Monday, May 1, 2023

08.05.031 - தண்டியடிகள் வரலாறு - மணியை அடித்த

08.05 – பலவகை

2008-01-05

08.05.031 - தண்டியடிகள் வரலாறு - மணியை அடித்த

----------------------------------------

(அறுசீர் விருத்தம் - மா மா காய் - அரையடி வாய்பாடு)


1)

மணியை அடித்த பசுவிற்கா

.. மகனைக் கூடத் தண்டிக்கத்

துணியும் அரசன் மனுநீதிச்

.. சோழன் ஆண்ட ஆரூரில்

மணியாய்த் தண்டி வந்துதித்தார்;

.. மனக்கண் மட்டும் பெற்றிருந்தார்;

தணியா அன்பால் தியாகேசன்

.. தாளைத் தினமும் தொழுதுவந்தார்.


பசுவிற்கா - பசுவிற்காக – கடைக்குறை;

தண்டி வந்து உதித்தார் - தண்டியடிகள் அவதரித்தார்;

மனக்கண் மட்டும் பெற்றிருந்தார் - பிறவிக்குருடர்;

தணியா - தணியாத - குறையாத;

தியாகேசன் - திருவாரூரில் சிவன் திருநாமம்;

தொழுதுவந்தார் - தொழுது உவந்தார்; / தொழுது வந்தார்;


2)

அந்த நாளில் அமணர்கள்

.. ஆதிக் கத்தால் திருவாரூர்

எந்தை கோயிற் குளம்சுற்றி

.. எங்கும் அவர்கள் பாழிகளே

வந்த டைந்து, குளம்தூர்ந்து

.. மறையத் தொடங்கு வதுகேட்டு

நொந்து, குளத்தை விரிவாக்கும்

.. நோக்கம் கொண்டார் தண்டியுமே.


அமணர் - சமணர்கள்;

எந்தை - எம் தந்தை - கடவுள்;

பாழி - சமணர்களது ஆலயம்/உறைவிடம்;


3)

கரையில் கோலை நாட்டிஒரு

.. கயிற்றைக் கட்டிக் குளம்நடுவே

தரையில் இன்னோர் கோல்நட்டுத்

.. தடவி நடந்து தளராமல்

இரவு பகலாய் மண்தோண்டி

.. எடுத்து வெளியில் கொட்டி,முன்னர்ப்

புரங்கள் எரித்த பெருமானைப்

.. போற்றித் தொண்டு புரிந்துவந்தார்.


நாட்டுதல் - நடுதல்;


4)

அதனைக் கண்டு சமணரெலாம்

.. "அடாத செயலால் பல்லுயிரை

வதைக்கின் றீரே; நிறுத்துங்கள்;

.. மண்ணைத் தோண்டா தீர்"என்றார்;

"இதைநான் செய்வ தறமே"என்

.. றியம்பித் தண்டி தொடர்ந்துசெய்தார்;

மதம்பி டித்த மனத்தமணர்

.. மறித்து நின்று வசைமொழிந்தார்,


பதம் பிரித்து:

அதனைக் கண்டு சமணரெலாம் "அடாத செயலால் பல்லுயிரை வதைக்கின்றீரே; நிறுத்துங்கள்; மண்ணைத் தோண்டாதீர்" என்றார்; "இதை நான் செய்வது அறமே" என்று இயம்பித் தண்டி தொடர்ந்துசெய்தார்; மதம் பிடித்த மனத்து அமணர் மறித்து நின்று வசை மொழிந்தார்,


இப்பாடலின் கருத்து அடுத்த பாடலிலும் தொடர்கிறது.

அடாத – தகாத;

அறம் - தர்மம்; புண்ணியம்;

இயம்பி - சொல்லி;

மறித்தல் - தடுத்தல்;


5)

"பார்க்கும் கண்தான் குருடென்றால்

.. பாவம் உமது காதுகளும்

கேட்கும் திறனை இழந்தனவோ"?

.. கேட்ட தண்டி அவர்களிடம்

"நோக்கும் கண்கள் இருந்தாலும்

.. நோக்காக் குருடர் ஆகிவிட்டீர்;

வாக்கில் இனிமை இல்லாதீர்

.. மாயக் குழியில் விழுந்தீரே;


இப்பாடலின் கருத்து அடுத்த பாடலிலும் தொடர்கிறது.

மாயம் - பொய்; அஞ்ஞானம்;


6)

யார்க்கும் தலைவன் சிவபெருமான்

.. அருளால் எனது கண்களுக்குப்

பார்க்கும் சக்தி வந்தும்கண்

.. பார்வை இழந்தால் என்செய்வீர்

மூர்க்க ரே"என் றெதிர்க்கேள்வி

.. மொழிந்தார்; "அவ்வா றானால்நாம்

ஊர்க்குள் இராது போவோம்"என்

.. றுரைத்த அமணர், மிகச்சினந்து,


பதம் பிரித்து:

"யார்க்கும் தலைவன் சிவபெருமான் அருளால் எனது கண்களுக்குப் பார்க்கும் சக்தி வந்து உம் கண் பார்வை இழந்தால் என் செய்வீர் மூர்க்கரே?" என்று எதிர்க்கேள்வி மொழிந்தார்; "அவ்வாறு ஆனால் நாம் ஊர்க்குள் இராது போவோம்"என்று உரைத்த அமணர், மிகச் சினந்து,


இப்பாடலின் கருத்து அடுத்த பாடலிலும் தொடர்கிறது.

