Monday, September 17, 2018

04.52 - புடைமருதூர் - சொற்சுவையோடு

04.52 - புடைமருதூர் - சொற்சுவையோடு

2014-03-01

4.52 - புடைமருதூர் - (திருப்புடைமருதூர்)

----------------------------------

(எழுசீர் விருத்தம் - விளம் மா விளம் மா விளம் விளம் மா - வாய்பாடு)

(சம்பந்தர் தேவாரம் - 3.120.1 - "மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை");

(சுந்தரர் தேவாரம் - 7.14.1 - "வைத்தனன் தனக்கே தலையும்என் நாவும்");


1)

சொற்சுவை யோடு பொருட்சுவை மிக்க

.. தொடைபல கொண்டடி போற்றும்

நற்சுவை அறிந்த நாவினர் தமக்கு

.. நலமெலாம் நல்கிடும் நம்பன்

கற்சிலை ஒன்றைக் கையினில் ஏந்திக்

.. கடிமதில் மூன்றையும் எய்த

பொற்சடை யானூர் பொருநையின் கரைமேற்

.. பொழிலணி புடைமரு தூரே.


சொற்சுவையோடு பொருட்சுவை மிக்க தொடை பல கொண்டு அடி போற்றும் - சொல் நயமும் பொருள் நயமும் மிகுந்த பாமாலைகளால் திருவடியை வழிபடும்; (தொடை - மாலை);

நற்சுவை அறிந்த நாவினர் தமக்கு நலமெலாம் நல்கிடும் நம்பன் - நல்ல சுவையை அறிந்த நாவுடைய அன்பர்க்கு எல்லா நலங்களையும் அருளும் நம்பன்; (நம்பன் - சிவன் திருநாமம் - விரும்பத்தக்கவன்);

கற்சிலை ஒன்றைக் கையினில் ஏந்திக் கடி-மதில் மூன்றையும் எய்த பொற்சடையான் ஊர் - மேருமலையை வில்லாகக் கையில் ஏந்திக் காவல் மிக்க முப்புரங்களையும் எய்த, பொன் போன்ற சடையுடைய ஈசன் உறையும் தலம்; (கல் - மலை; சிலை - வில்); (கடி - காவல்);

பொருநையின் கரைமேல் பொழில் அணி புடைமருதூரே - தாமிரபரணியின் கரையில் சோலைகள் சூழ்ந்த திருப்புடைமருதூர்; (பொருநை - தாமிரபரணி ஆறு);


2)

துரிசடை யாத தூயம னத்தர்

.. துணையடி தோத்திரம் செய்யும்

பரிசுடை யார்தம் பழவினை தீர்த்துப்

.. பரகதி கொடுத்தருள் பரமன்

விரிசடை யாய்வெள் விடையினாய் என்று

.. வேண்டிய பகீரதற் கருள்செய்

புரிசடை யானூர் பொருநையின் கரைமேற்

.. பொழிலணி புடைமரு தூரே.


துரிசு அடையாத தூய மனத்தர், துணையடி தோத்திரம் செய்யும் பரிசு உடையார்தம் பழவினை தீர்த்துப் பரகதி கொடுத்து அருள் பரமன் - ; (துரிசு - குற்றம்); (துணையடி - இரு திருவடிகள்; துணையாக உள்ள திருவடி என்றும் கொள்ளலாம்); (பரிசு - குணம்; தன்மை);

"விரி-சடையாய்! வெள்-விடையினாய்!" என்று வேண்டிய பகீரதற்கு அருள்செய் புரி-சடையான் ஊர் - ; (விரிசடையாய் - விரிந்த சடையை உடையவனே); (இங்கே கங்கையை மண்ணுலகிற்குக் கொண்டுவருவதற்காகப் பகீரதன் வேண்டுவதால், "சடையானே, அதை விரிப்பாயாக" என்றும் பொருள்கொள்ளாலாம்); (விடையினாய் - இடபவாகனனே); (புரிசடையான் - முறுக்கிய சடையினன்);

பொருநையின் கரைமேல் பொழில் அணி புடைமருதூரே - ;


3)

முன்சிறு நகையால் முப்புரம் எரித்த

.. முக்கணன் தன்திரு நாம

இன்சுவை அறிந்த நாவுடை யார்தம்

.. இருவினை தீர்த்தருள் ஈசன்

மென்சிறை வண்டு முரல்நறுங் கொன்றை

.. வெறிகமழ் கூவிளம் விரவும்

புன்சடை யானூர் பொருநையின் கரைமேற்

.. பொழிலணி புடைமரு தூரே.


மென்-சிறை வண்டு - மெல்லிய சிறகுகளை உடைய வண்டுகள்; முரல்தல் - ஒலித்தல்; பாடுதல்; வெறி கமழ் கூவிளம் - மணம் வீசும் வில்வம்; புன்சடை - செஞ்சடை;


4)

கலியிடை மலையை மத்தென நாட்டிக்

.. கடைந்திடும் போதெழு நஞ்சால்

மெலிவடை உம்பர் ஒலிகழல் போற்ற

.. மிடற்றினில் வைத்தருள் விமலன்

பலிகடை தோறும் சென்றிரந் துண்ணும்

.. பண்பினன் பணிந்தெழு திங்கள்

பொலிசடை யானூர் பொருநையின் கரைமேற்

.. பொழிலணி புடைமரு தூரே.


