Sunday, July 17, 2016

03.02-61 – வான்மியூர் - (திருவான்மியூர் அந்தாதி)

03.02 – வான்மியூர் - (திருவான்மியூர் அந்தாதி)



27 January 2007 - 08 February 2007
திருவான்மியூர் அந்தாதி
-----------------------------
(வெண்பா)



61)
பிறப்புள் மனிதப் பிறவியைப் பெற்றும்,
மறப்பாயோ நெஞ்சே, மலர்த்தாள்? சிறப்பெய்த
எண்ணில்நீ வான்மியூர் ஏத்தெந்தை இன்னருளால்
எண்ணில் பொருள்பெறுவாய் இங்கு.



(உரைநடை அமைப்பில்:
நெஞ்சே! பிறப்புள் மனிதப் பிறவியைப் பெற்றும், மலர்த்தாள் மறப்பாயோ?
நீ சிறப்பு எய்த எண்ணில் வான்மியூர் ஏத்து; எந்தை இன்அருளால்
எண் இல் பொருள் பெறுவாய் இங்கு.)


மறப்பாயோ நெஞ்சே, மலர்த்தாள் - மனமே, மலர்த்திருவடியை மறப்பாயோ;
சிறப்பு - செல்வம் / இன்பம் / மோட்சம்;
எய்த - அடைய; பெற;
எண்ணில் - எண்ணினால் - நினைத்தால்;
ஏத்து - துதி;
எந்தை - எம் தந்தை; இறைவன்;
பொருள் - செல்வம் / மோட்சம் / கடவுள்
எண் - வரையறை (bound, limit); கணக்கிடுகை (calculation, computation);
எண்ணில் பொருள் பெறுவாய் - எண் இல் பொருள் - அளவற்ற செல்வம் பெறுவாய்; அளவில்லாப் பொருளான கடவுளை அடைவாய்;
இங்கு - இவ்விடத்தில்; இந்த உலகில்;



62)
இங்கே அவன்அன்றி இன்னொரு பற்றுண்டோ?
எங்கோன் அடியவர் இன்னுயிர்கொல் வெங்காலன்
வந்தக்கால், வார்கழலால் மார்பிலுதை வான்மியூர்
எந்தையைநாச் சொல்லும் இனி.



இங்கே அவன் அன்றி இன்னொரு பற்றுண்டோ? - இங்கே சிவனைத் தவிர வேறு ஒரு புகல் உண்டோ? (பற்று - பற்றுக்கோடு - தஞ்சம்; ஆதாரம்);
எம் கோன் அடியவர் இன்னுயிர்கொல் வெங்காலன் வந்தக்கால் - எம் தலைவனுடைய பக்தரான மார்க்கண்டேயருடைய இனிய உயிரைக் கொல்லக் கொடிய காலன் வந்தபொழுது;
வார் கழலால் மார்பில் உதை - அந்த எமனுடைய மார்பில் நீண்ட கழல் அணிந்த திருவடியால் உதைத்த;
வான்மியூர் எந்தையை நாச் சொல்லும் இனி. - வான்மியூரில் உறையும் எம் தந்தையான சிவனை இனி என்றும் என் நாக்குப் போற்றும்; (இனி - இப்பொழுது; இனி மேல்);



63)
இனியன வந்தாலும் இன்னாவந் தாலும்
இனியென்னாச் சொல்லும் இறைவன் - தனியெழுத்
தஞ்சே; மருந்தீசன் அன்பர்க் கெளியனாய்
அஞ்சேல் எனல்அறிந்தேன் யான்;



பதம் பிரித்து:
இனியன வந்தாலும், இன்னா வந்தாலும்,
இனி என் நாச் சொல்லும் இறைவன் தனி எழுத்து
அஞ்சே; மருந்தீசன் அன்பர்க்கு எளியன் ஆய்,
"அஞ்சேல்" எனல் அறிந்தேன் யான்;


மருந்தீசன் அன்பர்க்கு எளியன் ஆய், "அஞ்சேல்" எனல் அறிந்தேன் யான் - திருவான்மியூரில் உறையும் மருந்தீசன், அடியவர்களுக்கு எளியவன் ஆகி, அவர்களை "அஞ்சேல்" என்று அருள்வதை நான் (பெரியோர் சொல்லக் கேட்டு) அறிந்துகொண்டேன்;
இனியன வந்தாலும் - இன்பம் தருவன வந்தாலும்;
இன்னா வந்தாலும் - துன்பம் தருவன வந்தாலும்;
இனி என் நாச் சொல்லும் - இனி என்னுடைய நாக்குச் சொல்லும்;
இறைவன் தனி எழுத்து அஞ்சே - இறைவன் திருநாமமான ஒப்பற்ற 'நமச்சிவாய' என்ற திருவைந்தெழுத்தையே;



64)
யானை சிலந்திவணங் கானைக்கா அண்ணலையெம்
மானை, அராவணங்கும் வானவர் கோனை,
வருதுயர்தீர் மாமருந்தை வான்மியூர் தன்னிற்
கருதித் தொழுதேன் கழல்.



