Sunday, July 17, 2016

03.02-21 – வான்மியூர் - (திருவான்மியூர் அந்தாதி)

03.02 – வான்மியூர் - (திருவான்மியூர் அந்தாதி)



27 January 2007 - 08 February 2007
திருவான்மியூர் அந்தாதி
-----------------------------
(வெண்பா)



21)
பிறவிப் பயனுணராப் பேதை மனமே!
இறந்தால் உடன்வருமோ இந்த உறவும்
பணமும்? மருந்தீசன் பாதம் பணிந்து
மணமலர் இட்டு மகிழ்.



பிறவிப்பயன் உணராப் பேதை மனமே! - பிறவியின் பயனை உணராத என் அறிவில்லா மனமே;
இறந்தால் உடன்வருமோ இந்த உறவும் பணமும்? - உயிர் போகும்பொழுது உறவுகளும் பொருளும் கூடவே வருமா?
மருந்தீசன் பாதம் பணிந்து மணமலர் இட்டு மகிழ் - மருந்தீசன் பாதத்தில் வாசமலர்களைத் தூவி வணங்கி மகிழ்வாயாக;



22)
மகிழ்ந்துரை செய்வதற்கு வாய்தந்தான்; இந்த
அகிலம் எலாம்படைத்த அண்ணல், "விகிர்தா!
திருவான்மி யூர்உறையும் தேவா"என் பார்க்குத்
தருவான் தடையின்றித் தான்.



மகிழ்ந்து உரை செய்வதற்கு - விரும்பித் துதிப்பதற்கு;
விகிர்தன் - கடவுள்; வேறுபட்ட செயலினன்;


(திருநாவுக்கரசர் தேவாரம் - 5.31.6 -
நடையை மெய்யென்று நாத்திகம் பேசாதே
படைகள் போல்வரும் பஞ்சமா பூதங்கள்
தடையொன்று இன்றியே தன்னடைந் தார்க்குஎலாம்
அடைய நின்றிடும் ஆனைக்கா அண்ணலே.)



23)
தானேயாய் நின்ற தலைவனைச் "சங்கரா!
கோனே! மருந்தீசா! கூற்றுதைபெம் மானே!"
எனவான்மி யூர்சென் றியம்பி இருப்பேன்
வினைஎல்லாம் தீர்ந்து விட.



தானே ஆய் நின்ற - ஊழிக்காலத்தில் தான் ஒருவனாக இருக்கும்;
கோனே - தலைவனே;
கூற்று உதை பெம்மானே - எமனை உதைத்த பெருமானே;
என வான்மியூர் சென்று இயம்பி இருப்பேன் வினைஎல்லாம் தீர்ந்து விட - என்று திருவான்மியூரிற் சென்று துதித்து, என் வினையெல்லாம் தீர்ந்துவிடும்படி இருப்பேன்.



24)
விடமொளிர் கண்டன், விடைஏறும் ஈசன்,
நடமிடும் நாதன், நமனார் இடர்கெடுத்துச்
சேமம் அளிக்கும் திருவான்மி யூர்அரன்
நாமம் நவிலுமென் நா!



விடம் ஒளிர் கண்டன் - ஆலகால விஷம் ஒளிர்கின்ற கழுத்தை உடையவன்;
விடை ஏறும் ஈசன் - இடபவாகனன்;
நடம் இடும் நாதன் - நடராஜன்;
நமனார் இடர் கெடுத்துச் சேமம் அளிக்கும் திருவான்மியூர் அரன் - எமபயம் தீர்த்து நலம் தருகின்ற, திருவான்மியூரில் உறைகின்ற சிவன்;
நாமம் நவிலும் என் நா - அப்பெருமான் திருப்பெயரை எனது நாச் சொல்லும்.



25)
நால்வேதம் பாடுகிற நாயகனை, நான்முகன்
மால்வேண்டித் தேடுகிற, மாதொரு பால்விளங்கும்
மாதே வனைத்திரு வான்மியூர் சென்றுதொழும்
போதே வினைஎல்லாம் போம்.



நான்முகன் மால் வேண்டித் தேடுகிற - பிரமனும் விஷ்ணுவும் முடியும் அடியும் காணவேண்டித் தேடிய;
மாது ஒரு பால் விளங்கும் மாதேவனை - பார்வதியை உடலில் ஒரு பக்கம் உடைய மகாதேவனை;
திருவான்மியூர் சென்று தொழும்போதே வினைஎல்லாம் போம் - திருவான்மியூரில் சென்று தொழுதால் வினைகளெல்லாம் உடனே நீங்கும்;



26)
போம்வழிக்கு நற்றுணைவன் பொய்யில் மருந்தீசன்
நாம்விரும்பும் இன்பங்கள் நல்குவான் தேம்விரவு
சந்தத் தமிழ்மாலை சாத்தில் மகிழலாம்
பந்தித்த பாவம் பறைந்து.