கலி - கடல்; நாட்டுதல் - ஸ்தாபித்தல்; நடுதல்; (சுந்தரர் தேவாரம் - 7.55.5 - "கோல மால்வரை மத்தென நாட்டிக்"); மெலிவு அடைதல் - துன்புறுதல்; உம்பர் - தேவர்கள்: ஒலி-கழல் - ஒலிக்கின்ற கழலை அணிந்த திருவடி; பலி கடைதோறும் சென்று இரந்து உண்ணும் - பிச்சையை வீட்டுவாயில்கள்தோறும் சென்று யாசித்து உண்கின்ற; (அப்பர் தேவாரம் - 6.79.7 - "கடைதோறும் பலிகொள்வானை"); திங்கள் பொலிசடையான் - சந்திரன் திகழ்கின்ற சடையை உடையவன்;


5)

தனக்கிணை இல்லான் தாயினும் நல்லான்

.. தடவரை யான்மகள் தலைவன்

பனைக்கர வேழம் படவுரி செய்து

.. பாரிடம் சூழந டிப்பான்

முனர்ச்சலந் தரனைத் தடிந்தசக் கரத்தை

.. முளரிபோற் கண்ணனுக் கீந்த

புனற்சடை யானூர் பொருநையின் கரைமேற்

.. பொழிலணி புடைமரு தூரே.


தட-வரையான் மகள் தலைவன் - மலைமகளுக்குத் தலைவன்; (தட-வரை - பெரிய மலை); பனைக்கர வேழம் பட உரி செய்து - பனை போன்ற துதிக்கையை உடைய யானையைக் கொன்று தோலை உரித்து; (படுதல் - சாதல்); பாரிடம் - பூதம்; நடித்தல் - கூத்தாடுதல்; நடம்செய்தல்; முனர் - முன்னர் - இடைக்குறை விகாரம்; தடிதல் - வெட்டுதல்; அழித்தல்; முளரி போல் கண்ணன் - தாமரை போன்ற கண் உடையவன் - திருமால்; (முளரி - தாமரை); (சுந்தரர் தேவாரம் - 7.16.2 - "செருமேவு சலந்தரனைப் பிளந்தசுடர் ஆழி செங்கண்மலர் பங்கயமாச் சிறந்தானுக் கருளி");


6)

மருவுடை மலரை வாளியாக் கொண்ட

.. மன்மதன் மதியில னாகி

அருகடை நாளில் அழலுமிழ் கண்ணால்

.. அவனழ குடல்தனைக் காய்ந்தான்

திருவுடை யான்ஓர் சிரத்தினில் ஐயம்

.. தேர்பவன் அடியவர்க் கரணாம்

பொருவிடை யானூர் பொருநையின் கரைமேற்

.. பொழிலணி புடைமரு தூரே.


மரு - வாசனை; வாளி - அம்பு; அவன் அழகு உடல்தனைக் காய்ந்தான் - மன்மதனின் அழகிய உடலை எரித்துச் சாம்பலாக்கியவன்; திரு - செல்வம்; நன்மை; விபூதி/திருநீறு; (சம்பந்தர் தேவாரம் - 1.98.1 - "சென்றடையாத திருவுடையானை..."); (திருவாசகம் - அச்சப்பத்து - 8.35.9 - "திருமுண்டம் தீட்ட மாட்டாது அஞ்சுவார் அவரைக் கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே"); ஐயம் - பிச்சை; அடியவர்க்கு அரண் ஆம் பொரு-விடையான் - பக்தர்களுக்குக் காவலாக இருக்கும், போர்செய்ய வல்ல இடபத்தை வாகனமாக உடையவன்; (திருநாவுக்கரசர் தேவாரம் - 4.2.1 - "அண்ணல் அரண்முரண் ஏறும்");


7)

கனைகடல் கக்கு கருவிடந் தன்னைக்

.. கருணையொ டுண்டிருள் கண்டன்

புனலடை சடையான் கொடியிடை உடையாள்

.. புரிகுழற் கோமதி நாதன்

நினைபவர் நெஞ்சில் நின்றருள் நிமலன்

.. நீறொளிர் மார்பினில் அரவம்

புனைபெரு மானூர் பொருநையின் கரைமேற்

.. பொழிலணி புடைமரு தூரே.


கனைகடல் கக்கு கருவிடம் தன்னைக் கருணையொடு உண்டு இருள் கண்டன் - ஒலிக்கின்ற கடல் உமிழ்ந்த கரிய நஞ்சைக் கருணையினால் உண்டு கறுத்த கண்டத்தை உடையவன்;

புனல் அடை சடையான் - கங்கையைச் சடையில் அடைத்தவன்;

கொடியிடை உடையாள் புரி-குழல் கோமதி நாதன் - கொடி போன்ற இடையும் சுருண்ட கூந்தலும் உடைய கோமதிக்குத் தலைவன்; (புரிதல் - சுருள்தல்); (* கோமதி - இத்தலத்து இறைவி திருநாமம்);

நினைபவர் நெஞ்சில் நின்றருள் நிமலன் - எண்ணி வழிபடும் பக்தர்கள் நெஞ்சிள் தங்கும் தூயவன்;

நீறு ஒளிர் மார்பினில் அரவம் புனை பெருமான் ஊர் - திருநீற்றைப் பூசிய மார்பில் பாம்பை மாலையாக அணிந்த பெருமான் உறையும் ஊர்;

பொருநையின் கரைமேல் பொழில் அணி புடைமருதூரே - தாமிரபரணியின் கரையில், சோலை சூழ்ந்த திருப்புடைமருதூர் ஆகும்;


8)

தேர்விடத் தடையோ இம்மலை என்று

.. சின(ம்)மிகு மனத்தனாய் அதனைப்

பேர்மட அரக்கன் வலிகெட ஊன்றிப்

.. பின்னவன் பெரிதழு தேத்தப்

பேர்கொடுத் தருள்செய் பிஞ்ஞகப் பித்தன்

.. பேதையோர் பங்கினன் வெள்ளைப்

போர்விடை யானூர் பொருநையின் கரைமேற்

.. பொழிலணி புடைமரு தூரே.


