Saturday, September 15, 2018

04.44 – மழபாடி (திருமழபாடி)


04.44 மழபாடி (திருமழபாடி)



2014-01-13
திருமழபாடி
-------------------------------------
எண்சீர்ச் சந்த விருத்தம் - “தானன தான தான தனதான தான தனதான தான தனனா" என்ற சந்தம்; முதற்சீர் சில பாடல்களில் தனதன என்றும் வரும்.)
(சம்பந்தர் தேவாரம் - 2.85.1 - கோளறு பதிகம் - "வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணை தடவி")
(அப்பர் தேவாரம் - 4.8.1 - "சிவனெனு மோசை யல்ல தறையோ உலகில் திருநின்ற செம்மை உளதே")



1)
எஞ்சிய நாள்கள் யாவும் இனிதாவி ருக்க இருபோதும் எண்ணு மனமே
அஞ்சிய டைந்த மாணி அவரென்றும் வாழ அபயங்கொ டுத்த கழலான்
நஞ்சினை உண்ட கண்டன் நரையேற்றன் முன்னர் நகையாற்பு ரங்கள் சுடுதே
வஞ்சியை வாமம் வைத்து மகிழ்கின்ற அண்ணல் மழபாடி மேவு மணியே.



எஞ்சிய நாள்கள் - இப்பிறப்பில் இன்னும் மிச்சம் உள்ள காலம்;
இனிதா இருக்க - இனிதாக இருக்க;
மாணி - மார்க்கண்டேயர்;
கழலான் - கழலை அணிந்த திருவடியை உடையவன்; நீங்காதவன் என்றும் பொருள்கொள்ளலாம்;
சுடுதே - வினைத்தொகை - சுடு + தே - சுட்ட இறைவன்;
சுடுதல் - எரித்தல்;
தே - தெய்வம்;
வஞ்சி - கொடிபோன்ற பார்வதி;
வாமம் - இடப்பக்கம்;



2)
அல்லலும் நோயும் நீங்கி அழியாத இன்பம் அடைதற்கு வாழ்த்து மனமே
அல்லினில் ஆடும் எந்தை அலையாழி நஞ்சை அமுதாக உண்ட மிடறன்
மல்லிகை கொன்றை மத்த மலரோடு கங்கை வளர்திங்கள் ஏறு முடியான்
வல்லியை வாமம் வைத்து மகிழ்கின்ற அண்ணல் மழபாடி மேவு மணியே.



அல் - இரவு;
அலைஆழி - அலைகடல்;
மிடறன் - கண்டன்;
மத்தம் - ஊமத்த மலர்;
முடியான் - முடியை உடையவன்; முடிவற்றவன் என்றும் பொருள்கொள்ளலாம்;
வல்லி - கொடி போன்ற பார்வதி;



3)
வேதனை நல்கு கின்ற வினைநீங்கி இன்பம் மிகவேண்டில் ஏத்து மனமே
போதினை ஒத்த கண்ணை அரியிட்ட போது புகழாழி தன்னை அருள்வான்
போதனை சொல்வ தற்கு வடவால மர்ந்த புரிநூலன் இண்டை மதியன்
மாதினை வாமம் வைத்து மகிழ்கின்ற அண்ணல் மழபாடி மேவு மணியே.



போதினை ஒத்த கண்ணை - மலர் போன்ற தன் கண்ணை;
அரி இட்ட போது புகழ் ஆழி தன்னை அருள்வான் - திருவடியில் இட்டுத் திருமால் இறைஞ்சியபொழுது புகழ்மிக்க சக்கராயுதத்தை அருள்செய்தவன்;
போதனை - கற்பிக்கை; ஞானம்;
வடவால் - கல்லால மரம்; (சம்பந்தர் தேவாரம் - 1.132.1 - "ஏரிசையும் வடவாலின் கீழிருந்தங்கு..." - அழகிய வடவால மரத்தின்கீழ் வீற்றிருந்து);
புரிநூலன் - முப்புரி நூல் அணிந்தவன்;
இண்டை மதியன் - தலையில் மாலையாக மதியைச் சூடியவன்; (அப்பர் தேவாரம் - 4.85.8 - "அண்டர் .....வார்சடைமேல் இண்டை மதியமன் றோவெம் பிரானுக் கழகியதே.");



4)
அளவில தான தீய வினைதேய வேண்டில் அளியோடு போற்று மனமே
முளரியின் மேல யன்தன் முடையார்சி ரத்தில் இடுமூணை ஏற்கும் முதல்வன்
குளமென நின்ற கங்கை குரவங்க ரந்தை செறிகின்ற குஞ்சி அதன்மேல்
வளர்மதி வன்னி சூடி மகிழ்கின்ற அண்ணல் மழபாடி மேவு மணியே.



