Friday, September 27, 2019

P.244 - பிரமபுரம் (காழி) - கட்டுண்டு கலங்கி

2014-08-16

P.244 - பிரமபுரம் (காழி)

-----------------------

(அறுசீர்ச் சந்தவிருத்தம் - தானாதன தானன தானதனா - அரையடி);

(எண்சீர்ச் சந்தவிருத்தம் என்றும் கருதலாம் - தானா தனனா தனனா தனனா - அரையடி);

(அப்பர் தேவாரம் - 4.1.1 - "கூற்றாயின வாறு விலக்ககிலீர்");


முற்குறிப்புகள்:

* படிப்போர் வசதி கருதிச் சில இடங்களில் சொல் சிதையாதபடி சீர் பிரித்துக் காட்டியிருந்தாலும் சந்தம் கெடாமையை உணர்க.

* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;


1)

கட்டுண்டு கலங்கி வருந்தடியேன் .. கவலைத்தொடர் நீங்க அருள்புரியாய்

வெட்டுண்ட நிலாச்சடை வைத்தவனே .. விமலாதிரு வாசகம் என்றவொரு

மட்டுண்டு மகிழ்ந்த திருச்செவியாய் .. மணிநீர்மலி வைகை நதிக்கரையிற்

பிட்டுண்டு பிரம்படி பெற்றவனே .. பிரமாபுர(ம்) மேவிய பிஞ்ஞகனே.


கட்டு-உண்டு கலங்கி வருந்து அடியேன் கவலைத்தொடர் நீங்க அருள்புரியாய் - பாசப்-பிணிப்புற்றுக் கலங்கி வருந்திகின்ற அடியேனுடைய கவலைகள் எல்லாம் நீங்குமாறு அருள்புரிவாயாக; (கட்டு - பந்தம்); (உண்தல் - செயப்பாட்டு வினைப்பொருள் உணர்த்தும் ஒரு விகுதி);

வெட்டு-உண்ட நிலாச் சடை வைத்தவனே - திங்கள்-துண்டத்தைச் சடையில் சூடியவனே;

விமலா, திருவாசகம் என்ற ரு மட்டு உண்டு மகிழ்ந்த திருச்செவியாய் - விமலனே, திருவாசகம் என்ற ஒப்பற்ற தேனைச் செவிமடுத்தவனே; (ஒரு - ஒப்பற்ற); (மட்டு - தேன்);

மணி நீர் மலி வைகை-நதிக்கரையில் பிட்டு உண்டு பிரம்படி பெற்றவனே - தெளிந்த நீர் பாயும் வைகையாற்றங்கரையில் பிட்டினை உண்டு மண் சுமந்து பாண்டியனால் பிரம்படி பெற்றவனே; (மணி - பளிங்கு)

பிரமாபுரம் மேவிய பிஞ்ஞகனே - பிரமாபுரம் என்ற சீகாழியில் எழுந்தருளியிருக்கும் பிஞ்ஞகனே; (பிஞ்ஞகன் - சிவன் திருநாமம் - தலைக்கோலம் அணிந்தவன்); (பிரமபுரம் - சந்தம்நோக்கிப் "பிரமாபுரம்"; நீட்டல்-விகாரம்); (சம்பந்தர் தேவாரம் - 1.1.1 - "பிரமாபுர மேவிய பெம்மான்");


2)

பாதத்துணை யைத்தமிழ் மாலைகளால் .. பரவிப்பணி யும்தமி யேற்கிரங்கி

வாதைத்தொடர் மாய அருள்புரியாய் .. வழிபாடுசெய் வானவர் வாழ்வுபெற

ஓதத்தெழு நஞ்சினை உண்டவனே .. ஒளியார்திரு நீறணி மேனியிலே

பேதைக்கொரு பாதி அளித்தவனே .. பிரமாபுர(ம்) மேவிய பிஞ்ஞகனே.