பேர் மட அரக்கன் வலி கெட ஊன்றிப் - கயிலைமலையைப் பெயர்க்க முயன்ற, மடமை மிக்க தசமுகனது வலிமை அழியும்படி ஒரு விரலை ஊன்றி; (வலி - வலிமை);

பின் அவன் பெரிது அழுது ஏத்தப், பேர் கொடுத்து அருள்செய் - பிறகு அவன் நெடுங்காலம் ஓலமிட்டு அழுது துதிக்க, அவனுக்கு இரங்கி, இராவணன் என்ற பெயரும் கொடுத்து அருள்செய்த; (அப்பர் தேவாரம் - 6.79.10 - "பாடல் கேட்டுப் பரிந்து அவனுக்கு இராவணன் என்று ஈந்த நாமத் தத்துவனை" - இராவணன் - அழுதவன்);

பிஞ்ஞகப் பித்தன் - தலைக் கோலமும், பேரருளும் உடையவன்; (சுந்தரர் தேவாரம் - 7.48.10 - "பிஞ்ஞகப் பித்தனை");

பேதைர் பங்கினன் - உமையொருபங்கன்;


9)

மருப்பொசி மாலும் மலர்மிசை அயனும்

.. மலரடி மணிமுடி காணா

நெருப்புரு வாகி நின்றவன் இன்று

.. நேற்றொடு நாளையும் ஆகி

இருப்பவன் அன்பர் விருப்பவன் உம்பர்

.. இடர்கெட எயில்களை எரித்த

பொருப்புவில் லானூர் பொருநையின் கரைமேற்

.. பொழிலணி புடைமரு தூரே.


மருப்பு ஒசி மாலும் - குவலயாபீடம் என்ற யானையின் தந்தத்தை ஒடித்த திருமாலும்; (மருப்பு - யானைக்கொம்பு; தந்தம்); (ஒசித்தல் - ஒடித்தல்); (சம்பந்தர் தேவாரம் - 1.52.9 - "வேழ வெண்கொம்பு ஒசித்த மாலும்"); மலர்மிசை அயனும் - தாமரைமேல் இருக்கும் பிரமனும்; விருப்பவன் - விருப்பமாய் இருப்பவன்; (அப்பர் தேவாரம் - 6.90.9 - "தக்கோர் சிந்தை விருப்பவனை"); பொருப்பு வில் - மேருமலை வில்;


10)

சேர்வழி அறியாக் கார்மலி நெஞ்சர்

.. செப்பிடும் சிறுமொழி கொள்ளேல்

ஓர்வழி உண்மை நேர்வழி எளிதில்

.. உய்வழி நீறணி பத்தர்

சார்வழி ஆன சங்கரன் கங்கைச்

.. சடையினன் கடகரி உரிவைப்

போர்வையி னானூர் பொருநையின் கரைமேற்

.. பொழிலணி புடைமரு தூரே.


வழி - நெறி; கார் - கருமை; இருள்; அறிவுமயக்கம்; மலிதல் - மிகுதல்; சிறுமொழி - புன்மொழி; சிறுசொல்; அற்ப வார்த்தைகள்; கொள்ளேல் - மதிக்கவேண்டா; ஓர் வழி - ஒப்பற்ற நெறி; உண்மை நேர்வழி - உண்மைவழி, நேர்வழி - மெய்ந்நெறி, செவ்வையான வழி; எளிதில் உய் வழி - எளிதில் உய்யும் நெறி; நீறு அணி பத்தர் சார் வழி - திருநீறு பூசிய பக்தர்கள் சாரும் நெறி; (சார்தல் - சென்றடைதல்; புகலடைதல்; பொருந்துதல்); கட-கரி உரிவைப் போர்வையினான் - மதயானையின் தோலைப் போர்வையாக அணிந்தவன்; (கடம் - யானை மதம்); (கரி - யானை); (உரிவை - தோல்); (அப்பர் தேவாரம் - 4.66.5 - "கடகரி யுரியர் போலும்");


11)

தீங்கரும் பன்ன இன்மொழி பேசும்

.. தேவியோர் பங்கனே சிவனே

தாங்கருந் துன்பம் தருவினை தீராய்

.. சம்புவே என்றடி தொழுவார்க்(கு)

ஈங்கருந் துணையாய் இன்பம ருள்வான்

.. இரக்கமில் காலனை உதைத்த

பூங்கழ லானூர் பொருநையின் கரைமேற்

.. பொழிலணி புடைமரு தூரே.


