுகாத்தல்;

மெய் - 1. உடல்; / 2. உண்மை;

அருமை - 1. இன்மை; / 2. எளிதிற் பெறக்கூடாமை;

பண்ணிய வானூர்தி - 1. செய்த விமானம்; / 2. வான் பண்ணிய ஊர்தி - தேவர்கள் செய்த தேர்;

வையம் - 1. பூமி; / 2. உலகமக்கள்;

சூழ்தல் - 1. சுற்றியிருத்தல்; / 2. பிரதட்சிணம் செய்தல்;

ஊர்தல் - ஏறுதல் ஏறிச்செலுத்துதல்;
ஆனூர் அரன் - (சம்பந்தர் தேவாரம் - 1.73.1 - "கானூர் மேய கண்ணார் நெற்றி ஆனூர் செல்வரே.");


காற்று:

ள் நின்று யிர்களை ஓம்புவதால் - எல்லா உயிர்களின் உள்ளே இருந்து உயிர்வாழச் செய்யும்.

மெய்-ணர்வாய்க் கண்ணினால் காணற்கு அருமையினால் - (வீசும்பொழுது) நம் உடலால் உணரக்கூடியது. (ஆனால்) கண்ணால் காண முடியாத தன்மை உடையது.

பண்ணிய வானூர்தி ஏறுதலால் - (மனிதர்) செய்த விமானம் காற்றில் ஏறிச் செல்லும்.

வையம் சூழ் மாண்பினால் - இவ்வுலகத்தைக் காற்றுச் சூழ்ந்திருக்கும்.

காற்று அறி - காற்று.


சிவன்:

ள் நின்று யிர்களை ஓம்புவதால் - எல்லா உயிர்களின் உள்ளே இருந்து பேணுபவன்;

மெய்-ணர்வாய்க் கண்ணினால் காணற்கு அருமையினால் - மெய்ஞ்ஞானம் ஆனவன். கண்ணால் எளிதிற் காண முடியாதவன்.

பண்ணிய வான் ஊர்தி ஏறுதலால் - (முப்புரம் எரித்தபொழுது) தேவர்கள் சமைத்த தேரில் ஏறியவன்;

வையம் சூழ் மாண்பினால் - உலகமக்கள் வலம்செய்து வழிபடுவர்;

ஆன் ஊர் அரன் அறி - இடபத்தை வாகனமாக உடைய சிவன்;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

03.04.019 - சிவன் - தணல் - சிலேடை

03.04 – சிவன் சிலேடைகள்

2006-04-09

3.4.19 - சிவன் - தணல் - சிலேடை

-------------------------------------------------------------

வெளியில் விரவிடும் வெண்பொடி ஆயின்

ஒளிதிகழ் உண்மை உருவும் தெளியலாம்

தெண்புனல்தன் மேல்விழச் சீறும் அரவமுண்டு

தண்மதி சூடி தணல்.


வெளி - 1) புறம்; / 2) ஆகாசம்;

விரவுதல் - 1) பொருந்துதல்; / 2) கலத்தல்;

வெண்பொடி - 1) சாம்பல்; 2) திருநீறு;

ஆய்தல் - ஆராய்தல்;

ஆயின் - 1) ஆனால்; / 2) ஆய்ந்தால் - ஆராய்ந்தால்; சிந்தித்தால்;

தெண்புனல் - 1) தெளிந்த நீர்; / 2) கங்கை;

மேல் - 1) ஏழாம் வேற்றுமை உருபு; / 2) தலை;

அரவம் - 1) ஒலி; 2) பாம்பு;

தண் - குளிர்ந்த;

சூடி - சூடியவன்;

தணல் - கனிந்த நெருப்பு (Live coals, embers, cinders);


தணல்:

புறத்தில் சாம்பல் பொருந்தியிருக்கும். ஆனால், ஒளிவீசும் நெருப்பு வடிவமும் ஐயமின்றித் தெரிந்துகொள்ளலாம். அதன்மேல் நீர் விழுந்தால் (புஸ்ஸென்று) சீறுகின்ற ஓசை எழும்நீறு பூத்த நெருப்பு;


