08.02.186 – இடைமருதூர் (திருவிடைமருதூர்) - செழுமலர்கள் தூவி - (வண்ணம்)
2007-05-10
8.2.186 - செழுமலர்கள் தூவி - (இடைமருதூர் - திருவிடைமருதூர்)
--------------------------------------------------
(வண்ணவிருத்தம்;
தனதனன தான தனதன தந்தன
தனதனன தான தனதன தந்தன
தனதனன தான தனதன தந்தன .. தனதான )
(விடமும்வடி வேலு மதனச ரங்களும் - திருப்புகழ் - சுவாமிமலை)
செழுமலர்கள் தூவி அரகர என்பவர்
.. .. .. திருவுடையர் ஆவர் அவரது பண்டைய
.. .. செடிவினைகள் யாவும் எரிபுகு பஞ்சென .. அறியாமல்
.. நழுவுமிக வாழ்வை நிலையென அங்கயல்
.. .. .. நயனியரை நாடும் எனதுயிர் கொண்டிட
.. .. நமனுடைய தூதர் இடர்தரும் அந்தியம் .. அணுகாமுன்
கழுமலவர் கோனின் அருவிரை சிந்திடு
.. .. .. கவின்மலியு(ம்) மாலை கொடுமிகும் அன்பொடு
.. .. கழலிணையை ஓதி வழிபடு நெஞ்சுற .. நிலமீதே
.. எழுபிறவி தோறும் உனதடி சிந்தையில்
.. .. .. எனதுதுணை யாகி அனுதின(ம்) நின்றிட
.. .. இடைமருது மேய இறையவ இங்கருள் .. புரியாயே;
வழுமலியு(ம்) மூடன் இருபது திண்புய(ம்)
.. .. .. மணிமுடிக ளோடு நெரிதர அன்றரு
.. .. மலையிலொரு பாத விரலது கொண்டடர் .. கயிலாயா
.. மறிகடலில் ஆலம் அதுவர அஞ்சிய
.. .. .. சுரரலறி ஓலம் எனவவர் உய்ந்திட
.. .. வலியவிடம் மேவி அருமணி ஒன்றணி .. மிடறானே
தழுவுமுமை மாது தனையொரு பங்கென
.. .. .. மகிழு(ம்)மண வாள திரைநதி தங்கிய
.. .. சடையதனில் நாறு குரவொடு கொன்றை .. புனைவோனே
.. சரண(ம்)நினை மாணி உயிரது கொன்றிட
.. .. .. வருமறலி மாள உதைதரு சங்கர
.. .. தயையுடைய நாத விடையைவி ரும்பிய .. பெருமானே.
பதம் பிரித்து:
செழுமலர்கள் தூவி அரகர என்பவர்
.. .. .. திரு உடையர் ஆவர், அவரது பண்டைய
.. .. செடி-வினைகள் யாவும் எரி புகு பஞ்சு என .. அறியாமல்,
.. நழுவும் இக வாழ்வை நிலை என, அங்கயல்
.. .. .. நயனியரை நாடும் எனது உயிர் கொண்டிட
.. .. நமனுடைய தூதர் இடர் தரும் அந்தியம் .. அணுகாமுன்,
கழுமலவர் கோனின் அரு-விரை சிந்திடு
.. .. .. கவின் மலியும் மாலை-கொடு மிகும் அன்பொடு
.. .. கழலிணையை ஓதி வழிபடு நெஞ்சு உற, .. நிலமீதே
.. எழு-பிறவி தோறும் உனது அடி சிந்தையில்
.. .. .. எனது துணை ஆகி அனுதினம் நின்றிட,
.. .. இடைமருது மேய இறையவ, இங்கு அருள் புரியாயே;
வழு மலியும் மூடன் இருபது திண்புயம்
.. .. .. மணிமுடிகளோடு நெரிதர அன்று அரு-
.. .. மலையில் ஒரு பாத விரலது கொண்டு அடர் .. கயிலாயா;
.. மறி-கடலில் ஆலம் அது வர, அஞ்சிய
.. .. .. சுரர் அலறி "ஓலம்" என, அவர் உய்ந்திட
.. .. வலிய விடம் மேவி அரு-மணி ஒன்று அணி .. மிடறானே;
தழுவும் உமை மாதுதனை ஒரு பங்கு என
.. .. .. மகிழும் மணவாள; திரை-நதி தங்கிய
.. .. சடையதனில் நாறு குரவொடு கொன்றை .. புனைவோனே;
.. சரணம் நினை மாணி உயிரது கொன்றிட
.. .. .. வரு-மறலி மாள உதைதரு சங்கர;
.. .. தயை உடைய நாத; விடையை விரும்பிய .. பெருமானே.