அராவணங்கும் = அரா வணங்கும் / அரா அணங்கும்;
வணங்குதல் - 1. To worship, adore, revere, salute respectfully; வழிபடுதல்; 2. To surround, encompass; சூழ்ந்துகொள்ளுதல்;
அணங்குதல் - 3. To interlace in growing together, as bamboos; பின்னிவளர்தல்; 4. To be joined, united; பொருந்துதல்;


யானை சிலந்தி வணங்கு ஆனைக்கா அண்ணலை - யானையும் சிலந்தியும் வழிபட்ட திருவானைக்கா அண்ணலை;
எம் மானை - எம் தலைவனை;
அரா அணங்கும் வானவர் கோனை - பாம்புகள் சுற்றிப் பின்னிப் பிணைந்தவனும் தேவர்கள் தலைவனும் ஆனவனை;
வரு துயர் தீர் மா மருந்தை - வரும் துயர்களை எல்லாம் தீர்க்கும் சிறந்த அமுதை;
வான்மியூர் தன்னில் கருதித் தொழுதேன் கழல் - திருவான்மியூரில் எண்ணி, விரும்பித் திருவடியைத் தொழுதேன்;


(இப்பாடல் யானை, சிலந்தி, எனப் பிராணிகளே சிவனைத் தொழுவதைக் கண்டு மனிதனாகிய யானும் விரும்பித் தொழுதேன் என்பதைப் போல் அமைந்தது. பாடலில், சொற்களின் அமைப்பால், பாம்பும் சிவனை வணங்குவதைப் போலவும் அமைந்தது).



65)
கழல்முடி மாலயனார் காணற் கரிய
அழலுருவன்; அன்பர்க் கெளியன்; - நிழல்போல
நின்றருளும் வான்மியூர் நின்மலன் தாளிணையைச்
சென்றடைந்தால் உண்டு சிறப்பு.



கழல் முடி மால் அயனார் காணற்கு அரிய அழல் உருவன் - விஷ்ணு பிரமன் இவர்களால் திருவடியையும் திருமுடியையும் காண்பதற்கு அரிய சோதி வடிவம் கொண்டவன்;
அன்பர்க்கு எளியன் - பக்தர்க்கு எளிதில் கிடைப்பவன்;
நிழல் போல நின்று அருளும் வான்மியூர் நின்மலன் தாளிணையைச் - (அடியவர்களைப் பிரியாமல்) நிழல்போல உடன் இருந்து அருளும் திருவான்மியூர்த் தூயவனுடைய இரு திருவடிகளைச்;
சென்று அடைந்தால் உண்டு சிறப்பு - சரணடைந்தால் சிறப்பு உண்டு; (சிறப்பு - செல்வம் / இன்பம் / மோட்சம்);



66)
சிறப்பை அளிப்பான்நம் செய்வினை தீர்த்துப்
பிறப்பை அறுப்பான் பெருமான்; மறப்பின்றித்,
தேன்சொட்டும் செந்தமிழ்த் தேவாரம் பாடிநெஞ்சே,
வான்மியூர் சென்றவனை வாழ்த்து.



பதம் பிரித்து:
சிறப்பை அளிப்பான்; நம் செய்வினை தீர்த்துப்
பிறப்பை அறுப்பான் பெருமான்; மறப்பு இன்றித்,
தேன் சொட்டும் செந்தமிழ்த் தேவாரம் பாடி, நெஞ்சே,
வான்மியூர் சென்று, அவனை வாழ்த்து.


(உரைநடை அமைப்பில்:
நெஞ்சே! பெருமான் சிறப்பை அளிப்பான்; நம் செய்வினை தீர்த்துப் பிறப்பை அறுப்பான்; மறப்பின்றித், தேன்சொட்டும் செந்தமிழ்த் தேவாரம் பாடி, வான்மியூர் சென்று அவனை வாழ்த்து.)


செய் வினை - (வினைத்தொகை) - செய்த/செய்கிற/செய்யும் வினை;
மறப்பு இன்றி - மறதி இல்லாமல் - மறவாமல்;



67)
வாழ்த்த மறந்த மனமே! இனிக்காலம்
தாழ்த்தல் தகுமோ? சடலமென வீழ்த்த
நமன்வருமுன் வான்மியூர் நம்பனைப் போற்றி
நமச்சிவா யச்சொல் நவில்.



