Sunday, July 17, 2016

03.02-11 – வான்மியூர் - (திருவான்மியூர் அந்தாதி)

03.02 – வான்மியூர் - (திருவான்மியூர் அந்தாதி)



27 January 2007 - 08 February 2007
திருவான்மியூர் அந்தாதி
-----------------------------
(வெண்பா)



11)
பிறவி அறுக்கின்ற பெம்மானைப் போற்ற
மறந்தநெஞ்சே! வான்மியூர் மேவும் இறையை
இறையே தொழுதாலும் ஈட்டிய பாவம்
அறவே விடுமே அறி.



பிறவி அறுக்கின்ற பெம்மானைப் போற்ற மறந்த நெஞ்சே - பிறவிப்பிணியைத் தீர்க்கின்ற பெருமானைத் துதிக்க மறந்த என் மனமே;
வான்மியூர் மேவும் இறையை இறையே தொழுதாலும் - திருவான்மியூரில் உறையும் இறைவனைச் சிறிதளவேனும் வழிபட்டால்; (இறை - 1. இறைவன்; 2. சிறிது அளவு;)
ஈட்டிய பாவம் அறவே விடுமே அறி - நாம் செய்து சேர்த்த பாவங்கள் எல்லாம் முழுமையாக நீங்கும் என்று உணர்வாயாக; (அறவே - முற்றிலும்);


(அப்பர் தேவாரம் - 6.53.9 -
முத்தனைய முகிழ்முறுவ லுடையார் போலும்
... மொய்பவளக் கொடியனைய சடையார் போலும்
எத்தனையும் பத்திசெய்வார்க் கினியார் போலும்)


12)
அறிதற் கரிதாகி அன்றுயர்ந்த சோதி,
அறிவின் வடிவன், அணுவிற் சிறியன்,
மழுவேந்து வான்மியூர் மாதேவன் தாளை
வழுத்தியே செல்லுமென் வாழ்வு.



பதம் பிரித்து:
அறிதற்கு அரிதாகி அன்று உயர்ந்த சோதி,
அறிவின் வடிவன், அணுவின் சிறியன்,
மழு ஏந்து வான்மியூர் மாதேவன் தாளை
வழுத்தியே செல்லும் என் வாழ்வு.


அறிதற்கு அரிதாகி அன்று உயர்ந்த சோதி, - பிரமனுக்கும் விஷ்ணுவுக்கும் அரிய ஜோதி;
அறிவின் வடிவன் - சித் ஸ்வரூபி;
அணுவின் சிறியன் - அணுவை விட நுண்மை ஆனவன்;
வழுத்துதல் - வாழ்த்துதல்; துதித்தல்;



13)
வாழ்வினிற் சாவு வரும்நாள் அறிவாரார்?
தாழ்வினைப் போக்கிடும் தந்திரம், ஊழ்வினை
மாயஒரு மந்திரம், வான்மியூர் ஈசனை
நேயமிக இன்றே நினை.



வாழ்வினில் சாவு வரும் நாள் அறிவார் ஆர் - இறக்கப்போகும் தினத்தை எவர் அறிவார்?
தந்திரம் - உபாயம்; வழி;
ஊழ்வினை - முன் செய்த வினை;
மாய - அழிய;
நேயம் - அன்பு; பக்தி;



14)
நினைவார் வினைகளை நீறாக்கும் தேவன்
தனைவார் சடையில் மதியம் புனைவானை,
மான்மறி ஏந்திய மங்கை மணாளனை,
வான்மியூர் ஈசனை வாழ்த்து.



நினைவார் வினைகளை நீறு ஆக்கும் தேவன் தனை - நினைக்கும் அடியவர்களின் வினைகளைச் சாம்பல் ஆக்கும் தேவனை;
வார் சடையில் மதியம் புனைவானை - நீண்ட சடையில் திங்களை அணிந்தவனை;
மான்மறி ஏந்திய மங்கை மணாளனை - கையில் மான்கன்றை ஏந்தியவனை, உமைக்குக் கணவனை;
வான்மியூர் ஈசனை வாழ்த்து - திருவான்மியூரில் உறையும் ஈசனை வாழ்த்துவாயாக;



15)
வாழ்த்தி வணங்குகிற மார்க்கண்டர்க் காநமனை
வீழ்த்தினான் தாளை விரும்பிநெஞ்சே தாழ்த்துவாய்
சென்னியை; எந்தை திருவான்மி யூர்அரனை
உன்னினால் என்றும் உயர்வு.



மார்க்கண்டர்க்கா - மார்க்கண்டேயருக்காக;
உன்னுதல் - நினைத்தல்;


வாழ்த்தி வணங்குகிற மார்க்கண்டர்க்காமனை வீழ்த்தினான் தாளை விரும்பி நெஞ்சே, தாழ்த்துவாய் சென்னியை - வழிபட்ட மார்கண்டயரைக் காப்பதற்காகக் காலனை உதைத்த பெருமான் திருவடியை விரும்பி, மனமே, தலைவணங்குவாய்;
எந்தை திருவான்மியூர் அரனை உன்னினால் என்றும் உயர்வு - எம் தந்தையாகிய திருவான்மியூர் ஹரனை நினைத்தால், என்றும் உயர்வே கிட்டும்;



16)
உயர்ந்து வளர்ந்த ஒளியானைக் காணா
தயர்ந்தார் அயன்மால்; அவனை நயந்து,
"கழுத்திற் கறைசேர் மருந்தீசா கா"வென்று
வழுத்த மறவாதென் வாய்.



பதம் பிரித்து:
உயர்ந்து வளர்ந்த ஒளியானைக் காணாது
அயர்ந்தார் அயன்மால்; அவனை நயந்து,
"கழுத்தில் கறை சேர் மருந்தீசா கா" என்று
வழுத்த மறவாது என் வாய்.



உயர்ந்து வளர்ந்த ஒளியானைக் காணாது - எல்லையின்றி ஓங்கிய ஜோதியின் அடிமுடியைக் காணமாட்டாமல்;
அயர்ந்தார் அயன் மால்- பிரமனும் திருமாலும் சோர்வுற்றனர்;
நயத்தல் - விரும்புதல்;
கா - காப்பாயாக;
வழுத்துதல் - வாழ்த்துதல்; துதித்தல்;



17)
வாய்மொழியும் அஞ்செழுத்தை; மாதேவன் கோயிலுக்குப்
போய்வலம் செய்யும்கால்; பொன்னடியை ஆய்வதற்கே
சிந்திக்கும் நெஞ்சு; திருவான்மி யூர்உறை
எந்தைசெய் விந்தை இது.



ஆய்தல் - ஆராய்தல்;
எந்தை - எம் தந்தை;
விந்தை - ஆச்சரியம்;


(சம்பந்தர் தேவாரம் - 2.40.3 -
நன்னெஞ்சே உனைஇரந்தேன் நம்பெருமான் திருவடியே
உன்னம்செய்(து) இருகண்டாய் உய்வுஅதனை வேண்டுதியேல்
அன்னம்சேர் பிரமபுரத்து ஆரமுதை எப்போதும்
பன்னம்சீர் வாய்அதுவே பார்கண்ணே பரிந்திடவே.)



18)
இதுவுமவன் ஆடல் எனவுணர்ந்தேன் முன்னர்
எதுவுமென் செய்கையென எண்ணல் மதுரமொழி
மாலைபுனைந் தின்று மருந்தீசன் தாள்பணிந்தேன்,
மேலை வினைபோக்க வே.



பதம் பிரித்து:
இதுவும் அவன் ஆடல் என உணர்ந்தேன், முன்னர்
எதுவும் என் செய்கை என எண்ணல்; மதுரமொழி
மாலை புனைந்து இன்று மருந்தீசன் தாள் பணிந்தேன்,
மேலைவினை போக்கவே.


எண்ணல் - எண்ணுதல்; சிந்தித்தல்;


முன்பு, எல்லாம் என் செயல் என்று எண்ணியது - இதுவும் அவன் விளையாட்டு என்று உணர்ந்தேன்; என் பழவினைகள் தீர்வதற்கு, இனிய தமிழ்ப் பாமாலைகள் தொடுத்து மருந்தீசன் திருவடியை வணங்கினேன்;



19)
போக்குவான் தன்னடி போற்றுவார் தீவினையைத்;
தாக்குமோர் ஐவர் சரமாரி நீக்குவான்;
வானிற் புரம்எரித்த வான்மியூர் ஈசனவர்
ஊனில் உறைவான் உவந்து.



உரைநடை:
வானில் புரம் எரித்த வான்மியூர் ஈசன், தன் அடி போற்றுவார் தீவினையைப் போக்குவான்;
தாக்கும் ஓர் ஐவர் சர மாரி நீக்குவான்; அவர் ஊனில் உறைவான் உவந்து.


தாக்கும் ஓர் ஐவர் - தாக்கும் ஐம்புலன்கள்;
சர மாரி - அம்பு மழை;
ஊன் - உடல்;
உவத்தல் - மகிழ்தல்;



20)
உவந்தடி போற்றிடும் உத்தமரை நாடா
தவத்தில் மகிழ்நெஞ்சே; ஆகும் தவம்அதுவே;
தென்றிரு வான்மியூர் சென்றரன் தாள்போற்றி
என்றிடப் போம்பிறவி யே.



பதம் பிரித்து:
உவந்து அடி போற்றிடும் உத்தமரை நாடாது,
அவத்தில் மகிழ் நெஞ்சே; ஆகும் தவம்அதுவே;
தென் திருவான்மியூர் சென்று, "அரன் தாள் போற்றி"
என்றிடப் போம் பிறவியே.


உவந்து அடி போற்றிடும் உத்தமரை நாடாது, - மகிழ்ந்து திருவடியை வணங்குகிற சிறந்த அடியார் குழாத்தை அடையாமல்;
அவத்தில் மகிழ் நெஞ்சே - பயனற்றவற்றில் களிக்கின்ற மனமே; (அவம் - கேடு; பயனின்மை);
ஆகும் தவம் அதுவே - அடியார் குழாத்தை அடைவதே தவம் ஆகும்; (ஏ என்பதை வினா ஏகாரமாகக் கொண்டு "அதுவா தவம் ஆகும்?" என்றும் பொருள்கொள்ளல் ஆம்);
தென் திரு வான்மியூர் சென்று - அழகிய / இனிய திருவான்மியூருக்குப் போய்;
"அரன் தாள் போற்றி" என்றிடப் போம் பிறவியே - "சிவபெருமான் திருவடி போற்றி" என்றால், நம் பிறவிப்பிணி நீங்கும்;

அன்போடு,
வி. சுப்பிரமணியன்



No comments:

Post a Comment