08.02.185 – பொது - துட்டத்தனம் மிக்குப் - (வண்ணம்)
2007-05-01
08.02.185 - துட்டத்தனம் மிக்குப் - (பொது)
-------------------------
(வண்ணவிருத்தம்;
தத்தத்தன தத்தத் தனதன
தத்தத்தன தத்தத் தனதன
தத்தத்தன தத்தத் தனதன .. தனதான )
(முத்தைத்தரு பத்தித் திருநகை - திருப்புகழ்)
துட்டத்தன(ம்) மிக்குப் பலதினம்
.. .. .. அற்பச்செய லிற்புக் கவைதரு
.. .. துக்கத்தினில் இக்கட் டினில்நிலை .. குலையாமல்
.. சுற்றிப்பிணி பற்றுக் கெடமனம்
.. .. .. ஒட்டித்தமிழ் செப்பிச் சுகமது
.. .. துய்க்கப்பரி வுற்றுத் திருவருள் .. புரியாயே
வட்டப்படை நச்சிக் கரியவன்
.. .. .. நித்தற்கடி மிக்குத் திகழ்மலர்
.. .. இட்டுத்தொழ அற்றைக் கொருமலர் .. குறைவாக
.. வைக்கத்தன தக்கத் தினையிட
.. .. .. அப்பத்தித னக்குப் பரிசென
.. .. வைப்பற்றிகழ் வெற்றித் திகிரியை .. அருள்வோனே
மட்டற்றசெ ருக்குற் றிருபது
.. .. .. மற்கைத்தல(ம்) மெச்சிச் சிலையெறி
.. .. மட்டிக்கொரு பத்துத் தலையிற .. நெரிபாதா
.. மத்தத்தொடெ ருக்குற் றிடுமுடி
.. .. .. எற்றித்திரை சுற்றக் கதிர்மதி
.. .. வைத்துப்பெரு நச்சுப் பணியையும் .. அணிவோனே
எட்டுத்திசை சுட்டுப் பெருவிடம்
.. .. .. எட்டிற்றென அச்சத் தொடுசுரர்
.. .. எய்ப்புற்றடி பற்றிப் பரவிட .. அமுதாக
.. இட்டத்தொடு துற்றிக் களனிடை
.. .. நிற்பித்தர வக்கச் சினனென
.. .. இற்பிச்சையை நச்சித் திரிதரு .. பெருமானே.
பதம் பிரித்து:
துட்டத்தனம் மிக்குப், பல தினம்
.. .. .. அற்பச்செயலிற் புக்கு, அவை தரு
.. .. துக்கத்தினில் இக்கட்டினில் நிலை .. குலையாமல்,
.. சுற்றிப் பிணி பற்றுக் கெட, மனம்
.. .. .. ஒட்டித் தமிழ் செப்பிச் சுகமது
.. .. துய்க்கப், பரிவுற்றுத் திருவருள் .. புரியாயே;
வட்டப்படை நச்சிக் கரியவன்
.. .. .. நித்தற் கடி மிக்குத் திகழ் மலர்
.. .. இட்டுத் தொழ, அற்றைக்கு ஒரு மலர் .. குறைவு ஆக
.. வைக்கத், தனது அக்கத்தினை இட,
.. .. .. அப்பத்தி-தனக்குப் பரிசு என
.. .. வைப்-பல்-திகழ் வெற்றித் திகிரியை .. அருள்வோனே;
மட்டு-அற்ற செருக்கு உற்று, இருபது
.. .. .. மற்-கைத்தலம் மெச்சிச், சிலை எறி
.. .. மட்டிக்கு ஒரு பத்துத் தலை இற .. நெரி பாதா;
.. மத்தத்தொடு எருக்கு உற்றிடு முடி
.. .. .. எற்றித் திரை சுற்றக், கதிர்-மதி
.. .. வைத்துப், பெரு-நச்சுப் பணியையும் .. அணிவோனே;
எட்டுத்-திசை சுட்டுப் பெரு-விடம்
.. .. .. எட்டிற்று என அச்சத்தொடு சுரர்
.. .. எய்ப்பு-உற்று அடி பற்றிப் பரவிட, .. அமுதாக
.. இட்டத்தொடு துற்றிக் களனிடை
.. .. நிற்பித்து, அரவக்-கச்சினன் என
.. .. இற்-பிச்சையை நச்சித் திரிதரு .. பெருமானே.