சடலம் என வீழ்த்த நமன் வருமுன் - பிணம் என்று ஆக்குவதற்குக் காலன் வருவதன் முன்னமே;
நம்பன் - சிவன்; விரும்பத் தக்கவன்; (நம்புதல் - விரும்புதல்);
நமச்சிவாயச் சொல் நவில் - நமச்சிவாய என்ற மந்திரத்தைச் சொல்வாயாக; (சொல் - 6. Incantation; மந்திரம்); (நவில்தல் - சொல்லுதல்);
(திருநாவுக்கரசர் தேவாரம் - 6.48.1 - "நல்லான்காண் ...... வேத வேள்விச் சொல்லான்காண்...." - வேத வேள்விச் சொல் - மந்திரம்);

(
குறிப்பு : நமச்சிவாய என்ற பெயர் இறுதியில் மகரம் பெற்று நமச்சிவாயம் என்று வழங்குதலும் உண்டு. -
அப்பர் தேவாரம் - 6.98.4 - "உறவாவார் உருத்திரபல் கணத்தி னோர்கள் ... சீரார் நமச்சிவா யச்சொல்ல வல்லோம் நாவால்..." - "நமச்சிவாயஞ் சொல்ல" எனவும் பாடம் ஓதுவர்;
இராமலிங்க அடிகள் - "திக்கு மாறினும் ....... நக்கன் எம்பிரான் அருள்திருப் பெயராம் நமச்சி வாயத்தை நான்மற வேனே");



68)
நவில்வதற்கு நாவுண்டு; நம்பன் புகழ்கேள்
செவியுண்டு; சேவித்து நின்று குவிக்கக்
கரமுண்டு; வான்மியூர் காணக்கண் உண்டு;
வரமொன்று வேண்டுமோ மற்று.



நவில்வதற்கு நா உண்டு - திருப்பெயரைச் சொல்ல நாக்கு உண்டு; (நவில்தல் - சொல்லுதல்);
நம்பன் புகழ் கேள் செவி உண்டு; - சிவன் புகழைக் கேட்கும் செவி உண்டு; (நம்பன் - விரும்பத் தக்கவன்);
சேவித்து நின்று குவிக்கக் கரம் உண்டு - திருமுன் வணங்கி நின்று குவிக்கக் கை உண்டு; (சேவித்தல் - வணங்குதல்; தரிசித்தல்; பணி செய்தல்);
வான்மியூர் காணக் கண் உண்டு; - வான்மியூரைத் தரிசிக்கக் கண் உண்டு;
வரம் ஒன்று வேண்டுமோ மற்று - வேறு ஒரு வரம் இன்னும் வேண்டுமோ?;


(திருநாவுக்கரசர் தேவாரம் - திருமுறை 5.90.7 - "வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும் தாழ்த்தச் சென்னியும் தந்த தலைவனைச்...");



69)
மற்றொரு மந்திரம் ஏது,நம் வல்வினைப்
பற்றறுக்க? நாள்தோறும் நாவேசொல் புற்றரவன்
வான்மியூர் மேய மருந்தீசன் கையிலொரு
மான்மறியன் பேர்மற வாது.



(உரைநடை அமைப்பில்:
நம் வல்வினைப் பற்று அறுக்க மற்றொரு மந்திரம் ஏது? நாவே!
புற்றரவன், வான்மியூர் மேய மருந்தீசன், கையில் ஒரு மான்மறியன் பேர், நாள்தோறும் மறவாது சொல்);


வல்வினைப் பற்று அறுத்தல் - கொடிய வினைக்கட்டைப் போக்குதல்;
புற்றரவன் - புற்றிலே வாழும் இயல்பை உடைய பாம்பை அணிந்தவன்;
கையில் ஒரு மான்மறியன் - கையில் ஒரு மான்கன்றை ஏந்தியவன்;
(சம்பந்தர் தேவாரம் - 3.92.1 - " மருந்துஅவை, மந்திரம் மறுமை நன்னெறிஅவை, மற்றும் எல்லாம், அரும் துயர் கெடும், அவர் நாமமே சிந்தைசெய் நன்னெஞ்சமே....");



70)
வாதுசெய்யும் நெஞ்சே, மலரடியில் தூவநறும்
போதுகொய்யாய்; வீணேநாள் போக்கினால், யாதுசெய்வாய்
வன்னமன்வந் தக்கால்; மருந்தீசா காத்தருளாய்
என்ன இலைபிறவி யே.



வாது செய்யும் நெஞ்சே, - (ஈசனை வழிபடாமல் என்னோடு) தருக்கம் செய்யும் மனமே;
மலரடியில் தூவ நறும் போது கொய்யாய் - ஈசன் மலர்த்திருவடியில் தூவுவதற்கு வாச மலர்களைக் கொய்வாயாக;
வீணே நாள் போக்கினால், யாது செய்வாய் வன் நமன் வந்தக்கால் - அப்படிச் செய்யாமல், வாளா நாள்களைப் போக்கினால், கொடிய கூற்றுவன் வந்தடையும்போது என்ன செய்வாய்?
"மருந்தீசா! காத்தருளாய்" என்ன இலை பிறவியே - "மருந்தீசனே! காத்து அருள்வாயாக" என்று தொழுதால், பிறவி இல்லை;



அன்போடு,
வி. சுப்பிரமணியன்



No comments:

Post a Comment