Wednesday, June 10, 2026

P.502 - நீடூர் - மாயனுக்கு ஆழி

2020-04-27

P.502 - நீடூர்

(மயிலாடுதுறை அருகுள்ள தலம்)

------------

(அறுசீர் விருத்தம் - விளம் மா தேமா - அரையடி வாய்பாடு; விளச்சீர் வரும் இடத்தில் ஒரோவழி மாங்காய்ச்சீர் வரலாம்)

(திருநேரிசை அமைப்பு) (அப்பர் தேவாரம் - 4.23.1 - "பத்தனாய்ப் பாட மாட்டேன்")


1)

மாயனுக் காழி ஈந்த .. வள்ளலை நீறு பூத்த

தீயன மேனி யானைச் .. சினவிடை ஊர்தி யானை

வேயன தோளி வண்டார் .. மென்குழல் மாதி னுக்கு

நேயனை நீடூர் மேய .. நிமலனைச் சிந்தி நெஞ்சே.


மாயனுக்கு ஆழி ஈந்த வள்ளலை - திருமாலுக்குச் சக்கரத்தை அருளிய வள்ளலை; (ஆழி - சக்கரம்);

நீறு பூத்த தீ அன மேனியானைச் - நீறு பூத்த நெருப்புப் போலச் செம்மேனிமீது திருநீற்றைப் பூசியவனை; (அன - அன்ன - ஒத்த);

சினவிடை ஊர்தியானை - சினக்கின்ற இடபத்தை வாகனமாக உடையவனை;

வேய் அன தோளி வண்டு ஆர் மென்குழல் மாதினுக்கு நேயனை - மூங்கில் போன்ற புஜங்களை உடையவளும் வண்டுகள் மொய்க்கும் மென்மையான கூந்தலை உடையவளுமான உமைக்கு அன்புடையவனை; (* வேயனதோளி - இத்தலத்து இறைவி திருநாமம் - "வேயுறு தோளியம்மை");

நீடூர் மேய நிமலனைச் - திருநீடூரில் உறைகின்ற தூயனை;

சிந்தி நெஞ்சே - நெஞ்சமே நீ எண்ணுவாயாக;


2)

சோதியை அரையில் வேங்கைத் .. தோலனைத் திருவு டம்பில்

பாதியை உமைக்க ளித்த .. பண்பனை அந்தம் இல்லா

ஆதியைப் பத்தர்க் காக .. அடல்நமன் தனையு தைத்த

நீதியை நீடூர் மேய .. நிமலனைச் சிந்தி நெஞ்சே.


சோதியை - ஒளிவடிவினை;

அரையில் வேங்கைத்-தோலனைத் - அரையில் புலித்தோலை ஆடையாகக் கட்டியவனை;

திருவுடம்பில் பாதியை உமைக்கு அளித்த பண்பனை - திருமேனியில் பாதியை உமைக்கு அளித்தவனை;

அந்தம் இல்லா ஆதியைப் - ஈறு இல்லாத முதல்வனை;

பத்தர்க்காக அடல்-நமன்தனை உதைத்த நீதியை - மார்க்கண்டேயருக்காக வலிய கூற்றுவனை உதைத்த நீதிவடிவினனை;

நீடூர் மேய நிமலனைச் - திருநீடூரில் உறைகின்ற தூயனை;

சிந்தி நெஞ்சே - நெஞ்சமே நீ எண்ணுவாயாக;


3)

பாலனைக் கொல்வ தற்குப் .. பரிவிலா தோடி வந்த

காலனைக் காய்ந்த கோனைக் .. கைதொழு சுரர்கள் உய்ய

வேலனைத் தந்த தேவை .. விடத்தினை உண்மி டற்றில்

நீலனை நீடூர் மேய .. நிமலனைச் சிந்தி நெஞ்சே.


