Wednesday, June 10, 2026

N.058 - திருநாவுக்கரசர் துதி - கல்லே கடலில்

2020-04-17

N.058 - திருநாவுக்கரசர் துதி - திருநாவுக்கரசர் குருபூஜை - சித்திரைச் சதயம் - 2020

----------------


1) --- (சந்தக் கலிவிருத்தம் - தானா தனனா தனனா தனனா) ---

கல்லே கடலிற் புணையாய்க் கரைசேர்

நல்லார் நமையாள் திருநா வரசர்

பொல்லா நமனே வரினும் வெருவொன்

றில்லார் அவர்தாள் இணைவா ழியவே.


கல்லே கடலில் புணையாய்க் கரைசேர் நல்லார் - (ஆழ்த்துவதற்காகச் சமணர்கள்) பிணித்த கல்லே கடலில் ஒரு தெப்பம் ஆகி மிதக்கக், கரைசேர்ந்து உய்ந்த நல்லவர்; (புணை - தெப்பம்);

நமை ஆள் திருநாவரசர் - நம்மை ஆளும் திருநாவுக்கரசர்; (நமை - நம்மை);

பொல்லா நமனே வரினும் வெரு ஒன்று இல்லார் - கொடிய கூற்றுவனே வந்தாலும் சிறிதும் அச்சம் இல்லாதவர்; (வெரு / வெருவு - அச்சம்); (ஒன்று - ஒன்றும்; உம் தொக்கது); (அப்பர் தேவாரம் - 6.98.1 - "நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்");

அவர் தாள்இணை வாழியவே - அவரது இருதிருவடிகள் வாழ்க.


2) --- (நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா) ---

செப்பரிய செயல்செய்த திருவுடைய இருவரைக்கண்

டப்பொழுதே அப்பூதி அடிகள்மகன் உயிர்பெறவே

ஒப்பரிய தமிழ்சொன்ன உயர்வாக்கின் மன்னரடி

எப்பொழுதும் நிலையாக எம்மனத்தில் இருப்பனவே.


செப்பரிய செயல் செய்த திரு உடைய இருவரைக் கண்டு - சொல்வதற்கு அரிய செயலைச் செய்த திரு மிக்க அப்பூதி-அடிகளின் மனைவியையும் அவரையும் பார்த்து மனம் நெகிழ்ந்து; (செப்பரிய - செப்ப அரிய; தொகுத்தல் விகாரம்);

அப்பொழுதே அப்பூதி-அடிகள்-மகன் உயிர் பெறவே - (பாம்பின் விடத்தால் மாண்ட) அப்பூதி-அடிகளின் மகன் உடனே மீண்டும் உயிர்பெற்று எழும்படி;

ஒப்பு அரிய தமிழ் சொன்ன உயர் வாக்கின்மன்னர் அடி - ஒப்பற்ற அரிய தமிழ்ப்-பாமாலை பாடியருளிய உயர்ந்த திருநாவுக்கரசரது திருவடிகள்;

எப்பொழுதும் நிலையாக எம் மனத்தில் இருப்பனவே - எங்கள் மனத்தில் நீங்காமல் எப்பொழுதும் இருக்கின்றன;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment