Monday, September 17, 2018

04.48 – குறுக்கை வீரட்டம் - (கொருக்கை)


04.48 குறுக்கை வீரட்டம் - (கொருக்கை)



2014-01-29
குறுக்கை வீரட்டம் (இக்காலத்தில் "கொருக்கை")
----------------------
(கலிவிருத்தம் - "தானனா தானனா தானனா தானனா" - "விளம் விளம் விளம் விளம்" என்ற வாய்பாடு)
(சம்பந்தர் தேவாரம் - 3.25.1 - "மருந்துவேண் டில்இவை மந்திரங் கள்இவை");
(சம்பந்தர் தேவாரம் - 3.36.1 - "சந்தமா ரகிலொடு சாதிதேக் கம்மரம்";)
(சுந்தரர் தேவாரம் - 7.37.2 - "பறக்குமெங் கிள்ளைகாள் பாடுமெம் பூவைகாள்")



1)
ஒளியிலங் கும்பிறை உச்சிமேற் சூடினார்
துளியிலங் கும்மணி கண்டனார் தொண்டராய்
அளிபவர்க் கருள்புரி அண்ணலார் உறைவது
குளிர்பொழில் சூழ்திருக் குறுக்கைவீ ரட்டமே.



ஒளிலங்கும் பிறை உச்சிமேல் சூடினார் - ஒளி வீசும் பிறைச்சந்திரனைத் தலைமேல் சூடியவர்; (இலங்குதல் - பிரகாசித்தல்); (சூடினார் - சூடியவர்);
துளிலங்கும் மணிகண்டனார் - விடம் மிளிர்கின்ற நீலகண்டர்; (துளி - விடம்); (சம்பந்தர் தேவாரம் - 2.88.1 - "துளிமண்டி யுண்டு நிறம்வந்த கண்டன்");
தொண்டராய் அளிபவர்க்கு அருள்புரி அண்ணலார் உறைவது - பக்தர்களாகி உருகுகின்றவர்களுக்கு அருளும் பெருமானார் உறையும் தலம் ஆவது; (அளிதல் - குழைதல்; பிரியமாயிருத்தல்);
குளிர் பொழில் சூழ் திருக்குறுக்கை வீரட்டம் - குளிர்ந்த சோலை சூழ்ந்த திருக்குறுக்கை வீரட்டம்;



2)
ஏலவார் குழலியை இடப்புறம் ஏற்றவர்
காலனார் நெஞ்சினில் காலினால் உதைத்தொரு
பாலனார்க் கருள்புரி பரமனார் உறைவது
கோலமார் பொழிலணி குறுக்கைவீ ரட்டமே.



ஏல வார் குழலி - மணம் கமழும் நீண்ட கூந்தலை உடைய உமை;
பாலனார் - சிறுவர் - இங்கே, மார்க்கண்டேயர்;
கோலம் ஆர் பொழில் அணி - அழகிய சோலை சூழ்ந்த;



3)
சங்கரா காவெனத் தாளடைந் தார்வினை
அங்கிரா வண்ணமின் னருள்புரி அங்கணர்
பொங்கரா மாலையைப் பூண்டவர் உறைவது
கொங்கறாப் பொழிலணி குறுக்கைவீ ரட்டமே.



"சங்கரா, கா" எனத் தாள் அடைந்தார் வினை அங்கு இரா வண்ணம் இன்னருள்புரி அங்கணர் - "சங்கரனே, காத்தருளாய்" என்று திருவடியைச் சரணடைந்தவர்களது வினையையெல்லாம் அழித்து இனிது அருளும் அருள்நோக்கம் உடையவர்; (இரா வண்ணம் - இல்லாதபடி; தீருமாறு);
பொங்கு அரா மாலையைப் பூண்டவர் உறைவது - சீறும் பாம்பை மாலையாக அணிந்த பெருமானார் உறையும் தலம் ஆவது;
கொங்கு அறாப் பொழில் அணி குறுக்கை வீரட்டம் - வாசனை எப்போதும் கமழும் சோலை சூழ்ந்த குறுக்கை வீரட்டம்; (கொங்கு - வாசனை; தேன்); (அறுதல் - தீர்தல்; இல்லாமற்போதல்);



4)
அயிலுறு வேலினர் அலைகடல் நஞ்சினால்
புயலுறு கண்டனார் போழ்மதி இண்டையார்
எயிலெரி நகையினார் ஏற்றனார் உறைவது
குயில்பயில் பொழிலணி குறுக்கைவீ ரட்டமே.



அயில் உறு வேலினர் - கூர்மை திகழும் மூவிலைவேலன திரிசூலத்தை ஏந்தியவர்; (உறுதல் - இருத்தல்; ஒத்தல்);
புயல் உறு கண்டனார் - மேகம் போல் திகழும் கண்டம் உடையவர்;
போழ் மதி இண்டையார் - பிளவுபட்ட சந்திரனை முடிமேல் இண்டை மாலையாக உடையவர்;
எயில் எரி நகையினார் - முப்புரங்களை நகைத்து எரித்தவர்;
ஏற்றனார் - இடப வாகனம் உடையவர்;
குயில் பயில் பொழில் - குயில்கள் ஒலிக்கும் சோலை;



5)
தக்கனார் வேள்வியைத் தகர்த்தவர் தரையினிற்
சக்கரம் ஒன்றினாற் சலந்தரற் றடிந்தவர்
அக்கரா மாலையார் ஐயனார் உறைவது
கொக்கிரை தேர்வயற் குறுக்கைவீ ரட்டமே.



