Sunday, July 17, 2016

03.02-41 – வான்மியூர் - (திருவான்மியூர் அந்தாதி)

03.02 – வான்மியூர் - (திருவான்மியூர் அந்தாதி)



27 January 2007 - 08 February 2007
திருவான்மியூர் அந்தாதி
-----------------------------
(வெண்பா)



41)
பிறவி தொடர்ந்து பெறும்வினை யேனும்
பிறவிரும்பாச் சிந்தையே பெற்ற, அறவினை
செய்துதிரு வான்மியூர்த் தேவனைப்போற் றன்பரை
எய்தி இருந்தடைவேன் இன்பு.



பதம் பிரித்து:
பிறவி தொடர்ந்து பெறும் வினையேனும்,
பிற விரும்பாச் சிந்தையே பெற்ற, அறவினை
செய்து திருவான்மியூர்த் தேவனைப் போற்று அன்பரை
எய்தியிருந்து அடைவேன் இன்பு.


வினையேன் - வினைகளை உடைய நான்;
பிற விரும்பாச் சிந்தையே பெற்ற - ஈசனைத் தவிர வேறு எதனையும் விரும்பாத மனம் உடைய;
அற வினை - புண்ணியச் செயல்கள்;
எய்துதல் - அணுகுதல்; அடைதல்;
இன்பு - இன்பம்;



42)
இன்பம் தரும்பணம் என்றெண்ணி வாழ்ந்திருந்தேன்;
துன்பம் பெருகித் துயர்உற்றேன், என்பிழையால்;
இன்றுணர்ந்தேன், வான்மியூர் ஈசா, உனதடியே
என்றன் வழித்துணை என்று.



என்றன் - என் தன் - என்னுடைய;
வழித்துணை - கூட வரும் துணை;



43)
என்றோ புரிந்தவினை இங்கொரு குன்றுபோல்
நின்றாலும், நாவில் நினதுபெயர் ஒன்றே
நிலையானால் நீங்குமென்றே, வான்மியூர் நின்ற
தலைவா, பணிந்தேன்நின் தாள்.



என்றோ புரிந்த வினை இங்கு ஒரு குன்றுபோல் நின்றாலும் - பழைய வினைகள் ஒரு மலைபோல இங்கு இருந்தாலும்;
நாவில் நினது பெயர் ஒன்றே நிலை ஆனால் நீங்கும் என்றே, - நாக்கில் உன் திருநாமம் ஒன்றே எப்பொழுதும் இருக்குமானால் அவ்வினைகள் அழியும் என்று;
வான்மியூர் நின்ற தலைவா, பணிந்தேன் நின் தாள். - திருவான்மியூரில் உறையும் தலைவனே, உன் திருவடியைப் பணிந்தேன்;


(சம்பந்தர் தேவாரம் - 3.49.6 - "மந்தரம் அன பாவங்கள் மேவிய பந்தனையவர் தாமும் பகர்வரேல் சிந்தும் வல்வினை செல்வமும் மல்குமால், நந்தி நாமம் நமச்சி வாயவே.");



44)
தாளே தரும்செல்வம்; தாளே தரும்இன்பம்;
தாளே தரும்ஞானம்; சாநாளில் தாளே
வருந்துணையாய்; நெஞ்சமே, வான்மியூர் மேய
பெருந்தேவன் பாதத்தைப் பேணு.



தாள் - திருவடி;
சா நாள் - இறக்கும் நாள்; (சாம் நாள்)
பெருந்தேவன் - பெரும் தேவன் - மஹாதேவன்;
பேணுதல் - போற்றுதல்; வழிபடுதல்;


தாளே தரும் செல்வம் - ஈசன் திருவடியே செல்வம் தரும்;
தாளே தரும் இன்பம்; - ஈசன் திருவடியே இன்பம் தரும்;
தாளே தரும் ஞானம்; - ஈசன் திருவடியே ஞானத்தைத் தரும்;
சாநாளில் தாளே வரும் துணையாய்; - உடலிலிருந்து உயிர் பிரியும் தினத்தில் ஈசன் திருவடியே துணை ஆகி வரும்;
நெஞ்சே, வான்மியூர் மேய பெருந்தேவன் பாதத்தைப் பேணு - மனமே, வான்மியூரில் உறையும் மகாதேவன் திருவடியைப் போற்றுவாயாக;



45)
பேணாதார் பேச்சைப் பெரிதா நினைத்துனது
வாணாளை வீணாக்கி மாளாதே; - நாணாக
நாகமணி வான்மியூர் நாதனை, மாதொரு
பாகனை, நெஞ்சே பணி.



பேணாதார் - போற்றாதவர்; வழிபடாதவர்;
பெரிதா - பெரிதாக; (கடைக்குறையாக வந்தது);
வாணாளை - வாழ் நாளை;
மாளுதல் - இறத்தல்;
நாண் - கயிறு; அரைநாண்;
நாகம் அணி - நாகத்தை அணிகின்ற;
மாது ஒரு பாகனை - பார்வதியை ஒரு பாகமாகக் கொண்டவனை;
பணி - வணங்கு;



46)
பணியாற் கிடைக்கும் பணத்தின்மேற் கொண்ட
தணியா அவாவின் தளையாற் பணியா
திருந்தநெஞ்சே! வான்மியூர் மேவிய எந்தை
மருந்தீசன் தாள்தொழாய் வந்து.



