03.04 – சிவன் சிலேடைகள்
2006-04-20
3.4.33 - சிவன் - மேகம் - சிலேடை - 3
-------------------------------------------------------------
வானத்தில் வாழ்ந்தாலும் மண்ணில் வரும்பொழுதோர்
ஏனத்தில் ஏந்துவதும் உண்டுவே றான
உருவத்தில் மின்னற் கொடியிடை யோடு
மருவுரு காட்டுசிவன் மஞ்சு.
சொற்பொருள்:
ஏனம் - பாத்திரம்;
வேறு - 1. பிறிது; / 2. சிறப்புடையது;
கொடியிடை யோடு மருவுரு - 1. கொடி இடை ஓடும் அருவுரு; / 2. கொடியிடையோடு மருவு உரு;
அருவுரு - சிவலிங்கம்;
மருவுதல் - கலந்து இருத்தல்; தோன்றுதல்;
மஞ்சு - மேகம்;
மேகம்:
வானத்தில் வாழ்ந்தாலும் - மேகமாக வானத்தில் இருக்கும்.
மண்ணில் வரும்பொழுது ஓர் ஏனத்தில் ஏந்துவதும் உண்டு வேறு ஆன உருவத்தில் - பூமிக்கு வரும்பொழுது (மேகத்தினின்றும்) மாறுபட்ட (நீர்) வடிவத்தில் பாத்திரத்தில் (மக்கள்) ஏந்துவதும் உண்டு.
மின்னல் கொடி இடை ஓடும் - (மேகத்தின்) நடுவே மின்னல் வீசும்;
(அருவுரு காட்டு சிவன்) -
மஞ்சு - மேகம்;
சிவன்:
வானத்தில் வாழ்ந்தாலும் - சிவலோகத்தில் (உருவமின்றி) இருந்தாலும்,
மண்ணில் வரும்பொழுது ஓர் ஏனத்தில் ஏந்துவதும் உண்டு வேறு ஆன உருவத்தில் - இவ்வுலகில் வரும்போது, வேறு ஒரு வடிவத்தில் (அழகிய பிச்சாடனர் கோலத்தில்) வந்து, ஒரு (மண்டையோடு என்ற) பிச்சைப் பாத்திரத்தில் பிச்சையேற்பதும் உண்டு.
வேறு ஆன உருவத்தில் மின்னற்கொடி-இடையோடு மருவு உரு காட்டு சிவன் - மின்னல்கொடி போன்ற சிற்றிடை உடைய பார்வதியோடு இணைந்து அர்த்தநாரீஸ்வரனாகக் காட்சி தருகின்ற சிவபெருமான்.
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------