தக்கனார் வேள்வியைத் தகர்த்தவர் - தக்கன் செய்த யாகத்தை அழித்தவர்; (சம்பந்தர் தேவாரம் - 3.92.7 - "தக்கனார் வேள்வியைச் சாடிய சதுரனார்");
தரையினில் சக்கரம் ஒன்றினால் சலந்தரற் றடிந்தவர் - னிலத்தில் ஒரு சக்கரத்தை வரைந்து அதனைக்கொண்டு சலந்திரனைத் அழித்தவர்; (தடிதல் - அழித்தல்);
அக்கு அரா மாலையார் ஐயனார் உறைவது - எலும்பையும் பாம்பையும் மாலையாக அணிந்த தலைவர் உறையும் தலம் ஆவது;
கொக்கு இரை தேர் வயல் - வயலின் நீர்வளத்தைச் சுட்டியது;
(இலக்கணக் குறிப்பு : ஆறுமுக நாவலரின் இலக்கணச்சுருக்கத்திலிருந்து:
#101. உயர்திணைப் பெயரீற்று லகர ளகரங்கள், மாற்கடவுள், மக்கட்சுட்டு என இரு பெயரொட்டுப் பண்புத்தொகையினும், லகர ளகர னகரங்கள், குரிசிற் கண்டேன், மகட்கொடுத்தான், தலைவற்புகழ்ந்தான் என இரண்டாம் வேற்றுமைத் தொகையினுந் திரியுமெனக் கொள்க.)



6)
சாவிலார் பிறப்பிலார் நோவிலார் தமக்கொரு
கோவிலார் அன்பருள் கோயிலாக் கொண்டவர்
மாவிடை ஊர்தியார் மகிழ்வது பூங்குயில்
கூவிடும் சோலைசூழ் குறுக்கைவீ ரட்டமே.



சாவிலார் பிறப்பிலார் நோவிலார் - இறத்தல், பிறத்தல், துன்பம் இவை இல்லாதவர்;
தமக்கு ஒரு கோ இலார் - தமக்கு ஒரு தலைவன் இல்லாதவர்; (அப்பர் தேவாரம் - 6.98.1 - "...தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான சங்கரன்...");
அன்பர் உள் கோயிலாக் கொண்டவர் - பக்தர்கள்தம் நெஞ்சத்தைக் கோயிலாகக் கொண்டவர்;
மா விடை ஊர்தியார் மகிழ்வது - பெரிய இடபத்தை வாகனமாக உடையவர் விரும்பி உறையும் தலம் ஆவது;
பூங்குயில் கூவிடும் சோலை சூழ் குறுக்கை வீரட்டம் - அழகிய குயில்கள் கூவும் சோலை சூழ்ந்த திருக்குறுக்கை வீரட்டம்;



7)
மாமலர் ஐந்தினை வாளியாக் கொண்டவக்
காமனை அனங்கனாக் காய்ந்தமுக் கண்ணினார்
தூமறை பாடினார் தோடொரு காதணி
கோமக னாரிடம் குறுக்கைவீ ரட்டமே.



மா மலர் ஐந்தினை வாளியாக் கொண்டக் காமனை அனங்கனாக் காய்ந்த முக்கண்ணினார் - அழகிய ஐந்து மலர்களை அம்பாகக் கொண்ட அந்த மன்மதனை உருவமற்றவன் ஆகும்படி சினந்து எரித்த நெற்றிக்கண்ணர்; (வாளி - அம்பு ); (அனங்கன் - உடல் அற்றவன்; மன்மதன்);
தூ மறை பாடினார் - தூய வேதங்களைப் பாடியவர்;
தோடு ஒரு காது அணி கோமகனார் இடம் குறுக்கை வீரட்டமே - ஒரு காதில் தோடு அணிகின்ற (உமையொரு பங்கரான) தலைவர் உறையும் தலம் ஆவது திருக்குறுக்கை வீரட்டம்; (கோமகன் - அரசன்);



8)
நெற்றியிற் கண்ணினார் நீள்மலை பேர்த்திடப்
பற்றினான் மணிமுடி பத்தையும் நெரித்தவர்
மற்றிசை கேட்டொரு வாளொடு நாளருள்
கொற்றவ னாரிடம் குறுக்கைவீ ரட்டமே.