சிவன்:

பஞ்சபூதங்களில் ஒன்றான ஆகாயத்திலும் கலந்திருப்பான். திருமேனியின் மேல் திருநீறு இருக்கும். (இவ்வாறு - "வெளியில் விரவிடும்" - என்ற சொற்றொடரை இருமுறை இயைத்துப் பொருள்கொள்ளல் ஆம்). (ஞானிகள்) ஆழ்ந்து சிந்தித்தால் (அவனது) உண்மை வடிவான ஒளிதிகழும் சோதி வடிவத்தையும் உணரல் ஆம். திருமுடிமேல் கங்கை விழும்; தன்மேல் கங்கைநீர்த் திவலைகள் விழக்கண்டு சீறுகின்ற பாம்பும் அங்கே உண்டு. ( இவ்வாறு - "தெண்புனல்தன் மேல்விழ" - என்ற சொற்றொடரை இருமுறை இயைத்துப் பொருள்கொள்ளல் ஆம்). குளிர்ந்த திங்களை அணிந்தவன்.


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

03.04.018 - சிவன் - நீர் - சிலேடை

03.04 – சிவன் சிலேடைகள்

2006-04-07

3.4.18 - சிவன் - நீர் - சிலேடை

-------------------------------------------------------------

மாமலை மேலே உறைவதால் வண்ணமில்

லாமல் இருப்பதால் ஆறாகிச் சேமநல்கு

தீர்த்தமாய் ஆவியிற் சேர்வதால் ஆனையுரி

போர்த்த பெருமான் புனல்.


மாமலை = 1) உயரமான மலை; / 2) கயிலைமலை;

வண்ணம் = 1) நிறம்; வடிவம்; / 2) குணம்; வடிவம்; (**1)

ஆறு = 1) நதி; / 2) வழி; நெறி;

சேமநல்கு தீர்த்தம் - க்ஷேமம் நல்கும் தீர்த்தம்;

சேமம் = 1) நல்வாழ்வு; / 2) இன்பம்; காவல்;

தீர்த்தம் = 1) நீர்; / 2) பரிசுத்தம்;

ஆவி = 2) நீர்நிலை; நீராவி; / 2) ஆன்மா; உயிர்;

உரி - தோல்;

புனல் - நீர்;


நீர்:

மிகவும் உயரமான மலையின்மேல் பனியாக உறையும். நிறம் அற்றது. ("வடிவம் இல்லாதது" - என்றும் பொருள்கொள்ளல் ஆம்). நதி ஆகி, (உயிர்களுக்கு) நன்மை தரும் நீர் ஆகும். ("பாவத்தைத் தீர்க்கும் கங்கை காவிரி முதலிய புண்ணிய நதிகள் ஆகும்" - என்றும் பொருள்கொள்ளல் ஆம்). நீர்நிலைகளில் இருக்கும். ("காற்றில் நீராவியாகச் சேரும்" - என்றும் பொருள்கொள்ளல் ஆம்).


சிவன்:

கயிலை மலையில் உறைவான். நிர்க்குணப் பிரும்மம். ("வடிவம் இல்லாதவன்" - என்றும் பொருள்கொள்ளல் ஆம்). (**1). (பக்தர்கள் உய்யும்) நல்வழி ஆவான். அவர்களுக்கு இன்பம் அளிப்பான். ("அவர்களைக் காப்பான்" - என்றும் பொருள்கொள்ளல் ஆம்). பரிசுத்தமானவன். உயிரில் கலந்து இருப்பான். யானைத்தோலைப் போர்த்த சிவபெருமான்.


பிற்குறிப்பு:

**1 – அப்பர் தேவரம் - 5.47.8

பண்ணில் ஓசை பழத்தினில் இன்சுவை

பெண்ணொ டாணென்று பேசற் கரியவன்

வண்ண மில்லி வடிவுவே றாயவன்

கண்ணில் உள்மணி கச்சியே கம்பனே.