ஊர்க்குள் - ஊருள் என்று வரவேண்டியது எதுகைநோக்கி "ஊர்க்குள்" என்று வந்தது;


7)

தண்டி சுமந்த கூடையினைத்

.. தட்டி உருட்டி அபகரித்துக்

கொண்டு, கயிற்றை அறுத்தந்தக்

.. கோல்கள் எல்லாம் உடைத்தெறிந்தார்;

தொண்டு தடைப்பட் டதனாலே

.. துவண்ட பக்தர், கோயிலுள்போய்

"அண்டர் நாதா என்செய்வேன்

.. அருள்செய் வாய்"என் றடிதொழுதார்;


பதம் பிரித்து:

தண்டி சுமந்த கூடையினைத் தட்டி உருட்டி அபகரித்துக்கொண்டு, கயிற்றை அறுத்து, அந்தக் கோல்கள் எல்லாம் உடைத்து எறிந்தார்; தொண்டு தடைப்பட்டதனாலே துவண்ட பக்தர், கோயிலுள்போய் "அண்டர் நாதா என் செய்வேன்? அருள்செய்வாய்" என்று அடிதொழுதார்;


அண்டர் நாதன் - உலகங்களுக்கு எல்லாம் தலைவன்;


8)

ஒன்றும் உண்ணா துறங்குகின்ற

.. உயர்ந்த பக்தர் கனவினிலே

அன்று வந்த எம்பெருமான்

.. "அஞ்ச வேண்டா கண்பெறுவாய்"

என்று மொழிந்து, சோழனுக்கும்

.. "எமது பக்தன் தண்டியிடம்

சென்று திருப்ப ணிக்குதவி

.. செய்க" என்றார் அவன்கனவில்;


9)

மறுநாள் பொழுது விடிந்ததும்போய்

.. மன்னன் அங்கே நிகழ்ந்தெல்லாம்

உறுதி யாகத் தெரிந்துகொண்டான்;

.. ஊரே பார்க்க, வினையெல்லாம்

அறுக்கும் அஞ்செ ழுத்துரைத்தே

.. அடியார் குளத்தில் மூழ்கியெழ,

வெறுத்த அமணர் குருடானார்;

.. விழிகள் பெற்றார் சிவபக்தர்.


அஞ்சு எழுத்து - "நமச்சிவாய" என்ற பஞ்சாட்சரம்;


10)

புவனம் படைத்த சிவனடியைப்

.. போற்றும் சிறந்த தொண்டர்க்குத்

தவறி ழைத்த அமணர்கள்

.. தங்கள் கண்கள் காணாத

அவல நிலையை அடைந்தோம்என்

.. றஞ்சி ஆரூர் நீங்கினரே;

சிவனார் திருக்கு ளப்பணியைச்

.. செய்து முடித்தான் சோழமன்னன்.


பதம் பிரித்து:

புவனம் படைத்த சிவன் அடியைப் போற்றும் சிறந்த தொண்டர்க்குத் தவறு இழைத்த அமணர்கள் தங்கள் கண்கள் காணாத அவல நிலையை அடைந்தோம் என்று, அஞ்சி ஆரூர் நீங்கினரே; சிவனார் திருக்குளப்-பணியைச் செய்து முடித்தான் சோழமன்னன்.


புவனம் - உலகம்;


11)

மண்ணிற் குருடாய்ப் பிறந்தாலும்

.. மாதோர் கூறன் திருவடியே

எண்ணித் தினமும் தொண்டாற்றி

.. ஈடில் லாத கருணையுள்ள

அண்ணல் அவன தருளாலே

.. அனைவர் அறியத் தம்முடைய

கண்ணில் ஒளியைப் பெற்றதண்டி

.. கழலைப் போற்று கின்றேனே.


மாது ஓர் கூறன் - பார்வதியை ஒரு கூறாக உடைய சிவன்;

கழல் - திருவடி;


வி. சுப்பிரமணியன்


பிற்குறிப்பு:

இலக்கணக் குறிப்பு: ஒரு பாடலின் கருத்து ஒரு பாடலில் முற்றுப்பெறாது அடுத்த பாடலிலும் தொடர்வது "குளகம்" எனப்படும்.

-------------------------------- -------------------------------


Friday, April 28, 2023

08.05.030 - வேளை - ஒருவேலை - மடக்கு

 08.05 – பலவகை

கந்த ஷஷ்டியை ஒட்டி

2007-11-17

08.05.030 - வேளை - ஒருவேலை - மடக்கு

-------------------------

வேளை எரிக்க விழித்தான் மகன்முருக

வேளை வணங்கிட வேண்டுமோ - வேளை

ஒருவேலை ஏந்தி வருவோன்தாள் போற்றும்

ஒருவேலை செய்வார்க்குண் டுய்வு.


சொற்பொருள்:

வேளை - 1. மன்மதனை; 2. முருகனை; 3. காலம்/சமயம்/பொழுது;

ஒரு - 1. ஒப்பற்ற; 2. ஒன்று

வேலை - 1. முருகன் கையில் உள்ள ஆயுதம் ஆன வேலை; 2. தொழில்/செயல்;


வேளை எரிக்க விழித்தான் மகன் - மன்மதனை நெற்றிக்கண்ணால் எரித்த சிவனாரின் மகன் ஆன;

முருகவேளை வணங்கிட வேண்டுமோ வேளை - முருகப் பெருமானைத் தொழுவதற்குத் தனியாக ஒரு நேரம் வேண்டுமோ?