நீள்மலை பேர்த்திடப் பற்றினான் மணிமுடி பத்தையும் நெரித்தவர் - கயிலைமலையைப் பெயர்க்க முயன்ற இராவணனது கிரீடம் அணிந்த பத்துதலைகளையும் னசுக்கியவர்;
மற்று இசை கேட்டு ஒரு வாளொடு நாள் அருள் - பிறகு, அவன் பாடிய கீதத்தைக் கேட்டு அவனுக்கு ஒரு வாளையும் நீண்ட ஆயுளையும் அருள்செய்த; (மற்று - பின்னர்); (நாள் - ஆயுள்);
கொற்றவனார் - அரசர்; தலைவர்;



9)
நாறுபங் கயத்தயன் நாரணன் உம்பரில்
ஏறுபுள் மண்ணகழ் ஏனமாய் நேடிய
வீறுடைச் சோதியார் வேயன தோளியோர்
கூறுடை யாரிடம் குறுக்கைவீ ரட்டமே.



நாறு பங்கயத்து அயன் நாரணன் - மணக்கும் தாமரைமேல் இருக்கும் பிரமன் திருமால் என்ற இருவரும்;
உம்பரில் ஏறு புள் மண்கழ் ஏனமாய் நேடிய வீறுடைச் சோதியார் - வானில் ஏறும் அன்னமாயும் நிலத்தை அகழ்ந்த பன்றியாயும் தேடிய பெருமைமிக்க ஜோதி வடிவினர்; (உம்பர் - வான்); (புள் - பறவை); (ஏனம் - பன்றி); (வீறு - பெருமை);
வேய் அன தோளி ஓர் கூறு உடையார் - மூங்கில் போன்ற புயத்தை உடைய உமையை ஒரு கூறாகக் கொண்டவர்;



10)
மாற்றிவம் வழியென வாயில்வந் துரைப்பவர்
கூற்றினில் மயங்கிடேல் குறைவிலா தருள்பவர்
ஆற்றினைப் புனைந்தவர் அடியவர் பாலடை
கூற்றுதைத் தாரிடம் குறுக்கைவீ ரட்டமே.



மாற்றி வம் வழின வாயில்வந்துரைப்பவர் கூற்றினில் மயங்கிடேல் - "உங்கள் நெறியை மாற்றி வாருங்கள்" என்று வீட்டுவாசலில் வந்து சொல்பவர்களது வார்த்தைகளில் மயங்காதீர்கள்; (வம் - வம்மின் - வாருங்கள்); (வழி - நெறி; மார்க்கம்); (கூற்று - சொற்கள்); (மயங்கிடேல் - மயங்கேன்மின் - மயங்காதீர்கள்);
ஆற்றினைப் புனைந்தவர் - கங்கையை அணிந்தவர் - கங்காதரர்;
அடியவர்பால் அடை கூற்று உதைத்தார் இடம் - மார்க்கண்டேயரிடம் வந்தடைந்த எமனை உதைத்தவரான சிவபெருமானார் உறையும் தலம் ஆவது;
குறுக்கை வீரட்டமே - திருக்குறுக்கை வீரட்டம்;



11)
தீர்த்தனார் சென்னியிற் சேவடி இரண்டையும்
ஏத்தினார் இடர்களை இல்லையென் றாக்கினார்
சேர்த்தினார் அரவொடு திங்களைக் கானிடைக்
கூத்தனார் மேயது குறுக்கைவீ ரட்டமே.



தீர்த்தனார் சென்னியில் - முடிமேல் கங்கையைத் தாங்கியவர்;
சேவடி இரண்டையும் ஏத்தினார் இடர்களை இல்லை என்று ஆக்கினார் - சிவந்த இரு பாதங்களைப் போற்றுவார்களுடைய துன்பங்களையெல்லாம் இல்லாமற் செய்பவர்;
சேர்த்தினார் அரவொடு திங்களை - பாம்போடு திங்களைச் சேர்த்தவர்; (சம்பந்தர் தேவாரம் - 2.78.5 - "...சென்னிதிங்களைப் பொங்கராக் கங்கையோடுடன் சேர்த்தினார்...")
கானிடைக் கூத்தனார் மேயது குறுக்கை வீரட்டமே - சுடுகாட்டில் திருநடம் செய்யும் சிவபெருமானார் எழுந்தருளி இருக்கும் தலம் குறுக்கை வீரட்டம்.



அன்போடு,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு:
1) யாப்புக் குறிப்பு:
கலிவிருத்தம் - "தானனா தானனா தானனா தானனா" - "விளம் விளம் விளம் விளம்" என்ற வாய்பாடு;
தானனா என்பது தனதனா என்றும் வரலாம்;
2) சம்பந்தர் தேவாரம் - 3.29.1 -
வாருமன் னும்முலை மங்கையோர் பங்கினன்
ஊருமன் னும்பலி உண்பதும் வெண்டலை
காருமன் னும்பொழில் சூழ்ந்தகாட் டுப்பள்ளி
நீருமன் னுஞ்சடை நிமலர்தந் நீர்மையே.
3)
திருக்குறுக்கை வீரட்டம் - (கொருக்கை) - கோயில் தகவல்கள் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=482



திருக்குறுக்கை வீரட்டம் - தேவாரம் ஆர்க் தளத்தில்: http://www.thevaaram.org/thirumurai_1/koil_view.php?koil_idField=104
------------ ------------------

No comments:

Post a Comment