Wednesday, June 10, 2026

P.501 - சாய்க்காடு - குயிலினும் இன்மொழியாள்

2020-03-05

P.501 - சாய்க்காடு (சாயாவனம்)

-----------------

(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)

(சம்பந்தர் தேவாரம் - 2.41.1 - "மண்புகார் வான்புகுவர்")

* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;


1)

குயிலினுமின் மொழியாளோர் கூறுமகிழ் கோமானே

தயிர்நறுநெய் பாலாடும் சாய்க்காட்டெம் பெருமானே

அயிலுடைய சூலத்தாய் அடியேனுக் கிரங்கிவினைச்

சயிலமது பொடிசெய்யாய் தண்மதியார் சடையானே.


குயிலினும் இன்மொழியாள் ஓர் கூறு மகிழ் கோமானே - குயிலினும் இனிய மொழி பேசும் உமையை ஒரு கூறாக விரும்பிய தலைவனே; (கோமான் - அரசன்; தலைவன்); (* குயிலினும் இன்மொழியம்மை - இத்தலத்து இறைவி திருநாமம்);

தயிர் நறுநெய் பால் ஆடும் சாய்க்காட்டு எம் பெருமானே - தயிர், மணம் மிக்க நெய், பால் இவற்றால் அபிஷேகம் பெறுகின்ற, திருச்சாய்க்காட்டில் உறைகின்ற எம் பெருமானே;

அயிலுடைய சூலத்தாய் - கூர்மை பொருந்திய சூலத்தை ஏந்தியவனே; (அயில் - கூர்மை);

அடியேனுக்கு இரங்கி வினைச்-சயிலம் அது பொடி-செய்யாய் - உன் அடியவனான எனக்கு இரங்கி மலை போன்று இருக்கும் என் வினையை அழித்து அருள்வாயாக; (சயிலம் - சைலம் - மலை);

தண்-மதி ஆர் சடையானே - சடைமேல் குளிர்ந்த சந்திரனைச் சூடியவனே; (சம்பந்தர் தேவாரம் - 3.49.6 - "மந்தரம் அன பாவங்கள் மேவிய பந்தனையவர்தாமும் பகர்வரேல் சிந்தும் வல்வினை");


2)

இயற்பகையே ஓலமென எடுத்தழைத்து விடையின்மேல்

கயற்கண்ணி தன்னோடும் காட்சிதந்த கண்ணுதலே

தயைக்கடலே தண்பொழில்சூழ் சாய்க்காட்டெம் பெருமானே

துயர்க்கடலில் தோணியெனத் துணையாகிக் காத்தருளே.


"இயற்பகையே ஓலம்" என எடுத்து அழைத்து விடையின்மேல் கயற்கண்ணி-தன்னோடும் காட்சிதந்த கண்ணுதலே - "இயற்பகையே ஓலம்" என்று உரத்துக் கூவி அவரைத் துணைக்கு அழைத்து, இடபவாகனத்தின்மீது கயல் போன்ற கண்ணையுடைய உமையோடு அவருக்குக் காட்சியளித்த நெற்றிக்கண்ணனே; (எடுத்தல் - உரத்துச் சொல்லுதல்); (* இயற்பகை நாயனாருக்கு ஈசன் அருள்புரிந்த தலம் இது); (பெரியபுராணம் - இயற்பகை நாயனார் புராணம் - 12.3.29 - "இயற்பகை முனிவா ஓலம் ஈண்டுநீ வருவாய் ஓலம்");

தயைக்கடலே - கருணைக்கடலே;

தண்-பொழில் சூழ் சாய்க்காட்டு எம் பெருமானே - குளிர்ந்த சோலை சூழ்ந்த திருச்சாய்க்காட்டில் உறைகின்ற எம் பெருமானே;

துயர்க்கடலில் தோணி எனத் துணை ஆகிக் காத்தருளே - துன்பக்கடலில் முழுகும் எனக்கு ஒரு படகு போல நீ வந்து என்னைக் காப்பாயாக;


3)

செங்கணுடைச் செம்பியர்கோன் செய்கோயில் வண்டினங்கள்

தங்கிமகிழ் தண்பொழில்சூழ் சாய்க்காட்டெம் பெருமானே

அங்க(ம்)மறை நாலோதும் அங்கணனே செஞ்சடையிற்

கங்கையனே கைதொழுதேன் கடுவினைதீர்த் தருளாயே.