விரவுதல் - கலந்த; பொருந்துதல்;
சந்தம் - ஒலிநயம்;
சாத்துதல் - To put on, adorn -- used in reference to idols, great persons, etc.; அணிதல்;
பந்தித்தல் - பிணித்தல்; கட்டுதல்; - 1. To tie, bind, fasten, connect, confine;
பறைதல் - அழிதல்;


போம் வழிக்கு நற்றுணைவன் - செல்லும் வழிக்கு நல்ல துணைவன்;
பொய் இல் மருந்தீசன் - பொய் இல்லாத மருந்தீசன்; - மெய்ப்பொருள் ஆனவன்; (அப்பர் தேவாரம் - 5.79.7 - "பொய்யிலா அரன் புள்ளிருக்கு வேளூர் மை உலாவிய கண்டனை வாழ்த்துமே"; -- பொய்யில்லா - பொய்ம்மையில்லாத; தன்னை வேண்டியவர்க்கு அருள் வழங்குதலில் பொய்யில்லாத);
நாம் விரும்பும் இன்பங்கள் நல்குவான் - இவ்வுலக வாழ்க்கை இன்பங்களையும் அளிப்பவன்;
தேம் விரவு சந்தத் தமிழ்மாலை சாத்தில் மகிழல் ஆம், பந்தித்த பாவம் பறைந்து - இனிமை பொருந்திய சந்தம் உடைய தமிழ்ப்பாமாலைகளை அவனுக்குச் சூட்டினால், நம்மைப் பிணித்துள்ள பாவங்கள் தீர்ந்து நாம் மகிழ்தல் ஆகும்;



27)
பறையும் மறைகளும்தன் பாங்கை அறியாப்
பிறையும் அரவுமணி பெம்மான் கறைக்கண்டன்
கொன்றையணி கோன்அவனை, நெஞ்சமே, வான்மியூர்
சென்றுதொழ, உன்னைஇரந் தேன்.



பறைதல் - சொல்லுதல்;
மறை - வேதம்;
பாங்கு - இயல்பு;
பிறையும் அரவும் அணி பெம்மான் - சந்திரனையும் பாம்பையும் அணிகின்ற பெருமான்;
கறைக்கண்டன் - நீலகண்டன்;
கொன்றை அணி கோன் - கொன்றை மலர் அணிகிற அரசன்;
இரத்தல் - யாசித்தல்; வேண்டுதல்;



28)
தேன்சிந்தும் மாமலரால் சேவடி போற்றினால்,
வான்தந்து, மண்ணில் வளம்ஈவான், மான்கன்றை
ஏந்தும் மருந்தீசன்; என்நெஞ்சே, நீஇதனை
ஓர்ந்து, புகழ்நாமம் ஓது.



மா மலர் - சிறந்த பூக்கள்;
சேவடி - சிவந்த அடி;
வான் - வானுலகம்;
மண் - பூமி;
வளம் - செல்வம்;
ஓர்தல் - எண்ணுதல்; நினைத்தல்;
புகழ்நாமம் - புகழ் மிகுந்த திருப்பெயர்; புகழையும் திருப்பெயரையும்;



29)
ஓதித் தொழும்பத்தர் ஊழ்வினைதீர் உத்தமன்,
பாதிஉமைக் கீந்த பரமனுயர் சோதி,
மருந்தீசன் தாளை மறவாது, நெஞ்சே,
திருவான்மி யூர்சென்று சேர்.



பதம் பிடித்து:
ஓதித் தொழும் பத்தர் ஊழ்வினை தீர் உத்தமன்,
பாதி உமைக்கு ஈந்த பரமன், உயர் சோதி,
மருந்தீசன் தாளை மறவாது, நெஞ்சே,
திருவான்மியூர் சென்று சேர்.


பத்தர் - பக்தர்;
ஊழ்வினை - பழவினை;
உயர் சோதி - உயர்ந்த ஒளி;



30)
சேர்வாய் திருக்கூட்டம்; சேர்ந்து சிவன்நாமம்
ஓர்வாய்; திருவான்மி யூர்சென்று "நீர்பாயும்
வாசச் சடையாய்! மருந்தீசா!" என்றவன்சீர்
பேசற்கே இந்தப் பிறப்பு.



சேர்வாய் திருக்கூட்டம் - அடியார் குழாத்தை அடைவாயாக;
சேர்ந்து சிவன் நாமம் ஓர்வாய் - அடியார் குழாத்தில் சேர்ந்து, சிவபெருமான் திருநாமம் ஆகிய ஐந்தெழுத்தைத் தியானிப்பாயாக; (ஓர்தல் - நினைத்தல்);
திருவான்மியூர் சென்று - திருவான்மியூரை அடைந்து;
"நீர் பாயும் வாசச் சடையாய்! மருந்தீசா!" என்று - "கங்கை நதி உலவுகின்ற, வாசம் கமழும் சடை உடையவனே; மருந்தீசனே" என்று;
அவன் சீர் பேசற்கே இந்தப் பிறப்பு - அப்பெருமானுடைய புகழைச் சொல்லித் துதிப்பதற்கே இந்தப் பிறவி;
(குறிப்பு : இப்பாட்டின் ஈற்றுச்சீர் 'பிறவு' என்றும் இருக்கலாம். அதுவும் வெண்பா இலக்கணத்திற்குப் பொருந்திவரும். அதுவும் 'பிறவி' என்ற பொருளே. ஆனால் படிப்போர்க்குப் புரிவதற்கு எளிமை கருதிப் 'பிறப்பு' என்ற பிரயோகம்.)



அன்போடு,
வி. சுப்பிரமணியன்

No comments:

Post a Comment