தீங்-கரும்பு அன்ன இன்மொழி - இனிய கரும்பு போன்ற இன்மொழி; தாங்கருந்துன்பம் - தாங்க அரும் துன்பம் - தரிக்க ஒண்ணாத துன்பம்; (தாங்கரும் - தாங்க அரும்; தொகுத்தல் விகாரம்); துன்பம் தருவினை தீராய் - துன்பத்தைத் தரும் வினைகளைத் தீர்ப்பாயாக; சம்பு - சிவன் திருநாமம் - இன்பத்தை ஆக்குபவன்; சுகத்தைத் தருபவன்; ஈங்கு அரும் துணையாய் - இங்கே (இப்பிறப்பில், இவ்வுலகில்) அரிய துணை ஆகி; இரக்கம் இல் காலனை - இரக்கமற்ற எமனை; பூங்கழலான் - பூவையொத்த பொலிவுடைய கழலணிந்த திருவடியினன்;


வி. சுப்பிரமணியன்

----------- --------------

04.51 - சிவசைலம் - வெண்பிறை விடநாகம்

04.51 - சிவசைலம் - வெண்பிறை விடநாகம்

2014-02-15

4.51 - சிவசைலம்

-------------------------------------------

(கலிவிருத்தம் - விளம் காய் விளம் காய் - வாய்பாடு;

விளச்சீர் வரும் இடத்தில் ஒரோவழி காய்ச்சீரும் வரலாம்)

(சுந்தரர் தேவாரம் - 7.29.3 - "பாடுவார் பசிதீர்ப்பாய்");

(சுந்தரர் தேவாரம் - 7.85.1 - "வடியுடை மழுவேந்தி");


1)

வெண்பிறை விடநாகம் வேணியில் அணிவோனே

கண்புனை நுதலானே கடுவினை தீர்த்தருளாய்

பண்பயில் மொழிமாது பரமகல் யாணியொடும்

தெண்புனற் கடனாபாய் சிவசைலம் அமர்ந்தவனே.


* சிவசைலத்தில் இறைவன், இறைவி திருநாமங்கள் - சிவசைலநாதர், பரம-கல்யாணி;

விடநாகம் - விஷமுடைய நாகப்பாம்பு; வேணி - சடை; நுதல் - நெற்றி; கடுவினை - கொடிய வினை; தெண் புனல் - தெளிந்த நீர்; கடனா - சிவசைலத்தில் ஓடும் நதியின் பெயர்; அமர்தல் - விரும்புதல்; உறைதல்;


2)

வரைதனை வளைவித்து மாற்றலர் புரமெய்தாய்

அரைதனில் அரவார்த்தாய் அயன்தலைப் பலிகொள்வாய்

குரைகழல் தொழுவேன்றன் கொடுவினை தீர்த்தருளாய்

திரைமலி கடனாபாய் சிவசைலம் அமர்ந்தவனே.


வரைதனை வளைவித்து மாற்றலர் புரம் எய்தாய் - மலையை வில்லாக வளைத்துப் பகைவர்களது முப்புரங்களை எய்தவனே; (வரை - மலை); (மாற்றலர் - பகைவர்); (வளைவித்தல் - வளைத்தல்); (சம்பந்தர் தேவாரம் - 2.23.2 - "மலையார் சிலையா வளைவித்தவனே");

அரைதனில் அரவு ஆர்த்தாய் - பாம்பை அரைநாணாகக் கட்டியவனே; (ஆர்த்தல் - கட்டுதல்);

குரைகழல் தொழுவேன்-ன் கொடுவினை தீர்த்தருளாய் - ஒலிக்கின்ற கழலை அணிந்த திருவடியைத் தொழும் என்னுடைய கொடிய வினையைத் தீர்த்தருள்க;

திரை மலி கடனா பாய் சிவசைலம் அமர்ந்தவனே - அலைகள் மிக்க கடனாநதி பாய்கின்ற சிவசைலத்தில் விரும்பி உறைபவனே; (திரை - அலை);


3)

சாம்பலை உடற்பூசித் தாளிணை தனையென்றும்

ஓம்பிடும் ஒருமாணி உயிர்க்குறு துணையானாய்

பாம்பணி மணிமார்பா பழவினை தீர்த்தருளாய்

தேம்புனற் கடனாபாய் சிவசைலம் அமர்ந்தவனே.


சாம்பல் - திருநீறு; ஓம்புதல் - போற்றுதல்; பாம்பு அணி மணி மார்பா - பாம்பை மாலையாக அழகிய பவளமார்பில் அணிந்தவனே; தேம்புனல் - இனிய நீர்;


4)

வாயினில் தமிழ்மாலை மறப்பிலா அடியார்க்குத்

தாயினும் நல்லவனே சங்கரா ஒருகண்ணில்

தீயினை உடையானே தீவினை தீர்த்தருளாய்

சேயிழை ஒருகூறா சிவசைலம் அமர்ந்தவனே.


தமிழ்மாலை - தேவாரம், திருவாசகம், முதலியன; மறப்பிலா - மறப்பு இலா - மறத்தல் இல்லாத; சேயிழை - பெண் - உமாதேவி; ஒரு கூறா - ஒரு கூறனே - ஒரு பங்காக உடையவனே;


5)

வான்மனம் மிகவாடி வணங்கிட விடமுண்டாய்

மான்மறி மழுவேந்தீ மதகரி உரிமூடீ

பான்மதிச் சடையானே பழவினை தீர்த்தருளாய்

தேன்மலி பொழில்சூழ்ந்த சிவசைலம் அமர்ந்தவனே.


வான் - தேவர்கள்; மான்மறி மழுந்தீ - மான்கன்றையும் மழுவையும் ஏந்தியவனே; மதகரி உரிமூடீ - மதயானையின் தோலைப் போர்த்தவனே; பால்மதிச் சடையானே - பால் போன்ற வெண்ணிறப் பிறைச்சந்திரனை சடையில் அணிந்தவனே; (பால்+மதி = பான்மதி); தேன் - வாசனை; வண்டு;


6)

கூனணி மதிநாகம் கூவிளம் புனைவோனே

மானன விழிமாது மருவிய மணவாளா

கானகம் தனிலாடீ கடுவினை தீர்த்தருளாய்

தேனறை பொழில்சூழ்ந்த சிவசைலம் அமர்ந்தவனே.


