Wednesday, June 10, 2026

P.503 - நீடூர் - மருச்சேரும் கொன்றையொடு

2020-05-02

P.503 - நீடூர்

(மயிலாடுதுறை அருகுள்ள தலம்)

------------

(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)

(சம்பந்தர் தேவாரம் - 2.48.1 - "கண்காட்டு நுதலானும்")

* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;


1)

மருச்சேரும் கொன்றையொடு மாசுணமும் சூடியவன்

திருச்சேறைச் செந்நெறியான் திருவாரூர்த் தியாகேசன்

தருக்கீழ்நான் மறைவிரித்தான் தையலொரு பங்கமர்ந்த

அருட்சோம நாதனிடம் அணியாரும் நீடூரே.


மருச் சேரும் கொன்றையொடு மாசுணமும் சூடியவன் - மணம் பொருந்திய கொன்றைமலரையும் பாம்பையும் அணிந்தவன்; (மாசுணம் - பாம்பு);

திருச்சேறைச் செந்நெறியான் - திருச்சேறையில் செந்நெறி இறைவன்; (அப்பர் தேவாரம் - 5.77.3 - "சேறையுட் செந்நெறியான் கழல் மறப்பதின்றி மனத்தினுள் வைக்கவே");

திருவாரூர்த் தியாகேசன் - திருவாரூரில் தியாகராஜன்;

தருக்கீழ் நான்மறை விரித்தான் - கல்லாலமரத்தின்கீழ் நால்வேதங்களை உபதேசித்தவன்; (தரு - மரம்; இங்கே, கல்லாலமரம்); (விரித்தல் - உபதேசித்தல்);

தையல் ஒரு பங்கு அமர்ந்த - உமையை ஒரு பாகமாக விரும்பிய; (தையல் - பெண்); (அமர்தல் - விரும்புதல்);

அருட்சோமநாதன் இடம் அணி ஆரும் நீடூரே - அருட்சோமநாதன் உறையும் தலம் அழகிய திருநீடூர்; (* அருட்சோமநாதன் - இத்தலத்து இறைவன் திருநாமம்);


2)

பாயு(ம்)நதி படர்சடையில் பகீரதற்காத் தாங்கியவன்

காயு(ம்)நுதற் கண்ணாலே காமனைமுன் எரித்தபிரான்

தீயுறுசெம் மேனிமிசைத் திருநீற்றைப் பூசியவன்

வேயுறுதோள் உமைபங்கன் விரும்புமிடம் நீடூரே.


பாயும் நதி படர்சடையில் பகீரதற்காத் தாங்கியவன் - பாய்ந்துவரும் கங்கையைப் பகீரதனுக்கு இரங்கிப் படர்ந்த சடையில் தாங்கியவன்; (பகீரதற்கா - பகீரதனுக்காக);

காயும் நுதற்கண்ணாலே காமனை முன் எரித்த பிரான் - மன்மதனை முன்பு நெற்றிக்கண்ணால் நோக்கிச் சுட்டெரித்த பெருமான்;

தீ உறு செம்மேனிமிசைத் திருநீற்றைப் பூசியவன் - தீப் போன்ற சிவந்த திருமேனியின்மேல் திருநீற்றைப் பூசியவன்; (உறுதல் - ஒத்தல்);

வேய் உறு தோள் உமைபங்கன் விரும்பும் இடம் நீடூரே - மூங்கில் போன்ற புஜங்களை உடைய உமையை ஒரு பங்கில் உடையவன் விரும்பி உறையும் தலம் திருநீடூர்; (வேய் - மூங்கில்); (உறுதல் - ஒத்தல்); (* வேயுறுதோளியம்மை - இத்தலத்து இறைவி திருநாமம்);


3)

மாயனைய அருளென்று வாழ்த்தமகிழ்ந் தாழிதந்தான்

தேயனைய(ம்) மடவார்பால் சென்றிரக்கும் செல்வனவன்

தீயனைய செஞ்சடைமேல் சீறரவம் சூடியவன்

வேயனைய தோளிபங்கன் விரும்புமிடம் நீடூரே.


