Sunday, July 17, 2016

03.02-81 – வான்மியூர் - (திருவான்மியூர் அந்தாதி)

03.02 – வான்மியூர் - (திருவான்மியூர் அந்தாதி)



27 January 2007 - 08 February 2007
திருவான்மியூர் அந்தாதி
-----------------------------
(வெண்பா)



81)
பிறவிகள் எத்தனை பெற்றால்தான் என்ன,
உறவென எந்நாளும் உன்னைப் பெறவேண்டி
வான்மியூர் சென்று வழுத்துகிற எண்ணத்தை
நான்மறவேன் என்றருளி னால்.



(உரைநடை அமைப்பில்:
எந்நாளும் உன்னை உறவு எனப் பெற வேண்டி,
வான்மியூர் சென்று வழுத்துகிற எண்ணத்தை
நான் மறவேன் என்று அருளினால்,
பிறவிகள் எத்தனை பெற்றால்தான் என்ன?)


வழுத்துதல் - வாழ்த்துதல்; துதித்தல்;



82)
அருளினாய் நால்வேதம், அன்புருவாம் உண்மைப்
பொருளினாய்; தாளிணையைப் போற்றில் இருளினைப்
போக்கும் மருந்தீசா; போர்விடையாய்; நீயன்றோ
காக்கும் கருணைக் கடல்.



(உரைநடை அமைப்பில்:
நால்வேதம் அருளினாய்; அன்பு உரு ஆம் உண்மைப் பொருளினாய்! போர்விடையாய்! தாளிணையைப் போற்றில் இருளினைப் போக்கும் மருந்தீசா! நீ அன்றோ காக்கும் கருணைக் கடல்.)


அருளினாய் - அருள்செய்தவனே;
அன்பு உரு ஆம் - அன்பே வடிவம் ஆன;
பொருளினாய் - பொருள் ஆனவனே;
தாளிணையைப் போற்றில் இருளினைப் போக்கும் மருந்தீசா - இரு திருவடிகளை வழிபட்டால், அவ்வன்பர்களின் அறியாமையை நீக்கி அருளும் மருந்தீசனே;
போர்விடையாய் - போர் செய்யவல்ல இடபத்தை வாகனமாக உடையவனே;


83)
கடலிற் புயலிற் கலம்போல, இந்த
உடலிலுள ஐவர் உகைக்க இடருற்று
வாடுகின்றேன்; பாராய் மருந்தீசா நின்புகழைப்
பாடுமடி யேனைப் பரிந்து.



உகைத்தல் - செலுத்துதல் - To drive, as a carriage; to ride, as a horse; to row, as a boat; to discharge, as an arrow;


கடலிற் புயலிற் கலம் போல - கடலில் புயலில் அலைக்கழிப்படும் படகு போல,
இந்த உடலில் உ ஐவர் உகைக்க, இடர் உற்று வாடுகின்றேன் - இவ்வுடலில் உள்ள ஐம்புலன்கள் என்னைச் செலுத்த, வருந்துகின்றேன்;
பாராய் மருந்தீசா, நின் புகழைப் பாடும் அடியேனைப் பரிந்து - .மருந்தீசனே, உன் புகழைப் பாடும் அடியேனை அருட்கண்ணால் நோக்கி அருள்வாயாக;



84)
பரிந்துவந்தாய் வந்திக்குப், பாண்டிய நாட்டில்;
தெரிந்துகொண்டேன், பேரின்பத் தேனைச் சொரிந்தருளும்
வள்ளல்நீ என்று; மருந்தீசா, நான்விடா
துள்ளத்து வைத்தேன் உனை.



(உரைநடை:
பாண்டிய நாட்டில் வந்திக்குப் பரிந்து வந்தாய்;
பேரின்பத் தேனைச் சொரிந்து அருளும் வள்ளல் நீ என்று தெரிந்துகொண்டேன்;
மருந்தீசா! நான் விடாது உனை உள்ளத்து வைத்தேன்.)


வந்தி - திருவிளையாடற் புராணத்தில் குறிப்பிடப்பெறும் ஓர் அன்பர்; (பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடலைக் காண்க);
விடுதல் - நீங்குதல்; போக விடுதல்; பிரிதல்;
உள்ளத்து - உள்ளத்தில்;



85)
"உனையே ஒழிவின்றி உன்னும் மனம்தா"
எனவான்மி யூர்மே விறையைத் தினமும்
புகழ்பாடி நிற்பார்க்குப் பொல்லா வினையை
அகற்றி விடும்அவன் அன்பு.



பதம் பிரித்து:
"உனையே ஒழிவு இன்றி உன்னும் மனம் தா"
என வான்மியூர் மேவு இறையைத் தினமும்
புகழ்பாடி நிற்பார்தம் பொல்லா வினையை
அகற்றிவிடும் அவன் அன்பு.


உன்னுதல் - நினைத்தல்;
ஒழிவு இன்றி - இடைவிடாமல்;
வான்மியூர் மேவு இறையை - திருவான்மியூரில் உறையும் இறைவனை;
தினமும் புகழ்பாடி நிற்பார்தம் பொல்லா வினையை - புகழைப் பாடும் அடியவர்களுடைய பழைய தீவினைகளை;
அன்பு - பக்தி; கருணை;



86)
அன்பனை, மாலும் அயனும் அறியாத
என்பொனை, வெண்ணிற ஏற்றனைக் கன்மனத்தேன்
சிந்தையில் நின்ற திருவான்மி யூரனை,
வந்தனை செய்யுமென் வாய்.