ஒரு வேலை ஏந்தி, வருவோன் தாள் போற்றும் ஒரு வேலை செய்வார்க்கு உண்டு உய்வு - ஒப்பற்ற வேலாயுதத்தைக் கையில் தாங்கி வருகின்ற முருகனுடைய திருவடியைத் தொழுகின்ற அந்த ஒரு செயலைச் செய்பவர்களுக்கு நற்கதி உண்டு.


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

Tuesday, April 4, 2023

08.04.035 – காரைக்கால் அம்மையார் துதி - பசித்து வந்தவர் - (வண்ணம்)

08.04.035 – காரைக்கால் அம்மையார் துதி - பசித்து வந்தவர் - (வண்ணம்)



2007-05-11

8.4.35 - பசித்து வந்தவர் - (காரைக்கால் அம்மையார் துதி)

--------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தனத்த தந்தன தனதன தனதன

தனத்த தந்தன தனதன தனதன

தனத்த தந்தன தனதன தனதன .. தனதான )

(உனைத்தி னந்தொழு திலனுன தியல்பினை - திருப்புகழ் - திருப்பரங்குன்றம்)


முற்குறிப்பு: இப்பாடல் காரைக்கால் அம்மையார் வரலாற்றுச் சுருக்கமாக அமைந்துள்ளது;


பசித்து வந்தவ ருணவொரு கறியிலை

.. .. .. எனப்ப ரிந்தவர் இலைதனில் ஒருகனி

.. .. படைத்து வந்தவர் பிறகுண வருமவர் .. மணவாளன்

.. பழத்தை இங்கிட எனவுள வொருகனி

.. .. .. கலத்தில் அன்பினொ டிடவுணும் அவனவர்

.. .. பதைத்தி டும்படி இனுமொரு கனியையும் .. இடுவாய்நான்


புசிக்க என்றிட அவரரன் அடிதொழு

.. .. .. திரக்க அங்கொரு கனிவர மறுகனி

.. .. புசித்த வன்கழ றிருகனி இருசுவை .. வருமாறு

.. புலப்ப டும்படி எனவவர் அரனருள்

.. .. .. தனைப்ப கர்ந்திட அவனறி வணமொரு

.. .. புதுப்ப ழங்கரம் வரவவன் வெருவொடு .. பிரிவானே


நசிக்க ஒன்பது துளையுட லழகொரு

.. .. .. கணத்து டம்பது தனையிவண் அருளென

.. .. நயக்கு மன்பர துளமகி ழுருவிறை .. தருவானே

.. நரிக்கு லந்திரி சுடலையில் நடமிடு

.. .. .. நிருத்தன் அங்கழல் இணைதொழும் அடியவர்

.. .. நரர்க்கி டும்பைகள் அறவிரு பதிகமும் .. மொழிவாரே


வசிட்டர் அந்தரர் அயனரி தொழுபதி

.. .. .. மலைத்த டந்தனி லடியிட வெருவிய

.. .. மனத்தர் தந்தலை நடைகொடு கயிலையை .. அடைவாரே

.. மலைக்கு மங்கையும் வினவிட அனையிவர்

.. .. .. நமக்கெ னுஞ்சொலை அரனுரை செயுமவர்

.. .. மலர்ப்ப தங்களை நினைபவர் கதிபெறல் .. எளிதாமே.


பதம் பிரித்து:

பசித்து வந்தவர் உண ஒரு கறி இலை

.. .. .. எனப், பரிந்து அவர் இலைதனில் ஒரு கனி

.. .. படைத்து உவந்தவர்; பிறகு உண வரும் அவர் .. மணவாளன்

.. "பழத்தை இங்கு இட" என, உள ஒரு கனி

.. .. .. கலத்தில் அன்பினொடு இட, உணும் அவன் அவர்

.. .. பதைத்திடும்படி, "இனும் ஒரு கனியையும் இடுவாய் நான்


புசிக்க" என்றிட, அவர் அரன் அடிதொழுது

.. .. .. இரக்க, அங்கு ஒரு கனி வர, மறு-கனி

.. .. புசித்தவன், "கழறு, இருகனி இருசுவை வரும் ஆறு

.. புலப்படும்படி" என, அவர் அரன் அருள்-

.. .. .. தனைப் பகர்ந்திட, அவன் அறி-வணம் ஒரு

.. .. புதுப்பழம் கரம் வர, அவன் வெருவொடு .. பிரிவானே;


"நசிக்க ஒன்பது துளை உடல் அழகு; ஒரு

.. .. .. கணத்து உடம்பதுதனை இவண் அருள்" என

.. .. நயக்கும் அன்பரது உளம் மகிழ் உரு இறை .. தருவானே;

.. நரிக்குலம் திரி சுடலையில் நடமிடு

.. .. .. நிருத்தன் அங்கழல்-இணை தொழும் அடியவர்,

.. .. நரர்க்கு இடும்பைகள் அற, இரு பதிகமும் .. மொழிவாரே;


வசிட்டர் அந்தரர் அயன் அரி தொழு-பதி

.. .. .. மலைத்தடந்தனில் அடி இட வெருவிய

.. .. மனத்தர் தம் தலை-நடைகொடு கயிலையை .. அடைவாரே;

.. மலைக்கு மங்கையும் வினவிட, "அனை இவர்

.. .. .. நமக்கு" எனும் சொலை அரன் உரை-செயும் அவர்

.. .. மலர்ப்பதங்களை நினைபவர் கதிபெறல் .. எளிதாமே.