மாயன் "ஐய! அருள்" என்று வாழ்த்த மகிழ்ந்து ஆழி தந்தான் - திருமால், "ஐயனே, அருளாய்" என்று போற்றி வணங்க, மகிழ்ந்து சக்கராயுதத்தை அருள்செய்தவன்; (ஆழி - சக்கரம்);

தேயன், ஐயம் மடவார்பால் சென்றிரக்கும் செல்வன் அவன் - தியானிக்கப்படும் பொருள் ஆனவன், பெண்களிடம் சென்று பிச்சை இரக்கின்ற செல்வன்; (தேயன் - தியானிக்கப்படுவோன்); (ஐயம் - பிச்சை); (அப்பர் தேவாரம் - 4.33.2 - "தேயன நாட ராகித் தேவர்கள் தேவர் போலும்");

தீ அனைய செஞ்சடைமேல் சீறு-அரவம் சூடியவன் - தீப் போன்ற சிவந்த சடையின்மீது சீறுகின்ற பாம்பை அணிந்தவன்;

வேய் அனைய தோளி-பங்கன் விரும்பும் இடம் நீடூரே - மூங்கில் போன்ற புஜங்களை உடைய உமையை ஒரு பங்கில் உடையவன் விரும்பி உறையும் தலம் திருநீடூர்; (வேய் - மூங்கில்); (* வேயுறுதோளியம்மை - இத்தலத்து இறைவி திருநாமம்);


4)

அந்தகனின் அகலத்தில் அயில்வேலைப் பாய்ச்சியவன்

அந்திவண மேனியினான் அரவத்தை அரையார்த்தான்

சந்திரனைக் கண்ணியெனச் சடைமீது புனைந்தசிவன்

இந்திரனுக் கருள்புரிந்த இறைவனிடம் நீடூரே.


அந்தகனின் அகலத்தில் அயில்வேலைப் பாய்ச்சியவன் - அந்தகாசுரனது மார்பில் கூரிய சூலத்தைக் குத்தி அவனை அழித்தவன்; (அயில் - கூர்மை);

அந்திவண மேனியினான் - அந்திப்பொழுதின் செவ்வானம் போலச் செம்மேனியை உடையவன்;

அரவத்தை அரை ஆர்த்தான் - பாம்பை அரையில் கட்டியவன்; (ஆர்த்தல் - கட்டுதல்);

சந்திரனைக் கண்ணி எனச் சடைமீது புனைந்த சிவன் - சந்திரனைக் கண்ணிமாலை போலச் சடையின்மேல் அணிந்த சிவபெருமான்; (கண்ணி - தலையில் அணியும் மாலைவகை);

இந்திரனுக்கு அருள்புரிந்த இறைவன் இடம் நீடூரே - இந்திரனுக்கு அருள்புரிந்த கடவுள் உறையும் தலம் திருநீடூர்; (* இந்திரன் இத்தலத்தில் வழிபாடு செய்தது - தலவரலாற்றுச் செய்தி);


5)

கனைகடல்மா நஞ்சுண்ட கண்டத்தாய் காவென்று

தனையடைமார்க் கண்டர்க்காத் தாளால்கூற் றுதைத்தபிரான்

முனையடுவார் முன்பணிந்த முக்கண்ணன் அடியார்தம்

வினையடுவான் வெள்விடையன் விரும்புமிடம் நீடூரே.


"கனைகடல் மா-நஞ்சு உண்ட கண்டத்தாய் கா" என்று - "ஒலிக்கின்ற கடலில் தோன்றிய ஆலகாலத்தை உண்ட கண்டனே! காத்தருளாய்" என்று போற்றிசெய்து; (கனைதல் / கனைத்தல் - ஒலித்தல்);

தனை அடை மார்க்கண்டர்க்காத் தாளால் கூற்று உதைத்த பிரான் - தன்னைச் சரணடைந்த மார்க்கண்டேயருக்காகக் காலனைத் திருவடியால் உதைத்த பெருமான்; (தனை - தன்னை); (அடைதல் - சரண்புகுதல்);

முனையடுவார் முன் பணிந்த முக்கண்ணன் - முனையடுவார் நாயனாரால் வழிபடப்பெற்ற நெற்றிக்கண்ணன்; (* முனையடுவார் நாயனார் வாழ்ந்த தலம் திருநீடூர்);

அடியார்தம் வினை அடுவான் - அடியவர்களுடைய வினைகளை அழிப்பவன்; (அடுதல் - அழித்தல்);

வெள்விடையன் விரும்பும் இடம் நீடூரே - வெள்ளை இடபத்தை வாகனமாக உடைய பெருமான் விரும்பி உறையும் தலம் திருநீடூர்;


6)

அக்கரவம் ஆரமென ஆகத்தில் பூண்டவன்முன்

நக்கரண(ம்) மூன்றெரித்த நாதனரை வெள்ளேற்றன்

கொக்குருவன் இறகுதனைக் குஞ்சிதனில் அணிந்தபிரான்

நெக்குருகும் அடியார்க்கு நேசனிட(ம்) நீடூரே.


