Saturday, September 15, 2018

04.43 – செம்பொன்பள்ளி (செம்பொனார் கோயில்)


04.43 செம்பொன்பள்ளி (செம்பொனார் கோயில்)



2014-01-12
செம்பொன்பள்ளி (திருச்செம்பொன்பள்ளி) (இக்கால வழக்கில் 'செம்பொனார் கோயில்'/'செம்பனார் கோயில்')
----------------------------------
(கலிவிருத்தம் - திருக்குறுந்தொகை அமைப்பில்)
(திருநாவுக்கரசர் தேவாரம் - 5.81.1 - "சிட்ட னைச்சிவ னைச்செழுஞ் சோதியை");



1)
கொம்பன் னாளொரு கூறினன் கொங்கலர்
அம்பன் தன்னை அனங்கனும் ஆக்கினான்
செம்பொன் பள்ளியான் திங்களைச் சூடிய
நம்பன் தாள்தொழ நம்வினை நாசமே.



கொம்பு அன்னாள் ஒரு கூறினன் - பூங்கொம்பு போன்ற உமையை ஒரு கூறாக உடையவன்;
கொங்கு அலர் அம்பன்தன்னை அனங்கனும் ஆக்கினான் - வாசமலர்களை அம்பாக உடைய மன்மதனை எரித்து உருவமற்றவன் ஆக்கியவன்;
செம்பொன் பள்ளியான் - திருச்செம்பொன்பள்ளியில் உறைகின்றவன்;
திங்களைச் சூடிய நம்பன் தாள் தொழ நம் வினை நாசமே - சந்திரசேகரனும், நம்பன் (விரும்பத்தக்கவன்) என்ற திருநாமமும் உடைய சிவபெருமானது திருவடியை வழிபட்டால் நம் வினை அழியும்.



2)
பாலன் ஆருயிர் பற்றிட வந்தடை
காலன் தன்னைக் கடிந்த கழலினான்
சீலன் தென்செம்பொன் பள்ளியான் கண்டத்தில்
நீலன் தாள்தொழ நில்லா வினைகளே.



பாலன் - இங்கே மார்க்கண்டேயர்;
கடிதல் - கண்டித்தல்; விலக்குதல்; (கடிந்த - கோபம் கொண்டு உதைத்து நீக்கிய);
தென் - அழகிய;



3)
பையார் பாம்பைப் படர்சடை வைத்தவன்
மையார் கண்டன் மலைமகள் பங்கினன்
செய்யார் தென்செம்பொன் பள்ளியில் மேயவன்
பொய்யான் பொன்னடி போற்றி இரப்பார்க்கே.



பை ஆர் பாம்பு - படத்தை உடைய பாம்பு ; (பை - பாம்பின் படம் );
மை ஆர் கண்டன் - கருமை பொருந்திய கண்டத்தை உடையவன்;
செய் ஆர் - வயல்கள் பொருந்திய;
பொய்யான் - பொய்த்தல் இன்றி வரம் தருபவன்; (பொய்த்தல் - வஞ்சித்தல்; தவறுதல்);



4)
இகழும் தக்கன்செய் யாகம் தகர்த்தவன்
பகழி ஒன்றால் நகர்மூன் றெரித்தவன்
திகழும் தென்செம்பொன் பள்ளியான் சேவடி
புகழும் அன்பரைப் பொன்னுல கேற்றுமே.



யாகம் - வேள்வி; பகழி - அம்பு;
ஏற்றும் - ஏற்றுவான்; (சம்பந்தர் தேவாரம் - "சுற்றமொடு .... வானவர்தம் வானுலக மேற்றக்
கற்றவ னிருப்பது கருப்பறிய லூரே");
இலக்கணக் குறிப்பு : ஏற்றும் - செய்யும் என்னும் வாய்ப்பாட்டு வினைமுற்று; படர்க்கை ஆண்பால், பெண்பால், ஒன்றன்பால், பலவின் பால் ஆகியவற்றில் மட்டுமே இது இடம்பெறும்.



5)
எம்மைக் காத்தருள் என்ற இமையோர்க்கா
வெம்மை மிக்க விடத்தினை உண்டருள்
செம்மல் தென்செம்பொன் பள்ளித் திகழ்கின்ற
அம்மை யப்பன் அடிதொழ இன்பமே.



இமையோர்க்கா - இமையவர்களுக்காக - தேவர்களுக்காக;;
செம்மல் - பெருமையிற் சிறந்தவன்; தலைவன்;



6)
சொல்வி ளங்கும் தொடையணி சுந்தரன்
செல்வ ழித்துணை தேவியைப் பங்கமர்
செல்வன் தென்செம்பொன் பள்ளியான் சீர்பாட
வல்வி னைத்தொடர் மாய்ந்து மகிழ்வாமே.



சொல் விளங்கும் தொடை அணி - தமிழ்ப்பாமாலைகளை ஏற்றருள்கின்ற;
அமர்தல் - விரும்புதல்;
செல்வழித்துணை - நமக்கு நல்ல துணைவன்;
தேவியைப் பங்கு அமர் செல்வன் - உமையை ஒரு பங்காக விரும்பிய செல்வன்;
சீர் - புகழ்;



7)
பார்த்த னுக்கருள் பாசு பதன்கணை
கோத்து முப்புரம் சுட்டவன் கொன்றையன்
தீர்த்தன் தென்செம்பொன் பள்ளியில் நின்றருள்
மூர்த்தி யைத்தொழ முன்வினை தீருமே.