பாலனைக் கொல்வதற்குப் பரிவு இலாது ஓடி வந்த காலனைக் காய்ந்த கோனைக் - மார்க்கண்டேயரைக் கொல்வதற்காக இரக்கம் இன்றி விரைந்து வந்த காலனை உதைத்து அழித்த தலைவனை;

கைதொழு சுரர்கள் உய்ய வேலனைத் தந்த தேவை - கைதொழுத தேவர்கள் உய்யுமாறு முருகனைத் தந்த தேவனை;

விடத்தினை உண்-மிடற்றில் நீலனை - ஆலகாலத்தை உண்ட கண்டத்தில் நீலநிறம் உடையவனை; (மிடறு - கண்டம்);

நீடூர் மேய நிமலனைச் - திருநீடூரில் உறைகின்ற தூயனை;

சிந்தி நெஞ்சே - நெஞ்சமே நீ எண்ணுவாயாக;


4)

போற்றிய பகீர தற்காப் .. புரிசடை தன்னில் கங்கை

ஆற்றினைத் தாங்கி நின்ற .. அண்ணலை இளைய வெள்ளை

ஏற்றனை ஊணி ரக்கும் .. ஏந்தலை மார்பிற் சாந்த

நீற்றனை நீடூர் மேய .. நிமலனைச் சிந்தி நெஞ்சே.


போற்றிய பகீரதற்காப் புரிசடை-தன்னில் கங்கை-ஆற்றினைத் தாங்கி-நின்ற அண்ணலை - தவம் செய்து வழிபட்ட பகீரதனுக்காக முறுக்கிய சடையில் கங்கைநதியைத் தாங்கிய தலைவனை; (பகீரதற்கா - பகீரதனுக்காக; கடைக்குறை விகாரம்); (புரிதல் - முறுக்குக்கொள்ளுதல்);

இளைய வெள்ளை ஏற்றனை - இள-வெள்-எருதை வாகனமாக உடையவனை;

ஊண் இரக்கும் ஏந்தலை - பிச்சையேற்கும் பெருமானை;

மார்பில் சாந்த-நீற்றனை - மார்பில் சந்தனம்போல் திருநீற்றைப் பூசியவனை; (அப்பர் தேவாரம் - 4.22.3 - "சடையனார் சாந்த நீற்றர்");

நீடூர் மேய நிமலனைச் - திருநீடூரில் உறைகின்ற தூயனை;

சிந்தி நெஞ்சே - நெஞ்சமே நீ எண்ணுவாயாக;


5)

மாரனைப் பொடிசெய் தானை .. மாமதில் மூன்றெ ரித்த

வீரனைக் கொடிமேல் வெள்ளை .. விடையனை விரைகொள் கொன்றைத்

தாரனைத் திங்கள் தங்கும் .. சடையினில் அலைக்கும் கங்கை

நீரனை நீடூர் மேய .. நிமலனைச் சிந்தி நெஞ்சே.


மாரனைப் பொடி செய்தானை - மன்மதனைச் சாம்பலாக்கியவனை; (மாரன் - காமன்);

மா-மதில் மூன்று எரித்த வீரனைக் - பெரிய முப்புரங்களை எரித்த வீரனை;

கொடிமேல் வெள்ளை விடையனை - வெண்ணிற இடபச்சின்னம் பொறித்த கொடியை உடையவனை;

விரைகொள் கொன்றைத்-தாரனைத் - மணம் கமழும் கொன்றைமாலையை அணிந்தவனை;

திங்கள் தங்கும் சடையினில் அலைக்கும் கங்கை-நீரனை - சந்திரனை அணிந்த சடையில் அலைக்கின்ற கங்கையாற்றை உடையவனை;

நீடூர் மேய நிமலனைச் - திருநீடூரில் உறைகின்ற தூயனை;

சிந்தி நெஞ்சே - நெஞ்சமே நீ எண்ணுவாயாக;


6)

அத்தனை வன்றொண் டர்க்கா .. அல்லினில் தூது சென்ற

பித்தனைத் தேவர் ஏத்தும் .. பெரியனை முடியின் மீது

மத்தனை மழுவாள் சூலம் .. மான்மறி அங்கை ஏந்தும்

நித்தனை நீடூர் மேய .. நிமலனைச் சிந்தி நெஞ்சே.