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

Saturday, November 12, 2016

03.04.017 - சிவன் - வாழை - சிலேடை - 2

03.04 – சிவன் சிலேடைகள்

2006-04-06

3.4.17 - சிவன் - வாழை - சிலேடை - 2

-------------------------------------------------------------

பூவனும் பச்சையும் போற்றுதலால் மங்கலம்

ஆவதால் சாலவளிந் தற்றோர்கை சேர்வதால்

ஏழை யிடமிருக்கும் என்பதால் வான்கனியாம்

வாழை வடகயிலை மன்.


பூவன் = 1) வாழை வகை; / 2) பிரமன்;

பச்சை = 1) வாழை வகை; / 2) விஷ்ணு;

போற்றுதல் = 1) பாதுகாத்தல்; வளர்த்தல்; / 2) வணங்குதல்;

மங்கலம் = சிவம்;

அளிதல் = 1) கனிதல்; / 2) உள்ளம் குழைதல்;

அற்றோர் = 1) ஒன்றும் இல்லாதவர்; / 2) ஆழ்ந்த பக்தி உடையவர்கள்;

கை சேர்தல் = 1) கையில் சேர்தல்; / 2) கைகூப்புதல்;

ஏழை = 1) வறியவர்; / 2) பெண்;

இடம் - 1) ஏழாம் வேற்றுமை உருபு; / 2) இடப்பக்கம்;

வான் - பெருமை; நன்மை; வானுலகம்;

வான்கனி = 1) சிறந்த பழம்; / 2) வானுலகக் கனி - கற்பகக் கனி; (**1)

மன் - அரசன்; தலைவன்;


வாழை:

பூவன், பச்சை, முதலிய வகைகளை மக்கள் விரும்பி வளர்ப்பார்கள். (திருமணம் போன்ற சுபகாரியங்கள் சமயத்தில்) மங்கலச் சின்னமாகக் கருதுவார்கள். (வாயிலில் கட்டி வைப்பார்கள்). (அதன் பழம்) மிகவும் கனிந்து அளிந்துவிட்டல், பிச்சைக்காரனுக்கு இடுவார்கள். வறியவர்களிடமும் இருக்கும் பழம்; (குறைந்த விலையில் கிட்டும் பழம்); சிறந்த பழம் ஆகும். வாழை.


சிவன்:

பிரமனும் விஷ்ணுவும் (அடிமுடி அறியாது) வணங்கினார்கள். மங்கல ஸ்வரூபி. பக்தர்கள் மிகவும் மனம் குழைந்து கைகூப்புவார்கள். உமை இடப்பக்கம் இருப்பாள். (பக்தர்களுக்குத்) தேவலோகக் கனி (**1) போன்றவன். வடக்கே உள்ள கயிலைமலை நாதன்.


பிற்குறிப்புகள்:

**1 – சேந்தனார் - திருவிசைப்பா - 9.5.2 -

கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியைக்

.. கரையிலாக் கருணைமா கடலை

மற்றவர் அறியா மாணிக்க மலையை

.. மதிப்பவர் மனமணி விளக்கைச்

செற்றவர் புரங்கள் செற்றஎம் சிவனைத்

.. திருவீழி மிழலைவீற் றிருந்த

கொற்றவன் றன்னைக் கண்டுகண் டுள்ளம்

.. குளிரஎன் கண்குளிர்ந் தனவே


**1 - திருநாவுக்கரசர் தேவாரம் - போற்றித் திருத்தாண்டகம் - திருமுறை 6.32.1 -

கற்றவர்கள் உண்ணும் கனியே போற்றி

.. கழலடைந்தார் செல்லும் கதியே போற்றி

அற்றவர்கட்கு ஆரமுதம் ஆனாய் போற்றி

.. அல்லல் அறுத்து அடியேனை ஆண்டாய் போற்றி

மற்றொருவர் ஒப்பில்லா மைந்தா போற்றி

.. வானவர்கள் போற்றும் மருந்தே போற்றி

செற்றவர்தம் புரமெரித்த சிவனே போற்றி

.. திருமூலட் டானனே போற்றி போற்றி.


