03.08 – பலவகை
2007-08-09
03.08.003 - பின்னங்களில் முழுதானவன்
-------------------------------------------------------
(இன்னிசை வெண்பா)
அரையா நமன்மாள அன்றுதைத்த காலா
வரவார் அரையாஓர் பின்னா முடியா
வரமீ இறையே ஒருமா துடையாய்
அரைமேனி யாய்காத் தருள்!
பின்னங்கள் (fractions) : அரை, கால், ஒருமா (1/20).
அளவைச் சொற்கள்: இறை (கொஞ்சம்), மேனி (வயல் விளைச்சல் அளவை);
பதம் பிரித்து - 1:
அரையா! நமன் மாள அன்று உதைத்த காலா!
அரவு ஆர் அரையா! ஓர் பின்னா முடியா!
வரம் ஈ இறையே! ஒரு மாது உடையாய்
அரை மேனியாய்! காத்து அருள்!
அரையா - அரசனே; (அரையன் - அரசன்);
நமன் மாள அன்று உதைத்த காலா! - இயமனை இறக்குமாறு அன்று உதைத்த காலகாலனே!
அரவு ஆர் அரையா - பாம்பை அரைநாணாகக் கட்டிய அரையை உடையவனே! (ஆர்த்தல் - கட்டுதல்);
ஓர் பின்னா முடியா - ஒப்பற்ற பின்னாத சடைமுடியை உடையவனே! (ஓர் - ஒப்பற்ற); (பின்னா முடியன் - விரித்த சடையினன்);
வரம் ஈ இறையே - வரம் அளிக்கும் இறைவனே! (ஈதல் - கொடுத்தல்); (இறை - இறைவன்);
ஒரு மாது உடையாய் அரைமேனியாய் - உடையவனே, உமை திருமேனியில் பாதி ஆனவனே! (உடையாய் - சுவாமியே); (மேனியாய் - மேனியனே);
காத்து அருள் - (அடியேனைக்) காத்து அருள்புரிவாயாக!
பதம் பிரித்து - 2:
அரையா நமன் மாள அன்று உதைத்த, கால் ஆவு
அரவு ஆர் அரையா! ஓர் பின்னா! முடியா
வரம் ஈ இறையே! ஒரு மாது உடையாய்
அரை மேனியாய்! காத்து அருள்!
அரையா நமன் மாள அன்று உதைத்த - என்றும் வலிமை குன்றாத எமனும் மாளுமாறு அன்று உதைத்த; (அரைதல் - தேய்தல் - குறைதல்; மெலிதல்; வலிகுன்றுதல்);
கால் ஆவு அரவு ஆர் அரையா - திருவடியை விரும்பும் ஒலி (பக்தர்கள் செய்யும் துதிகளின் ஒலி) பொருந்திய அரசனே; (கால் - பாதம்; திருவடி); (ஆவுதல் - விரும்புதல்); (அரவு - ஒலி); (ஆர்தல் - நிறைதல்; பொருந்துதல்; அனுபவித்தல்);
ஓர் பின்னா - பின்னும் இருப்பவனே! (அடியேனை) நினை! (ஓர்தல் - நினைதல்; எண்ணுதல்); (பின்னன் - பின்னவன் - அனைத்து உலகங்களும் ஒடுங்கிய பின்னும் இருப்பவன்);
முடியா வரம் ஈ இறையே - சாவா வரம் அளிக்கும் இறைவனே!
ஒரு மாது உடையாய் - பார்வதியை ஒரு பாகமாக உடையவனே!
அரைமேனியாய் - அதனால், உனக்குப் பாதித் திருமேனியே உடையவனே; (திருநாவுக்கரரசர் தேவாரம் - 4.86.7 - "உமையாளையும் பாகம்வைத்த ஒன்றரைக் கண்ணன் கண்டீர் ஒற்றியூர் உறை உத்தமனே" - பார்வதிக்கு உடம்பைச் செம்பாதியாகப் பங்கிட்டுக் கொடுத்த காலத்திலே தன் முக்கண்களில் செம்பாதியான ஒன்றரைக் கண்கள் அவளுக்கு ஆயினதால் மீதியுள்ள ஒன்றரைக் கண்ணனாகவே உள்ளான் திருவொற்றியூரில் உறையும் உத்தமனாம் எம்பெருமான்);
காத்து அருள் - (அடியேனைக்) காத்து அருள்புரிவாயாக!
வி. சுப்பிரமணியன்
பிற்குறிப்பு :
இப்பாடலை எழுதியபோது சில பின்னங்களின் பெயர்கள் வருமாறுதான் அமைத்தேன். ஆனால் எழுதியபின் அதே பாடலை இன்னும் ஆழ்ந்து நோக்கியதில் சில சொற்றொடர்கள் இருவிதமாகப் பிரித்துப்பொருள்கொள்ளுமாறும் (மடக்கு) இயற்கையாகவே அமைந்திருந்ததும் புலப்பட்டது!
-------------------------------- -------------------------------
No comments:
Post a Comment