செங்கணுடைச் செம்பியர்-கோன் செய் கோயில் சாய்க்காட்டு எம் பெருமானே - சிவந்த கண்களையுடைய சோழ-அரசனான கோச்செங்கட்சோழன் கட்டிய கோயிலான திருச்சாய்க்காட்டில் உறைகின்ற எம் பெருமானே; (செம்பியர் - சோழர்); (* கோச்செங்கட்சோழன் கட்டிய மாடக்கோயில்களுள் ஒன்று திருச்சாய்க்காடு); (சம்பந்தர் தேவாரம் - 2.23.5 - "செங்கட் பெயர்கொண்டவன் செம்பியர்கோன் அங்கட் கருணை பெரிதாயவனே");

வண்டினங்கள் தங்கி மகிழ் தண்-பொழில் சூழ் சாய்க்காட்டு எம் பெருமானே - வண்டுகள் எப்பொழுதும் உலாவுகின்ற குளிர்ந்த சோலை சூழ்ந்த திருச்சாய்க்காட்டில் உறைகின்ற எம் பெருமானே;

அங்கம் மறை-நாலு ஓதும் அங்கணனே - நால்வேதங்களையும் ஆறங்கங்களையும் பாடியருளிய, அருள்நோக்கம் உடையவனே;

செஞ்சடையில் கங்கையனே - சிவந்த சடையில் கங்கையைத் தரித்தவனே;

கைதொழுதேன் கடுவினை தீர்த்து அருளாயே - உன்னைக் கைகூப்பி வணங்கும் (/வணங்குகின்றேன்) என் கொடிய வினையைத் தீர்த்து அருள்வாயாக; (கடுமை - கொடுமை);


4)

பாண்டவன்செய் தவங்கண்டு பாசுபதம் ஈந்தவனே

தாண்டவனே தண்பொழில்சூழ் சாய்க்காட்டெம் பெருமானே

மாண்டவர்தம் எலும்பணியும் மாதேவா மண்மீது

மீண்டுவரச் செய்வினையை வீட்டியெனைக் காத்தருளே.


பாண்டவன் செய் தவம் கண்டு பாசுபதம் ஈந்தவனே - அர்ஜுனன் செய்த தவத்தைக் கண்டு அவனுக்குப் பாசுபதாஸ்திரத்தை அருளியவனே;

தாண்டவனே - தாண்டவம் ஆடும் கூத்தனே;

தண்-பொழில் சூழ் சாய்க்காட்டு எம் பெருமானே - குளிர்ந்த சோலை சூழ்ந்த திருச்சாய்க்காட்டில் உறைகின்ற எம் பெருமானே;

மாண்டவர்தம் எலும்பு அணியும் மாதேவா - இறந்த பிரமவிஷ்ணுக்களின் எலும்பை அணியும் மஹாதேவனே;

மண்மீது மீண்டு-வரச்செய் வினையை வீட்டி எனைக் காத்தருளே - இம்மண்ணின்மேல் மீண்டும் பிறவியைக் கொடுக்கின்ற வினையை அழித்து என்னைக் காப்பாயாக; (வீட்டுதல் - அழித்தல்);


5)

பெண்சேரும் மேனியுடைப் பெருமையினாய் வண்டறையும்

தண்சோலை புடைசூழ்ந்த சாய்க்காட்டெம் பெருமானே

பண்சேரும் தமிழ்மகிழும் பண்பினனே எண்குணனே

கண்சேரும் நெற்றியினாய் கைதொழுதேன் காத்தருளே.


பெண் சேரும் மேனியுடைப் பெருமையினாய் - உமையைத் திருமேனியில் ஒரு பங்காக உடைய பெருமையை உடையவனே;

வண்டு அறையும் தண்-சோலை புடை சூழ்ந்த சாய்க்காட்டு எம் பெருமானே - வண்டுகள் ஒலிக்கும் குளிர்ந்த சோலை சூழ்ந்த திருச்சாய்க்காட்டில் உறைகின்ற எம் பெருமானே;

பண் சேரும் தமிழ் மகிழும் பண்பினனே - பண் பொருந்தப் பாடப்பெறும் தமிழ்ப்பாமாலைகளை விரும்பியவனே;

எண்குணனே - எட்டுக்குணங்கள் உடையவனே; (சுந்தரர் தேவாரம் - 7.40.3 - "இறையவனை மறையவனை எண்குணத்தினானை");

கண் சேரும் நெற்றியினாய் - நெற்றிக்கண்ணனே;

கைதொழுதேன் காத்தருளே - உன்னைக் கைகூப்பி வணங்குகின்றேன்; அடியேனைக் காப்பாயாக;


6)

கடலிடையோர் மலையூன்றிக் கடைந்தவர்தம் கலக்கமற

விடமதனை அமுதுண்டு மிடறுதனில் கரந்தவனே

தடமதில்மூன் றெய்தவனே சாய்க்காட்டெம் பெருமானே

படர்சடைமேல் பாம்புடையாய் பழவினைதீர்த் தருளாயே.


கடலிடை ஓர் மலை ஊன்றிக் கடைந்தவர்தம் கலக்கம் அற விடம்-அதனை அமுதுண்டு மிடறுதனில் கரந்தவனே - பாற்கடலில் ஒரு மலையை மத்தாக ஊன்றிக் கடைந்தவர்களது அச்சம் தீர ஆலகாலத்தை உண்டு கண்டத்தில் மறைத்தவனே; (மிடறு - கழுத்து); (கரத்தல் - மறைத்தல்; ஒளித்தல்); (சம்பந்தர் தேவாரம் - 3.50.3 - "வல்விடம் கரந்த கண்டத்தினான்");

தடமதில் மூன்று எய்தவனே - பெரிய மூன்று கோட்டைகளை ஒரு கணையால் எய்து அழித்தவனே; (தடம் - பெருமை; அகலம்);

சாய்க்காட்டு எம் பெருமானே - திருச்சாய்க்காட்டில் உறைகின்ற எம் பெருமானே;

படர்சடைமேல் பாம்பு உடையாய் - படரும் சடையின்மேல் பாம்பை அணிந்தவனே;

பழவினை தீர்த்தருளாயே - என் பழவினையைத் தீர்த்து அருள்வாயாக;


7)

மலைமாது மணவாளா மணம்வீசும் கொன்றைமலர்

தலைமாலை புனைந்தவனே சாய்க்காட்டெம் பெருமானே

சிலையாக மலையேந்தித் திரிபுரத்தை எரித்தவனே

கலைமானோர் கையினனே கடுவினைதீர்த் தருளாயே.


மலைமாது மணவாளா - மலைமங்கையான உமைக்குக் கணவனே;

மணம் வீசும் கொன்றைமலர் தலைமாலை புனைந்தவனே - வாசனை கமழும் கொன்றைமலரையும் மண்டையோட்டு-மாலையையும் அணிந்தவனே;

சாய்க்காட்டு எம் பெருமானே - திருச்சாய்க்காட்டில் உறைகின்ற எம் பெருமானே;

சிலையாக மலை ஏந்தித் திரிபுரத்தை எரித்தவனே - மேருமலையை வில்லாக ஏந்தி முப்புரங்களை எரித்தவனே; (சிலை - வில்);

கலைமான் ஓர் கையினனே - ஒரு கையில் மானை ஏந்தியவனே;

கடுவினை தீர்த்து அருளாயே - என் கொடிய வினையைத் தீர்த்து அருள்வாயாக; (கடுமை - கொடுமை);


8)

தோள்வலியை உன்னிமலை தூக்கியவன் கத்தியழத்

தாள்விரலை ஊன்றியருள் சாய்க்காட்டெம் பெருமானே

வேள்விரையார் கணையெய்ய விழித்தவனைச் சுட்டவனே

நாள்கணிகூற் றடைந்தென்னை நலியாமுன் காத்தருளே.


தோள்வலியை உன்னி மலை தூக்கியவன் கத்தி அழத் தாள்விரலை ஊன்றி அருள் - தன் புஜபலத்தை எண்ணிக் கயிலைமலையை பெயர்த்த இராவணன் கத்தி அழும்படி திருப்பாதவிரல் ஒன்றை ஊன்றி அவனை நசுக்கி அருளிய;

சாய்க்காட்டு எம் பெருமானே - திருச்சாய்க்காட்டில் உறைகின்ற எம் பெருமானே;

வேள் விரை ஆர் கணை எய்ய, விழித்து அவனைச் சுட்டவனே - மன்மதன் வாசனை மிக்க மலரம்பை எய்த பொழுது நெற்றிக்கண்ணால் பார்த்து அவனைச் சுட்டெரித்தவனே;

நாள் கணி- கூற்று அடைந்து என்னை நலியாமுன் காத்தருளே - ஆயுளைக் கணக்கிடும் காலன் என்னை அடைந்து துன்புறுத்துவதன் முன்னமே அடியேனைக் காப்பாயாக; (கணித்தல் - கணக்கிடுதல்); (நலித்தல் - வருத்துதல்);


9)

நாரணனு(ம்) நான்முகனு(ம்) நண்ணவொணாப் பரஞ்சுடரே

தாரணியு(ம்) மார்பினனே சாய்க்காட்டெம் பெருமானே

வாரணியு(ம்) முலைமங்கை வாமத்தாய் வானவர்க்காக்

காரணியும் கண்டத்தாய் கடுவினைதீர்த் தருளாயே.