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

03.04.016 - சிவன் - வாழை - சிலேடை - 1

03.04 – சிவன் சிலேடைகள்

2006-04-05

3.4.16 - சிவன் - வாழை - சிலேடை - 1

-------------------------------------------------------------

தண்டுளதால் கன்றுளதால் தாருளதால் பூவையும்

கொண்டொரு கூட்டுரு வாவதால் உண்டியிலை

என்பதால் ஓர்கிளை இன்மையால் இவ்வாழை

என்பணியும் முக்கண் இறை.


தண்டு = 1) (வாழைத்) தண்டு; / 2) தண்டாயுதம் (**1 அப்பர் தேவாரம் 6.97.9)

கன்று = 1) (வாழைக்) கன்று; / 2) (மான்) கன்று;

தார் = 1) (தாறு = ) குலை; / 2) (பூ) மாலை;

பூவை = 1) பூவினை; மலரை; 2) பெண்;

கூட்டு = 1) கூட்டு என்னும் உணவுவகை; / 2) கலப்பு;

உரு - வடிவம்;

உருவாதல் - வடிவுறுதல் (To assume a form, take shape);

உண்டியிலை = 1) உணவு இலை; / 2) உணவு இல்லை; (**2 அப்பர் தேவாரம் 6.55.11)

கிளை = 1) (மரக்)கிளை; / 2) சுற்றம்;

என்பு - எலும்பு;


வாழை:

(உள்ளே) தண்டு இருக்கும். (அருகே) கன்று இருக்கும். குலை இருக்கும். வாழைப்பூவைக் கொண்டு ஒரு கூட்டுச் செய்வார்கள். சாப்பாட்டு இலை ஆகும். கிளை எதுவும் இல்லாமல் இருக்கும். வாழை மரம்.


சிவன்:

தண்டாயுதம் ஏந்தியவன். (**1). (மான்) கன்று ஏந்தியவன். (கொன்றை) மாலை அணிந்தவன். பார்வதியையும் (உடனாகக்) கொண்டு ஒன்றாக இணைந்த உரு ஆனவன். (அவனுக்கு) உணவு இல்லை. (**2). உறவினர் இல்லாதவன். (**3). எலும்பை அணிந்த, முக்கண்ணனான இறைவன்.


பிற்குறிப்புகள்:

**1 - அப்பர் தேவாரம் - திருமுறை 6.97.9 -

விரையுண்ட வெண்ணீறு தானு முண்டு

.… வெண்டலைகை யுண்டொருகை வீணை யுண்டு

சுரையுண்டு சூடும் பிறையொன் றுண்டு

.… சூலமுந் தண்டுஞ் சுமந்த துண்டு

அரையுண்ட கோவண ஆடை யுண்டு

.… வலிக்கோலுந் தோலு மழகா வுண்டு

இரையுண் டறியாத பாம்பு முண்டு

.… இமையோர் பெருமா னிலாத தென்னே.


**2 - அப்பர் தேவாரம் - திருமுறை 6.55.11 -

உண்ணா துறங்கா திருந்தாய் போற்றி

.… ஓதாதே வேத முணர்ந்தாய் போற்றி

எண்ணா இலங்கைக்கோன் றன்னைப் போற்றி

.… இறைவிரலால் வைத்துகந்த ஈசா போற்றி

பண்ணா ரிசையின்சொற் கேட்டாய் போற்றி

.… பண்டேயென் சிந்தை புகுந்தாய் போற்றி

கண்ணா யுலகுக்கு நின்றாய் போற்றி

.… கயிலை மலையானே போற்றி போற்றி.


**3 – திருவாசகம் - திருச்சாழல் - 8.12.3

கோயில் சுடுகாடு கொல்புலித்தோல் நல்லாடை

தாயுமிலி தந்தையிலி தான்தனியன் காணேடீ

தாயுமிலி தந்தையிலி தான்தனியன் ஆயிடினுங்

காயில் உலகனைத்துங் கற்பொடிகாண் சாழலோ


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

03.04.015 - சிவன் - பணியாள் - சிலேடை

03.04 – சிவன் சிலேடைகள்

2006-04-02

3.4.15 - சிவன் - பணியாள் - சிலேடை

-------------------------------------------------------------

கூப்பிட்டால் கைதருவான் முன்றிலிலும் போய்நிற்பான்

காப்பிட்டுக் கோலோச்சிக் காத்திடுவான் பூப்பிணையல்

கொண்டுவந்து நாளும் கொடுப்பான் விடமுண்ட

கண்டனோர் ஊழியன் காண்.