பணியால் கிடைக்கும் பணத்தின்மேல் கொண்ட - செய்யும் வேலையால் கிடைக்கின்ற பொருள்மேல் வைத்த;
தணியா அவாவின் தளையால் பணியாது இருந்த நெஞ்சே! - அடங்காத ஆசையின் பிடியினால் ஈசனை வணங்காது உழன்ற மனமே;
வான்மியூர் மேவிய எந்தை மருந்தீசன் தாள் தொழாய் வந்து. - திருவான்மியூரில் உறையும் எம் தந்தை மருந்தீசன் திருவடியை வந்து வணங்குவாயாக;



47)
வந்திப்பார் வாயிலுள்ளான்; வஞ்சமின்றித் தாளிணையைச்
சிந்திப்பார் சிந்தையுள்ளான்; தீயுருவாய் முந்திப்பார்
எல்லாம் கடந்துநின்ற எம்மான் மருந்தீசன்
அல்லால் உறுதுணை யார்?



வந்தித்தல் - வணங்குதல்;
வஞ்சம் - பொய்;
சிந்தை - மனம்;
தீயுருவாய் - தீ உரு ஆய் - சோதி வடிவம் ஆகி;
முந்திப்பார் எல்லாம் - முந்து இப் பார் எல்லாம் - முன்பு இந்த உலகங்களை எல்லாம்;
எம்மான் - எம் தலைவன்;
மருந்தீசன் அல்லால் உறுதுணை யார் - மருந்தீசன் அன்றி வேறு யார் நமக்கு உற்றதுணை?
(திருநாவுக்கரசர் தேவாரம் - 4.37.8 - "....வந்திப்பார் வணங்கி நின்று வாழ்த்துவார் வாயின் உள்ளார் சிந்திப்பார் சிந்தை உள்ளார் திருந்துநெய்த் தான னாரே.");



48)
துணையார், உயிர்கொள்ளத் தூதர் வருங்கால்?
மணமா மலரிட்டு வாழ்த்தப் புணையாக
வந்தருள்வான் வான்மியூர் மேவு மருந்தீசன்;
அந்தநமன் வாரான் அருகு.



துணை யார், உயிர் கொள்ளத் தூதர் வரும் கால் - உயிரைக்கொள்வதற்கு எமதூதர் வரும்பொழுது யார் துணை?
மண மா மலர் இட்டு வாழ்த்த - வாசமுள்ள சிறந்த பூக்களைத் தூவி வழிபட்டால்;
புணையாக வந்தருள்வான் வான்மியூர் மேவு மருந்தீசன் - திருவான்மியூரில் உறையும் மருந்தீசன் பிறவிக்கடலைக் கடப்பிக்கும் படகாக வந்து காப்பான்; (புணை - தெப்பம்; படகு); (மேவுதல் - உறைதல்);
அந்த நமன் வாரான் அருகு அந்தக் கொடிய எமன் நெருங்கமாட்டான்;


(திருநாவுக்கரசர் தேவாரம் - 5.43.1 - கொல்லத் தான்நம னார்தமர் வந்தக்கால் இல்லத்தார் செய்யல் ஆவதுஎன் ஏழைகாள்..."):



49)
அருகிருந் தல்லல் அணுகாது காப்பான்,
உருகித் தொழுபவர்க்கா ஓடி வருகொடிய
காலனைக் காய்ந்த கழலானை வான்மியூர்ச்
சூலனை, நெஞ்சே தொழு.



அருகு இருந்து அல்லல் அணுகாது காப்பான் - துன்பம் அணுகாதபடி பக்கத்தில் இருந்து காப்பவன்;
உருகித் தொழுபவர்க்கா ஓடிவரு கொடிய காலனைக் காய்ந்த கழலானை - அன்பு மிகுந்து வழிபட்ட மார்க்கண்டேயருக்காக ஓடிவந்த கொடிய கூற்றுவனை உதைத்த திருவடி உடையவனை;
வான்மியூர்ச் சூலனை, நெஞ்சே தொழு - திருவான்மியூரில் உறையும் சூலபாணியை, மனமே, தொழுவாயாக;



50)
தொழுவார் துயரைத் துடைப்பான், கடலில்
எழுமா விடம்உண் இறைவன்; "மழுவா!
பராபரா!" என்றென்றே பாடுவரம் அன்றிப்
பிரானையான் வேண்டேன் பிற.



தொழுவார் துயரைத் துடைப்பான் - வழிபடுவோர் துயர்களை நீக்குபவன்; (துடைத்தல் - அழித்தல்; இல்லாமல் செய்தல்);
கடலில் எழு மா விடம் உண் இறைவன் - கடலில் தோன்றிய கொடிய விடத்தை உண்ட இறைவன்;
மழுவா - மழுவை உடையவனே;
பராபரா - பரம்பொருளே; மேலானவனே;
என்று என்றே பாடு வரம் அன்றிப் - என்று என்று பலவாறு போற்றிப் பாடுகின்ற வரம் ஒன்றைத் தவிர;
பிரானை யான் வேண்டேன் பிற - தலைவனான சிவபெருமானிடம் வேறு எவற்றையும் வேண்டமாட்டேன்; (பிரான் - தலைவன்); (பிற - மற்றவை);






அன்போடு,
வி. சுப்பிரமணியன்



No comments:

Post a Comment