செழுமலர்கள் தூவி அரகர என்பவர் திரு உடையர் ஆவர் - சிறந்த பூக்களைத் தூவி "ஹரஹர" என்று போற்றுபவர்கள் திரு அடைவார்கள்; (திரு - செல்வம்; பாக்கியம்; தெய்வத்தன்மை; நல்வினை; சிறப்பு);
அவரது பண்டைய செடி-வினைகள் யாவும் எரி புகு பஞ்சு என அறியாமல் - அவர்களது பழைய, துன்பம் தரும் வினையெல்லாம் தீப் புகுந்த பஞ்சுபோல் அழியும் என்று அறியாமல்; (செடி - துன்பம்);
நழுவும் இக வாழ்வை நிலை என – (நாம் அறியாமலே) நழுவி அழியும் இவ்வுலக வாழ்வை நிலையானது என்று எண்ணி; (இகம் - இம்மை);
அங்கயல் நயனியரை நாடும் எனது உயிர் கொண்டிட நமனுடைய தூதர் இடர் தரும் அந்தியம் அணுகாமுன் - அழகிய கயல்மீன் போன்ற கண்களையுடைய மாதரை நாடும் என்னுடைய உயிரைக் கவர எமதூதர்கள் துன்பம் செய்யும் மரணகாலம் என்னை நெருங்குவதன் முன்னமே; (அங்கயல் - அம் கயல் - அழகிய கயல்மீன்); (நயனி - கண்ணை உடையவள்); (அந்திமம் - மரணகாலம்);
கழுமலவர் கோனின் அரு-விரை சிந்திடு கவின் மலியும் மாலை-கொடு - சீகாழியர் தலைவரான திருஞான சம்பந்தர் அருளிய அரிய மணம் கமழும் அழகிய பாமாலைகளால்; (கழுமலம் - சீர்காழி); (விரை - வாசனை); (சிந்துதல் - பரப்புதல்); (கவின் - அழகு);
மிகும் அன்பொடு கழலிணையை ஓதி வழிபடு நெஞ்சு உற – மிகும் அன்போடு உன் இரு திருவடிகளைப் போற்றி வணங்கும் மனம் பெற; (ஓதுதல் - பாடுதல்);
நிலமீதே எழு-பிறவி தோறும் உனது அடி சிந்தையில் எனது துணை ஆகி அனுதினம் நின்றிட – மண்ணுலகில் எழுகின்ற பிறவிகள்தோறும் உன் திருவடி என் நெஞ்சில் துணை ஆகி என்றும் நிற்க; (எழுதல் - தோன்றுதல்); (சிந்தை - மனம்); (அப்பர் தேவாரம் - 4.94.8 - "புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா உன்னடி என்மனத்தே வழுவாதிருக்க வரந்தர வேண்டும்");
இடைமருது மேய இறையவ, இங்கு அருள் புரியாயே - திருவிடைமருதூரில் எழுந்தருளிய இறைவனே, இங்கு அருள்வாயாக; (இறையவன் - இறைவன்);
வழு மலியும் மூடன் இருபது திண்புயம் மணிமுடிகளோடு நெரிதர அன்று அரு-மலையில் ஒரு பாத விரலது கொண்டு அடர் கயிலாயா - குற்றம் மிக்க அறிவிலியான இராவணனது இருபது வலிய புஜங்களும் அழகிய கிரீடம் அணிந்த தலைகளும் நசுங்கும்படி முன்பு கயிலைமலையில் ஒரு பாதவிரலால் நசுக்கியவனே; (வழு - குற்றம்); (புயம் - புஜம் - தோள்); (நெரிதல் - நசுங்குதல்); (அடர்த்தல் - நசுக்குதல்);
மறி-கடலில் ஆலம் அது வர, அஞ்சிய சுரர் அலறி "ஓலம்" என – அலையெழும் பாற்கடலில் ஆலகாலம் தோன்ற, அது கண்டு அச்சமுற்ற தேவர்கள் அலறி "ஓலம்" என்று திருவடியில் சரண்புக; (மறிதல் - அலையெழுதல்); (ஓலம் - அபயம் வேண்டும் குறிப்புமொழி);
அவர் உய்ந்திட வலிய விடம் மேவி அரு-மணி ஒன்று அணி மிடறானே - அவர்கள் உய்ய, வலிய நஞ்சை விரும்பி உண்டு அரிய மணி ஒன்றை அணிந்த கண்டம் உடையவனே; (மேவுதல் - விரும்புதல்; உண்ணுதல்);
தழுவும் உமை மாதுதனை ஒரு பங்கு என மகிழும் மணவாள – தழுவும் உமைநங்கையை ஒரு பாகமாக விரும்பிய மணவாளனே;
திரை-நதி தங்கிய சடையதனில் நாறு குரவொடு கொன்றை புனைவோனே - அலையெழுகின்ற (/ அலை மிக்க) கங்கை தங்கிய சடையில் மணம் கமழும் குராமலரையும் கொன்றையையும் அணிந்தவனே; (திரை - அலை; திரைதல் - அலையெழுதல்;); (புனைதல் - அணிதல்);
சரணம் நினை மாணி உயிரது கொன்றிட வரு-மறலி மாள உதைதரு சங்கர – உன் திருவடியை நினைந்த மார்க்கண்டேயரது உயிரைக் கொல்ல வந்த காலனே இறக்கும்படி காலனை உதைத்த சங்கரனே; (சரணம் - பாதம்); (மாணி - பிரமசாரி); (மறலி - இயமன்); (தருதல் - ஒரு துணைவினை); (சங்கரன் - நன்மையைச் செய்பவன்);
தயை உடைய நாத – கருணை உடைய தலைவனே; (தயை - அருள்);
விடையை விரும்பிய பெருமானே - இடபத்தை வாகனமாக விரும்பிய பெருமானே;
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
No comments:
Post a Comment