கூப்பிடுதல் - அழைத்தல்;

கூப்புதல் - குவித்தல்;

கைதருதல் - உதவிபுரிதல்;

தருதல் - ஈந்தருளுதல்;

முன்றில் - வீட்டின் முன்னிடம்;

காப்பு - 1) கதவின் தாழ்; 2) திருநீறு;

கோல் ஓச்சுதல் - 1) கம்பை உயர்த்துதல்; 2) ஆளுதல்;

பூப் பிணையல் - மலர்மாலை;

கொள்ளுதல் - 1) விலைக்கு வாங்குதல்; 2) அங்கீகரித்தல்; ஏற்றுக்கொள்தல்;

கொண்டுவந்து - 1) கொண்டு வந்து; 2) கொண்டு உவந்து;

நாளும் - 1) தினமும்; 2) ஆயுளும்;

காண் - முன்னிலை அசை;


பணியாள்:

அழைத்தால் வந்து (சொன்ன வேலையைச் செய்து) உதவிசெய்பவன். வாசலிலும் போய் நிற்பவன். (வாயில் கதவைத்) தாழிட்டுக் கையில் கம்பை வைத்துக்கொண்டு காவல் செய்பவன். (நாம் சொன்னபடி) தினமும் பூமாலைகளைக் (கடையிலிருந்து) வாங்கிவந்து கொடுப்பவன். வேலைக்காரன்.


சிவன்:

(பக்தர்கள்) அழைத்தால் வந்து உதவிசெய்வான்; ("கை கூப்பினால் அருள்செய்வான்" என்றும் பொருள்கொள்ளல் ஆம்). (பிச்சைக்காகப் பல இல்லங்களின்) வாசலில் போய் நிற்பவன்; திருமேனி முழுதும் திருநீற்றைப் பூசி, அண்டங்களை ஆண்டு காத்தருள்பவன். (பக்தர்கள் இடுகின்ற) பூமாலைகளை ஏற்று மகிழ்ந்து அவர்களுக்கு (விரும்பிய வரங்களையும், நீண்ட) ஆயுளையும் அளிப்பவன். விஷத்தை உண்ட நீலகண்டன்.


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

03.04.014 - சிவன் - தெருவிளக்கு - சிலேடை

03.04 – சிவன் சிலேடைகள்

2006-04-02

3.4.14 - சிவன் - தெருவிளக்கு - சிலேடை

-------------------------------------------------------------

விளக்கினை ஏந்தியூர் வாழ்த்திட நிற்கும்

உளவிருள் நீங்கி ஒளியும் விளங்கும்

வழிகாட்டும் தீமைகள் வாராமற் காக்கும்

விழிநுதலன் வீதி விளக்கு.


உள்ளுதல் - எண்ணுதல்; நினைதல்; தியானித்தல்;

உள - 1) உள்ள (இருக்கின்ற); 2) உள்ள (உள்ளத்து); 3) தியானிக்க; நினைக்க;

விளங்குதல் - 1) பிரகாசித்தல்; 2) தெளிவாதல்; பிரசித்தமாதல்;

விழிநுதலன் - நெற்றியில் கண் உடையவன்; (நுதல் - நெற்றி);


தெருவிளக்கு:

ஊர்மக்கள் வாழ்த்தும்படி விளக்கைத் தாங்கி நிற்கும். (இரவில்) இருக்கும் இருள் விலகி வெளிச்சம் பிரகாசிக்கும். (மக்களுக்குச் செல்லும்) வழியைக் காட்டும். தன் வெளிச்சத்தினால் மக்களுக்குப் பாதுகாப்பை அளிக்கும். தெருவிளக்கு.


சிவன்:

ஊரில் உள்ள பக்தர்கள் கையில் விளக்கை ஏந்தி நின்று தொழுவார்கள். ("விளக்கை ஏந்திப் பக்தர்கள் வாழ்த்துமாறு நிற்பவன்" என்றும் பொருள்கொள்ளல் ஆம்); தியானித்தால், (நமது) உள்ளத்து இருள் நீங்கி, அகவொளி விளங்கும். மேன்மை அடையும் வழியைக் காட்டுவான். தீயவை அணுகாமல் நம்மைக் காப்பான்; நெற்றிக்கண்ணன்.


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

03.04.013 - சிவன் - பூமி - சிலேடை

03.04 – சிவன் சிலேடைகள்

2006-03-30

3.4.13 - சிவன் - பூமி - சிலேடை

-------------------------------------------------------------

சுற்றிடும் எப்போதும் தொல்பொருள் தோன்றுமுயிர்

முற்றுமொடுங் கும்படியாம் முன்னிடில் பெற்றிருக்கும்

மாதரையாம் பண்பிருக்கும் வான்மதிசேர் மாண்பிருக்கும்

ஓதவிடம் உண்ணி உலகு.


சுற்றுதல் - 1) சுழல்தல்; சுற்றிவருதல்; 2) சூழ்ந்திருத்தல்;

முற்றும் - 1) வளர்ச்சி அடையும்; முதுமை அடையும்; 2) எல்லாம்;

படி - 1) பூமி; 2) விதம்; 2) விதம்;

முன்னுதல் - கருதுதல்; எண்ணுதல்;

பெற்று - 1) பெருமை; 2) எருது;

பெற்றிருக்கும் - 1) உடையது; பெருமை இருக்கும் 2) எருது உடையவன்;

மாதரையாம் - 1) மா தரை ஆம்; 2) மாது அரை ஆம்;

மா - பெருமை; அழகு;

வான் - வானம்; அழகு; பெருமை;

வால் - வெண்மை; தூய்மை;

வான்மதி - 1) வான் மதி (அழகிய நிலா; வானில் உள்ள நிலா); 2) வால் மதி (தூய அறிவு; பேரறிவு);

மாண்பு - மாட்சிமை; பெருமை; அழகு;

உண்ணி - உண்டவன்;


பூமி:

எப்பொழுதும் (தன்னைத் தானே சுற்றுவதோடு சூரியனையும்) சுற்றும். மிகவும் தொன்மையானது. உயிர்கள் பிறக்கும், வளரும் (அல்லது - முதுமை அடையும்), அடங்குமாறு ஆகும் (/ பூமி ஆகும்); சிந்தித்தால், அழகு உடைய பெரிய தரை ஆகும். அழகிய சந்திரன் பொருந்தியிருக்கும். உலகம் (பூமி).


சிவன்:

எப்பொழுதும் எங்கும் வியாபித்து இருப்பவன். பழம்பொருள். எல்லா உயிர்களும் தோன்றி ஒடுங்குமாறு ஆனவன். சிந்தித்தால், எருதினை (வாகனமாக) உடையவன்; எருதின்மேல் வீற்றிருப்பவன். திருமேனியில் உமை ஒரு பாதி ஆகும் பண்பு உடையவன்; பேரறிவாளன்; வெண்திங்களைச் சூடியவன். கடல்விடத்தை உண்ட சிவபெருமான்.


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

03.04.012 - சிவன் - சிலேடை - சிலேடை

03.04 – சிவன் சிலேடைகள்

2006-03-28

3.4.12 - சிவன் - சிலேடை - சிலேடை

---------------------------------------------

இருவிதமாய்த் தோன்றியென்றும் ஏற்ற பொருளைத்

தரும்போற்றி அன்பரெலாம் சால்பு கருதி

மொழிவரே கற்றார்கள் முன்னும் சிலேடை

அழிவென்றும் இல்லா அரன்.


