Saturday, September 15, 2018

04.41 – நெடுங்களம் (திருநெடுங்களம்)


04.41 நெடுங்களம் (திருநெடுங்களம்)



2014-01-07
திருநெடுங்களம்
----------------------------------
(அறுசீர் ஆசிரிய விருத்தம் - 'விளம் மா தேமா' - அரையடி வாய்பாடு). (திருநேரிசை அமைப்பு)
(திருநாவுக்கரசர் தேவாரம் - திருநேரிசை - 4.66.1 - "கச்சைசே ரரவர் போலுங் கறையணி மிடறர் போலும்")



1)
பூமிடை மாலை யோடு பொன்னடி போற்று வார்கள்
பூமிமீ ளாத வாறு புரிந்தருள் செய்பு ராணர்
தேமிகு மலர்போற் கண்ணைத் திருவடி இட்ட மாற்கு
நேமிவான் படைய ளித்தார் நெடுங்கள நாத னாரே.



மிடைதல் - செறிதல்; நிறைதல்; கலத்தல் (To be mixed, mingled);
பூமி மீளாதவாறு - பூமியில் மீண்டும் பிறந்து வாராத வண்ணம்; (அப்பர் தேவாரம் - 6.57.2 - "அதிரா வினைகள் அறுப்பாய் போற்றி .... என்றும்மீ ளாவருள் செய்வாய் போற்றி...");
புராணன் - பழையோன்; தேம் மிகு மலர் போல் - தேன் மிகும் மலர் போல;
மாற்கு - திருமாலுக்கு; நேமி வான் படை - சக்கரமாகிய பெரிய ஆயுதம்; (நேமி - சக்கரம்);
* திருமாலுக்குச் சக்கரம் அருளிய வரலாறு - திருவீழிமிழலைத் தலவரலாற்றில் காண்க;


2)
கனைகடல் வாயெ ழுந்த கடுவிடம் உண்ட கண்டர்
சுனையெனக் கங்கை தன்னைச் சுடர்ச்சடை வைத்தார் கூரார்
நுனையிலை வேலர் மார்பில் நூலினர் நாளும் போற்றி
நினைபவர் இடர்கள் நீக்கும் நெடுங்கள நாத னாரே.



கனைகடல்வாய் எழுந்த கடுவிடம் உண்ட கண்டர் - ஒலிக்கின்ற கடலில் தோன்றிய கொடிய நஞ்சை உண்ட நீலகண்டர்;
சுனையெனக் கங்கைதன்னைச் சுடர்ச்சடை வைத்தார் - சுனையைப் போலக் கங்கையை ஒளி பொருந்திய சடையில் தேக்கிவைத்தவர்; (சுனை - நீர்நிலை);
கூர் ஆர் நுனை இலை வேலர் - கூர்மையுடைய, இலைபோன்ற நுனியை உடைய சூலத்தை ஏந்தியவர்;



3)
எருதமர் இறைவர் தாளை ஏத்திடும் அன்பர்க் கெல்லாம்
தருபவர் தலையொன் றேந்தித் தையலார் இடுப லிக்கு
வருபவர் மங்கை பங்கர் வார்த்தையிற் சொல்ல ஒண்ணா
நிருபமர் நீல கண்டர் நெடுங்கள நாத னாரே.



தாளை ஏத்திடும் அன்பர்க்கு எல்லாம் தருபவர் - பக்தர்களுக்கு வேண்டிய வரம் அளிப்பவர்;
தலை ஒன்று ஏந்தித் தையலார் இடு பலிக்கு வருபவர் - பிரமன் சிரத்தைக் கையில் ஏந்தி மடவார்கள் இடும் பிச்சை ஏற்பதற்கு வருபவர்;
நிருபமர் - உவமை அற்றவர்; ஒப்பில்லாதவர்; (சம்பந்தர் தேவாரம் - 1.124.2 - "இருநில மிதன்மிசை யெழில்பெறு முருவினர் ... நிருபமன் மிழலையை நினையவ லவரே.");



4)
சீரணி தமிழைப் பாடிச் சேவடி போற்றிற் காப்பார்
வாரணி முலையாள் பங்கர் வானவர் வாழ்வ தற்காக்
காரணி கண்டர் நாகக் கச்சினர் கொன்றை யோடு
நீரணி சடையர் எங்கள் நெடுங்கள நாத னாரே.