பசித்து வந்தவர் ரு கறி லை எனப், பரிந்து அவர் இலைதனில் ஒரு கனி படைத்து வந்தவர் - (காலையில்) பசியோடு வந்த ஓர் அடியவர்க்கு உணவிடும்பொழுது, கறி இன்னும் சமைக்கப்பட்டிராத காரணத்தால், அன்போடு அவர் இலையில் (கணவன் கொடுத்தனுப்பியிருந்த இரு மாம்பழங்களில்) ஒரு மாம்பழத்தை இட்டு மகிழ்ந்தவர்;

பிறகு ண வரும் அவர் மணவாளன், "பழத்தை இங்கு இ" என, ரு கனி கலத்தில் அன்பினொடு இ, ணும் அவன் - பின்னர்ப் பகலில் உண்ண வந்த அவர் கணவன் "பழத்தை இங்கே இடுக" என்று சொல்ல, இருந்த ஒரு பழத்தை இலையில் அன்போடு இட, உண்ட அவன்; (இட – இடுக என்ற வியங்கோள்);

வர் பதைத்திடும்படி, "இனும் ஒரு கனியையும் இடுவாய் நான் புசிக்க" என்றிட – அவர் மனம் கலங்கும்படி, "இன்னொரு பழத்தையும் நான் சாப்பிட இடு" என்று சொன்னதும்;

அவர் அரன் அடிதொழுது இரக்க, அங்கு ஒரு கனி வர, மறு-கனி புசித்தவன், "கழறு, ருகனி இருசுவை வரும் ஆறு புலப்படும்படி" என – அவர் ஈசன் திருவடியை வணங்கி வேண்ட, அங்கே அவர் கையில் ஒரு பழம் வந்தடைய, (அதனை இட்டதும்), அந்த இரண்டாம் பழத்தை உண்டவன், "(ஒரே மரத்தின்) இரு பழங்கள் இருவிதச் சுவை பெற்ற உண்மையை நான் அறியும்படி சொல்லு" என்று சொல்ல;

வர் அரன் அருள்தனைப் பகர்ந்திட, அவன் அறி-வணம் ஒரு புதுப்பழம் கரம் வர, வன் வெருவொடு பிரிவானே - அவர் சிவன் அருள்புரிந்ததைச் சொல்ல, (அப்படி எனில் இன்னொரு பழம் வரவழைத்துக் காட்டு என்று அவன் சொன்னதும்), அவனும் அறியும்படி ஒரு புதிய பழம் அவர் கையில் வந்ததும், அவன் (இவர் தெய்வம் என்று) அஞ்சி அவரைப் பிரிந்தான்;


"நசிக்க ஒன்பது துளை ல் அகு; ரு கணத்து டம்பதுதனை வண் அருள்" நயக்கும் அன்பரது ம் மகிழ் உரு றை தருவானே - (சில காலம் கழித்து, அவன் இவரோடு வாழ மறுத்ததும்), "இந்த நவத்துவாரம் உடைய உடலழகு அழியட்டும்; ஒரு பூதகணத்தின் உடம்பை இவ்விடம் அருள்வாயாக" என்று விரும்பி இறைஞ்சிய அன்பரது உள்ளம் மகிழும் உருவினை இறைவன் தந்தான்; (இவண் - இவ்விடம்);

நரிக்குலம் திரி சுடலையில் நடமிடு நிருத்தன் அங்கழல்-இணை தொழும் அடியவர், நரர்க்கு இடும்பைகள் அற, ரு பதிகமும் மொழிவாரே - (பின்னர்) நரிகள் திரியும் சுடுகாட்டில் ஆடும் கூத்தனது அழகிய இரு திருவடிகளைத் தொழும் அடியவரான அவர், மனிதர்களுக்குத் துன்பம் தீர (மூத்த பதிகங்கள் என்று அழைக்கப்படும்) இரு பதிகங்களைப் பாடினார்;


வசிட்டர் அந்தரர் அயன் அரி தொழு-பதி மலைத்தடந்தனில் அடி ட வெருவிய மனத்தர் தம் தலை-நடைகொடு கயிலையை அடைவாரே - வசிஷ்டர் (முதலான ரிஷிகள்), தேவர்கள், பிரமன், திருமால் எல்லாரும் தொழும் தலைவனான சிவன் உறையும் தலமான கயிலைமலையைக் காலால் மிதிக்க அஞ்சித் தலையால் நடந்து ஏறிக் கயிலையை அடைந்தார்; (அந்தரர் - தேவர்); (பதி - தலம்; தலைவன்); (தடம் - வழி; இடம்); (மலைத்தடம் - தடமலை என்று முன்பின்னாக மாற்றியும் பொருள்கொள்ளல் ஆம்; தடமலை - பெரிய மலை);