பாதத்-துணையைத் தமிழ்மாலைகளால் பரவிப் பணியும் தமியேற்கு இரங்கி வாதைத்தொடர் மாய அருள்புரியாய் - இரு-திருவடிகளைத் தமிழ்ப்பாமாலைகளால் துதித்து வணங்கும் அடியேனுக்கு இரங்கித் துன்பத்தொடர் அழியும்படி அருள்வாயாக; (துணை - இரண்டு); (வாதை - துன்பம்);

வழிபாடுசெய் வானவர் வாழ்வுபெற, ஓதத்து எழு-நஞ்சினை உண்டவனே - வணங்கிய தேவர்கள் உய்யும்படி கடலில் தோன்றிய ஆலகாலத்தை உண்டருளியவனே; (ஓதம் - கடல்);

ஒளி ஆர் திருநீறு அணி-மேனியிலே பேதைக்கு ஒரு பாதி அளித்தவனே - ஒளிவீசும் திருநீற்றைப் பூசிய திருமேனியில் ஒரு பாதியை உமாதேவிக்குக் கொடுத்தவனே; (பேதை - பெண்);

பிரமாபுரம் மேவிய பிஞ்ஞகனே - பிரமாபுரம் என்ற சீகாழியில் எழுந்தருளியிருக்கும் பிஞ்ஞகனே;


3)

பன்னும்தமிழ் மாலைக ளாலுனையே .. பரவிப்பணி வேன்இடர் தீர்த்தருளாய்

மன்னும்புகழ் உள்ள கருங்களனே .. மழவெள்விடை ஊர்திய னேஅரவம்

பின்னும்படி வெண்பிறை வைத்தவனே .. பிறதேவரை மாய்த்திடும் ஊழிகளின்

பின்னும்திகழ் கின்றப ரம்பரனே .. பிரமாபுர(ம்) மேவிய பிஞ்ஞகனே.


பன்னும் தமிழ்மாலைகளால் உனையே பரவிப் பணிவேன் இடர் தீர்த்தருளாய் - பாடும் தமிழ்ப்பாமாலைகளால் உன்னையே துதித்துப் பணியும் என் துன்பத்தைத் தீர்த்தருள்க; (பன்னுதல் - பாடுதல்);

மன்னும் புகழ் உள்ள கருங்களனே - நிலைபெற்ற புகழுடைய நீலகண்டனே; (மன்னுதல் - நிலைபெறுதல்); (களம் - கண்டம்);

மழவெள்விடை ஊர்தியனே - இளைய வெள்ளை எருதை வாகனமாக உடையவனே;

அரவம் பின்னும்படி வெண்பிறை வைத்தவனே - பாம்பு சுற்றிப் பின்னியிருக்குமாறு சந்திரனைத் திருமுடிமேல் அணிந்தவனே; (பின்னுதல் - தழுவுதல்; entwine;); (அப்பர் தேவாரம் - 4.86.1 - "இளம்பிறை பாம்பதனைச் சுற்றிக் கிடந்தது கிம்புரி போல"); (சுந்தரர் தேவாரம் - 7.91.10 - "ஒற்றி யூரும் அரவும் பிறையும் பற்றி யூரும் பவளச் சடையான்");

பிற-தேவரை மாய்த்திடும் ஊழிகளின் பின்னும் திகழ்கின்ற பரம்பரனே - மற்றத் தேவரையெல்லாம் அழிக்கும் ஊழிக்காலத்தின் பிறகும் அழிவின்றி விளங்கும் மிகவும் மேலானவனே; (பின்னும் - பிறகும்; After, afterwards);

பிரமாபுரம் மேவிய பிஞ்ஞகனே - பிரமாபுரம் என்ற சீகாழியில் எழுந்தருளியிருக்கும் பிஞ்ஞகனே;


4)

வாசத்தமிழ் மாலைக ளாலுனையே .. வழிபாடுசெய் என்னிடர் தீர்த்தருளாய்

பூசைக்குரி யாய்இகழ் தக்கனவன் .. புரிவேள்வி அழித்தவ னேமறவா

நேசர்க்கெளி யாய்ஒளி நீற்றினனே .. நிழலார்மழு வாநிக ரின்மையினால்

பேசற்கரி யாய்வள மார்வயல்சூழ் .. பிரமாபுர(ம்) மேவிய பிஞ்ஞகனே.