ஏற்ற - தகுந்த;

பொருள் - 1) சொல்லின் அர்த்தம்; 2) வஸ்து; திரவியம்; செல்வம்;

போற்றுதல் - புகழ்தல்; துதித்தல்;

சால்பு - மேன்மை;

கருதுதல் - எண்ணுதல்; விரும்புதல்;

கற்றார் - கற்றவர்;

முன்னுதல் - கருதுதல் (To think, contemplate);

என்றும் - எக்காலத்தும்; ஒருநாளும்;


சிலேடை:

இரண்டு விதமாகத் தோன்றி எப்போதும் தகுந்த அர்த்தத்தைத் தரும். ("செம்மொழிச் சிலேடை, பிரிமொழிச் சிலேடை என்று இருவகை ஆகும்" என்றும் பொருள்கொள்ளலாம்); சொல்நயம் விரும்பும் அன்பர்கள் அதன் மேன்மையை விரும்பிப் புகழ்ந்து பேசுவார்கள்; கற்றவர்கள் எண்ணுகின்ற சிலேடை.


சிவன்:

அர்த்தநாரீஸ்வரனாக ஆண் பெண் என இருவிதமாய்த் தோன்றுவான். ("உரு அரு என்று இருவிதம் ஆனவன்" என்றும் பொருள்கொள்ளலாம்); எப்போதும் (பக்தர்களுக்குத்) தகுந்த பொருளை அளிப்பான். பக்தர்கள் அவன் பெருமையை, மேன்மையை மனத்திற்கொண்டு போற்றிப் பாடுவார்கள்; கற்றவர்கள் தியானிக்கின்ற, ஒருநாளும் அழிவு இல்லாத ( = என்றும் இருக்கும்) அரன்.


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

03.04.011 - சிவன் - திரைப்பட நடிகை - சிலேடை

03.04 – சிவன் சிலேடைகள்

2006-03-26

3.4.11 - சிவன் - திரைப்பட நடிகை - சிலேடை

-------------------------------------------------------------

நீர்முடி மேல்விழ நின்றுநடம் ஆடிவரும்

ஓர்நாரி பாதியுடல் ஒண்துகில் - சேர்கோலம்

காணவன்பர் கூட்டம் கருது(ம்)மிகக் காக்குமண்ட

வாணன் நடிகை வணம்.


நீர் - 1) தண்ணீர்; 2) கங்கை;

ஓர் - 1) ஒரு; 2) ஒப்பற்ற

நாரி - 1) பெண்; 2) உமாதேவி;

ஒண்மை - ஒளி; அழகு;

துகில் - நல்லாடை;

கருதுதல் - விரும்புதல்; எண்ணுதல்;

காத்தல் = 1) எதிர்பார்த்தல்; காத்திருத்தல் (to wait); 2) பாதுகாத்தல்;

அண்டவாணன் - எங்கும் நிறைந்த இறைவன்;

வணம் - வண்ணம் - குணம்; தன்மை;


திரைப்பட நடிகை:

(திரைப்படங்களில்) தண்ணீர் தலைமேல் விழ (அருவியின் கீழ்) நின்று (நனைந்து) ஆடிப் பாடி வருகின்ற ஒரு பெண்; அழகிய துணி பாதி உடலில் (மட்டும்) சேரும் கோலத்தைக் காண ரசிகர் கூட்டம் விரும்பும்; அந்த ரசிகர் கூட்டம் (படத்தைக் காணவும், டிக்கெட் வாங்கவும்) மிகவும் எதிர்பார்த்துக் காத்திருக்கும்;


சிவன்:

கங்கை திருமுடிமேல் விழ நின்று (தாங்கிக்), கூத்து ஆடி வருபவன்; ஒப்பற்ற உமாதேவி திருமேனியில் பாதியாகி, அந்தப் பாதியில் அழகிய நல்லாடை சேரும் கோலமான அர்த்தநாரீஸ்வர வடிவத்தைத் தரிசிக்க அடியார்குழாம் மிக விரும்பும்; (அத்தகைய அடியார்களைக்) காக்கின்றவன் எங்கும் நிறைந்த சிவபெருமான்;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------