மலைக்கு மங்கையும் வினவிட, "அனை வர் நமக்கு" னும் சொலை அரன் உரை-செயும் - (அப்பொழுது "இவர் யார்" என்று) உமாதேவி வினவிய பொழுது, "இவர் நம்மைப் பேணும் அம்மை" என்ற சொல்லை ஹரன் உரைத்தான் (/உரைத்த); (அனை - அன்னை - இடைக்குறை); (செயும் - செய்யும் - இடைக்குறை);

வர் மலர்ப்பதங்களை நினைபவர் கதிபெறல் எளிதாமே - (அத்தகையவரான) காரைக்கால் அம்மையார் மலர்ப்பாதங்களைப் போற்றுபவர்கள் நற்கதி அடைதல் எளிது;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

08.02.186 – இடைமருதூர் (திருவிடைமருதூர்) - செழுமலர்கள் தூவி - (வண்ணம்)

08.02.186 – இடைமருதூர் (திருவிடைமருதூர்) - செழுமலர்கள் தூவி - (வண்ணம்)

2007-05-10

8.2.186 - செழுமலர்கள் தூவி - (இடைமருதூர் - திருவிடைமருதூர்)

--------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தனதனன தான தனதன தந்தன

தனதனன தான தனதன தந்தன

தனதனன தான தனதன தந்தன .. தனதான )

(விடமும்வடி வேலு மதனச ரங்களும் - திருப்புகழ் - சுவாமிமலை)


செழுமலர்கள் தூவி அரகர என்பவர்

.. .. .. திருவுடையர் ஆவர் அவரது பண்டைய

.. .. செடிவினைகள் யாவும் எரிபுகு பஞ்சென .. அறியாமல்

.. நழுவுமிக வாழ்வை நிலையென அங்கயல்

.. .. .. நயனியரை நாடும் எனதுயிர் கொண்டிட

.. .. நமனுடைய தூதர் இடர்தரும் அந்தியம் .. அணுகாமுன்


கழுமலவர் கோனின் அருவிரை சிந்திடு

.. .. .. கவின்மலியு(ம்) மாலை கொடுமிகும் அன்பொடு

.. .. கழலிணையை ஓதி வழிபடு நெஞ்சுற .. நிலமீதே

.. எழுபிறவி தோறும் உனதடி சிந்தையில்

.. .. .. எனதுதுணை யாகி அனுதின(ம்) நின்றிட

.. .. இடைமருது மேய இறையவ இங்கருள் .. புரியாயே;


வழுமலியு(ம்) மூடன் இருபது திண்புய(ம்)

.. .. .. மணிமுடிக ளோடு நெரிதர அன்றரு

.. .. மலையிலொரு பாத விரலது கொண்டடர் .. கயிலாயா

.. மறிகடலில் ஆலம் அதுவர அஞ்சிய

.. .. .. சுரரலறி ஓலம் எனவவர் உய்ந்திட

.. .. வலியவிடம் மேவி அருமணி ஒன்றணி .. மிடறானே


தழுவுமுமை மாது தனையொரு பங்கென

.. .. .. மகிழு(ம்)மண வாள திரைநதி தங்கிய

.. .. சடையதனில் நாறு குரவொடு கொன்றை .. புனைவோனே

.. சரண(ம்)நினை மாணி உயிரது கொன்றிட

.. .. .. வருமறலி மாள உதைதரு சங்கர

.. .. தயையுடைய நாத விடையைவி ரும்பிய .. பெருமானே.


பதம் பிரித்து:

செழுமலர்கள் தூவி அரகர என்பவர்

.. .. .. திரு உடையர் ஆவர், அவரது பண்டைய

.. .. செடி-வினைகள் யாவும் எரி புகு பஞ்சு என .. அறியாமல்,

.. நழுவும் இக வாழ்வை நிலை என, அங்கயல்

.. .. .. நயனியரை நாடும் எனது உயிர் கொண்டிட

.. .. நமனுடைய தூதர் இடர் தரும் அந்தியம் .. அணுகாமுன்,


கழுமலவர் கோனின் அரு-விரை சிந்திடு

.. .. .. கவின் மலியும் மாலை-கொடு மிகும் அன்பொடு

.. .. கழலிணையை ஓதி வழிபடு நெஞ்சு உற, .. நிலமீதே

.. எழு-பிறவி தோறும் உனது அடி சிந்தையில்

.. .. .. எனது துணை ஆகி அனுதினம் நின்றிட,

.. .. இடைமருது மேய இறையவ, இங்கு அருள் புரியாயே;


வழு மலியும் மூடன் இருபது திண்புயம்

.. .. .. மணிமுடிகளோடு நெரிதர அன்று அரு-

.. .. மலையில் ஒரு பாத விரலது கொண்டு அடர் .. கயிலாயா;

.. மறி-கடலில் ஆலம் அது வர, அஞ்சிய

.. .. .. சுரர் அலறி "ஓலம்" என, அவர் உய்ந்திட

.. .. வலிய விடம் மேவி அரு-மணி ஒன்று அணி .. மிடறானே;


தழுவும் உமை மாதுதனை ஒரு பங்கு என

.. .. .. மகிழும் மணவாள; திரை-நதி தங்கிய

.. .. சடையதனில் நாறு குரவொடு கொன்றை .. புனைவோனே;

.. சரணம் நினை மாணி உயிரது கொன்றிட

.. .. .. வரு-மறலி மாள உதைதரு சங்கர;

.. .. தயை உடைய நாத; விடையை விரும்பிய .. பெருமானே.