வாசத்-தமிழ்மாலைகளால் உனையே வழிபாடுசெய் என் இடர் தீர்த்தருளாய் - மணம் மிக்க தமிழ்ப்பாமாலைகளால் உன்னை வழிபடும் என் துன்பத்தைத் தீர்த்தருள்க;

பூசைக்கு உரியாய் - பூஜிக்கத் தகுந்தவனே;

இகழ்-தக்கனவன் புரி-வேள்வி அழித்தவனே - உன்னை இகழ்ந்த தக்கன் செய்த யாகத்தை அழித்தவனே;

மறவா நேசர்க்கு எளியாய் - உன்னை மறத்தல் இன்றித் தியானிக்கும் அன்பர்களால் எளிதில் அடையப்படுபவனே;

ஒளி-நீற்றினனே - வெண்ணீற்றைப் பூசியவனே;

நிழல் ஆர் மழுவா - ஒளி மிகுந்த மழுவை ஏந்தியவனே; (நிழல் - ஒளி); (மழுவன் - மழுவை ஏந்தியவன்);

நிகரின்மையினால் பேசற்கு அரியாய் - ஒப்பின்மையால் உன்னை உவமித்துச் சொல்ல இயலாதவனே;

வளம் ஆர் வயல்சூழ் - வளம் மிக்க வயல் சூழ்ந்த;

பிரமாபுரம் மேவிய பிஞ்ஞகனே - பிரமாபுரம் என்ற சீகாழியில் எழுந்தருளியிருக்கும் பிஞ்ஞகனே;


5)

நச்சித்தமிழ் நாளு(ம்) நவிற்றுமெனை .. நலிதீவினை வந்தடை யாதவணம்

பச்சத்தொடு காத்தரு ளாய்பரமா .. பலதேவர்கள் சேர்ந்தமை ஓர்இரதம்

அச்சிற்றிட ஏறி நகைத்தெயில்கள் .. அழல்வாய்விழ வைத்த பெருந்திறலாய்

பிச்சைக்குழல் பெற்றிய னேவரதா .. பிரமாபுர(ம்) மேவிய பிஞ்ஞகனே.


நச்சித் தமிழ் நாளு(ம்) நவிற்றும் எனை நலி-தீவினை வந்து அடையாதவணம் பச்சத்தொடு காத்தருளாய் - ; (நச்சுதல் - விரும்புதல்); (நவிற்றுதல் - சொல்லுதல்); (பச்சம் - பக்ஷம் - அன்பு; இரக்கம்); (சம்பந்தர் தேவாரம் - 1.18.2 - "பச்சம்முடையடிகள் திருப்பாதம் பணிவாரே");

பரமா - ;

பல-தேவர்கள் சேர்ந்து அமை-ஓர் இரதம் அச்சிற்றிட ஏறி நகைத்து எயில்கள் அழல்வாய் விழவைத்த பெருந்திறலாய் - பல தேவர்கள் சேர்ந்து செய்த ஒப்பற்ற தேரினுடைய அச்சு முரியும்படி அத்தேரில் ஏறிச், சிரித்தே முப்புரங்களைத் தீயில் விழச்செய்த பெருவெற்றி உடையவனே; (நகைத்தல் - சிரித்தல்); (அழல் - தீ); (வாய் - ஏழாம்வேற்றுமை உருபு); (திறல் - வெற்றி; வலிமை)

பிச்சைக்கு உழல் பெற்றியனே வரதா - பிச்சைக்காக உழல்கின்ற பெருமை உடையவனே, வரதனே; (பெற்றி - பெருமை; தன்மை);