கூன் அணி மதி, நாகம், கூவிளம் புனைவோனே - வளைந்த அழகிய சந்திரனையும், பாம்பையும், வில்வத்தையும் சூடியவனே; (கூன் - வளைவு); (அணி - அழகு; அணிதல் - பொருந்துதல்); (கூவிளம் - வில்வம்);

மான் அன விழி மாது மருவிய மணவாளா - மான் போன்ற விழியுடைய உமைக்குக் கணவனே; (அன - அன்ன - போன்ற); (மருவுதல் - கலத்தல்; தழுவுதல்);

கானகம்-தனில் ஆடீ - சுடுகாட்டில் ஆடுபவனே; கடுவினை - கொடிய வினைகள்; தேன் அறை பொழில் - வண்டுகள் முரலும் சோலை; (தேன் - வண்டு);


7)

பிறையணி சடையானே பெண்ணொரு புடையானே

கறையணி மிடறானே கண்ணுதல் உடையானே

துறைபல அடைபெம்மான் தொல்வினை தீர்த்தருளாய்

சிறையளி முரல்சோலைச் சிவசைலம் அமர்ந்தவனே.


புடை - பக்கம்; மிடறானே - கண்டனே; (மிடறு - கண்டம்); கண்ணுதல் - நெற்றிக்கண்; துறை பல அடை பெம்மான் - பல துறைகளால் அடையப்பெறும் பெருமானே; (துறை - வழி); (பெம்மான் - அண்மை விளி; - பெம்மானே; பெருமானே); சிறை அளி முரல் சோலை - சிறகுகளையுடைய வண்டுகள் ரீங்காரம் செய்யும் பொழில்; (சிறை - இறகு); (அளி - வண்டு);


8)

மழுவலன் உடையாய்நின் மலைபெயர் இலங்கைக்கோன்

அழுதிட அடர்பாதா அணிமலர்க் குழல்மாது

தழுவிய தடமார்பா பழவினை தீர்த்தருளாய்

செழுமலர் மலிசோலைச் சிவசைலம் அமர்ந்தவனே.


மழு வலன் உடையாய் - மழுப்படையை வலக்கையில் உடையவனே; (வலன் - வலம் - வலப்பக்கம்);

நின் மலை பெயர் இலங்கைக்கோன் அழுதிட அடர்-பாதா - உன் கயிலைமலையைப் பெயர்த்த இராவணன் அழும்படி (அம்மலையின்மேல் விரலை ஊன்றி) அவனை நசுக்கியவனே; (அடர்த்தல் - நசுக்குதல்);

அணிமலர்க் குழல்-மாது தழுவிய தட-மார்பா - அழகிய மலர்களைக் கூந்தலில் அணிந்த உமாதேவி தழுவிய, அகன்ற மார்பினனே; (தடம் - பெருமை; அகலம்); (இராவணன் கயிலைமலையைப் பெயர்த்தபொழுது உமை அஞ்சி ஈசனைத் தழுவியதைச் சுட்டியது);

பழவினை தீர்த்தருளாய் - என் பழைய வினைகளையெல்லாம் தீர்த்து அருள்வாயாக;

செழு மலர் மலி சோலைச் சிவசைலம் அமர்ந்தவனே - செழுமையான மலர்கள் நிறைந்த பொழில் சூழ்ந்த சிவசைலத்தில் எழுந்தருளிய சிவபெருமானே;


9)

அன்றுல களந்தானும் அணிமலர் மிசையானும்

சென்றடி முடிகாணாத் தீயென உயர்நாதா

உன்றனைப் பணிவேன்றன் உறுவினை ஒழித்தருளாய்

தென்றலில் மணம்வீசும் சிவசைலம் அமர்ந்தவனே.


அன்று உலகு அளந்தானும் அணிமலர் மிசையானும் - முன்பு (மஹாபலியிடம் மூவடி மண் யாசித்து) உலகத்தையே அளந்த திருமாலும், அழகிய தாமரைமலர்மேல் உறையும் பிரமனும்;

சென்று அடி முடி காணாத் தீன உயர்-நாதா - தேடிச் சென்றும் அடிமுடி காணா இயலாத ஜோதி என ஓங்கிய தலைவனே;

உன்றனைப் பணிவேன்-ன் உறுவினை ஒழித்தருளாய் - உன்னைப் பணியும் என்னுடைய மிகுந்த வினைகளைத் தீர்த்தருள்க; (உறுதல் - இருத்தல்; மிகுதல்; பொருந்துதல்); (சம்பந்தர் தேவாரம் - 1.121.10 - "கைதொழுதெழும் அவர் உறுவினை கெடல் அணுகுதல் குணமே");


10)

மெய்ம்மையை அறியாத மிண்டர்கள் உரைசெய்யும்

பொய்ம்மைகள் பொருளல்ல புரிசடைப் பெருமானே

எம்மிறை என்றுகழல் ஏத்துவார்க் கருள்செல்வன்

செம்மலர் திகழ்சோலைச் சிவசைலம் அமர்ந்தவனே.