அணிதல் - பூணுதல்; சூடுதல்; பொருந்துதல்;
போற்றில் - போற்றினால்;
வாழ்வதற்கா - வாழ்வதற்காக;
கார் அணி கண்டர் - கருமையை அணியும் கண்டத்தை உடையவர்;
நாகக் கச்சினர் - பாம்பை அரையில் கச்செனக் கட்டியவர்;



5)
பாரிடஞ் சூழ ஆடும் பதவிணை போற்று வாரைப்
பேரிடர் சூழா வண்ணம் பெருந்துணை யாகிக் காப்பார்
காரிழை காட்டு கண்டர் காலனைக் காய்ந்த காலர்
நேரிழை பங்கர் எங்கள் நெடுங்கள நாத னாரே.



பாரிடம் - பூதகணங்கள்; பத இணை - இரு திருவடிகள்;
கார் இழை காட்டு கண்டர் - கரிய மணியைக் காட்டும் கண்டத்தை உடையவர் - நீலகண்டர்; (இழை - ஆபரணம்);
காலனைக் காய்ந்த காலர் - இயமனைக் காலால் உதைத்தவர்; (காய்தல் - அழித்தல்; கோபித்தல்); (அப்பர் தேவாரம் - 4.71.6 - "காலற் காய்ந்த காலனை");
நேரிழை பங்கர் - உமையை ஒரு பங்கில் உடையவர்; (நேரிழை - நேர்+இழை - பெண்);



6)
சுற்றிவந் தேத்தும் அன்பர் துயரினைத் துடைக்கும் பண்பர்
வற்றிய தலையொன் றேந்தி வாயிலிற் பலிக்கு நிற்கும்
பெற்றியர் பெண்ணர் ஆணர் பெருவிடம் உண்ட பித்தர்
நெற்றியிற் கண்ணர் எங்கள் நெடுங்கள நாத னாரே.



வற்றிய தலை - உலர்ந்த தலை; (அப்பர் தேவாரம் - 6.77.1 "பாட அடியார் பரவக் கண்டேன் ... வாடல் தலையொன்று கையிற் கண்டேன் ...");
பெற்றி - இயல்பு; பெருமை;
பெண்ணர் - பெண்ணாய் இருப்பவர்; ஆணர் - ஆணாய் இருப்பவர்;
(திருநாவுக்கரசர் தேவாரம் - 6.17.3 - "ஆல நிழலிருப்பர் ஆகா யத்தர் அருவரையி னுச்சியர் ஆணர் பெண்ணர்")



7)
நிலமிசை வீழ்ந்தும் நின்றும் நீள்கழல் போற்று வார்க்கு
மலைவினை நீக்கி நன்மை மல்கிட அருள்வார் மேருச்
சிலையினை வில்லா ஏந்தித் திரிபுரம் செற்று கந்தார்
நிலவணி சடையர் எங்கள் நெடுங்கள நாத னாரே.



மலைவினை நீக்கி - மலையளவு உள்ள பழவினைகளைத் தீர்த்து; "மயக்கத்தைப் போக்கி" என்றும் பொருள்கொள்ளல் ஆம்; (மலைவு - மயக்கம்);
மல்குதல் - பெருகுதல்; செழித்தல்;
மேருச் சிலையினை வில்லா ஏந்தித் திரிபுரம் செற்று கந்தார் - மேருமலையை வில்லாக ஏந்தி முப்புரங்களை அழித்தவர்; (சிலை - மலை); (செறுதல் - அழித்தல்);



8)
தரித்தவர் நெற்றிக் கண்ணைத்; தகர்த்தவர் தக்கன் வேள்வி;
உரித்தவர் மதவே ழத்தை; ஒன்னலர் முப்பு ரத்தை
எரித்தருள் வில்லர்; வெற்பை இடந்தவி லங்கைக் கோனை
நெரித்தருள் விரலர் எங்கள் நெடுங்கள நாத னாரே.



