Sunday, July 17, 2016

03.02-71 – வான்மியூர் - (திருவான்மியூர் அந்தாதி)

03.02 – வான்மியூர் - (திருவான்மியூர் அந்தாதி)



27 January 2007 - 08 February 2007
திருவான்மியூர் அந்தாதி
-----------------------------
(வெண்பா)



71)
பிறவியே இல்லாப் பெருவாழ் வளிக்கும்,
உறவின் உறுதுணையாம் ஓதில் நறவினும்
சிந்தையில் தித்திக்கும், வான்மியூர் மேவிய
எந்தை திருவைந் தெழுத்து.



பதம் பிரித்து:
பிறவியே இல்லாப் பெருவாழ்வு அளிக்கும்;
உறவின் உறுதுணை ஆம்; ஓதில், நறவினும்
சிந்தையில் தித்திக்கும்; வான்மியூர் மேவிய
எந்தை திரு ஐந்தெழுத்து.


பிறவியே இல்லாப் பெருவாழ்வு அளிக்கும் - பிறப்பினை அறுத்துச் சிவலோக வாழ்வு தரும்;
உறவின் உறுதுணை ஆம்; - தாய் தந்தை மக்கள் சுற்றத்தார் என்றுள்ள உறவுகளைவிடச் சிறந்த துணை ஆகும்; (உறவின் - இன் - ஐந்தாம் வேற்றுமை உருபு - ஒப்புமைப் பொருளில் வந்தது);
ஓதில், நறவினும் சிந்தையில் தித்திக்கும்; - ஓதினால், ஓதுபவர் மனத்தில் தேனைவிட இனிமை பயக்கும்; (ஓதில் - ஓதினால்); (நறவு - தேன்; நறவினும் - இன் - ஐந்தாம் வேற்றுமை உருபு - ஒப்புமைப்பொருளில் வந்தது)
வான்மியூர் மேவிய எந்தை திரு ஐந்தெழுத்து - திருவான்மியூரில் உறையும் எம் தந்தையின் திருப்பெயரான 'நமச்சிவாய' என்ற திருவைந்தெழுத்து;


நறவு - தேன்;
எந்தை - எம் தந்தை;
திரு ஐந்தெழுத்து - நமசிவாய;



72)
எழுத்தஞ்சை எண்ணி இணையடி தன்னை
வழுத்து மடநெஞ்சே; வாழ்வில் விழுத்துணையாய்
வந்து புரப்பான் மருந்தீசன்; அவன்அருளால்
வெந்துவிடும் தொல்லை வினை.



வழுத்துதல் - துதித்தல் (To praise, extol);
விழுத்துணை - சிறந்த துணை;
புரப்பான் - காப்பான்; (புரத்தல் - காத்தல்);
வெந்துவிடும் - எரிந்துவிடும்; (வேதல் - எரிதல்);
தொல்லை - பழைய;



73)
தொல்லை வினையாலே துன்பம் விளையுமென்ற
சொல்லை அறிவாய்; துயர்நீங்கி எல்லை
இலாஇன்பம் எய்தமருந் தீசன் திருத்தொண்
டலால்வழி இல்லை அறி.



பதம் பிரித்து:
தொல்லை வினையாலே துன்பம் விளையும் என்ற
சொல்லை அறிவாய்; துயர் நீங்கி, எல்லை
இலா இன்பம் எய்த, மருந்தீசன் திருத்தொண்டு
அலால் வழி இல்லை அறி.


(மனமே என்ற சொல் தொக்கு நின்றது).


தொல்லை வினை - பழவினை
எல்லை இலா இன்பம் எய்த - முடிவு இல்லாத இன்பம் அடைய - பேரின்பம் பெற;
அலால் - அல்லால்;
மருந்தீசன் திருத்தொண்டு அலால் வழி இல்லை அறி - மனமே, மருந்தீசன் திருப்பணிகள் செய்வதைத் தவிர வேறு உபாயம் இல்லை என்று அறிவாயாக;


(சம்பந்தர் தேவாரம் - திருமுறை - 1.116.1 -
அவ்வினைக்கு இவ்வினை ஆம் என்று சொல்லும் அஃது அறிவீர்
உய்வினை நாடாது இருப்பதும் உந்தமக்கு ஊனமன்றே
கைவினை செய்து எம்பிரான் கழல் போற்றுதும் நாம் அடியோம்
செய்வினை வந்து எமைத் தீண்டப்பெறா திரு நீலகண்டம்.)