அத்தனை - தந்தையை;

வன்தொண்டர்க்கா அல்லினில் தூது சென்ற பித்தனைத் - சுந்தரருக்காக இரவில் திருவாரூரில் தூது சென்ற பேரன்பனை; (வன்றொண்டர்க்கா - வன்தொண்டர் என்ற பெயருடைய சுந்தரருக்காக); (அல் - இரவு);

தேவர் ஏத்தும் பெரியனை - தேவர்கள் துதிக்கும் பெரியவனை;

முடியின் மீது மத்தனை - திருமுடிமேல் ஊமத்தமலரைச் சூடியவனை; (மத்தம் - ஊமத்தமலர்); (அப்பர் தேவாரம் - 5.4.3 - "மத்தனைம் மதயானை உரித்த");

மழுவாள் சூலம் மான்மறி அங்கை ஏந்தும் நித்தனை - கையில் மழு, சூலம், மான்கன்று இவற்றை ஏந்திய அழிவற்றவனை;

நீடூர் மேய நிமலனைச் - திருநீடூரில் உறைகின்ற தூயனை;

சிந்தி நெஞ்சே - நெஞ்சமே நீ எண்ணுவாயாக;


7)

அருவனை அன்போ டேத்தும் .. அடியவர் விரும்பு கின்ற

உருவனை மின்ம ருங்குல் .. உமையவள் பாக மாகும்

ஒருவனை உலப்பி லானை .. ஒற்றைவெள் விடைய தேறும்

நிருபனை நீடூர் மேய .. நிமலனைச் சிந்தி நெஞ்சே.


அருவனை - உருவம் அற்றவனை;

அன்போடு ஏத்தும் அடியவர் விரும்புகின்ற உருவனை - பக்தியோடு வணங்கும் அடியார்கள் எவ்வுருவை எண்ணி வழிபடுகின்றார்களோ அவ்வுருவம் உடையவனை;

மின்-மருங்குல் உமையவள் பாகம் ஆகும் ஒருவனை - மின்னல் போன்ற நுண்ணிடை உடைய உமையை ஒரு பாகமாக உடைய ஒப்பற்றவனை; (மின் - மின்னல்);

உலப்பு இலானை - அழியாதவனை;

ஒற்றை வெள்-விடையது ஏறும் நிருபனை - ஒப்பற்ற வெள்ளை இடபத்தை வாகனமாக உடைய அரசனை; (நிருபன் - அரசன்);

நீடூர் மேய நிமலனைச் - திருநீடூரில் உறைகின்ற தூயனை;

சிந்தி நெஞ்சே - நெஞ்சமே நீ எண்ணுவாயாக;


8)

யோசனை சிறிதும் இன்றி .. உயர்மலை தன்னைப் பேர்த்த

நீசனை விரலை ஊன்றி .. நெரித்தொரு பெயரும் ஈந்த

ஈசனை எழுத்தஞ் சோதி .. இணையடி போற்றி னார்க்கு

நேசனை நீடூர் மேய .. நிமலனைச் சிந்தி நெஞ்சே.


யோசனை சிறிதும் இன்றி உயர்மலை-தன்னைப் பேர்த்த நீசனை விரலை ஊன்றி நெரித்து, ரு பெயரும் ஈந்த ஈசனை - சிறிதும் யோசியாமல் கயிலைமலையைப் பெயர்த்த அறிவிலியான தசமுகனைத் திருப்பாதவிரலை ஊன்றி நசுக்கி, (அவன் அழுது இசைபாடக் கேட்டு இரங்கி) அவனுக்கு (நீண்ட ஆயுள், வாள் இவற்றோடு) "இராவணன்" (அழுதவன்) என்ற பெயரையும் தந்த ஈசனை; (நீசன் - இழிந்தோன்; அறிவிலி); (நெரித்தல் - நசுக்குதல்); (பெயரும் - உம் - எச்சவும்மை);

எழுத்து-அஞ்சு ஓதி இணையடி போற்றினார்க்கு நேசனை - திருவைந்தெழுத்தை ஓதி இருதிருவடிகளை வழிபடும் பக்தர்களுக்கு அன்பு உடையவனை;

நீடூர் மேய நிமலனைச் - திருநீடூரில் உறைகின்ற தூயனை;

சிந்தி நெஞ்சே - நெஞ்சமே நீ எண்ணுவாயாக;


9)

குழலினை ஊது மாலும் .. குளிர்மலர் மேலி னானும்

கழலிணை ஏத்து மாறு .. கனலுரு ஆயி னானை

மழையன கண்டத் தானை .. மறைவிரித் தருளும் ஆல

நிழலனை நீடூர் மேய .. நிமலனைச் சிந்தி நெஞ்சே.