துட்டத்தனம் மிக்குப், பல தினம் அற்பச்செயலிற் புக்கு - துஷ்டத்தனம் மிகுந்து, பலநாளும் இழிந்த செயல்களில் ஈடுபட்டு; (துட்டம் - துஷ்டம் - தீமை; கொடுமை); (புக்கு - புகுந்து);
அவை தரு துக்கத்தினில் இக்கட்டினில் நிலைகுலையாமல் - அவை தரும் துக்கத்திலும் கஷ்டத்திலும் நிலைகுலைந்து அழியாமல்; (இக்கட்டு - இடுக்கண் - கஷ்டம்);
சுற்றிப் பிணி பற்றுக் கெட, மனம் ஒட்டித் தமிழ் செப்பிச் சுகமது துய்க்கப், பரிவுற்றுத் திருவருள் புரியாயே - என்னைச் சுற்றிக் கட்டியுள்ள பந்தம் அழிய, என் மனம் ஒன்றித் தேவாரம் முதலிய பாமாலைகளைப் பாடி நான் இன்பம் அனுபவிக்க, நீ இரங்கித் திருவருள் செய்வாயாக; (பிணித்தல் - கட்டுதல்); (சுகமது - சுகம்; அது - பகுதிப்ப்பொருள்விகுதி); (துய்த்தல் - அனுபவித்தல்); (பரிவு - அன்பு; இரக்கம்);
வட்டப்படை நச்சிக் கரியவன் நித்தல் கடி மிக்குத் திகழ் மலர் இட்டுத் தொழ – வட்டமான ஆயுதத்தை விரும்பித் திருமால் தினமும் வாசனை மிகுந்து திகழும் (ஆயிரம்) தாமரைமலர்களைத் தூவி அர்ச்சிக்க; (படை - ஆயுதம்); (கரியவன் - விஷ்ணு); (நித்தல் - தினமும்); (கடி - வாசனை);
அற்றைக்கு ஒரு மலர் குறைவு ஆகவைக்கத், தனது அக்கத்தினை இட – அன்று ஒரு நாள் நீ ஒரு பூவைக் குறையச்செய்தபொழுது, அவன் தனது கண்ணையே தோண்டித் தாமரைப்பூவாக இட்டு வழிபாடு செய்ய; (அற்றைக்கு - அன்றைக்கு - அந்தத் தினம்); (அக்கம் - அக்ஷம் - கண்);
அப்பத்தி-தனக்குப் பரிசு என வைப்-பல்-திகழ் வெற்றித் திகிரியை அருள்வோனே - அந்தப் பக்திக்கு பரிசாகக் கூர்மையான பற்கள் திகழும் வெற்றியுடைய சக்கராயுதத்தை அருளியவனே; (பத்தி - பக்தி); (வை - கூர்மை); (திகிரி - சக்கரம்);
மட்டு-அற்ற செருக்கு உற்று, இருபது மற்-கைத்தலம் மெச்சிச், சிலை எறி மட்டிக்கு ஒரு பத்துத் தலை இற நெரி பாதா - அளவில்லாத ஆணவம் கொண்டு, இருபது வலிய கைகளை மிகவும் எண்ணிக், கயிலைமலையைப் பெயர்த்து எறிய முயன்ற மூடனுக்கு அவனது பத்துத்தலையும் அழியும்படி நசுக்கிய திருப்பாதனே; (மட்டு - அளவு); (மல் - வலிமை); (மெச்சுதல் - புகழ்தல்; மதித்தல்); (சிலை - மலை); (மட்டி - மூடன்); (இறுதல் - முரிதல்; கெடுதல்); (நெரித்தல் - நசுக்குதல்);
மத்தத்தொடு எருக்கு உற்றிடு முடி எற்றித் திரை சுற்றக், கதிர்-மதி வைத்துப், பெரு-நச்சுப் பணியையும் அணிவோனே - ஊமத்தமலரோடு எருக்கமலரும் இருக்கும் திருமுடியில், அலைமோதிக் கங்கை சுற்றிவர, ஒளி வீசும் திங்களை அணிந்து, பெரிய விடப்பாம்பையும் அணிந்தவனே; (மத்தம் - ஊமத்தமலர்); (எற்றுதல் - மோதுதல்); (திரை - அலை; நதி); (பணி - பாம்பு);
எட்டுத்-திசை சுட்டுப் பெரு-விடம் எட்டிற்று என அச்சத்தொடு சுரர் எய்ப்பு-உற்று அடி பற்றிப் பரவிட – எல்லாத் திசைகளையும் சுட்டுப் பெரிய விடம் (ஆலகாலம்) எட்டியது என்று பயந்து வருந்தித் தேவர்கள் உன் திருவடியைச் சரணடைந்து துதிக்க; (எட்டுதல் - நெருங்குதல்); (சுரர் - தேவர்); (எய்ப்பு - இளைப்பு; மெய்வருத்தம்); (பரவுதல் - துதித்தல்);
அமுதாக இட்டத்தொடு துற்றிக் களனிடை நிற்பித்து - (அவர்களுக்கு இரங்கி) அமுதம்போல அந்த நஞ்சை விரும்பி உண்டு கண்டத்தில் நிறுத்தி; (இட்டம் - இஷ்டம் - விருப்பம்); (துற்றுதல் - உண்ணுதல்); (களன் - களம் - கண்டம்);
அரவக்-கச்சினன் என இற்-பிச்சையை நச்சித் திரிதரு பெருமானே - பாம்பைக் கச்சாகக் கட்டி இல்லங்களில் பிச்சையை விரும்பித் திரிகின்ற பெருமானே; (நச்சுதல் - விரும்புதல்);
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
No comments:
Post a Comment