74)
அறியா துழன்றே அவதிப் படும்இச்
சிறியேனும் அஞ்செழுத்துச் செப்பிப் பிறியாத
வெம்பவநோய் விட்டு விலகவருள் வான்மியூர்
உம்பனே இல்லையுனக் கொப்பு.



பதம் பிரித்து:
அறியாது உழன்றே அவதிப்படும் இச்
சிறியேனும் அஞ்செழுத்துச் செப்பிப் பிறியாத
வெம்பவநோய் விட்டு விலக அருள் வான்மியூர்
உம்பனே இல்லை உனக்கு ஒப்பு.


அஞ்செழுத்துச் செப்பிப் - திருவைந்தெழுத்தைச் சொல்லி;
பிறியாத வெம்பவநோய் விட்டு விலக அருள் - நீங்குவதற்கு அரிய பிறவிப்பிணி நீங்க அருளும்; (பிறிதல் - பிரிதல் - விட்டுவிலகுதல்); (வீடுதல் - அழிதல்);
வான்மியூர் உம்பனே - திருவான்மியூர்த் தேவனே; (உம்பன் - மேலோன்; தேவன்); (அப்பர் தேவாரம் - 4.71.6 - "...ஞாலம் ஏத்தும் உம்பனை உம்பர் கோனை....")
இல்லை உனக்கு ஒப்பு - உனக்கு ஒப்பு இல்லை;



75)
ஒப்பொன் றிலாத உமைகோன் திருமுடிமேல்
அப்பும் மதியும் அணிகின்ற அப்பனொரு
கல்லையும் பூவாக் கருதுமருந் தீசனன்பிற்
கெல்லை எனவொன் றிலை.



பதம் பிரித்து:
ஒப்பு ஒன்று இலாத உமைகோன்; திருமுடிமேல்
அப்பும் மதியும் அணிகின்ற அப்பன்; ஒரு
கல்லையும் பூவாக் கருது மருந்தீசன் அன்பிற்கு
எல்லை என ஒன்று இலை.


அப்பு - நீர் - கங்கை;
கல்லையும் பூவாக் கருது - கல்லையும் பூவாக விரும்பி ஏற்ற; (சாக்கிய நாயனார் கல்லெறிந்து சிவனை வழிபட்ட வரலாற்றைப் பெரிய புராணத்தில் காண்க);
எல்லை - அளவு;
இலை - இல்லை;



76)
இலையாவ திட்டெம் இறைவனே என்று
தலையால் வணங்கினால் தாழ்வு நிலைதன்னை
மாற்றிவான் ஈவான் மருந்தீசன்; போற்றிஎன்று
கூற்றுவரு முன்நெஞ்சே கூறு.



பதம் பிரித்து:
இலையாவது இட்டு, "எம் இறைவனே" என்று
தலையால் வணங்கினால், தாழ்வு நிலை தன்னை
மாற்றி, வான் ஈவான் மருந்தீசன்; "போற்றி" என்று
கூற்று வருமுன் நெஞ்சே கூறு.


இலையாவது இட்டு - (பூ இல்லாவிடினும்) ஓர் இலையையாவது தூவி;
தாழ்வு நிலை தன்னை - தாழ்வு நிலையை;
வான் - வான் உலகம்; சிவலோக வாழ்வு;
ஈவான் - அளிப்பான்;
கூற்று - எமன்;


(சுந்தரர் தேவாரம் - திருமுறை 7.94.9 - "இலையால் அன்பால் ஏத்தும் அவர்க்கு நிலையா வாழ்வை நீத்தார்....");



77)
கூறுமை சேரும் குழகனைத், தூயவெண்
நீறுமெய் சேரும் நிமலனைத், தேறுமெய்
அன்பர் வினையை அறுக்குமருந் தீசனைத்,
துன்பமற, நெஞ்சே துதி.