பிரமாபுரம் மேவிய பிஞ்ஞகனே - பிரமாபுரம் என்ற சீகாழியில் எழுந்தருளியிருக்கும் பிஞ்ஞகனே;


6)

கள்ளைச்சொரி நாண்மலர் தூவியுனைக் .. கருதித்தொழு தேன்வினை தீர்த்தருளாய்

வெள்ளத்தினை வேணியில் ஏற்றவனே .. விரையார்திரு நீறணி மேனியினாய்

உள்ளத்தினில் உன்னடி உன்னிமகிழ் .. உலவாப்புக ழார்சிறுத் தொண்டரிடம்

பிள்ளைக்கறி கேட்டருள் செய்தவனே .. பிரமாபுர(ம்) மேவிய பிஞ்ஞகனே.


கள்ளைச் சொரி- நாண்மலர் தூவி உனைக் கருதித் தொழுதேன் வினை தீர்த்தருளாய் - தேன் சொரியும் புதிய மலர்களத் தூவி உன்னை விரும்பித் தொழும் என் வினையைத் தீர்த்தருள்க;

வெள்ளத்தினை வேணியில் ஏற்றவனே - கங்கையைச் சடையில் ஏற்றவனே;

விரை ஆர் திருநீறு அணி மேனியினாய் - வாசனைப்பொடி (/சந்தனம்) போலத் திருநீற்றைப் பூசிய மேனியனே; (விரை - வாசனை; கலவைச்சாந்து); (ஆர்தல் - ஒத்தல்); (சம்பந்தர் தேவாரம் - 3.54.1 - "வெந்த சாம்பல் விரையெனப் பூசியே");

உள்ளத்தினில் உன் அடி உன்னி மகிழ் உலவாப்-புகழ் ஆர் சிறுத்தொண்டரிடம் பிள்ளைக்கறி கேட்டு அருள்செய்தவனே - நெஞ்சில் உன் திருவடியைத் தியானித்து மகிழ்ந்த அழியாப்புகழுடைய சிறுத்தொண்டரிடம் பிள்ளைக்கறி கேட்டு அவருக்கு அருளியவனே; (உன்னுதல் - தியானித்தல்; எண்ணுதல்); (உலவாப் புகழார் - 1. அழியாப்புகழ் உடையவர்; 2. அழியாப்புகழ் பொருந்திய);

பிரமாபுரம் மேவிய பிஞ்ஞகனே - பிரமாபுரம் என்ற சீகாழியில் எழுந்தருளியிருக்கும் பிஞ்ஞகனே;


7)

சீரார்தமிழ் செப்பி உனைத்தொழுதேன் .. சிவனேபிற வாநிலை தந்தருளாய்

காரார்கடல் நஞ்சினை உண்டவனே .. கழலால்நமன் மாள உதைத்தவனே

வாரார்முலை மங்கையொர் பங்குடையாய் .. மலர்தூவி வணங்கிடும் அன்பர்கள்தம்

பேராவினை தீர்த்திட வல்லவனே .. பிரமாபுர(ம்) மேவிய பிஞ்ஞகனே.


சீர் ஆர் தமிழ் செப்பி உனைத் தொழுதேன் சிவனே - சிவனே, சீர் (அழகு) மிகுந்த தமிழ்ப்பாமாலைகளைப் பாடி உன்னை வணங்கினேன்;

பிறவாநிலை தந்தருளாய் - அடியேனுக்குப் பிறவாமையைத் தந்து (= முக்தி / பேரின்பம்) அருள்க;

கார் ஆர் கடல்-நஞ்சினை உண்டவனே - கரிய ஆலகாலத்தை உண்டருளியவனே;

கழலால் நமன் மாள உதைத்தவனே - திருவடியால் காலனை உதைத்து அழித்தவனே;

