Sunday, July 17, 2016

03.02-01 – வான்மியூர் - (திருவான்மியூர் அந்தாதி)

03.02 – வான்மியூர் - (திருவான்மியூர் அந்தாதி)



முற்குறிப்பு:
இப்பாடல்கள் 1 முதல் 100 வரை அந்தாதித் தொடராக அமைந்து மண்டலித்து வந்தாலும், 1-10, 11-20, 21-30, 31-40, 41-50, 51-60, 61-70. 71-80, 81-90, 91-100 என்று பத்துப் பத்துப் பாடல்களாகத் தனித்தனியாகவும் அந்தாதியாக மண்டலித்து அமைந்துள்ளன.



27 January 2007 - 08 February 2007
திருவான்மியூர் அந்தாதி
-----------------------------
(வெண்பா)



1)
பிறவியெனும் நோய்க்குப் பெரிய மருந்தை,
மறைபலவும் போற்றும் மருந்தைக், கறைமிடறும்
வான்பிறையும் காட்டுகிற வான்மியூர் நன்மருந்தை
யான்பணி கின்றேன்பா யாத்து!



பெரிய - சிறந்த;
மருந்து - ஔஷதம் (medicine); அமிர்தம்;
மறை - வேதம்;
கறை மிடறு - நீல கண்டம்; (மிடறு - கழுத்து);
வான்பிறை - அழகிய பிறைச்சந்திரன்; (வான் - அழகு; ஆகாயம்);
பா - பாட்டு; செய்யுள்;
யாத்தல் - 4. To compose, as a poem; செய்யுள் முதலியன அமைத்தல்; 5. To tell, utter; சொல்லுதல்;


சம்பந்தர் தேவாரம் - 1.110.1 - "மருந்தவன் வானவர் தானவர்க்கும் பெருந்தகை பிறவினொ டிறவுமானான்...");
திருமந்திரம் - 10.6.2.15 - "மந்திரம் ஆவதும் மாமருந் தாவதும் ... எந்தை பிரான்றன் இணையடி தானே");



2)
யாப்பில் அடங்குமோ ஐயா உனதுபுகழ்?
"மூப்பில் முதல்வா! விடமுண்டு காப்பவனே!
சென்னிமேல் திங்களணி வான்மியூர்த் தேவனே!
என்னிறையே!" என்றிருப்பேன் இங்கு.



யாப்பு - செய்யுள்;
ஐயன் - தலைவன்;
மூப்பில் - மூப்பு + இல் = முதுமை இல்லாத - என்றும் இளமையோடு திகழும்;
முதல்வன் - அனைத்துக்கும் முன் இருந்தவன்; முதன்மையானவன்;
சென்னி - தலை;
திங்கள் - சந்திரன்;
என் இறையே - என் இறைவனே;
இங்கு - இவ்விடம்;


3)
இங்குமங்கும் தேடி இருவர் இளைத்தஅவ்
வங்கமலி வான்மியூர் வள்ளலுமை பங்கன்
மலரடியை வாழ்த்தி மகிழுமே என்நா;
விலகுமே என்தீ வினை.



பதம் பிரித்து:
இங்கும் அங்கும் தேடி இருவர் இளைத்த, அவ்
வங்கம் மலி வான்மியூர் வள்ளல் உமைபங்கன்
மலர் அடியை வாழ்த்தி மகிழுமே என் நா;
விலகுமே என் தீ வினை.


இங்கும் அங்கும் - மண்ணிலும் விண்ணிலும்;
இருவர் - அரி, பிரமன்;
இளைத்தல் - சோர்தல்;
வங்க மலி - வங்கம் மலிகின்ற - அலை மிகுந்த; படகுகள் நிறைந்த; (வங்கம் - அலை; கப்பல்); (மலிதல் - மிகுதல்; நிறைதல்);
உமைபங்கன் - சிவன்;



4)
வினையே பெருக்க விரும்பும் எனது
மனமே!நீ வான்மியூர் வாழ்த்து தினமே!
கனவாக மாறும் கவலைகள்; சேரும்
தனமும் தடையின்றித் தான்;



கனவாக மாறும் கவலைகள் - கவலைகள் எல்லாம் கனவு போல் மறைந்துவிடும்;



5)
தான்தோன்றி அப்பன், சடையினில் நீரோடு
வான்தோன்றும் திங்களணி மாதேவன், வான்மியூர்ச்
சங்கரன் தாமரைத் தாளிணையைப் போற்றுநெஞ்சே!
இங்கிருக்க லாமே இனிது.



தான்தோன்றி - தானே உருவானவன் (இறைவன்);
வான்தோன்றும் = வானில் தோன்றுகிற;
திங்கள் அணி மாதேவன் - நிலவைச் சூடுகிற மகாதேவன்;
தாமரைத் தாள் இணை = தாமரை போன்ற இரு திருவடிகள்;



6)
இனிதே இருக்கநீ எண்ணினால், நெஞ்சே,
"பனிமா மலையாய்! பரமா! முனிவர்
வணங்கித் துதிக்கின்ற வான்மியூர் ஈசா!
அணங்கிணைஐ யாவென் றரற்று.



பனி மா மலையாய் = கயிலை மலையானே;
அணங்கு இணை ஐயா என்று அரற்று - "உடலில் இடப்பக்கம் பார்வதி இணைந்துள்ள தலைவனே" என்று பன்முறை சொல்லித் துதி;;



7)
அரற்றி அடிதொழும் அன்பர் வினையைத்
துரத்தித், துயரைத் துடைத்து, வரத்தை
அளிப்பானே வான்மியூர் ஐயன்; மனமே,
களிப்பே பெறத்தாள் கருது.



துடைத்தல் - அழித்தல்;
ஐயன் - தலைவன்;
களிப்பு - மகிழ்ச்சி;
தாள் கருது - திருவடியை விரும்பி எண்ணுவாயாக; (கருது - சிந்தி; எண்ணு; விரும்பு);



8)
கருதிக் கழல்போற்றிக் கைகூப்பும் பத்தர்
அருவினை நீக்கி அருளும், சுருதிகள்
பாடுமருந் தீசன்தாள் பற்றினால் இங்கொரு
கேடுவரு மோ?நெஞ்சே கேள்.



கருது - சிந்தி; எண்ணு; விரும்பு;
கழல் போற்றுதல் - திருவடியை வணங்குதல்;
பத்தர் - பக்தர்;
அருவினை - அரிய வினை - நுகர்ந்தால் அன்றித் தீர்தற்கு அரிய பிராரப்த வினை;
அருவினை நீக்கி அருளும் - அரிய வினையைத் தீர்த்து அருள்கின்ற;
சுருதிகள் பாடு - வேதங்கள் புகழ்ந்து பாடுகின்ற / வேதங்களைப் பாடி அருளிய;
மருந்தீசன் தாள் பற்றினால் - மருந்தீசன் திருவடியைப் பற்றிக்கொண்டால்;
நெஞ்சே கேள் - (என்) மனமே, (நான் சொல்வதைக்) கேட்பாயாக.



9)
கேளுனது தீவினை கெட்டுநெஞ்சே இன்பமே
நாளும் பெறலாம்; நமையெல்லாம் ஆளும்
திருவான்மி யூர்அரன் சேவடிசிந் திக்கப்
பெருவாழ் வளிப்பான் பிரான்;



பதம் பிரித்து:
கேள்! உனது தீ வினை கெட்டு, நெஞ்சே, இன்பமே
நாளும் பெறலாம்; நமை எல்லாம் ஆளும்
திருவான்மியூர் அரன் சேவடி சிந்திக்கப்,
பெருவாழ்வு அளிப்பான் பிரான்;


கெடுதல் - அழிதல்;
நாளும் - என்றும்; தினந்தோறும்;
நமை எல்லாம் - நம்மை எல்லாம்;
ஆளும் - ஆள்கிற;
சேவடி - சிவந்த அடி;
பெருவாழ்வு - பெரும் பாக்கியம்; பேரின்பம்;


10)
பிரான்மேல் உளத்தில் பெரும்பித்துக் கொண்டே,
இராப்பகல் எல்லாம் "இறைவா! அராப்பூணும்
வேதியனே! வான்மியூர் மேவரனே" என்பவர்க்
கேதினி ஓர்பிறவி யே.



பதம் பிரித்து:
பிரான்மேல் உளத்தில் பெரும் பித்துக்கொண்டே,
இராப்பகல் எல்லாம் "இறைவா! அராப் பூணும்
வேதியனே! வான்மியூர் மேவு அரனே" என்பவர்க்கு
ஏது இனி ஓர் பிறவியே.


பிரான் - தலைவன்;
உளம் - உள்ளம்;
பித்து - மிகுந்த அன்பு; பைத்தியம்;
அராப் பூணும் - பாம்பை அணிகின்ற;
வேதியன் - சிவன்; (வேதம் ஓதுபவன்; வேதித்தல் செய்பவன்);
மேவுதல் - அமர்தல்; உறைதல்;
ஏது இனி ஓர் பிறவியே - இனி ஓர் பிறவி ஏது - பிறவி இல்லை;



அன்போடு,

வி. சுப்பிரமணியன்

No comments:

Post a Comment