(உரைநடை அமைப்பில்:
நெஞ்சே! துன்பம் அறக், கூறு உமை சேரும் குழகனைத்,
தூய வெண் நீறு மெய் சேரும் நிமலனைத்,
தேறும் மெய் அன்பர் வினையை அறுக்கும் மருந்தீசனைத் துதி.)


கூறு உமை சேரும் - பார்வதி உடலில் ஒரு பாகம் ஆன
குழகன் - இளமை உடையவன்; அழகன்;
நீறு - திருநீறு;
மெய் - உடல்;
நிமலன் - மலம் அற்றவன் - தூயன்;
தேறும் மெய் அன்பர் - அறிந்து தெளிகிற உண்மைப் பக்தர்; (தேறுதல் - தெளிதல்);
அறுத்தல் - இல்லாமல் செய்தல்; நீக்குதல்;



78)
துதிக்க நினைவாய் துயர்உறு நெஞ்சே;
மதியை, அரவை, மலரை, நதியை
அணிவான் பதிஆம் அணிவான் மியூரைப்
பணிவார் இலரே பழி.



துயர் உறு - துன்பப்படுகிற;
மதி - சந்திரன்;
அரவு - பாம்பு;
மலர் - கொன்றை முதலிய பூக்கள்;
நதி - கங்கை;
அணிவான் பதி ஆம் - அணிபவனுடைய இடம் ஆகும்;
அணி வான்மியூர் - அழகிய திருவான்மியூர்;
பணிவார் இலரே பழி - வணங்குபவர்கள் பாவம் இல்லாதவரே; (பழி - பாவம்; குற்றம்);



79)
பழியைப் பெருக்கிப் படுநரகில் வீழ்தல்
ஒழிமனமே; தீவினைகள் ஒல்லை அழியத்,
தொழுவாய் மருந்தீசன் தூமென் மலர்த்தாள்;
மழுவாளன் காப்பான் மகிழ்ந்து;



பழியைப் பெருக்கிப் படுநரகில் வீழ்தல் ஒழி மனமே; - மனமே, பாவத்தைப் பெருக்கிக் கொடிய நரகத்தில் விழுவதை ஒழிவாய்;
தீவினைகள் ஒல்லை அழியத், - பாவம் எல்லாம் சீக்கிரம் அழிவதற்கு;
தொழுவாய் மருந்தீசன் தூமென் மலர்த்தாள்; - மருந்தீசனின் தூய மென்மையான மலர் போன்ற பாதத்தைத் தொழுவாயாக;
மழுவாளன் காப்பான் மகிழ்ந்து - மழுவை ஏந்தும் சிவபெருமான் மகிழ்ந்து உன்னை காப்பான்;



80)
மகிழ்கின்றாய் பொய்யில் மயங்கியே; சென்று
புகழ்கின்றாய் அற்பரைப்; பொன்போல் திகழ்கின்ற
மேனியனை வான்மியூர் மேயவனை ஏத்தாயேல்
ஏனியம் பிப்பிறவி யே.



பதம் பிரித்து:
மகிழ்கின்றாய் பொய்யில் மயங்கியே;
சென்று புகழ்கின்றாய் அற்பரைப்;
பொன்போல் திகழ்கின்ற மேனியனை, வான்மியூர் மேயவனை ஏத்தாயேல்
ஏன் இயம்பு இப்பிறவியே.


மகிழ்தல் - விரும்புதல்; களித்தல்;
பொய் - நிலையற்றவை;
பொன்போல் திகழ்கின்ற மேனியனை - பொன்னார் மேனியனை;
வான்மியூர் மேயவனை - திருவான்மியூரில் உறையும் பெருமானை;
ஏத்தாயேல் - துதிசெய்யாவிடில்; ஏத்தாய் என்றால்; (ஏல் - If, used as an ending in a conjuctional sense, as in வந்தாயேல் - என்றால்);
ஏன் இயம்பு இப்பிறவியே = இப்பிறவி ஏன் இயம்பு - இப்பிறவியின் பயன் என்ன என்று சொல்?;



அன்போடு,
வி. சுப்பிரமணியன்



No comments:

Post a Comment