கன்மனத்தேன் - கல் மனத்தேன்;


அன்பனை - அன்பின் வடிவம் ஆனவனை; அடியவர்மேல் அன்பு உடையவனை;
மாலும் அயனும் அறியாத - விஷ்ணுவும் பிரமனும் அறியாத;
என் பொனை - என் பொன்னை;
வெண்ணிற ஏற்றனை - வெள்ளை இடபத்தை வாகனமாக உடையவனை;
ல் மனத்தேன் சிந்தையில் நின்ற திருவான்மியூரனை, - கல்லைப் போன்ற மனம் உடைய என் மனத்தில் தங்கிய திருவான்மியூர் ஈசனை;
வந்தனை செய்யும் என் வாய் - என் வாய் துதிக்கும்;



87)
வாயிருந்தும் ஊமையே வாழ்த்தா மடமாந்தர்;
நீயிவரை நாடாதே நெஞ்சமே; போயிணைவாய்
நட்டமகிழ் வான்மியூர் நம்பனடி யார்குழாம்;
மட்டில்லா நன்மை வரும்.



பதம் பிரித்து:
வாய் இருந்தும் ஊமையே, வாழ்த்தா மட மாந்தர்;
நீ இவரை நாடாதே, நெஞ்சமே, போய் இணைவாய்
நட்டம் மகிழ் வான்மியூர் நம்பன் அடியார் குழாம்;
மட்டு இல்லா நன்மை வரும்.


போய் இணைவாய் - சென்று அடைவாயாக;
நட்டமகிழ் - நட்டம் மகிழ் - திருநடம் செய்து மகிழும்;
நம்பன் - விருப்பிற்குரியவன் - சிவன்;
அடியார் குழாம் - அடியவர் திருக்கூட்டம்;
மட்டில்லா - அளவில்லாத;



88)
வருமானம் எண்ணிப் பெருமானை எண்ணாய்;
ஒருநாள் உயிர்கொள் நமனும் வருவான்;
வருமுன் மனமே திருவான்மி யூரை
விருப்போ டடைந்து விடு.



வருமானம் எண்ணிப் பெருமானை எண்ணாய் - பணத்தை எண்ணுவதிலேயே ஈடுபட்டுப் பெருமானை எண்ணமாட்டாய்;
ஒரு நாள் உயிர்கொள் நமனும் வருவான் - திடீரென்று ஒரு நாள் உயிரைக்கொள்ளும் எமனும் வந்துவிடுவான்;
வருமுன் மனமே திருவான்மியூரை விருப்போடு அடைந்துவிடு - மனமே, அப்படி எமன் வருவதன் முன்னமே திருவான்மியூரை அன்போடு அடைந்துவிடு;



89)
விடுவாயோ போற்றாது? வெவ்வினைக் கட்டால்
கெடுவாயோ? என்நெஞ்சே, கேள்நீ; சுடுவினைகள்
வெந்தழிய வான்மியூர் மேயானை வேண்டுமுக்கண்
தந்தையவன் நற்றுணை தான்.



முக்கட் டந்தையவன் நற்றுணை தான். - முக்கண் தந்தைஅவன் நல் துணைதான்.

விடுவாயோ போற்றாது? - போற்றாமல் இருப்பாயோ?
வெவ்வினைக் கட்டால் கெடுவாயோ? - (அப்படி இருந்து) கொடிய வினைக்கட்டால் அழிவாயோ? (வெவ்வினை - கொடிய வினை);
என் நெஞ்சே, கேள் நீ; - என் மனமே, நீ கேட்பாயாக;
சுடுவினைகள் வெந்தழிய வான்மியூர் மேயானை வேண்டு - சுடுகின்ற வினையெல்லாம் வெந்து சாம்பலாகத் திருவான்மியூரில் உறையும் ஈசனை இறைஞ்சு;
முக்கண் தந்தையவன் நற்றுணை தான் - முக்கண்ணுடைய தந்தை நல்ல துணைவனே.



90)
தானேயாய் நின்ற தலைவன் திருவடியை
ஊனே உருகிநிதம் உள்குவாய்; வானே
பெறும்வழி வான்மியூர்ப் பெம்மான்தாள் போற்றல்;
இறுமே வினைப்பிறவி யே.



ஊழிக்காலத்தில் தன்னந்தனியாக நிற்கும் தலைவனது திருவடியைத் தினமும், இந்த உடலே உருகும்படி, எண்ணி வழிபடுவாயாக. திருவான்மியூர் பெருமானைப் போற்றுவதே வானுலகையும் பெறக்கூடிய வழி ஆகும். அது வினையால் வரும் பிறவியையும் அழிக்கும்.


நிதம் - தினமும்;
உள்குதல் - நினைத்தல்; எண்ணுதல்; ஆராய்தல்;
வான் - வானுலகம்;
இறுதல் - முடிதல்;



அன்போடு,
வி. சுப்பிரமணியன்



No comments:

Post a Comment