செழுமலர்கள் தூவி அரகர என்பவர் திரு டையர் ஆவர் - சிறந்த பூக்களைத் தூவி "ஹரஹர" என்று போற்றுபவர்கள் திரு அடைவார்கள்; (திரு - செல்வம்; பாக்கியம்; தெய்வத்தன்மை; நல்வினை; சிறப்பு);

வரது பண்டைய செடி-வினைகள் யாவும் எரி புகு பஞ்சு என அறியாமல் - அவர்களது பழைய, துன்பம் தரும் வினையெல்லாம் தீப் புகுந்த பஞ்சுபோல் அழியும் என்று அறியாமல்; (செடி - துன்பம்);

நழுவும் இக வாழ்வை நிலை (நாம் அறியாமலே) நழுவி அழியும் இவ்வுலக வாழ்வை நிலையானது என்று எண்ணி; (இகம் - இம்மை);

அங்கயல்யனியரை நாடும் எனது யிர் கொண்டிட நமனுடைய தூதர் இடர் தரும் அந்தியம் அணுகாமுன் - அழகிய கயல்மீன் போன்ற கண்களையுடைய மாதரை நாடும் என்னுடைய உயிரைக் கவர எமதூதர்கள் துன்பம் செய்யும் மரணகாலம் என்னை நெருங்குவதன் முன்னமே; (அங்கயல் - அம் கயல் - அழகிய கயல்மீன்); (நயனி - கண்ணை உடையவள்); (அந்திமம் - மரணகாலம்);


கழுமலவர் கோனின் அரு-விரை சிந்திடு கவின் மலியும் மாலை-கொடு - சீகாழியர் தலைவரான திருஞான சம்பந்தர் அருளிய அரிய மணம் கமழும் அழகிய பாமாலைகளால்; (கழுமலம் - சீர்காழி); (விரை - வாசனை); (சிந்துதல் - பரப்புதல்); (கவின் - அழகு);

மிகும் அன்பொடு கழலிணையை ஓதி வழிபடு நெஞ்சு உற – மிகும் அன்போடு உன் இரு திருவடிகளைப் போற்றி வணங்கும் மனம் பெற; (ஓதுதல் - பாடுதல்);

நிலமீதே எழு-பிறவி தோறும் உனது அடி சிந்தையில் எனது துணை கி அனுதினம் நின்றிட – மண்ணுலகில் எழுகின்ற பிறவிகள்தோறும் உன் திருவடி என் நெஞ்சில் துணை ஆகி என்றும் நிற்க; (எழுதல் - தோன்றுதல்); (சிந்தை - மனம்); (அப்பர் தேவாரம் - 4.94.8 - "புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா உன்னடி என்மனத்தே வழுவாதிருக்க வரந்தர வேண்டும்");

இடைமருது மேய இறையவ, இங்கு அருள் புரியாயே - திருவிடைமருதூரில் எழுந்தருளிய இறைவனே, இங்கு அருள்வாயாக; (இறையவன் - இறைவன்);


வழு மலியும் மூடன் இருபது திண்புயம் மணிமுடிகளோடு நெரிதர அன்று அரு-மலையில் ஒரு பாத விரலது கொண்டு அடர் கயிலாயா - குற்றம் மிக்க அறிவிலியான இராவணனது இருபது வலிய புஜங்களும் அழகிய கிரீடம் அணிந்த தலைகளும் நசுங்கும்படி முன்பு கயிலைமலையில் ஒரு பாதவிரலால் நசுக்கியவனே; (வழு - குற்றம்); (புயம் - புஜம் - தோள்); (நெரிதல் - நசுங்குதல்); (அடர்த்தல் - நசுக்குதல்);

மறி-கடலில் ஆலம் அது வர, அஞ்சிய சுரர் அலறி "ஓலம்" – அலையெழும் பாற்கடலில் ஆலகாலம் தோன்ற, அது கண்டு அச்சமுற்ற தேவர்கள் அலறி "ஓலம்" என்று திருவடியில் சரண்புக; (மறிதல் - அலையெழுதல்); (ஓலம் - அபயம் வேண்டும் குறிப்புமொழி);

வர் உய்ந்திட வலிய விடம் மேவி அரு-மணி ஒன்று அணி மிடறானே - அவர்கள் உய்ய, வலிய நஞ்சை விரும்பி உண்டு அரிய மணி ஒன்றை அணிந்த கண்டம் உடையவனே; (மேவுதல் - விரும்புதல்; உண்ணுதல்);


தழுவும் உமை மாதுதனை ரு பங்கு என மகிழும் மணவாள – தழுவும் உமைநங்கையை ஒரு பாகமாக விரும்பிய மணவாளனே;

திரை-நதி தங்கிய சடையதனில் நாறு குரவொடு கொன்றை புனைவோனே - அலையெழுகின்ற (/ அலை மிக்க) கங்கை தங்கிய சடையில் மணம் கமழும் குராமலரையும் கொன்றையையும் அணிந்தவனே; (திரை - அலை; திரைதல் - அலையெழுதல்;); (புனைதல் - அணிதல்);