பார்த்தனுக்கு அருள் பாசுபதன் - அருச்சுனனுக்கு பாசுபட்ஹாஸ்திரத்தை அருளியவன்;
கணை கோத்து முப்புரம் சுட்டவன் - ஒரு கணையால் முப்புரங்களை அழித்தவன்;
கொன்றையன் தீர்த்தன் - கொன்றைமாலை அணிந்தவன், தூயன்; (தீர்த்தன் - தூயவன்);
தென்செம்பொன் பள்ளியில் நின்றருள் மூர்த்தியைத் தொழ முன்வினை தீருமே - அழகிய திருச்செம்பொன்பள்ளியில் நீங்காமல் உறைகின்ற இறைவனைத் தொழுதால் பழவினை தீரும்.



8)
துட்டன் தோள்கள் இருபதை ஓர்விரல்
இட்ட டர்த்திசை கேட்டுவாள் ஈந்தவன்
சிட்டன் தென்செம்பொன் பள்ளியான் தில்லையில்
நட்டன் தாள்தொழ நம்வினை நாசமே.



துட்டன் தோள்கள் இருபதை ஓர் விரல் இட்டு அடர்த்து இசை கேட்டு வாள் ஈந்தவன் - துஷ்டனான இராவணனது இருபது புஜங்களையும் ஒரு விரல் ஊன்றி நசுக்கிப், பின் அவன் பாடிய இசையைக் கேட்டு இரங்கிச் சந்திரஹாஸம் என்ற வாள் அருள்புரிந்தவன்;
சிட்டன் - சிஷ்டன்;
நட்டன் - நடம் செய்பவன்;



9)
மாயன் நான்முகன் நேடிய மாலெரி
நாயன் நற்றமிழ் நேயன் நுதற்கண்ணில்
தீயன் தென்செம்பொன் பள்ளியான் தீதிலாத்
தூயன் தாள்தொழத் தொல்வினை மாயுமே.



மாயன் நான்முகன் நேடிய மால் எரி - திருமாலும் பிரமனும் சென்று தேடிய பெரிய ஜோதி; (மாயன் - திருமால்); (நேடுதல் - தேடுதல்); (மால் எரி - பெரும் சோதி); (அப்பர் தேவாரம் - 5.97.25 - "..... நான்முகன் ஆழியான் மயக்க மெய்தவன் மாலெரி யாயினான்");
நாயன் - தலைவன்; கடவுள்; (பெரியபுராணம் - ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் - "நாயனை அடியான் ஏவும் காரியம் நன்று ..." - தலைவனை ஒரு அடியனாய சுந்தரன் ஏவிய செயல் நன்றாயிருக்கிறது! );
நற்றமிழ் நேயன் - தமிழ்ப்பாமாலைகளை விரும்புபவன்;
நுதற்கண்ணில் தீயன் - நெற்றிக்கண்ணில் நெருப்பை உடையவன்;
தீது இலாத் தூயன் தாள் தொழத் தொல்வினை மாயுமே - குற்றமற்ற பரிசுத்தனான சிவபெருமானது திருவடியை வழிபட்டால் பழவினை அழியும்;



10)
வையும் வாயர் மறைநெறி யைப்பழி
கையர் சொல்விடும் கண்டங் கரியவன்
செய்யன் தென்செம்பொன் பள்ளியான் சேவமர்
ஐயன் தாள்தொழும் அன்பருக் கின்பமே.



வையும் வாயர் மறைநெறியைப் பழி கையர் சொல் விடும் - வேதநெறியைத் திட்டி இகழ்ந்து பேசுகின்ற கீழோர்களது பேச்சை நீங்குங்கள்; மதிக்கவேண்டா; (கையர் - கீழோர்; வஞ்சகம் உடையவர்);
கண்டம் கரியவன் - நீலகண்டன்;
செய்யன் - செம்மேனி உடையவன்;
சே அமர் ஐயன் தாள் தொழும் அன்பருக்கு இன்பமே - இடபவாகனனான சிவபெருமானது திருவடியை வழிபடும் பக்தர்களுக்கு இன்பம் வந்து சேரும்;



11)
சம்பு வேபுனல் தாங்கினாய் என்றென்று
வம்பு நாண்மலர் தூவி வணங்கினால்
செம்பொன் பள்ளியான் தீய வினையறுத்
தும்ப ரின்மேல் உலகில் இருத்துமே.



சம்புவே - சுகத்தைத் தருபவனே; (சம்பு - சிவன் திருநாமம்);
புனல் தாங்கினாய் - கங்காதரனே;
என்றென்று - என்று பலகாலும் கூறி;
வம்பு நாள் மலர் தூவி வணங்கினால் - வாசமிக்க, அன்று பூத்த புதிய பூக்களைத் தூவி வணங்கினால்;
செம்பொன் பள்ளியான் தீய வினை அறுத்து உம்பரின் மேல் உலகில் இருத்துமே - திருச்செம்பொன்பள்ளியில் உறைகின்ற சிவபெருமான் நம் பாவங்களைப் போக்கித், தேவலோகத்தினும் உயர்ந்த சிவலோகத்தில் வைப்பான்;



அன்பொடு,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்புகள் :
1) திருச்செம்பொன்பள்ளி ( செம்பொனார் கோயில்) - சுவர்ணபுரீஸ்வரர் கோயில்: தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=266



----------- --------------

No comments:

Post a Comment