Sunday, July 17, 2016

03.02-31 – வான்மியூர் - (திருவான்மியூர் அந்தாதி)

03.02 – வான்மியூர் - (திருவான்மியூர் அந்தாதி)



27 January 2007 - 08 February 2007
திருவான்மியூர் அந்தாதி
-----------------------------
(வெண்பா)



31)
பிறவிகளுள் எப்பிறவி பெற்றாலும் உன்னை
மறவா மனம்வேண்டி வந்தேன் இறைவா!
அலைவீசும் வான்மியூர் ஐயா! கயிலை
மலைவாசா! தாராய் வரம்.



மறவா - மறவாத; மறத்தல் இல்லாத;
தாராய் - தருவாயாக;
(திருநாவுக்கரசர் தேவாரம் - 4.94.8 - "புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா உன்னடி என்மனத்தே வழுவாது இருக்க வரந்தர வேண்டும் ...." ):



32)
வரம்வேண்டி வந்து, மனமுருகித், தங்கள்
கரம்கூப்பும் அன்பர் களிப்பர்; அரற்றும்
அரக்கனுக்கும் அன்றருள்செய், வான்மியூர் மேவும்
இரக்கத் துருவாம் இவன்.



அரற்றும் அரக்கனுக்கும் அன்று அருள்செய் - செருக்கோடு கயிலையைத் தூக்க முயன்று, அதன் அடியில் ஈசனால் நசுக்கப்பட்டு, அதன்பின் தன் பிழையை உணர்ந்து புலம்பி அழுது தொழுத இராவணனுக்கும் அன்று அருள்செய்த;
வான்மியூர் மேவும் - திருவான்மியூரில் உறைகின்ற;
இரக்கத்து உரு ஆம் இவன் - கருணையின் வடிவு ஆனான் இப்பெருமான்;






33)
இவனெளியன் ஏத்துபத்தர்க் கேத்தாதார்க் கில்லான்
பவன்வான்மி யூரெம் பரமன், சிவனமுதா
நஞ்சினை உண்டவன்தாள் நாளும் தொழுநெஞ்சே!
எஞ்சுமோ தீவினை இங்கு?



பதம் பிரித்து:
இவன் எளியன் ஏத்து பத்தர்க்கு; ஏத்தாதார்க்கு இல்லான்;
பவன், வான்மியூர் எம் பரமன், சிவன், அமுதா
நஞ்சினை உண்டவன் தாள் நாளும் தொழு நெஞ்சே!
எஞ்சுமோ தீவினை இங்கு?


எளியன் - எளிதில் அடையப்படுபவன்;
இவன் எளியன் ஏத்து பத்தர்க்கு - துதிக்கின்ற பக்தர்களுக்கு இவன் எளியன்; (பக்தர்களால் எளிதில் அடையப்படுபவன்);
ஏத்தாதார்க்கு ல்லான் - தொழாதவர்களுக்கு அருள் இல்லாதவன்;
பவன், வான்மியூர் எம் பரமன், சிவன் - பவன் என்ற திருநாமம் உடையவன், திருவான்மியூரில் உறையும் எம் பரமன், சிவபெருமான்;
முதா நஞ்சினை உண்டவன் தாள் நாளும் தொழு நெஞ்சே - அமுதமாக விடத்தை உண்ட அப்பெருமான் திருவடியை வணங்கு மனமே;
எஞ்சுமோ தீவினை இங்கு - தீவினைகள் மிச்சமின்றி அடியோடு அழியும்;


34)
இங்குமங்கும் பாய்கிற என்மனமே! உய்வுபெறச்
"சங்கரனே! செம்பொற் சடையானே! திங்கள்
அரவுசேர் சென்னியனே! வான்மியூர் ஐயா!
பரமனே! காவாய்!"என் பாய்!



இங்கும் அங்கும் பாய்கிற என் மனமே! உய்வு பெறச் - ஓயாமல் அலைகின்ற என் மனமே! உய்வு பெறுவதற்கு;
"சங்கரனே! செம்பொற் சடையானே! - "சங்கரனே; செம்பொன் போன்ற சடையை உடையவனே;
திங்கள் அரவு சேர் சென்னியனே! - சந்திரனும் பாம்பும் சேர்கின்ற திருமுடி உடையவனே;
வான்மியூர் ஐயா! - திருவான்மியூரில் உறையும் தலைவனே;
பரமனே! காவாய்!" என்பாய்! - பரமனே; காத்தருளாய்" என்று சொல்லித் தொழுவாயாக;



35)
என்பே அணியாம் இறைவனை, ஈடிலா
அன்பே வடிவான ஐயனை, முன்பே
இருந்தவனை, வான்மியூர் எந்தையை, எல்லாம்
தருந்தருவைச் சொல்நாவே சற்று.



என்பு - எலும்பு;
அணி - ஆபரணம்;
ஈடு இலா - ஒப்பு இல்லாத
முன்பே இருந்தவன் - ஆதி; இப்பிரபஞ்சம் தோன்றுவதற்கும் முன்பே, எல்லாருக்கும் முன்னரே இருந்தவன்;
எந்தை - எம் தந்தை;
எல்லாம் தரும் தரு - கற்பக மரம்;
சொல் நாவே சற்று - என் நாக்கே, அப்பெருமான் புகழைச் சிறிதளவேனும் சொல்வாயாக; (சற்று - சிறிது; கொஞ்சம்);



36)
சற்றே நினைநெஞ்சே; சாநாள் அறிவாயோ?
இற்றையே சேவடியை எண்ணிஇரு; புற்றரவக்
கச்சணியும் வான்மியூர்க் கண்ணுதலான் தன்னடியார்
அச்சம் அகற்றும் அரண்.



சா நாள் - சாம் நாள் - இறக்கும் தினம்;
இற்றை - இன்று;
புற்று அரவக் கச்சு அணியும் - புற்றில் வாழும் தன்மை உடைய பாம்பை இடுப்பில் கச்சாக அணிகின்ற;
கண்ணுதலான் - கண் நுதலான் - நெற்றிக் கண்ணன்;
தன் அடியார் அச்சம் அகற்றும் அரண் - அப்பெருமான் தன் பக்தர்களுக்குப் பாதுகாவல் ஆகி அச்சத்தைத் தீர்ப்பான்; (அரண் - கோட்டை; மதில்; கவசம்);
(சம்பந்தர் தேவாரம் - 2.41.3 - "நீநாளும் நன்னெஞ்சே நினைகண்டாய் ஆரறிவார் சாநாளும் வாழ்நாளும்...");



37)
அரண்மூன்றைத் தீயெழ அம்பொன்றால் எய்த
அரன்மலையை ஆணவத்தால் ஆட்டும் அரக்கனை
வாதைபட அன்றடர்த்த வான்மியூர் ஈசனை,
மாதைஇடம் வைத்தானை வாழ்த்து!



அரண் மூன்றைத் தீழ அம்பு ஒன்றால் எய்த அரன் - முப்புரங்களிலும் தீ எழும்படி ஒரு கணையால் எய்த ஹரன்; (அரண் மூன்று - திரிபுரங்கள்); (அரன் - ஹரன்);
அரன் மலையை ஆணவத்தால் ஆட்டும் அரக்கனை வாதைபட அன்று அடர்த்த வான்மியூர் ஈசனை - ஹரன் உறையும் கயிலைமலையை அகந்தையால் பேர்த்து எறிய முயன்ற இராவணன் மிகவும் துன்புறும்படி அந்த அரக்கனை நசுக்கிய வான்மியூர்ப் பெருமானை; (அரக்கன் - இராவணன்); (வாதை - துன்பம்); (அடர்த்தல் - நசுக்குதல்);
மாதைஇடம் வைத்தானை வாழ்த்து - உமாதேவியை இடப்பாகமாக உடைய பெருமானை வாழ்த்துவாயாக; (மாது - பெண்; பார்வதி); (இடம் - இடப்பக்கம்);



38)
வாழ்த்துமட நெஞ்சே; மருந்தீசன் முன்சிரம்
தாழ்த்திப் பணிபத்தர், தம்வினையை வீழ்த்தலாம்
அப்பன் அருளால், அடையலாம் இன்பமே
எப்பொழுதும்; துன்பம் இலை;



வாழ்த்து மட நெஞ்சே; மருந்தீசன் - பேதை மனமே, மருந்தீசனை வாழ்த்துவாயாக;
மருந்தீசன்முன் சிரம் தாழ்த்திப் பணிபத்தர், தம்வினையை வீழ்த்தலாம் அப்பன் அருளால், - மருந்தீசன் முன் தலைவணங்கும் பக்தர்கள் தங்கள் வினைகளை அழிக்கலாம், நம் தந்தையாகிய அப்பெருமான் அருளால்;
அப்பன் அருளால் அடையலாம் இன்பமே எப்பொழுதும் - நம் தந்தையாகிய அப்பெருமான் அருளால் எப்பொழுதும் இன்பமே பெறல் ஆகும்;
எப்பொழுதும் துன்பம் இலை - ஒருநாளும் துன்பம் இல்லை;
இலக்கணக் குறிப்பு - இடைநிலைத்தீவகம் - இப்பாட்டில் சில சொற்கள் இடைநிலைத்தீவகமாகி முன்னும் பின்னும் உள்ள சொற்றொடர்களோடு இயைத்துப் பொருள்கொள்ளுமாறு அமைந்தன);
(திருநாவுக்கரசர் தேவாரம் - 6.98.1 - "நாமார்க்கும் குடிஅல்லோம் நமனை அஞ்சோம் .... இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை....");



39)
இலையோ மலரோ எதுவுமன்போ டிட்டால்
மலைபோல் துயர்களும் மங்கும்; அலைசேர்
திருவான்மி யூருறை செல்வன் அவர்க்குத்
தருவான் வரமெல்லாம் தான்.



இலையோ மலரோ எதுவும் அன்போடு இட்டால் - இலையோ மலரோ எதுவாயினும் அதனை அன்போடு தூவி வழிபட்டால்;
மலைபோல் துயர்களும் ங்கும் - சிவன் அருளால், மலை போன்ற துன்பங்களும் அழியும்; (மங்குதல் - கெடுதல்; சாதல்);
அலைசேர் திருவான்மியூர் உறை செல்வன் - கடலோரத்தில் உள்ள திருவான்மியூரில் உறையும் செல்வனான சிவபெருமான்;
அவர்க்குத் தருவான் வரம் எல்லாம் தான் - அவ்வடியார்களுக்கு எல்லா வரங்களையும் வழங்கி அருள்வான்; (தான் - A word used as intensive - தேற்றச்சொல்);
(சுந்தரர் தேவாரம்: திருமுறை 7.94.9 - "இலையால் அன்பால் ஏத்தும் அவர்க்கு நிலையா வாழ்வை நீத்தார்..." - "இலை" என்றது அதனைத் தூவுதலைக் குறித்தது. "இலையால்" என்றவிடத்து, `ஆயினும்' என்பது எஞ்சி நின்றது);



40)
எல்லாம்தான் ஆனானுக் கெங்கும் உளானுக்கன்
பில்லார் பிறவியெடுத் தெய்த்தாரே; "வில்லால்
அரண்எய்த வான்மியூர் ஐயா!கா" என்பார்க்
கிரங்கிஅறுப் பான்பிறவி யே.



பதம் பிரித்து:
எல்லாம் தான் ஆனானுக்கு, எங்கும் உளானுக்கு, அன்பு
இல்லார் பிறவி எடுத்து எய்த்தாரே; "வில்லால்
அரண் எய்த வான்மியூர் ஐயா! கா" என்பார்க்கு
இரங்கி அறுப்பான் பிறவியே.


எல்லாம் தான் ஆனானுக்கு - எல்லாமும் ஆனவனுக்கு;
எங்கும் உளானுக்கு - எங்கும் இருப்பவனுக்கு;
அன்பு இல்லார் பிறவிடுத்து எய்த்தாரே; - அன்பு இல்லாதவர்கள், எண்ணற்ற பிறவிகள் எய்தி வருந்தினார்களே; (எய்த்தல் - இளைத்தல்; வருந்துதல்);
"வில்லால் அரண் எய்த வான்மியூர் ஐயா! கா" என்பார்க்கு இரங்கி அறுப்பான் பிறவியே - :வில்லால் முப்புரங்களை எய்த திருவான்மியூர்ப் பெருமானே; காத்தருளாய்" என்று தொழும் அடியவர்களுக்குப் பரிந்து அவர்கள் பிறவிநோயை அவன் தீர்ப்பான்; (அரண் - கோட்டை - முப்புரங்கள்); (கா - காப்பாற்று);



அன்போடு,
வி. சுப்பிரமணியன்



No comments:

Post a Comment