மெய்ம்மையை அறியாத மிண்டர்கள் உரைசெய்யும் பொய்ம்மைகள் பொருள் அல்ல - (சத்தியத்தை) மெய்ப்பொருளை (/உண்மையை) அறியாத கல்நெஞ்சர்கள் சொல்லும் பொய்கள் பொருளற்றவை; (பொருள் - தத்துவம்; மதிக்கப்படுவது);

"புரி-சடைப் பெருமானே எம்றை" என்று கழல் ஏத்துவார்க்கு அருள் செல்வன் - "முறுக்குண்ட சடையை உடைய பெருமானே எம் இறைவன் (/இறைவா)" என்று போற்றிக் கழல் அணிந்த திருவடியைத் துதிக்கும் பக்தர்களுக்கு வரங்களை அருளும் செல்வன்; (புரிதல் - முறுக்குக்கொள்ளுதல்); ("எம் இறை" என்பதை அண்மைவிளியாக "எம் இறைவா" என்றும் பொருள்கொள்ளல் ஆம்); (செல்வன் - எல்லாத் திருவும் உடையவன்) ; (அப்பர் தேவாரம் - 6.87.1 - "சிவனவன்காண் சிவபுரத்து எம் செல்வன்தானே"):

செம்மலர் திகழ்-சோலைச் சிவசைலம் அமர்ந்தவனே - சிறந்த மலர்கள் திகழும் சோலை சூழ்ந்த சிவசைலத்தில் எழுந்தருளிய சிவபெருமான்; (- ஈற்றசை);


11)

முன்னடு முடிவானாய் மூளெரி வடிவானாய்

உன்னடி போற்றிடுவார் ஊழ்வினை பாற்றிடுவாய்

சென்னியில் நதியானே சிவசைலப் பதியானே

பன்னகம் அணிவோனே பதமலர் பணிவேனே.


முன் நடு முடிவு ஆனாய் - ஆதியும் நடுவும் அந்தமும் ஆனவனே; (திருவாசகம் - திருப்பள்ளியெழுச்சி - 8.20.8 - "முந்திய முதல்நடு இறுதியும் ஆனாய்");

மூள் எரி வடிவு ஆனாய் - மூளும் சோதி வடிவினனே;

உன் அடி போற்றிடுவார் ஊழ்வினை பாற்றிடுவாய் - உன் திருவடிகளைப் புகழும் பக்தர்களுடைய பழவினைகளைத் தீர்ப்பவனே; (ஊழ்வினை - பழவினை); (பாற்றுதல் - நீக்குதல்; அழித்தல்); (சுந்தரர் தேவாரம் - 7.76.1 - "வாஞ்சியத் துறையும் ஒருவனார் அடியாரை ஊழ்வினை நலியஒட்டாரே");

சென்னியில் நதியானே சிவசைலப் பதியானே - கங்காதரனே, சிவசைலத் தலத்தில் எழுந்தருளியிருப்பவனே.

பன்னகம் அணிவோனே பதமலர் பணிவேனே - பாம்பை அணிந்தவனே, உன் பாதமலரை வணங்குவேன். (பன்னகம் - பாம்பு);

குறிப்பு : இப்பாடலில் அடிகள்தோறும் 2-ஆம் 4-ஆம் சீர்களிடையே எதுகை/இயைபுத்தொடை அமைந்துள்ளது.


வி. சுப்பிரமணியன்

----------- --------------

04.50 - புத்தூர் (திருப்புத்தூர்) - நெருப்புச்சேர் கண்திகழும்

04.50 - புத்தூர் (திருப்புத்தூர்) - நெருப்புச்சேர் கண்திகழும்

2014-02-08

4.50 - புத்தூர் (திருப்புத்தூர் - பாண்டிய நாட்டுத் தலம்) (திருப்பத்தூர்)

----------------------------------

(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)

(சம்பந்தர் தேவாரம் - 2.48.1 - "கண்காட்டு நுதலானுm")

(அப்பர் தேவாரம் - 4.12.1 - "சொன்மாலை பயில்கின்ற");


1)

நெருப்புச்சேர் கண்திகழும் நெற்றியினான் ஏனத்தின்

மருப்புப்பூண் மார்புடையான் மடவார்கள் இடுபலிக்கு

விருப்புற்றோர் விடையேறி வருமீசன் மேயநகர்

திருப்புத்தூர் வணங்குமவர் தீவினைகள் தீருமன்றே.


நெருப்புச் சேர் கண் திகழும் நெற்றியினான் - நெற்றிக்கண்ணில் தீயை உடையவன்;

ஏனத்தின் மருப்புப் பூண் மார்புடையான் - மார்பில் பன்றிக்கொம்பைப் பூண்டவன்; (ஏனம் - பன்றி); (மருப்பு - கொம்பு; தந்தம்);

மடவார்கள் இடுபலிக்கு விருப்புற்று ஓர் விடையேறி வரும் ஈசன் மேய நகர்- பெண்கள் இடும் பிச்சையைப் பெற விரும்பி ஓர் இடபவாகனத்தின்மேல் வரும் ஈசன் உறையும் தலம் ஆன; (மடவார்கள் - பெண்கள்); (பலி - பிச்சை);

திருப்புத்தூர் வணங்குமவர் தீவினைகள் தீருமன்றே. - திருப்புத்தூரை வணங்குபவர்களது பாவங்கள் எல்லாம் தீரும்;


2)

தவமேசெய் மார்க்கண்டர் தம்முயிரைத் தயையின்றிக்

கவர்வேனென் றடைநமனைக் கழலாலே உதைகாலன்

சிவகாமி மணவாளன் திருப்புத்தூர்த் திருத்தளியான்

தவறாது தொழுவார்தம் பவநோய்க்குத் தனிமருந்தே.


தயை - இரக்கம்; கருணை; கவர்தல் - அகப்படுத்துதல்; நமன் - எமன் - கூற்றுவன்; திருப்புத்தூர் - தலத்தின் பெயர்; திருத்தளி - கோயிலின் பெயர்; (* இத்தலத்து இறைவன், இறைவி திருநாமங்கள் - திருத்தளிநாதர், சிவகாமி); பவநோய் - பவரோகம் - பிறவிப்பிணி; தனி - ஒப்பற்ற; மருந்து - ஔஷதம்; அமுதம்;


3)

நலந்திகழ வலைபின்னி நாள்தோறும் போற்றிசெய்த

சிலந்தியையோர் அரசாக்கும் திருப்புத்தூர்த் திருத்தளியான்

சலந்திகழும் சடையுடையான் சலமில்லாத் தன்மையினான்

வலந்திகழும் கழலுடையான் வந்திப்பார்க் கருந்துணையே.


* சிலந்தியை ஓர் அரசு ஆக்கும் - கோச்செங்கட்சோழ நாயனார் வரலாறு. சலம் - 1. நீர்; 2. வஞ்சனை; வலம் திகழும் கழல் உடையான் - 1. வலப்பக்கம் கழல் அணிந்தவன் - அர்த்தநாரீஸ்வரன்; 2. வெற்றியை உடைய வீரக்கழல் அணிந்தவன்; வந்திப்பார்க்கு - தொழுவார்களுக்கு;


4)

கனலாரும் கண்ணுதலால் காமனுடல் காய்ந்தபிரான்

மினலாரும் செஞ்சடைமேல் விரைக்கொன்றை புனையீசன்

புனலாரும் புத்தூரில் திருத்தளியான் புகழ்பாட

அனலாரும் அருவினைகள் அடியோடு கெடும்தானே.


ஆர்தல் - 1. பொருந்துதல்; 2. ஒத்தல்; 3. நிறைதல்; கனல் - நெருப்பு; கண்ணுதல் - கண்+நுதல் - நெற்றிக்கண்; மினல் ஆரும் - மின்னல் ஒக்கும்; விரைக்கொன்றை - மணம் மிக்க கொன்றைமலர்; (அப்பர் தேவாரம் - 6.76.1 - "விரைக்கொன்றைக் கண்ணியன்காண்"); அனல் - உஷ்ணம்;


5)

துடியாரும் கையுடையான் துணையாரும் இல்லாதான்

கொடியாரும் இடையாளோர் கூறாக உடையான்வெண்

பொடியாரும் மேனியினான் புத்தூரில் திருத்தளியான்

கடியாரும் கவிபாடும் அடியாருக் கருந்துணையே.


துடி ஆரும் கை உடையான் - கையில் உடுக்கினை ஏந்தியவன்; (துடி - உடுக்கு); (ஆர்தல் - 1. பொருந்துதல்; 2. ஒத்தல்; 3. நிறைதல்);

துணை ஆரும் இல்லாதான் - ஒப்பு இல்லாதவன்; (துணை - ஒப்பு);

கொடி ஆரும் இடையாள் ஓர் கூறாக உடையான் - கொடி போல் சிற்றிடை உடைய உமையை ஒரு கூறாக உடையவன்;

வெண்பொடி ஆரும் மேனியினான் - திருநீற்றை மேனிமேல் பூசியவன்;

புத்தூரில் திருத்தளியான் - திருப்புத்தூரில் திருத்தளியில் உறைகின்றவன்;

கடி ஆரும் கவி பாடும் அடியாருக்கு அரும்-துணையே - மணம் மிக்க தமிழ்ப்பாமாலைகளைப் பாடுகின்ற அடியவர்களுக்கு அரிய துணை ஆவான்; (கடி - வாசனை);


6)

உம்பரு(ம்)மான் கரமுடையாய் ஒண்மதியச் சடையானே

எம்பெருமான் என்றேத்தி இணையடியைத் தொழநின்ற

செம்பெருமான் திருப்புத்தூர்த் திருத்தளியான் சேவமரும்

நம்பெருமான் அடியாரை நலிவினைகள் நண்ணாவே.


உம்பரும், "மான் கரம் உடையாய்! ஒண்-மதியச் சடையானே! எம்பெருமான்!" என்று ஏத்தி - தேவர்கள், "மானைக் கையில் ஏந்தியவனே! ஒளிவீசும் சந்திரனைச் சூடிய சடையானே! எம்பெருமானே!" என்று போற்றி; (உம்பரும் - 1. தேவர்; உம் - அசை; 2. தேவரும்; உம் - சிறப்பும்மை);

இணையடியைத் தொழ நின்ற செம்பெருமான் - தன் இரு-திருவடிகளை வழிபாடு செய்யும்படி நின்ற செம்மேனியன்;

திருப்புத்தூர்த் திருத்தளியான் - திருப்புத்தூரில் திருத்தளியில் எழுந்தருளிய சிவபெருமான்;

சே அமரும் நம்பெருமான் அடியாரை நலி-வினைகள் நண்ணாவே - இடபவாகனனான நம் பெருமானை வழிபடும் அடியவர்களை, வருத்தும் வினைகள் நெருங்கமாட்டா; (நலித்தல் - துன்புறுத்துதல்);


7)

அந்தகனைச் சூலத்தால் அழித்தானை முப்புரங்கள்

வெந்துவிழச் சிரித்தானை விடந்திகழும் மிடற்றானைச்

செந்தழல்போல் மேனியனைத் திருப்புத்தூர்த் திருத்தளியில்

பந்துவென நின்றவனைப் பரவவினை பற்றறுமே.


அந்தகன் - அந்தகாசுரன்; பந்து - உறவு; சுற்றம்;


8)

உருமொக்கக் கத்தியுயர் பொருப்பிடந்த அரக்கனழ

மருமிக்க மலர்ப்பாத விரலூன்றும் மாதேவன்

தருமிக்குத் தமிழ்ப்பாடல் தந்தருளும் தனிப்புலவன்

இருமைக்கும் துணைபுத்தூர்த் திருத்தளியான் இணையடியே.


உரும் ஒக்கக் கத்தி, உயர்-பொருப்பு இடந்த அரக்கன் அழ - இடி போலக் கத்திக்கொண்டு, உயர்ந்த கயிலைமலையைப் பெயர்த்த அரக்கனான இராவணன் அழும்படி;

மரு மிக்க மலர்ப்பாத விரல் ஊன்றும் மாதேவன் - மணம் மிகுந்த தாமரைமலர் போன்ற திருப்பாதத்தின் விரலை ஊன்றி நசுக்கிய மகாதேவன்; (மரு - வாசனை);

தருமிக்குத் தமிழ்ப்பாடல் தந்தருளும் தனிப்புலவன் - தருமிக்குப் பாடல் ஒன்று தந்தருளிய ஒப்பற்ற புலவன்; (தனி - ஒப்பற்ற); (அப்பர் தேவாரம் - 6.76.3 - "நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கம் ஏறி நற்கனகக்கிழி தருமிக்கு அருளினோன்காண்"); (* தருமிக்குப் பாடல் தந்ததைத் திருவிளையாடற்புராணத்தில் காண்க);

இருமைக்கும் துணை புத்தூர்த் திருத்தளியான் இணையடியே - இம்மை மறுமை இரண்டிற்கும் திருப்புத்தூர்த் திருத்தளிநாதன் திருவடியே துணை; (இருமை - இம்மை, மறுமை என்ற இரண்டு);


9)

பன்றியுருக் கொண்டரியும் பறவையுருக் கொண்டயனும்

அன்றுமிக நேடவுயர் அழலானான் நிழல்மழுவன்

தென்றலிலே மணங்கமழும் திருப்புத்தூர்த் திருத்தளியில்

நின்றபரன் அடியிணையே நினையவினை நெருங்காவே.


பன்றி உருக் கொண்டு அரியும், பறவை உருக் கொண்டு அயனும், அன்று மிக நேட உயர் அழல் ஆனான் - பன்றியாகித் திருமாலும் அன்னமாகிப் பிரமனும் தேடும்படி ஓங்கிய ஜோதி ஆனவன்; (நேடுதல் - தேடுதல்);

நிழல் மழுவன் - ஒளிவீசும் மழுவை ஏந்தியவன்;


10)

சின்னநெறிச் செல்கின்றார் திருநீறு புனையாதார்

சொன்னமொழி மதியேன்மின் தொழுவார்தம் துயர்தீர்ப்பான்

முன்ன(ம்)மறை நான்கினையும் முனிவர்களுக் குரைத்தபரன்

சென்னிமிசைப் பிறையணிந்த திருப்புத்தூர்ப் பெருமானே.


சின்ன - சிறிய; இழிந்த; திருநீறு புனையாதார் - திருநீற்றை அணியாதவர்கள்; சொன்ன மொழி மதியேன்மின் - அவர்கள் சொன்ன பேச்சைப் பொருட்படுத்தாதீர்கள்; (மதியேன்மின் - நீங்கள் மதிக்கவேண்டா); முன்னம் மறை நான்கினையும் முனிவர்களுக்கு உரைத்த பரன் - தட்சிணாமூர்த்தி; சென்னிமிசைப் பிறைணிந்த - தலைமேல் சந்திரனை அணிந்த;


11)

கொண்டலெனத் திகழ்கண்டன் கொன்றையொடு கூவிளமும்

இண்டையென மதியுமணி எம்பெருமான் வானோர்கள்

தெண்டனிடும் திருப்புத்தூர்த் திருத்தளியான் சேவடியை

அண்டுமடி யாரைவினை அவலங்கள் அடையாவே.


கொண்டல் எனத் திகழ் கண்டன் - மேகம் போல் திகழும் நீலகண்டன்; (கொண்டல் - மேகம்);

கொன்றையொடு கூவிளமும், இண்டைன மதியும், ணி எம்பெருமான் - திருமுடிமேல் கொன்றைமலர், வில்வம், இண்டைமாலை போல் சந்திரன் இவற்றையெல்லாம் அணியும் எம்பெருமான்; (கூவிளம் - வில்வம்); (இண்டை - தலையில் அணியும் மாலைவகை);

வானோர்கள் தெண்டனிடும் திருப்புத்தூர்த் திருத்தளியான் - தேவர்களால் தொழப்படுகின்ற திருப்பூத்தூர்த் திருத்தளிநாதனது; (தெண்டனிடுதல் - தண்டனிடுதல் - விழுந்து வணங்குதல்);

சேவடியை அண்டும் அடியாரை வினை அவலங்கள் அடையாவே - சிவந்த திருவடியைச் சரண்புக்க அடியார்களை வினைகளும் துன்பங்களும் அடையமாட்டா; (அண்டுதல் - சரண் அடைதல்; ஆசிரயித்தல்);


வி. சுப்பிரமணியன்

----------- --------------