03.08.002 - முருகன் - பொது - துடியிடை மாதர் - (வண்ணம்)
(ஆடிக் கிருத்திகை - 2007-08-06)
2007-08-05
3.8.2 - முருகன் - துடியிடை மாதர் - (பொது)
----------------------------------------------------
(வண்ணவிருத்தம்;
தனதன தான தனதன தான
தனதன தான .. தனதான)
(அகரமு மாகி அதிபனு மாகி - திருப்புகழ் - பழமுதிர்சோலை)
துடியிடை மாதர் மயலொடு காசு
.... சுகமென ஆசை .. மிகவாகித்
.. துணையிலி ஆகி வழிதெரி யாது
.... சுழலினில் மூழ்கி .. அதனாலே
முடிவில தான துயர்வர வாடி
.... முறையிடு வேனெ .. னிடர்தீர
.. முனைவினை மாள அருள்புரி யாய்பன்
..... முனிதொழு பால .. வடிவோனே
அடிபணி தேவர் படுதுயர் தீர
.... அழலுறும் ஆறு .. பொறியாகி
.. அழகிய மாதர் வளர்மக வாகி
.... அணியுமை யாலொர் .. உருவானாய்
கடிகமழ் போது பிறையணி நாதர்
.... கனவிடை ஊர்தி .. மகிழீசர்
.. கழறென ஆதி மறைமொழி ஓது
.... கலவம தேறு .. பெருமானே.
பதம் பிரித்து:
துடி-இடை மாதர் மயலொடு காசு
.... சுகம் என ஆசை .. மிகவாகித்,
.. துணையிலி ஆகி, வழி தெரியாது
.... சுழலினில் மூழ்கி, .. அதனாலே
முடிவு-இலது ஆன துயர் வர, வாடி
.... முறையிடுவேன் என் .. இடர் தீர,
.. முனை-வினை மாள அருள்புரியாய், பன்-
..... முனி தொழு- பால .. வடிவோனே;
அடி-பணி தேவர் படு-துயர் தீர,
.... அழல் உறும் ஆறு .. பொறி ஆகி,
.. அழகிய மாதர் வளர்-மகவு ஆகி,
.... அணி-உமையால் ஒர் .. உரு ஆனாய்;
கடி கமழ் போது பிறை அணி- நாதர்,
.... கன-விடை ஊர்தி .. மகிழ்-ஈசர்
.. "கழறு" என, ஆதி மறைமொழி ஓது,
.... கலவமது ஏறு .. பெருமானே.
துடி-இடை மாதர் மயலொடு காசு சுகம் என ஆசை மிக ஆகித் - உடுக்கையைப் போன்ற இடையை உடைய பெண்கள்மேல் மயக்கம், பணம், உலக சுகங்கள் என்று பல ஆசைகளால்; (துடி - உடுக்கை); (மயல் - மயக்கம்);
துணையிலி ஆகி வழி தெரியாது சுழலினில் மூழ்கி அதனாலே - ஒரு துணையும் இன்றிச் செல்லும் வழியையும் அறியாமல் பெரும் சுழலில் சிக்கி முழ்கி அதனால்;
முடிவு இலதான துயர் வர, வாடி முறையிடுவேன் என் இடர் தீர, முனை-வினை மாள அருள்புரியாய் - முடிவில்லாமல் துன்பமே வர, வாடி வந்து முறையிடும் என் இடர்கள் தீரவும் பழவினை அழியவும் அருள்வாயாக; (முனை - முன்னை - இடைக்குறை விகாரம்);
பன்முனி தொழு- பால வடிவோனே - பல முனிவர்களால் தொழப்பெறும் பாலகனே;
அடி-பணி தேவர் படு-துயர் தீர அழல் உறும் ஆறு பொறி ஆகி - திருவடியை வணங்கிய தேவர்கள் அனுபவித்த துன்பம் தீர்வதற்காகச் சுடுகின்ற ஆறு தீப்பொறிகள் ஆகித் தோன்றி;
அழகிய மாதர் வளர்- மகவு ஆகி - அழகிய கார்த்திகைப் பெண்கள் வளர்த்த ஆறு குழந்தைகள் ஆகி;
அணி உமையால் ஒர் உரு ஆனாய் - அழகிய உமையம்மையால் ஒரு திருமேனி உடையவன் ஆனவனே; (ஒர் - ஓர் - குறுக்கல் விகாரம்);
கடி கமழ் போது பிறை அணி நாதர் - மணம் கமழும் பூக்களையும் சந்திரனையும் அணிந்த தலைவர்; (கடி - வாசனை); (போது - பூ);
கன-விடை ஊர்தி மகிழ்-ஈசர் "கழறு" என ஆதி மறைமொழி ஓது - பெரிய விடையை ஊர்தியாக விரும்பிய சிவபெருமானார் "சொல்" என்று கேட்க, முன்பு பிரணவ மந்திரத்தை அவருக்கு ஓதிய; (கழறுதல் - சொல்தல்); (ஆதி - 1. ஆதியில் - முன்பு; 2. ஆதியான);
கலவமது ஏறு பெருமானே - மயில்வாகனம் ஏறிய பெருமானே; (கலவம் - மயிலின் தோகை; ஆகுபெயராக, மயில்);
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
No comments:
Post a Comment