அளி - அன்பு;
முளரி - தாமரை;
அயன் - பிரமன்;
முடை ஆர் சிரத்தில் - முடைநாற்றம் பொருந்திய மண்டையோட்டில்;
இடும் ஊணை - இடும் உணவை; (ஊண் - உணவு);
குரவம் - குரா மலர்;
கரந்தை - திருநீற்றுப்பச்சை (Fragrant Basil);
குஞ்சி - தலை;
வன்னி - வன்னி இலை;



5)
ஆர்வினை நீங்கி இன்பம் அகலாதி ருக்க அளியோடு போற்று மனமே
கூர்மலி சூலம் ஏந்தி மிகுதேவர் அஞ்சு குரையோத நஞ்சை அமுதுண்
கார்மலி கின்ற கண்டன் அனலேந்து கையன் இடுகானில் ஆடு கழலன்
மார்பினில் நாக ஆரம் மகிழ்கின்ற அண்ணல் மழபாடி மேவு மணியே.



ஆர் வினை - ஆர்க்கின்ற வினை; (ஆர்த்தல் - கட்டுதல்);
கூர் மலி சூலம் ஏந்தி - கூர்மை மிக்க சூலத்தை ஏந்தியவன்;
குரை ஓதம் - ஒலிக்கின்ற கடல்;
அமுது உண் - அமுதாக உண்ட;
நாக ஆரம் - பாம்பு மாலை;



6)
பேரிடர் ஆழ்த்து கின்ற வினைநீங்கி இன்பு பெறவேண்டில் எண்ணு மனமே
ஆரிடர் செய்ய ரண்கள் அவைமூன்றும் வேவ அழலார்ச ரத்தை விடுவான்
நாரிவி ளங்கு பாகன் நனியஞ்சு தேவர் நசியாது வாழ அருளி
வாரிவி டத்தை உண்டு மகிழ்கின்ற அண்ணல் மழபாடி மேவு மணியே.



ஆரிடர் - அருமை + இடர் - பொறுத்தற்கு அரிய துன்பம்;
அரண்கள் அவை மூன்றும் - முப்புரங்களும்;
அழல் ஆர் சரத்தை - தீக்கணை;
விடுதல் - பாணம் பிரயோகித்தல் ; எய்தல்;
நாரி விளங்கு பாகன் - அர்த்தநாரீஸ்வரன்;
நசியாது - அழியாமல்; (நசித்தல் - சாதல்);
அருளி - "அருள்செய்து" என்று வினையெச்சமாகவும், "அருளியவன்" என்று பெயர்ச்சொல்லாகவும் பொருள்கொள்ளலாம்;
வாரி - கடல்; 'அள்ளி' என்றும் பொருள்கொள்ளலாம்; (வாரி - கடல்; வாருதல் - அள்ளுதல்);



7)
பழவினை யான தீர்ந்து படிமீது நல்ல படிவாழ எண்ணு மனமே
உழையொரு கையில் ஏந்தி உமைமங்கை பங்கன் உரகத்து மாலை உடையான்
மழையன கண்டன் மேரு மலைவில்லி துண்ட மதிசூடு கின்ற சடையன்
மழவிடை ஊர்தி யாக மகிழ்கின்ற அண்ணல் மழபாடி மேவு மணியே.



படி - பூமி; விதம்;
உழை - மான்;
உரகம் - பாம்பு;
உடையான் - உடையவன்; சுவாமி;
உரகத்து மாலை உடையான் - பாம்புமாலையை உடையவன்; பாம்புமாலை அணிந்த சுவாமி;
மழை அன கண்டன் - மேகம் போன்ற கண்டம் உடையவன்;
மழவிடை - இளம் ஏறு;



8)
தோல்விகள் நோய்கள் என்ற துயர்நீங்கி வாழ்வு சுகமாக எண்ணு மனமே
மால்வளர் வாள ரக்கன் முடிபத்த டர்த்து வடிவாள ளித்த வரதன்
கோல்வளை மங்கை கூறன் அணிகொன்றை யோடு குளிர்கங்கை சூடு குழகன்
மால்விடை ஊர்தி யாக மகிழ்கின்ற அண்ணல் மழபாடி மேவு மணியே.



மால் - அறியாமை; மயக்கம்;
வாள் அரக்கன் - கொடிய அரக்கன் - இராவணன்; (வாள் - கொடுமை);
வடி வாள் - கூர்மை பொருந்தும் வாள் - சந்திரஹாஸம்; (வடி - கூர்மை); (வடிவேல் என்பது போல வடிவாள்); (அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம் - 25 - ".....வேலனுக்குத் தொண்டாகிய என் 'அவிரோத ஞானச்சுடர் வடிவாள்' கண்டாயடா அந்தகா....");
கோல் வளை - திரண்ட வளையல்; (கோல் - 20. Exquisite workmanship; அணியின்சித்திரவேலை. 21. திரட்சி);
அணி கொன்றை - அழகிய கொன்றை மலர்;
குழகன் - இளைஞன்; அழகன்;
மால் விடை - பெரிய இடபம்;



9)
பண்டைய பாவ மாய்ந்து பழியற்ற செல்வம் மிகவேண்டில் எண்ணு மனமே
கொண்டலின் வண்ண னோடு குளிர்போதன் அன்று குறுகாத சோதி உருவன்
வெண்டலை ஏந்தி வெள்ளை விடையேறி மார்பில் விரையாரும் நீறு புனைவான்
வண்டறை கொன்றை சூடி மகிழ்கின்ற அண்ணல் மழபாடி மேவு மணியே.



பண்டைய பாவம் மாய்ந்து பழியற்ற செல்வம் மிகவேண்டில் - பழைய வினைகளெல்லாம் அழிந்து, குற்றமற்ற செல்வம் பெருகவேண்டும் என்றால்;
கொண்டலின் வண்ணன் - மேகநிறத்துத் திருமால்;
குளிர் போதன் - குளிர்ந்த தாமரைமலரில் உறையும் பிரமன்;
குறுகுதல் - அணுகுதல்; அடைதல்; குள்ளமாதல்; சிறுகுதல்;
(குறிப்பு: "குறுகாத" என்ற சொல்லை இடைநிலைத் தீவகமாக இருபுறமும் இயைத்தும் பொருள்கொள்ளலாம். -- "கொண்டலின் வண்ண னோடு குளிர்போதன் அன்று குறுகாத, குறுகாத சோதி உருவன்" - விஷ்ணுவும் பிரமனும் அடிமுடியை அடைய ஒண்ணாத, பெரும் சோதி வடிவன்);
வெண்டலை - வெண் தலை - வெள்ளிய மண்டையோடு;
ஏந்தி, ஏறி - ஏந்தியவன், ஏறியவன்;
வண்டு அறை கொன்றை - வண்டுகள் ஒலிக்கும் கொன்றைமலர்;



10)
மதியிலர் வஞ்ச நெஞ்சர் வழியென்று சொல்லும் அவையின்னல் ஆக்கும் அறிவீர்
புதியவன் ஆதி யான புகழாளன் நாமம் மறவார்க்கு நன்மை பொழிவான்
பதியிலன் ஒப்பும் இல்லி படுகாட்டில் ஆடு பரமன்ப ரந்த சடைமேல்
மதியொடு நாகம் வைத்து மகிழ்கின்ற அண்ணல் மழபாடி மேவு மணியே.



பதியிலன் - தனக்குத் தலைவன் இல்லாதவன்;
ஒப்பும் இல்லி - ஒப்பும் இல்லாதவன்;
படுகாடு - சுடுகாடு; (சுந்தரர் தேவாரம் - 742.4 - "பண்ணேர்மொழி யாளையொர் பங்குடையாய் படுகாட்டகத் தென்றுமோர் பற்றொழியாய்");



11)
முன்னைய பாவம் மாய்ந்து முடிவற்ற இன்பம் வரும்நாளு முன்னு மனமே
மன்னிய வேத நாவன் மலையான்ம டந்தை மணவாளன் ஆறு திரியும்
சென்னியன் ஏற மர்ந்த திருவாளன் நீறு திகழ்தோளன் நீல மிடறன்
வன்னியை அங்கை ஏந்தி மகிழ்கின்ற அண்ணல் மழபாடி மேவு மணியே.



முன்னைய - பழைய;
நாளு முன்னு மனமே - நாளும் முன்னு மனமே / நாளும் உன்னு மனமே; (முன்னுதல் - கருதுதல்); (உன்னுதல் - நினைதல்);
மன்னுதல் - நிலைத்து இருத்தல்;
நீறு திகழ் தோளன் - புயங்களில் திருநீற்றை அணிந்தவன்;
நீல மிடறன் - நீலகண்டன்; (மிடறு - கண்டம்);
வன்னி - நெருப்பு;



அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு:
1) திருமழபாடி - வயிரத்தூண் நாதர் / வஜ்ஜிரஸ்தம்பேஸ்வரர் / வைத்யநாதர் - கோயில் தகவல்கள் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=438
-------------- --------------

No comments:

Post a Comment