வார் ஆர் முலை மங்கை ஒர் பங்கு உடையாய் - கச்சு அணிந்த முலையுடைய உமாதேவியை ஒரு பங்கில் உடையவனே; (வார் - முலைக்கச்சு); (ஒர் - ஓர்; குறுக்கல்-விகாரம்);

மலர் தூவி வணங்கிடும் அன்பர்கள்தம் பேராவினை தீர்த்திட வல்லவனே - பூக்கள் தூவி வணங்கும் அடியார்களது தீராத வினையைத் தீர்ப்பவனே; (பேர்தல் - பிரிதல்; அழிதல்);

பிரமாபுரம் மேவிய பிஞ்ஞகனே - பிரமாபுரம் என்ற சீகாழியில் எழுந்தருளியிருக்கும் பிஞ்ஞகனே;


8)

தண்ணார்தமிழ் மாலை புனைந்தடியேன் .. தருவேஉனை யேதொழு தேன்அருளாய்

எண்ணாதரு வெற்பை இடந்தவனை .. எழிலார்விரல் ஊன்றி நெரித்தருளிப்

பண்ணாரிசை கேட்டு மகிழ்ந்தவனே .. படர்புன்சடை யாய்தலை மாலையினாய்

பெண்ணாணென நின்ற பெருந்தகையே .. பிரமாபுர(ம்) மேவிய பிஞ்ஞகனே.


தண் ஆர் தமிழ்மாலை புனைந்து அடியேன், தருவே, உனையே தொழுதேன், அருளாய் - கற்பகமரம் போன்றவனே; குளிர்ச்சி மிக்க தமிழ்ப்பாமாலைகளை இயற்றி உன்னையே அடியேன் வணங்கினேன்; எனக்கு அருள்வாயாக; (தரு - கற்பகமரம்);

எண்ணாது அருவெற்பை இடந்தவனை எழில் ஆர் விரல் ஊன்றி நெரித்தருளிப் பண் ஆர் இசை கேட்டு மகிழ்ந்தவனே - சிறிதும் யோசித்தல் இன்றிக் கயிலைமலையைப் பெயர்த்த இராவணனை அழகிய திருப்பாதவிரலை ஊன்றி நசுக்கிப், பின் அவன் பாடிய இனிய இசையைக் கேட்டருளியவனே; (வெற்பு - மலை); (இடத்தல் - பெயர்த்தல்); ( நெரித்தல் - நசுக்குதல்);

படர்-புன்சடையாய் - படரும் செஞ்சடை உடையவனே;

தலைமாலையினாய் - மண்டையோட்டுமாலை அணிந்தவனே;

பெண் ஆண் என நின்ற பெருந்தகையே - அர்த்தநாரீஸ்வரன் ஆன பெருமையுடையவனே;

பிரமாபுரம் மேவிய பிஞ்ஞகனே - பிரமாபுரம் என்ற சீகாழியில் எழுந்தருளியிருக்கும் பிஞ்ஞகனே;


9)

சுற்றம்துணை என்ற நினைப்பினிலே .. சுழலும்தமி யேன்மயல் தீர்த்தருளாய்

பற்றொன்றில ராகி அடைந்தவர்தம் .. பவநோயை அறுத்திட வல்லவனே

சுற்றும்திகி ரிப்படை யான்பிரமன் .. தொழுதேத்திட ஓங்கிய சோதியனே

பெற்றம்திக ழும்கொடி ஒன்றுடையாய் .. பிரமாபுர(ம்) மேவிய பிஞ்ஞகனே.