தரித்தவர் நெற்றிக் கண்ணைத் - நெற்றிக்கண் உடையவர்;
தகர்த்தவர் தக்கன் வேள்வி - தக்கன் செய்த வேள்வியை அழித்தவர்;
உரித்தவர் மதவேழத்தை - மதயானையிந்தோலை உரித்தவர்;
ஒன்னலர் முப்புரத்தை எரித்தருள் வில்லர் - பகைவர்களது முப்புரங்களை வில்லை ஏந்தி எரித்தவர்; (ஒன்னலர் - பகைவர்);
வெற்பை இடந்த இலங்கைக்கோனை நெரித்து அருள் விரலர் - கயிலைமலையைப் பேர்த்த இராவணனை நசுக்கிய விரலை உடையவர்; (சம்பந்தர் தேவாரம் - 2.20.9 - "மணிநீள் முடியான் மலையை அரக்கன் தணியா தெடுத்தான் உடலம் நெரித்த அணியார் விரலாய்");



9)
கூடிய வாறு போற்றிற் குறைகளைத் தீர்ப்பார் திங்கள்
சூடிய முடியர் பூதம் சூழ்ந்திசை பாடக் கானில்
ஆடிய கழலர் பூமேல் அண்ணலும் அரியும் எங்கும்
நேடிய சோதி எங்கள் நெடுங்கள நாத னாரே.



கூடியவாறு - இயன்ற வகையில்; (கூடுதல் - இயலுதல்);
கானில் ஆடிய கழலர் - சுடுகாட்டில் திருநடம் செய்யும் திருப்பாதர்;
பூமேல் அண்ணலும் அரியும் எங்கும் நேடிய சோதி - பிரமனும் திருமாலும் மேலும் கீழும் தேடிய சோதி ஆனவர்;



10)
நாத்திகர் பேச்சும், பண்டை நான்மறை நெறியைத் தூற்றிப்
பேத்திடும் பிட்டர் சொல்லும் பேணிடேல்; அன்பர் தம்மைக்
காத்திடர் களைவார் அம்பெய் காமனை நீறு செய்த
நேத்திரம் காட்டு நெற்றி நெடுங்கள நாத னாரே.



பேத்திடும் - பிதற்றிடும் என்பது பேத்திடும் என்று மருவி வந்தது; (பேத்துதல் , Colloquial - பிதற்றுதல்);
பிட்டர் - பிரட்டர்கள் - மதத்துக்குப் புறம்பானவர்; நெறியினின்று வழுவினவர்கள்;
அம்பு எய் காமனை நீறு செய்த - அம்பை எய்த மன்மதனைச் சாம்பலாக்கிய;
நேத்திரம் காட்டு நெற்றி நெடுங்கள நாதனார் - நெற்றிக்கண்ணரான நெடுங்களப் பெருமானார்;



11)
ஆயிரந் திருநா மத்தார் ஆதிரை நாளர் ஊர்கள்
போயிரந் துண்பார் சாம்பற் பூச்சினர் புலியின் தோலர்
வாயருந் தமிழ்கள் பாட மனத்தினால் மறவா தேத்தும்
நேயருக் கன்பர் எங்கள் நெடுங்கள நாத னாரே.



ஆயிரம் திருநாமத்தார் - ஆயிரம் திருப்பெயர்கள் உடையவர்;
ஆதிரை நாளர் - திருவாதிரை என்னும் நட்சத்திரத்திற்கு உரியவர்; (அப்பர் தேவாரம் - 4.32.5 - "மூவகை மூவர் போலும் .... ஆதிரை நாளர் போலும்...");
ஊர்கள் போய் இரந்து உண்பார் - பல ஊர்களில் பிச்சையெடுப்பவர்;
சாம்பற் பூச்சினர் - திருநீற்றைப் பூசியவர்;
புலியின் தோலர் - புலித்தோலை ஆடையாக அணிந்தவர்;
வாய் அரும் தமிழ்கள் பாட, மனத்தினால் மறவாது ஏத்தும் நேயருக்கு அன்பர் - அரிய தமிழான தேவாரம் திருவாசகம் இவற்றை வாயால் பாடி மனத்தினால் மறவாமல் போற்றும் பக்தர்களுக்கு அன்பு உடையவர்;



அன்பொடு,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு :
1) திருநெடுங்களம் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=571
திருநெடுங்களம் - தேவாரம் தளத்தில்: http://www.thevaaram.org/thirumurai_1/koil_view.php?koil_idField=173
----------- --------------

No comments:

Post a Comment