Monday, September 17, 2018

04.47 – உறையூர் மூக்கீச்சரம் (உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் கோயில்)


04.47 உறையூர் மூக்கீச்சரம் (உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் கோயில்)



2014-01-25
உறையூர் மூக்கீச்சரம் (உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் கோயில்)
---------------------------------------------------------------
(கலிவிருத்தம் - 'மா மாங்காய் மா மாங்காய்' - என்ற அமைப்பு.
(சம்பந்தர் தேவாரம் - 1.80.1 - “கற்றாங் கெரியோம்பிக் கலியை வாராமே”)



1)
மதமா கரிதன்னைக் கதற உரிசெய்தாய்
பதறா வருதேவர் பணிய விடமுண்டாய்
முதல்வா உறையூரில் மூக்கீச் சரமேய
அதளா டையினானே அபயம் அருளாயே.



மதமா கரிதன்னைக் கதற உரிசெய்தாய் - யானை கதறும்படி அதன் தோலை உரித்தவனே; (மத மா கரி - ஆண்யானை);
பதறா வருதேவர் - பதறி வந்தடைந்த தேவர்கள்; (பதறா - செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்); (பதறுதல் - கலங்குதல்);
உறையூரில் மூக்கீச்சரம் மேய - உறையூரில் மூக்கீச்சரம் என்ற கோயிலில் உறைகின்ற;
அதள் ஆடையினானே அபயம் அருளாயே - (புலித்)தோலை ஆடையாக அணிந்தவனே, அபயம் அளித்து என்னைக் காப்பாயாக;



2)
பனிமா மலைமன்னன் பாவை மணவாளா
புனிதா மறைநாலின் பொருளை உரைசெய்த
முனிவா உறையூரில் மூக்கீச் சரமேய
இனியாய் இனியுன்னை என்றும் மறவேனே.



பனிமா மலைமன்னன் பாவை பாவை மணவாளா - இமவான் மகளான பார்வதிக்குக் கணவனே;
புனிதா மறைநாலின் பொருளை உரைசெய்த முனிவா - தூயனே, நால்வேதத்தின் பொருளை விளக்கிய முனிவனே;
இனியாய் - இனியவனே;



3)
கடியார் மலர்தூவிக் கழலைத் தொழுமாணி
மடியா வரமீந்தாய் மதியம் புனலேறும்
முடியாய் உறையூரில் மூக்கீச் சரமேய
அடிகேள் அடியேற்கும் அஞ்சல் அருளாயே.



கடி ஆர் மலர் - மணம் கமழும் பூக்கள்;
மாணி - இங்கே மார்க்கண்டேயர்;
மடியா வரம் ஈந்தாய் - என்றும் இறவாமல் உயிரோடு இருக்குமாறு வரம் கொடுத்தவனே;
மதியம் புனல் ஏறும் முடியாய் - திங்களையும் கங்கையையும் முடிமேற் சூடியவனே;
அடிகேள் - அடிகளே - இறைவனே;
அடியேற்கும் அஞ்சல் அருளாய் - எனக்கும் அபயம் அளித்து அருள்வாயாக;



4)
மேலார் மிகவேத்த வேலை விடமுண்ட
சீலா பவளம்போற் செய்யா முடிவில்லா
மூலா உறையூரில் மூக்கீச் சரமேய
சூலா உனையல்லால் துணையிங் கறியேனே.



மேலார் மிகத்த வேலை விடம் உண்ட சீலா - தேவர்கள் மிகவும் துதிக்க இரங்கிக் கடல்நஞ்சை உண்ட சீலனே; (வேலை - கடல்); (அப்பர் தேவாரம் - 6.36.2 - "வெள்ளம் ஒருசடைமேல் ஏற்றார் தாமே மேலார்கள் மேலார்கள் மேலார் தாமே");
பவளம்போல் செய்யா - பவளம் போன்ற செம்மேனியனே; (செய்யன் - சிவந்த நிறம் உடையவன்);
முடிவு இல்லா மூலா - அந்தம் இல்லாத ஆதியே; (அப்பர் தேவாரம் - 6.15.6 - "மூலனாம் மூர்த்தியாம் முன்னே தானாம்" - மூலன் - முதற் பொருளாய் உள்ளவன். );
சூலா உனையல்லால் துணை இங்கு அறியேனே - சூலபாணியே, உன்னையன்றி எனக்கு வேறு துணை இல்லை;



5)
செத்தார் எரிகாட்டிற் செய்வாய் திருநட்டம்
கொத்தார் மலரோடு குளிர்வெண் பிறைசூடும்
முத்தா உறையூரில் மூக்கீச் சரமேய
அத்தா அடியேற்கும் அஞ்சல் அருளாயே.