நாரணனும் நான்முகனும் நண்ண ஒணாப் பரஞ்சுடரே - விஷ்ணு பிரமன் இவர்களால் அணுக ஒண்ணாத மேலான ஜோதியே; (நண்ணுதல் - நெருங்குதல்); (ஒணா - ஒண்ணாத);

தார் அணியும் மார்பினனே - மார்பில் (கொன்றை, அரவ) மாலை அணிந்தவனே;

சாய்க்காட்டு எம் பெருமானே - திருச்சாய்க்காட்டில் உறைகின்ற எம் பெருமானே;

வார் அணியும் முலை-மங்கை வாமத்தாய் - கச்சு அணிந்த முலையுடைய உமையை இடப்பக்கத்தில் கூறாக உடையவனே; (வார் - முலைக்கச்சு);

வானவர்க்காக் கார் அணியும் கண்டத்தாய் - தேவர்களுக்காக (ஆலகாலத்தை உண்டு) கருமையைக் கண்டத்தில் அணிந்தவனே;

கடுவினை தீர்த்து அருளாயே - என் கொடிய வினையைத் தீர்த்து அருள்வாயாக; (கடுமை - கொடுமை);


10)

மெய்யறியா வீணருரை வெற்றுரையில் வீழேன்மின்

தையலொரு பங்குடைய சாய்க்காட்டெம் பெருமானார்

கையிலணி மலரேந்திக் கழலிட்டுத் தொழுமன்பர்

மையலறுத் தவரையின்ப வானத்தில் வைப்பாரே.


மெய் அறியா வீணர் உரை வெற்றுரையில் வீழேன்மின் - தத்துவம் ஒன்றும் அறியாத வீணர்கள் சொல்லும் பொருளற்ற பேச்சில் நீங்கள் மயங்கவேண்டா; (ஏல் - எதிர்மறை ஏவல்ஒருமை விகுதி); (மின் - ஏவற்பன்மை விகுதி);

தையல் ஒரு பங்கு உடைய சாய்க்காட்டு எம் பெருமானார் - உமையை ஒரு பங்காக உடையவரும் திருச்சாய்க்காட்டில் உறைபவருமான எம்பெருமானார்; (தையல் - பெண்);

கையில் அணி-மலர் ஏந்திக் கழல் இட்டுத் தொழும் அன்பர் மையல் அறுத்து அவரை இன்ப-வானத்தில் வைப்பாரே - கையில் அழகிய மலரை ஏந்தித் திருவடியில் தூவி வழிபடும் பக்தர்களது மயக்கத்தை நீக்கி அவர்களை இன்பம் மிக்க சிவலோகத்தில் வைப்பார்; (மையல் - மயக்கம்); (சம்பந்தர் தேவாரம் - 1,80.2 - "பின்தாழ் சடையானை மறப்பிலார் கண்டீர் மையல் தீர்வாரே");


11)

சங்குமணி கையுடையார் தண்மதுவுண் டளியினங்கள்

தங்குமணி பொழில்சூழ்ந்த சாய்க்காட்டெம் பெருமானார்

எங்குமணி யாகப்பாம் பிலங்குமிறை கரியவொளி

பொங்குமணி கண்டத்தர் பொன்னடிகள் புகலாமே.


சங்கும் அணி கை உடையார் - கையில் வளையலும் அணிந்தவர் - அர்த்தநாரீஸ்வரர்; (சங்கு - வளையல்);

தண்-மது உண்டு அளியினங்கள் தங்கும் அணி-பொழில் சூழ்ந்த சாய்க்காட்டு எம் பெருமானார் - குளிர்ந்த தேனை உண்டு வண்டுகள் உலாவுகின்ற அழகிய சோலை சூழ்ந்த திருச்சாய்க்காட்டில் உறைகின்ற எம் பெருமானார்;

எங்கும் அணியாகப் பாம்பு இலங்கும் இறை - திருமேனியில் எங்கும் ஆபரணம்போல் பாம்புகள் திகழும் இறைவர்;

கரிய ஒளி பொங்கு மணிகண்டத்தர் - (ஆலகாலத்தை உண்டு) ஒளிவீசுகின்ற நீலமணி விளங்கும் கண்டத்தை உடையவர்;

பொன்னடிகள் புகல் ஆமே - அப்பெருமானாரின் பொன் போன்ற திருவடிகள் நமக்குப் புகலிடம் ஆகும்; (புகல் - அடைக்கலம்; சரண்);


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment