Sunday, July 17, 2016

03.02-91 – வான்மியூர் - (திருவான்மியூர் அந்தாதி)

03.02 – வான்மியூர் - (திருவான்மியூர் அந்தாதி)



27 January 2007 - 08 February 2007
திருவான்மியூர் அந்தாதி
-----------------------------
(வெண்பா)



91)
பிறவிப் பயன்உணராப் பேதை மனமே;
குறையா வினைக்குன்றும் குன்றும், இறையேனும்
நீவான்மி யூரை நினைத்தால், இருமைக்கும்
ஈவான்; இலையே இடர்.



பேதை மனமே - அறிவற்ற நெஞ்சமே;
இறையேனும் - சிறிதளவேனும்; (இறை - சிறிதளவு);
வினைக்குன்று - மலை அளவு உள்ள வினைகள்;
குன்றுதல் - அழிவடைதல்;
இருமைக்கும் - இம்மைக்கும் மறுமைக்கும்;
இலையே இடர் - இடர் இல்லையே; (இடர் - துன்பம்);
குறிப்பு : "இறையேனும் நீ வான்மியூரை நினைத்தால்" என்ற சொற்றொடரை இடைநிலைத் தீவகமாக இருபுறமும் இயைத்துப் பொருள்கொள்ளல் ஆம்; ("இறையேனும் நீ வான்மியூரை நினைத்தால், குறையா வினைக்குன்றும் குன்றும்" & "இறையேனும் நீ வான்மியூரை நினைத்தால், இருமைக்கும் ஈவான்");



92)
இடர்நீங்க, யான்ஒன் றியம்புவேன் நெஞ்சே;
படர்சடை மேல்நதி பாயும் கடவுளவன்
மேவும் திருவான்மி யூர்சென்று வேண்டுவினை
யாவும் ஒழியும் அகன்று.



(உரைநடை அமைப்பில்:
நெஞ்சே! இடர் நீங்க யான் ஒன்று இயம்புவேன்;
படர்சடை மேல் நதி பாயும் கடவுள்அவன் மேவும் திருவான்மியூர் சென்று வேண்டு;
வினை யாவும் அகன்று ஒழியும்.)


படர்சடை - (வினைத்தொகை) - படர்ந்த சடை;
அகலுதல் - நீங்குதல்; பிரிதல்;



93)
அகலா வினைகள் அறநெஞ்சே, வெற்பன்
மகளை இடப்பால் மகிழும் பகவான்
திருவான்மி யூர்மேய செல்வனைப் போற்றாய்;
ஒருவாதை இல்லை உனக்கு.



அகலா - நீங்காத; (அகலுதல் - நீங்குதல்; பிரிதல்);
அற - அழிவதற்கு; (அறுதல் - தீர்தல்; இல்லாமற் போதல்);


அகலா வினைகள் அற, நெஞ்சே - மனமே, நீங்காத வினைகள் எல்லாம் அழிவதற்கு;
வெற்பன் மகளை இடப்பால் மகிழும் பகவான் - மலையான் மகளான பார்வதியை இடது பக்கத்தில் ஒரு பங்காக விரும்பும் கடவுள்; (அப்பர் தேவாரம் - 5.55.1 - "வீறு தானுடை வெற்பன் மடந்தையோர் கூற னாகிலும்...");
திருவான்மியூர் மேய செல்வனைப் போற்றாய் - திருவான்மியூரில் உறையும் செல்வனைப் போற்றுவாயாக;
ஒரு வாதை இல்லை உனக்கு. - உனக்கு ஒரு துன்பமும் இல்லை;



94)
உனக்குனக்கென் றென்றும் ஒளித்துவைத்த நெஞ்சே;
உனக்கொன் றுரைப்பேன்; ஒருநாள் உனக்கும்
வருவான் நமன்அன்று வந்துதவு வார்ஆர்?
திருவான்மி யூர்இன்றே சேர்.



பதம் பிரித்து:
உனக்கு உனக்கு என்று என்றும் ஒளித்துவைத்த நெஞ்சே;
உனக்கு ஒன்று உரைப்பேன்; ஒரு நாள் உனக்கும்
வருவான் நமன்; அன்று வந்து உதவுவார் ஆர்?
திருவான்மியூர் இன்றே சேர்.


நமன் - எமன்;



95)
சேர்த்துவைத்த செல்வமுயிர் சென்ற பிறகிங்கே
ஆர்க்கென்று, நெஞ்சே, அறிவாயோ? ஆர்க்கும்
திரைசூழ்ந்த வான்மியூர்ச் செஞ்சடை அப்பன்
குரையார் கழல்பற்றிக் கொள்.



(உரைநடை அமைப்பில்:
நெஞ்சே! சேர்த்து வைத்த செல்வம், உயிர் சென்ற பிறகு, இங்கே ஆர்க்கு என்று அறிவாயோ? ஆர்க்கும் திரை சூழ்ந்த வான்மியூர்ச் செஞ்சடை அப்பன் குரை ஆர் கழல் பற்றிக்கொள்.)