செத்தார் எரிகாட்டிற் செய்வாய் திருநட்டம் - பிணங்கள் எரியும் சுடுகாட்டில் திருநடம் செய்பவனே;
கொத்து ஆர் மலரோடு குளிர்வெண்பிறை சூடும் முத்தா - மலர்க்கொத்துகளோடு குளிர்ந்த வெண்திங்களையும் சூடுகின்ற முத்தனே; (முத்தன் - இயல்பாகவே பாசங்களின் நீங்கியவன் - சிவபிரான்);
அத்தா - தந்தையே; (அத்தன் - தந்தை);



6)
அந்தார் எனநாகம் அகலத் தணிவோனே
சிந்தா மணிபோல்வாய் திகழும் மணிகண்டா
முந்தாய் உறையூரில் மூக்கீச் சரமேய
எந்தாய் இனியுன்னை என்றும் மறவேனே.



அம் தார் என நாகம் அகலத்து அணிவோனே - அழகிய மாலை போலப் பாம்பை மார்பில் அணிபவனே;
சிந்தாமணி போல்வாய் - நினைக்கும் வரம் எல்லாம் அளிக்க வல்லவனே; (சிந்தாமணி - விரும்பிய அனைத்தும் கொடுக்கவல்ல தெய்வமணி); அழியாத மணியே; (சிந்துதல் - அழிதல்);
திகழும் மணிகண்டா - ஒளிவீசும் நீலமணியைக் கண்டத்தில் உடையவனே;
முந்தாய் - அனைத்திற்கும் முந்தியவனே; (சம்பந்தர் தேவாரம் - 2.18.2 - "சிந்தா யெனுமால் சிவனே யெனுமால் முந்தா யெனுமால் முதல்வா எனுமால்");
எந்தாய் - எந்தையே;



7)
பூவா விழியிட்டுப் போற்றச் சுடராழி
ஈவாய் திருமாலுக் கேறும் நரையேற்றாய்
மூவாய் உறையூரில் மூக்கீச் சரமேய
நாவாய் அனையாய்நின் நாமம் மறவேனே.



பூவா விழி இட்டுப் போற்றச் சுடர் ஆழி ஈவாய் திருமாலுக்கு - பூவாகத் தன் கண்ணை இடந்து இட்டு அர்ச்சித்த திருமாலுக்கு ஒளிவீசும் சக்கராயுதத்தை அளித்தவனே;
ஏறும் நரை ஏற்றாய் - ஏறுகின்ற வெள்ளை இடபத்தை உடையவனே; (ஏறுதல் - மேலேறுதல்; உயர்தல்; மிகுதல்); (நரை - வெண்மை); ("மிகவும் வெள்ளைநிறம் உடைய இடபத்தை உடையவன்" / "கொடியில் இடபத்தை உடையவன்" என்றும் பொருள்கொள்ளலாம்);
மூவாய் - மூப்பு இல்லாதவனே;
உறையூரில் மூக்கீச்சரம் மேய நாவாய் அனையாய் - உறையூரில் மூக்கீச்சரம் என்ற கோயிலில் எழுந்தருளியிருக்கும் (பிறவிக்கடலுக்குத்) தெப்பம் போன்றவனே;
நின் நாமம் மறவேனே - உன் திருப்பெயரை நான் என்றும் மறவேன்;



8)
மதியா அவுணன்தன் வலியைத் தொலைவிக்க
மெதுவே விரலூன்றி மிகவும் இசைகேட்டாய்
முதுகாட் டெரியாடீ மூக்கீச் சரமேயாய்
மதுவார் மலர்சூடீ வாழ்த்த மறவேனே.



மதியா அவுணன்தன் வலியைத் தொலைவிக்க மெதுவே விரலூன்றி மிகவும் இசைகேட்டாய் - இகழ்ந்து பேசிக் கயிலைமலையைப் பெயர்க்கமுயன்ற இராவணனது வலிமையை அழிக்கச் சிறிதளவே விரலை ஊன்றி அவனை நசுக்கிப், பின் அவன் பாடிய இசையைக் கேட்டவனே; (அவுணன் - பொதுவாக அசுரன்; இங்கே அரக்கன்); (வலி - வலிமை); (தொலைவிக்க – அழிக்க); (மெது - மிருது);
(சம்பந்தர் தேவாரம் - 1.51.8 - ".... இலங்கைமன்னு வாளவுணர் கோனையெழில் விரலால் துலங்கவூன்றி வைத்துகந்தாய்...");
முதுகாட்டு எரியாடீ - சுடுகாட்டில் தீயேந்தி ஆடுபவனே; (சம்பந்தர் தேவாரம் - 1.85.3 -
"அந்தி மதியோடும் அரவச் சடைதாழ முந்தி அனலேந்தி முதுகாட் டெரியாடி");
மதுவார் மலர்சூடீ - தேன் சொரியும் மலரைச் சூடியவனே; (மதுவார் = மது ஆர்; மது வார்);



9)
பைந்நா கணையானும் பைந்தா மரையானும்
எந்நா யகனேஎன் றேத்தும் எரிவண்ணா
முந்நூல் திகழ்மார்பா மூக்கீச் சரமேய
எந்நே ருமிலாதாய் எனையஞ் சலெனாயே.