சுற்றம் துணை என்ற நினைப்பினிலே சுழலும் தமியேன் மயல் தீர்த்தருளாய் - மனைவி, உறவினர், முதலிய எண்ணங்களிலே மூழ்கிக் கலங்கும் என் மயக்கத்தைத் தீர்த்தருள்க; ("உறவினர் நல்ல துணை என்று மயங்கி .. .." என்றும் பொருள்கொள்ளல் ஆம்); (சுற்றம் - உறவு); (துணை - உதவி; காப்பு; மனைவி); (சுழலுதல் - சஞ்சலப்படுதல்); (மயல் - மயக்கம்);

பற்று-ஒன்றிலர் ஆகி அடைந்தவர்தம் பவநோயை அறுத்திட வல்லவனே - வேறு பற்றுகள் ஒன்றும் இல்லார்களாகிச் சரண்புகுந்தவர்களது பிறவிப்பிணியைத் தீர்ப்பவனே; (ஒன்று இலர் - ஒன்றும் இலர்; உம் தொக்கது); (பவம் - பிறவி);

சுற்றும் திகிரிப்படையான் பிரமன் தொழுதேத்திட ஓங்கிய சோதியனே - சுற்றும் சக்கராயுதத்தை ஏந்திய திருமால் பிரமன் இருவரும் தொழ எல்லையின்றி நீண்ட ஜோதிவடிவினனே; (திகிரி - சக்கரம்);

பெற்றம் திகழும் கொடி ஒன்று உடையாய் - இடபக்கொடி உடையவனே; (பெற்றம் - இடபம்);

பிரமாபுரம் மேவிய பிஞ்ஞகனே - பிரமாபுரம் என்ற சீகாழியில் எழுந்தருளியிருக்கும் பிஞ்ஞகனே;


10)

மெய்த்தேவினை நண்ணகி லாதவர்கள் .. வினைதீர்திரு நீறணி யாக்கலர்கள்

பொய்த்தேஉழல் கின்றவர் சொல்விடுமின் .. புனிதாகரி ஈருரி போர்த்தவனே

சித்தாசின வெள்விடை ஊர்தியினாய் .. சிவனேசுடு கானிடை ஆடிமகிழ்

பித்தாஎன இன்பம் அளித்திடுவான் .. பிரமாபுர(ம்) மேவிய பிஞ்ஞகனே.


மெய்த்-தேவினை நண்ண-கிலாதவர்கள், வினை-தீர் திருநீறு அணியாக் கலர்கள், பொய்த்தே உழல்கின்றவர் சொல் விடுமின் - மெய்யான தெய்வத்தை அடையாதவர்கள், பாவங்களைப் போக்குகின்ற திருநீற்றைப் பூசாத கீழோர்கள், பொய்யிலேயே புரள்கின்றவர்கள், இவர்கள் பேசும் பேச்சை மதியாமல் நீங்குங்கள்; (சம்பந்தர் தேவாரம் - 2.66.8 - "பாவம் அறுப்பது நீறு"); (கலர்கள் - கீழோர்கள்; தீயவர்கள்); (பொய்த்தல் - பொய்யாகப் பேசுதல்; வஞ்சித்தல்); (திருவாசகம் - திருக்கோத்தும்பி - 8.10.5 - "மெய்த்தேவர் தேவற்கே சென்றூதாய் கோத்தும்பீ");

"புனிதா - புனிதனே;

கரி ஈருரி போர்த்தவனே - யானையில் உரித்த ஈரத்தோலைப் போர்த்தவனே;

சித்தா - அறிவுவடிவானவனே; (சித் - அறிவு); (சித்தன் - எல்லாம் வல்லவன். சித்திகளை எல்லாம் உடையவன். சித்தன் - தன் அடியை வழிபடுவோரது சித்தத்தில் இருப்பன். சித்தன் - அறிவுக்கறிவாயிருப்பவன்.)