அக்கு அரவம் ஆரம் என ஆகத்தில் பூண்டவன் - எலும்பையும் பாம்பையும் மாலையெனத் திருமேனியில் அணிந்தவன்; (அக்கு - எலும்பு); (ஆரம் - மாலை); (ஆகம் - உடல்);

முன் நக்கு அரணம் மூன்று எரித்த நாதன் - முன்பு சிரித்து முப்புரங்களை எரித்த தலைவன்; (நகுதல் - சிரித்தல்); (அரணம் - மதில்);

நரை-வெள்ளேற்றன் - மிக வெண்மையான விடையை ஊர்தியாக உடையவன்; (சம்பந்தர் தேவாரம் - 1.98.1 - "நன்றுடையானைத் தீயதிலானை நரைவெள்ளேறு ஒன்றுடையானை");

கொக்கு-உருவன் இறகுதனைக் குஞ்சிதனில் அணிந்த பிரான் - கொக்கு வடிவாய குரண்டாசுரனை அழித்து அதன் அடையாளமாகக் கொக்கிறகைத் தலையில் சூடிய பெருமான்; (குஞ்சி - தலை); (* கந்தபுராணம் - 3. மகேந்திர காண்டம் - 9. சயந்தன் புலம்புறு படலம் - # 64 - "ஏங்கி அமரர் ... குரண்டத் துருக்கொண்ட தானவனைத் தீங்கு பெறத்தடிந்து சின்னமா ஓர்சிறையை வாங்கி அணிந்த");

நெக்குருகும் அடியார்க்கு நேசன் இடம் நீடூரே - மனம் நெகிழ்ந்து உருகும் பக்தர்களுக்கு அன்பன் உறையும் தலம் திருநீடூர்; (நெகுதல் - கரைதல்; உருகுதல்);


7)

சீர்பரவும் தேவரிடர் தீரமுன(ம்) மேருவெனும்

ஓர்மலையை வில்லாக்கி ஒருகணையால் புரமெய்தான்

கார்முகிலார் கண்டத்தன் கழலிணையை நினைந்துருகி

நீர்மலரால் தொழுவார்க்கு நேசனிடம் நீடூரே.


சீர் பரவும் தேவர் இடர் தீர முனம் மேரு எனும் ஓர் மலையை வில்க்கி ஒரு கணையால் புரம் எய்தான் - புகழ் பாடும் தேவர்களது துன்பம் தீரும்படி முன்பு மேரு என்ற ஒப்பற்ற மலையை வில்லாக வளைத்து ஒரு கணையால் முப்புரங்களை எய்தவன்;

கார்முகில் ஆர் கண்டத்தன் - மழைமேகம் போன்ற நீலகண்டன்; (ஆர்தல் - ஒத்தல்);

கழலிணையை நினைந்து உருகி நீர் மலரால் தொழுவார்க்கு நேசன் இடம் நீடூரே - இருதிருவடிகளை எண்ணி உருகி நீரும் பூவும் கொண்டு வழிபடும் பக்தர்களுக்கு அன்பன் உறையும் தலம் திருநீடூர்;


8)

தரைதனில்தன் தேரிறங்கத் தரியாத அரக்கன்போய்

வரைதனைத்தோள் பத்திரட்டி வலிகொண்டு பெயர்த்தக்கால்

விரைமலர்த்தாள் விரலூன்றி விறலழித்தோர் பெயரீந்தான்

நிரைவளைக்கை உமைமங்கை நேயனிடம் நீடூரே.


தரைதனில் தன் தேர் இறங்கத் தரியாத அரக்கன் போய் - பறந்து செல்லும் தன் தேர் தரையில் இறங்கிவிட்டதைப் பொறுக்கமாட்டாத தசமுகன் சென்று; (தரைதனிற்றன் - தரைதனில் தன்);

வரைதனைத் தோள் பத்திரட்டி வலிகொண்டு பெயர்த்தக்கால் - கயிலைமலையை அவனது இருபது புஜங்களின் வலிமையால் பெயர்த்தபொழுது; (பத்திரட்டி - 10x2 - இருபது);

விரைமலர்த்-தாள்-விரல் ஊன்றி விறல் அழித்து ஓர் பெயர் ஈந்தான் - வாசமலர்ப்-பாதத்தின் விரலொன்றை ஊன்றி அவனை நசுக்கிப், பின் அவன் நெடுங்காலம் அழுது தொழ, இரங்கி அவனுக்கு இராவணன் (= அழுதவன்) என்ற ஒரு பெயரை அளித்தவன்; (விறல் - வலிமை; பெருமை); (சம்பந்தர் தேவாரம் - 1.17.8 - "குணநாமமும் கொடுத்த ஏரார்தரும் இறைவர்க்கிடம்");

நிரை-வளைக்கை உமைமங்கை நேயன் இடம் நீடூரே - வரிசையாக வளையல்களைக் கையில் அணிந்த உமாதேவிக்கு அன்பன் உறையும் தலம் திருநீடூர்; (நிரை - வரிசை);


9)

முன்னரியும் அயனுமடி முடிகாணாத் தழலுருவன்

பன்னியடி இணைதொழுத பலதேவர் பயம்தீரப்

பன்னிருகை வேலவனைப் பயந்தபிரான் பாம்போடு

சென்னிமிசைப் பிறையணிந்த செல்வனிடம் நீடூரே.