பைந்நாகணையானும் பைந்தாமரையானும் - படம் உடைய பாம்புப் படுக்கைமேல் இருக்கும் திருமாலும் பசிய தாமரைமலர்மேல் இருக்கும் பிரமனும்; (பைந்நாகணையான் = பை + நாக + அணையான்); (சம்பந்தர் தேவாரம் - 1.80.9 - "கோணா கணையானுங் குளிர்தா மரையானுங் காணார் கழலேத்தக் கனலா யோங்கினான்");
"எம் நாயகனே" என்று ஏத்தும் எரிவண்ணா - 'எங்கள் தலைவனே' என்று துதிக்கும் சோதியே;
முந்நூல் திகழ் மார்பா - முப்புரிநூல் (பூணூல்) அணிந்த மார்பினனே;
மூக்கீச்சரம் மேய எந்நேரும் இலாதாய் - உறையூரில் மூக்கீச்சரத்தில் எழுந்தருளியிருக்கும் எவ்வொப்பும் இல்லாதவனே; (நேர் - ஒப்பு);
எனை அஞ்சல் எனாயே - என்னை 'அஞ்சல்' என்று அருள்வாயாக.



10)
மக்கள் வழிமாற்ற வஞ்ச மொழிபேசும்
பொக்கம் உடையார்சொல் பொருளா மதியேன்மின்
முக்கண் ணுடையெந்தை மூக்கீச் சரமேய
செக்கர்ச் சடையான்பேர் செப்பத் திருவாமே.



பொக்கம் உடையார் சொல் பொருளா மதியேன்மின் - வஞ்சகர்களது பேச்சை மதிக்கவேண்டா; (பொக்கம் - பொய்; வஞ்சகம்; குற்றம்);
செக்கர்ச் சடையான் பேர் செப்பத் திரு ஆம் - செஞ்சடையான் ஆன சிவபெருமான் திருப்பெயரைச் சொன்னால் நன்மை உண்டாகும்; (செக்கர் - சிவப்பு; செவ்வானம்);



11)
மடமான் உமைபங்கா வணமைந் துடையானே
சடைமேற் பிறைகங்கை தாங்கும் பெருமானே
முடையார் தலையேந்தீ மூக்கீச் சரமேயாய்
அடைவார்க் கருளுன்றன் அடியை மறவேனே.



* உறையூரில் மூக்கீச்சரத்து ஈசன் திருநாமம் - பஞ்சவர்ணேசுவரர்; (உதங்க முனிவர்க்குச் சிவபெருமான் ஐந்து காலங்களில் ஐந்து வர்ணமாகக் காட்சியளித்த தலம்);
மடமான் உமை பங்கா - இளமான் போன்ற உமையம்மையை ஒரு பங்காக உடையவனே;
வணம் ஐந்து உடையானே - ஐந்து நிறங்கள் உடையவனே; (வணம் - வண்ணம் - இடைக்குறையாக வந்தது); (திருவாசகம் சிவபுராணம் - "நிறங்கள் ஓர் ஐந்து உடையாய்");
சடைமேற் பிறை கங்கை தாங்கும் பெருமானே - சடையில் சந்திரனையும் கங்கையையும் தாங்கும் பெருமானே;
முடை ஆர் தலை ஏந்தீ - புலால் நாற்றம் பொருந்திய மண்டையோட்டை ஏந்தியவனே;
அடைவார்க்கு அருள் உன்றன் அடியை மறவேன் - சரண் அடைந்தவர்களுக்கு அருளும் உன் திருவடியை நான் மறவேன்.



அன்போடு,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு :
1) யாப்புக்குறிப்பு :
கலிவிருத்தம் - 'மா மாங்காய் மா மாங்காய்' - என்ற அமைப்பு.
மாங்காய்ச்சீர் வரும் இடங்களில் பொதுவாக புளிமாங்காய்ச்சீர் வரும்; ஒரோவழி (சில சமயம்) கூவிளமும் வரலாம்.



2) சம்பந்தர் தேவாரம் - 1.80.1 -
கற்றாங் கெரியோம்பிக் கலியை வாராமே
செற்றார் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய
முற்றா வெண்திங்கள் முதல்வன் பாதமே
பற்றா நின்றாரைப் பற்றா பாவமே.



3) உறையூர் மூக்கீச்சரம் - உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் கோயில் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=153
-------------------

No comments:

Post a Comment