ஆர்க்கு - யாருக்கு?
ஆர்க்கும் திரை சூழ்ந்த - ஒலிக்கின்ற கடல் சூழ்ந்த; (ஆர்த்தல் - ஒலித்தல்); (திரை - அலை; கடல்);
குரை ஆர் கழல் - ஒலி பொருந்திய கழல் அணிந்த திருவடியை; (குரை - ஒலி);



96)
கொள்ளைகொண்டென் நெஞ்சிற் குடிகொண்டான், சென்னிமேல்
வெள்ளம் தரித்த விமலனவன் உள்ள
திருவான்மி யூர்சென்று சேவடி ஏத்தி
இருப்பதே இன்பம் எனக்கு.



(உரைநடை அமைப்பில்:
சென்னி மேல் வெள்ளம் தரித்த விமலன், கொள்ளைகொண்டு என் நெஞ்சில் குடிகொண்டான்; அவன் உள்ள திருவான்மியூர் சென்று சேவடி ஏத்தி இருப்பதே இன்பம் எனக்கு. )


சென்னி மேல் வெள்ளம் தரித்த விமலன் - கங்காதரனான தூயவன்; (வெள்ளம் - நீர் - கங்கை); (விமலன் - மலமற்றவன்);
சேவடி - சிவந்த திருவடி;
ஏத்துதல் - துதித்தல்;
(அபப்ர் தேவாரம் - 5.42.5 - "துன்பம் இல்லை துயரில்லையாம் இனி ...... இன்பன் சேவடி ஏத்தியிருப்பதே.");



97)
எனக்கேன் அவன்மேல் எழுந்தது காதல்
எனஅறியேன்; வான்மியூர் ஈசன் மனத்தில்
நிறைந்திருக் கத்,துன்பங் கள்நில்லா தோடி
மறைந்திடும்; வாழ்வேன் மகிழ்ந்து.



(உரைநடை அமைப்பில்:
ஏன் எனக்கு அவன் மேல் காதல் எழுந்தது என அறியேன்;
மனத்தில் வான்மியூர் ஈசன் நிறைந்திருக்கத்,
துன்பங்கள் நில்லாது ஓடி மறைந்திடும்; மகிழ்ந்து வாழ்வேன்.)

இலக்கணக் குறிப்பு: துன்பங்கள் நில்லாதோடி (= துன்பங்கண்ணில்லாதோடி) - ஒற்று விரித்தல் விகாரம்.


98)
மகிழ்ந்திருக்க வேண்டில் மனமேநீ வானோர்
புகழ்ந்திடநஞ் சுண்ட பொறையன் திகழ்மதி
சேர்சடையன் மேவு திருவான்மி யூர்சென்று
பார்வதி கோனைப் பணி.



பதம் பிரித்து:
மகிழ்ந்து இருக்க வேண்டில், மனமே! நீ,
வானோர் புகழ்ந்திட நஞ்சு உண்ட பொறையன்,
திகழ் மதி சேர் சடையன் மேவு திருவான்மியூர் சென்று
பார்வதி கோனைப் பணி.


முன்னம் - முன்பு;
வானோர் புகழ்ந்திட நஞ்சு உண்ட பொறையன் - தேவர்கள் துதிக்க, ஆலகால விடத்தை உண்ட அருளாளன்; (பொறை - அருள்); (அப்பர் தேவாரம் - 6.56.9 - "பொய்யாநஞ் சுண்ட பொறையே போற்றி");
திகழ் மதி சேர் சடையன் - சடையில் பிரகாசிக்கும் சந்திரனை அணிந்தவன்;
மேவுதல் - உறைதல்;
பார்வதி கோன் - உமாபதி;



99)
பணியூரும் வேணியன் பன்றியின் கொம்பை
அணியா அணிந்த அரன்மேல் தணியா
விருப்பினால், வான்மியூர் மேயானைப் போற்றி
இருப்பதே வேலை இனி.



பணி ஊரும் வேணியன் - நாகம் ஊர்கின்ற சடையை உடையவன்; (பணி - நாகப்பாம்பு ); (வேணி - சடை);
பன்றியின் கொம்பை அணியா அணிந்த - பன்றிக்கொம்பை ஆபரணமாக அணிந்த; (அணியா - அணியாக; அணி - ஆபரணம்; அழகு);
அரன்மேல் தணியா விருப்பினால், - ஹரன் மீது கொண்ட ஆராக் காதலால்;
வான்மியூர் மேயானைப் போற்றி இருப்பதே வேலை இனி - திருவான்மியூரில் உறையும் பெருமானை இனி என்றும் போற்றுவேன்; (இனி - இப்பொழுது; இனிமேல்);



100)
இனியனே! என்றும் இருக்கும் இறையே!
புனிதனே! தேவர்கள் போற்றும் தனியனே!
மாசில் மணியே மருந்தீசா என்றவன்சீர்
பேசிலினி இல்லை பிறப்பு.



இனியன் - இனிமையானவன்;
புனிதன் - தூய்மையானவன்
தனியன் - தனியாக இருப்பவன் - ஏகன்; ஒப்பற்றவன்; ஒருவன்; (தனி - ஒப்பின்மை);
மாசு இல் மணியே - குற்றமற்ற மணி போன்றவனே;
மருந்தீசா என்று அவன் சீர் பேசில் இனி இல்லை பிறப்பு - "மருந்தீசனே" என்று சிவபெருமான் புகழைப் போற்றிப் பேசினால், பிறவித்தொடர் நீங்கும்; (சீர் - புகழ்);



அன்போடு,
வி. சுப்பிரமணியன்





No comments:

Post a Comment