முன் அரியும் அயனும் அடிமுடி காணாத் தழல்-உருவன் - முன்பு திருமால் பிரமன் இவர்களால் அடிமுடி அறியப்படாத ஜோதி-வடிவினன்;

பன்னி அடிஇணை தொழுத பல தேவர் பயம் தீரப் - புகழ்ந்து பாடி இருதிருவடிகளை வழிபட்ட பல தேவர்களது அச்சம் தீரும்படி; (பன்னுதல் - புகழ்தல்; பாடுதல்);

பன்னிருகை வேலவனைப் பயந்த பிரான் - பன்னிரு கைகளையுடைய முருகனைத் தந்த பெருமான்; (பயத்தல் - மகப் பெறுதல்; கொடுத்தல்);

பாம்போடு சென்னிமிசைப் பிறை அணிந்த செல்வன் இடம் நீடூரே - திருமுடிமேல் பாம்பையும் பிறையையும் அணிந்த செல்வன் உறையும் தலம் திருநீடூர்; (சென்னி - தலை);


10)

வஞ்சித்து வழிமாற்று(ம்) மதிகேடர் தங்கட்குக்

கிஞ்சித்தும் அருளில்லான் கிட்டவரு காலனைக்கண்

டஞ்சித்தன் அடியடைந்த மார்க்கண்டர்க் கருள்புரிந்தான்

குஞ்சித்தண் புனலணிந்த கூத்தனிடம் நீடூரே.


வஞ்சித்து வழிமாற்றும் மதிகேடர்-தங்கட்குக் கிஞ்சித்தும் அருள் இல்லான் - பல பொய்கள் பேசி வஞ்சனை செய்து மக்களை நெறி மாற்றுகின்ற தீயவர்களுக்குக் கொஞ்சமும் அருள் இல்லாதவன்;

கிட்ட வரு காலனைக் கண்டு அஞ்சித் தன் அடி அடைந்த மார்க்கண்டர்க்கு அருள்புரிந்தான் - அருகே வந்த கூற்றுவனைக் கண்டு அஞ்சித் திருவடியைச் சரணடைந்த மார்க்கண்டேயருக்கு அருள்புரிந்தவன்; (கிட்ட - அருகே);

குஞ்சித் தண்-புனல் அணிந்த கூத்தன் இடம் நீடூரே - தலையில் குளிர்ந்த கங்கையாற்றை அணிந்த கூத்தன் உறையும் தலம் திருநீடூர்; (குஞ்சி - தலை);


11)

உரிவையணி மாதேவன் ஓடேந்தும் பெருஞ்செல்வன்

அரியமணி வெண்முத்தம் ஆணிப்பொன் என்றெல்லாம்

பரிவினொடு பரவுகின்ற பத்தர்களைப் பாலிக்கும்

கரியமணி கண்டத்தன் கருதுமிடம் நீடூரே.


உரிவை அணி மாதேவன் - தோலை ஆடையாக அணியும் மகாதேவன்; (உரிவை - தோல்);

ஓடு ஏந்தும் பெரும்-செல்வன் - மண்டையோட்டைக் கையில் ஏந்தி யாசிக்கின்ற பெரிய செல்வன்;

அரிய மணி, வெண்-முத்தம், ஆணிப்-பொன் என்றெல்லாம் - அரிய மணி போன்றவன், வெண்மையான முத்துப் போன்றவன், சிறந்த பொன் போன்றவன் என்றெல்லாம் பலவாறு; (முத்தம் - முத்து); (ஆணிப்பொன் - மாற்றுரைத்துப் பார்ப்பதற்கு மாதிரியாக வைத்திருக்கும் சுத்தமான பொன்); (சம்பந்தர் தேவாரம் - 2.102.4 - "சிரபுரத் தமர்கின்ற ஆணிப் பொன்னினை அடிதொழும் அடியவர்க் கருவினை அடையாவே"); (அப்பர் தேவாரம் - 7.38.2 - "பொன்னே நன்மணியே வெண்முத்தே செம்பவளக் குன்றமே ஈசனென் றுன்னியே புகழ்வேன்");

பரிவினொடு பரவுகின்ற பத்தர்களைப் பாலிக்கும் - அன்போடு துதிக்கின்ற பக்தர்களைக் காத்தருளும்; (பரிவு - அன்பு; பக்தி); (பாலித்தல் - காத்தல்);

கரிய மணிகண்டத்தன் கருதும் இடம் நீடூரே - நீலமணிகண்டம் உடைய சிவபெருமான் விரும்பி உறையும் தலம் திருநீடூர்;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment