2020-05-08
S.151 - சிவன் - கொரோனா வைரஸ் - சிலேடை
-------------
பரவும் எவருக்கும் பற்றற் கெளிது
வரநல் குமதிதுக்க மல்க - விரவாது
நீங்கியோர் தம்மை நெருங்கா திருக்குமறை
நான்குமொழி கோன்கொரோ னா.
சொற்பொருள்:
பரவுதல் - 1. புகழ்தல்; துதித்தல்; / 2. To spread; பரந்திருத்தல்;
பற்றுதல் - 1. மனத்துக் கொள்ளுதல்; / 2. பிடித்தல்;
வரநல்குமதிதுக்கமல்க - 1. வர(ம்) நல்கு(ம்) மதி துக்கம் அல்க; / 2. வர நல்கும் அதிதுக்க(ம்) மல்க;
* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;
அல்குதல் - அழிதல்;
மல்குதல் - மிகுதல்;
விரவுதல் - 1. To mix, mingle; to join, unite; கலத்தல். 2. To approach, draw near; அடைதல்;
கொரோனா கிருமி:
பரவும்; எவருக்கும் பற்றற்(கு) எளிது;
வர நல்கும் அதி-துக்க(ம்) மல்க; - விரவாது
நீங்கியோர்-தம்மை நெருங்காதிருக்கும்; அறை-
நான்கும் ஒழி கோன் கொரோனா.
பரவும் - உலகில் / நாட்டில் / ஊரில் பரவுகின்ற நோய்;
எவருக்கும் பற்றற்கு எளிது - ஏழை பணக்காரர் என்ற பாகுபாடு இன்றிப் பலரையும் சுலபத்தில் பீடிக்கின்ற நோய்;
வர நல்கும் அதிதுக்க(ம்) மல்க - கொரோனா வந்தடைந்தால் பீடிக்கப்பட்டவர்களுக்குப் பெருந்துக்கம் மிகும்படி தரும்; (அதி & மல்க - ஒருபொருட்பன்மொழி ஒத்த பிரயோகம்);
விரவாது நீங்கியோர்-தம்மை நெருங்காதிருக்கும் - கூட்டமாகக் கலந்து இராமல் விலகி இருப்பவர்களை இக்கிருமி நெருங்காது; ("social distancing" is a recommended approach to prevent coronavirus infection);
அறை நான்கும் ஒழி கொரோனா - சொல்லும் நான்கையும் (புருஷார்த்தங்கள் - அறம், பொருள், இன்பம், வீடு) அழிக்கும் கொரோனா கிருமி - உயிரைக் கொல்லும் கொடிய கொரோனா கிருமி; (அறைதல் - சொல்தல்); (திருமந்திரம் - 10.3.13.1 - "உடம்பார் அழியில் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்")
சிவன்:
பரவும் எவருக்கும் பற்றற்(கு) எளிது;
வர(ம்) நல்கு(ம்) மதி-துக்கம் அல்க; - விரவாது
நீங்கியோர்-தம்மை நெருங்காதிருக்கு(ம்); மறை-
நான்கு(ம்) மொழி கோன் கொரோனா.
பரவும் எவருக்கும் பற்றற்கு எளிது - துதிக்கும் எல்லாராலும் எளிதில் அடையப்படுபவன்;
வர(ம்) நல்கு(ம்) மதி துக்கம் அல்க - சந்திரனது துக்கம் அழியும்படி வரம் தருவான்;
விரவாது நீங்கியோர்-தம்மை நெருங்காதிருக்கு(ம்) - தன்னைச் சரணடையாமல் நீங்கியவர்களிடமிருந்து தொலைவில் இருப்பான்; (சுந்தரர் தேவாரம் - 7.19.10 - "பேர்ந்தவர்க்குச் சேயார் அடியார்க்கு அணியவர் ஊர் திருநின்றியூரே");
மறை நான்கு(ம்) மொழி கோன் - நால்வேதங்களாலும் போற்றப்படும் தலைவன்; நால்வேதங்களையும் பாடியருளிய தலைவன்;
(இலக்கணக் குறிப்பு : நல்கும், இருக்கும் - செய்யும் என்ற வாய்பாட்டு வினைமுற்று);
வி. சுப்பிரமணியன்
------------
No comments:
Post a Comment