சின-வெள்விடை ஊர்தியினாய் - கோபிக்கும் வெள்ளை எருதை வாகனமாக உடையவனே;

சிவனே - சிவபெருமானே;

சுடுகானிடை ஆடி மகிழ் பித்தா" - சுடுகாட்டில் கூத்தாடி மகிழும் பேரருளாளனே"; (பித்தன் - பேரருள் உடையவன்);

என இன்பம் அளித்திடுவான் - என்று போற்றி வணங்கினால் இன்பம் அருள்வான்;

பிரமாபுரம் மேவிய பிஞ்ஞகனே - பிரமாபுரம் என்ற சீகாழியில் எழுந்தருளியிருக்கும் பிஞ்ஞகனே;


11)

ஆய்வார்அகம் ஆலய மாமகிழ்வான் .. அலரைங்கணை யான்றனை ஆகமறக்

காய்வான்கழ லேநினை மாணியுயிர் .. கவரற்கடை கூற்றை உதைத்தபிரான்

தேய்வான்மதி செஞ்சடை ஏற்றியவன் .. சிறுமான்றரி கையினன் நள்ளிருளில்

பேய்வாழிடு கானிடை ஆடுமரன் .. பிரமாபுர(ம்) மேவிய பிஞ்ஞகனே.



ஆய்வார் அகம் ஆலயமா மகிழ்வான் - ஈசனையே ஆய்ந்து உணரும் ஞானியர்களுடைய மனமே கோயிலாக விரும்பி உறைபவன்; (ஆய்வார் - ஆய்ந்து உணரும் ஞானியர்); (ஆலயமா = ஆலயமாக);

அலர் ஐங்கணையான்தனை ஆகம் அறக் காய்வான் - ஐந்து மலர்க்கணைகளை உடைய மன்மதனை உடலற்றவனாக நெற்றிக்கண்ணால் எரிப்பவன்; (அலர் - மலர்); (ஆகம் - உடல்); (காய்தல் - கோபித்தல்);

கழலே நினை மாணி உயிர் கவரற்கு அடை கூற்றை உதைத்த பிரான் - திருவடியையே சிந்திக்கும் மார்க்கண்டேயரது உயிரைக் கவர்வதற்காக நெருங்கிய காலனை உதைத்த பெருமான்;

தேய்-வான்-மதி செஞ்சடை ஏற்றியவன் - தேய்ந்த, வானத்தில் ஊரும், வெண்திங்களைச் செஞ்சடைமேல் ஏற்றி வைத்தவன்; (வான்மதி - 1. வான் மதி; 2. வால் மதி); (வான் - வானம்); (வால் - வெண்மை);

சிறுமான் தரி கையினன் - சிறிய மான்கன்றை ஏந்திய கையை உடையவன்;

நள்ளிருளில் பேய் வாழ் இடுகானிடை ஆடும் அரன் - பேய்கள் வாழும் சுடுகாட்டில் நள்ளிருளில் கூத்து ஆடும் ஹரன்;

பிரமாபுரம் மேவிய பிஞ்ஞகனே - அவன், பிரமாபுரம் என்ற சீகாழியில் எழுந்தருளியிருக்கும் பிஞ்ஞகன்; (பிஞ்ஞகன் - சிவன் திருநாமம் - தலைக்கோலம் அணிந்தவன்);


பிற்குறிப்புகள் :

1. யாப்புக் குறிப்பு:

அறுசீர்ச் சந்தவிருத்தம் - தானாதன தானன தானதனா தனதானன தானன தானதனா - என்ற சந்தம்.

எண்சீர்ச் சந்தவிருத்தம் என்றும் கருதலாம் - தானா தனனா தனனா தனனா தனனா தனனா தனனா தனனா - என்ற சந்தம்;

திருநாவுக்கரசரின் முதற்பதிகமான "கூற்றாயினவாறு" இந்த அமைப்பு;

பெரியபுராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 70 - "நீற்றால்நிறை வாகிய மேனியுடன் நிறையன்புறு சிந்தையில் நேசமிக");


2. இப்பதிகத்தில் முதல் 9 பாடல்கள் ஈசனை முன்னிலையிலும், கடைசி 2 பாடல்கள் ஈசனைப் படர்க்கையிலும் பாடுவன.


விசுப்பிரமணியன்

----------- --------------

No comments:

Post a Comment