சரணம் நினை மாணி உயிரது கொன்றிட வரு-மறலி மாள உதைதரு சங்கர – உன் திருவடியை நினைந்த மார்க்கண்டேயரது உயிரைக் கொல்ல வந்த காலனே இறக்கும்படி காலனை உதைத்த சங்கரனே; (சரணம் - பாதம்); (மாணி - பிரமசாரி); (மறலி - இயமன்); (தருதல் - ஒரு துணைவினை); (சங்கரன் - நன்மையைச் செய்பவன்);

தயை டைய நாத – கருணை உடைய தலைவனே; (தயை - அருள்);

விடையை விரும்பிய பெருமானே - இடபத்தை வாகனமாக விரும்பிய பெருமானே;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


Monday, April 3, 2023

08.02.185 – பொது - துட்டத்தனம் மிக்குப் - (வண்ணம்)

08.02.185 – பொது - துட்டத்தனம் மிக்குப் - (வண்ணம்)

2007-05-01

08.02.185 - துட்டத்தனம் மிக்குப் - (பொது)

-------------------------

(வண்ணவிருத்தம்;

தத்தத்தன தத்தத் தனதன

தத்தத்தன தத்தத் தனதன

தத்தத்தன தத்தத் தனதன .. தனதான )

(முத்தைத்தரு பத்தித் திருநகை - திருப்புகழ்)


துட்டத்தன(ம்) மிக்குப் பலதினம்

.. .. .. அற்பச்செய லிற்புக் கவைதரு

.. .. துக்கத்தினில் இக்கட் டினில்நிலை .. குலையாமல்

.. சுற்றிப்பிணி பற்றுக் கெடமனம்

.. .. .. ஒட்டித்தமிழ் செப்பிச் சுகமது

.. .. துய்க்கப்பரி வுற்றுத் திருவருள் .. புரியாயே


வட்டப்படை நச்சிக் கரியவன்

.. .. .. நித்தற்கடி மிக்குத் திகழ்மலர்

.. .. இட்டுத்தொழ அற்றைக் கொருமலர் .. குறைவாக

.. வைக்கத்தன தக்கத் தினையிட

.. .. .. அப்பத்தித னக்குப் பரிசென

.. .. வைப்பற்றிகழ் வெற்றித் திகிரியை .. அருள்வோனே


மட்டற்றசெ ருக்குற் றிருபது

.. .. .. மற்கைத்தல(ம்) மெச்சிச் சிலையெறி

.. .. மட்டிக்கொரு பத்துத் தலையிற .. நெரிபாதா

.. மத்தத்தொடெ ருக்குற் றிடுமுடி

.. .. .. எற்றித்திரை சுற்றக் கதிர்மதி

.. .. வைத்துப்பெரு நச்சுப் பணியையும் .. அணிவோனே


எட்டுத்திசை சுட்டுப் பெருவிடம்

.. .. .. எட்டிற்றென அச்சத் தொடுசுரர்

.. .. எய்ப்புற்றடி பற்றிப் பரவிட .. அமுதாக

.. இட்டத்தொடு துற்றிக் களனிடை

.. .. நிற்பித்தர வக்கச் சினனென

.. .. இற்பிச்சையை நச்சித் திரிதரு .. பெருமானே.


பதம் பிரித்து:

துட்டத்தனம் மிக்குப், பல தினம்

.. .. .. அற்பச்செயலிற் புக்கு, அவை தரு

.. .. துக்கத்தினில் இக்கட்டினில் நிலை .. குலையாமல்,

.. சுற்றிப் பிணி பற்றுக் கெட, மனம்

.. .. .. ஒட்டித் தமிழ் செப்பிச் சுகமது

.. .. துய்க்கப், பரிவுற்றுத் திருவருள் .. புரியாயே;


வட்டப்படை நச்சிக் கரியவன்

.. .. .. நித்தற் கடி மிக்குத் திகழ் மலர்

.. .. இட்டுத் தொழ, அற்றைக்கு ஒரு மலர் .. குறைவு ஆக

.. வைக்கத், தனது அக்கத்தினை இட,

.. .. .. அப்பத்தி-தனக்குப் பரிசு என

.. .. வைப்-பல்-திகழ் வெற்றித் திகிரியை .. அருள்வோனே;


மட்டு-அற்ற செருக்கு உற்று, இருபது

.. .. .. மற்-கைத்தலம் மெச்சிச், சிலை எறி

.. .. மட்டிக்கு ஒரு பத்துத் தலை இற .. நெரி பாதா;

.. மத்தத்தொடு எருக்கு உற்றிடு முடி

.. .. .. எற்றித் திரை சுற்றக், கதிர்-மதி

.. .. வைத்துப், பெரு-நச்சுப் பணியையும் .. அணிவோனே;


எட்டுத்-திசை சுட்டுப் பெரு-விடம்

.. .. .. எட்டிற்று என அச்சத்தொடு சுரர்

.. .. எய்ப்பு-உற்று அடி பற்றிப் பரவிட, .. அமுதாக

.. இட்டத்தொடு துற்றிக் களனிடை

.. .. நிற்பித்து, அரவக்-கச்சினன் என

.. .. இற்-பிச்சையை நச்சித் திரிதரு .. பெருமானே.


துட்டத்தனம் மிக்குப், பல தினம் அற்பச்செயலிற் புக்கு - துஷ்டத்தனம் மிகுந்து, பலநாளும் இழிந்த செயல்களில் ஈடுபட்டு; (துட்டம் - துஷ்டம் - தீமை; கொடுமை); (புக்கு - புகுந்து);

வை தரு துக்கத்தினில் க்கட்டினில் நிலைகுலையாமல் - அவை தரும் துக்கத்திலும் கஷ்டத்திலும் நிலைகுலைந்து அழியாமல்; (இக்கட்டு - இடுக்கண் - கஷ்டம்);

சுற்றிப் பிணி பற்றுக் கெட, மனம் ஒட்டித் தமிழ் செப்பிச் சுகமது துய்க்கப், பரிவுற்றுத் திருவருள் புரியாயே - என்னைச் சுற்றிக் கட்டியுள்ள பந்தம் அழிய, என் மனம் ஒன்றித் தேவாரம் முதலிய பாமாலைகளைப் பாடி நான் இன்பம் அனுபவிக்க, நீ இரங்கித் திருவருள் செய்வாயாக; (பிணித்தல் - கட்டுதல்); (சுகமது - சுகம்; அது - பகுதிப்ப்பொருள்விகுதி); (துய்த்தல் - அனுபவித்தல்); (பரிவு - அன்பு; இரக்கம்);


வட்டப்படை நச்சிக் கரியவன் நித்தல் கடி மிக்குத் திகழ் மலர் இட்டுத் தொழ – வட்டமான ஆயுதத்தை விரும்பித் திருமால் தினமும் வாசனை மிகுந்து திகழும் (ஆயிரம்) தாமரைமலர்களைத் தூவி அர்ச்சிக்க; (படை - ஆயுதம்); (கரியவன் - விஷ்ணு); (நித்தல் - தினமும்); (கடி - வாசனை);

அற்றைக்கு ஒரு மலர் குறைவு கவைக்கத், தனது அக்கத்தினை – அன்று ஒரு நாள் நீ ஒரு பூவைக் குறையச்செய்தபொழுது, அவன் தனது கண்ணையே தோண்டித் தாமரைப்பூவாக இட்டு வழிபாடு செய்ய; (அற்றைக்கு - அன்றைக்கு - அந்தத் தினம்); (அக்கம் - அக்ஷம் - கண்);

அப்பத்தி-தனக்குப் பரிசு என வைப்-ல்-திகழ் வெற்றித் திகிரியை அருள்வோனே - அந்தப் பக்திக்கு பரிசாகக் கூர்மையான பற்கள் திகழும் வெற்றியுடைய சக்கராயுதத்தை அருளியவனே; (பத்தி - பக்தி); (வை - கூர்மை); (திகிரி - சக்கரம்);


மட்டு-ற்ற செருக்கு ற்று, ருபது மற்-கைத்தலம் மெச்சிச், சிலை றி மட்டிக்கு ஒரு பத்துத் தலை ற நெரி பாதா - அளவில்லாத ஆணவம் கொண்டு, இருபது வலிய கைகளை மிகவும் எண்ணிக், கயிலைமலையைப் பெயர்த்து எறிய முயன்ற மூடனுக்கு அவனது பத்துத்தலையும் அழியும்படி நசுக்கிய திருப்பாதனே; (மட்டு - அளவு); (மல் - வலிமை); (மெச்சுதல் - புகழ்தல்; மதித்தல்); (சிலை - மலை); (மட்டி - மூடன்); (இறுதல் - முரிதல்; கெடுதல்); (நெரித்தல் - நசுக்குதல்);

மத்தத்தொடு எருக்கு ற்றிடு முடி எற்றித் திரை சுற்றக், கதிர்-மதி வைத்துப், பெரு-நச்சுப் பணியையும் அணிவோனே - ஊமத்தமலரோடு எருக்கமலரும் இருக்கும் திருமுடியில், அலைமோதிக் கங்கை சுற்றிவர, ஒளி வீசும் திங்களை அணிந்து, பெரிய விடப்பாம்பையும் அணிந்தவனே; (மத்தம் - ஊமத்தமலர்); (எற்றுதல் - மோதுதல்); (திரை - அலை; நதி); (பணி - பாம்பு);


எட்டுத்-திசை சுட்டுப் பெரு-விடம் எட்டிற்று என அச்சத்தொடு சுரர் எய்ப்பு-ற்று அடி பற்றிப் பரவிட – எல்லாத் திசைகளையும் சுட்டுப் பெரிய விடம் (ஆலகாலம்) எட்டியது என்று பயந்து வருந்தித் தேவர்கள் உன் திருவடியைச் சரணடைந்து துதிக்க; (எட்டுதல் - நெருங்குதல்); (சுரர் - தேவர்); (எய்ப்பு - இளைப்பு; மெய்வருத்தம்); (பரவுதல் - துதித்தல்);

முதாக இட்டத்தொடு துற்றிக் களனிடை நிற்பித்து - (அவர்களுக்கு இரங்கி) அமுதம்போல அந்த நஞ்சை விரும்பி உண்டு கண்டத்தில் நிறுத்தி; (இட்டம் - இஷ்டம் - விருப்பம்); (துற்றுதல் - உண்ணுதல்); (களன் - களம் - கண்டம்);

ரவக்-கச்சினன் என இற்-பிச்சையை நச்சித் திரிதரு பெருமானே - பாம்பைக் கச்சாகக் கட்டி இல்லங்களில் பிச்சையை விரும்பித் திரிகின்ற பெருமானே; (நச்சுதல் - விரும்புதல்);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------