குழலினை ஊது மாலும் குளிர்மலர் மேலினானும் - கிருஷ்ணனாக அவதரித்துப் புல்லாங்குழலை ஊதிய திருமாலும் குளிர்ந்த தாமரைப்பூவின்மேல் இருக்கும் பிரமனும்;

கழலிணை ஏத்துமாறு கனலுரு ஆயினானை - தன் இருதிருவடிகளைப் போற்றும்படி ஜோதியாகி நின்றவனை; (கனல் - தீ);

மழை அன கண்டத்தானை - மேகம் போன்ற கரிய கண்டத்தை உடையவனை;

மறை விரித்தருளும் ஆல-நிழலனை - வேதப்பொருளை உபதேசித்த, கல்லாலமரத்தின்கீழ் இருக்கும் தட்சிணாமூர்த்தியை; (விரித்தல் - உபதேசித்தல்); (ஆல் - கல்லாலமரம்);

நீடூர் மேய நிமலனைச் - திருநீடூரில் உறைகின்ற தூயனை;

சிந்தி நெஞ்சே - நெஞ்சமே நீ எண்ணுவாயாக;


10)

பொருத்தமில் வார்த்தை பேசும் .. புன்னெறி யாளர்க் கில்லான்

திருத்திகழ் நீறு பூசும் .. சீலர்கள் தமக்கு நல்லான்

அருத்தனை அமரர் கோனை .. அரையினில் அரவம் ஆர்த்த

நிருத்தனை நீடூர் மேய .. நிமலனைச் சிந்தி நெஞ்சே.


பொருத்தம் இல் வார்த்தை பேசும் புன்னெறியாளர்க்கு இல்லான் - பொருத்தமற்ற வார்த்தைகளைப் பேசுகின்ற சிறுநெறியாளர்களுக்கு (அருள்) இல்லாதவன்;

திருத் திகழ் நீறு பூசும் சீலர்கள்-தமக்கு நல்லான் - திருவுடைய திருநீற்றைப் பூசும் சீலர்களுக்கு நன்மை செய்பவன்;

அருத்தனை - அந்த மெய்ப்பொருளானவனை; வேதத்தின் பொருளானவனை; (அர்த்தம் - பொருள்); (சம்பந்தர் தேவாரம் - 1.111.1 - "அருத்தனை அறவனை அமுதனை நீர்")

அமரர்-கோனை - தேவர்கள்-தலைவனை;

அரையினில் அரவம் ஆர்த்த நிருத்தனை - அரையில் பாம்பைக் கச்சாகக் கட்டிய கூத்தனை; (ஆர்த்தல் - கட்டுதல்); (நிருத்தன் - கூத்தன்);

நீடூர் மேய நிமலனைச் - திருநீடூரில் உறைகின்ற தூயனை;

சிந்தி நெஞ்சே - நெஞ்சமே நீ எண்ணுவாயாக;


11)

பொருப்பினை ஏந்தி மூன்று .. புரமெரித் தானை ஒற்றை

மருப்பினைக் காட்டு கின்ற .. மைந்தனுக் கத்தன் தன்னைக்

கருப்புவில் ஏந்தி எய்த .. காமனைக் காய்ந்த கண்ணில்

நெருப்பனை நீடூர் மேய .. நிமலனைச் சிந்தி நெஞ்சே.


பொருப்பினை ஏந்தி மூன்று புரம் எரித்தானை - மேருமலையை வில்லாக ஏந்தி முப்புரங்களை எரித்தவனை; (பொருப்பு - மலை);

ஒற்றை மருப்பினைக் காட்டுகின்ற மைந்தனுக்கு அத்தன்-தன்னைக் - ஒரு தந்தத்தை உடைய விநாயகனுக்குத் தந்தையை; (மருப்பு - தந்தம்); (அத்தன் - தந்தை);

கருப்புவில் ஏந்தி எய்த காமனைக் காய்ந்த கண்ணில் நெருப்பனை - கரும்பை வில்லாக ஏந்தி கணை எய்த மன்மதனை எரித்த நெற்றிக்கண்ணில் நெருப்பை உடையவனை; (கருப்புவில் - கரும்பால் ஆன வில்);

நீடூர் மேய நிமலனைச் - திருநீடூரில் உறைகின்ற தூயனை;

சிந்தி நெஞ்சே - நெஞ்சமே நீ எண்ணுவாயாக;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment