Friday, September 27, 2019

P.243 - கடம்பந்துறை - மயலுற்றிரு நிலமேல்மிக

2014-08-06

P.243 - கடம்பந்துறை

(கடம்பர்கோயில் - குளித்தலை)

----------------------------

(கலிவிருத்தம் - மாங்கனி மாங்கனி மாங்கனி மா - வாய்பாடு)

(சம்பந்தர் தேவாரம் - 1.10.1 - "உண்ணாமுலை உமையாளொடும்");

(சுந்தரர் தேவாரம் - 7.1.1 - "பித்தாபிறை சூடீ");

* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;


1)

மயலுற்றிரு நிலமேல்மிக வாடும்மட நெஞ்சே

புயலொத்திருள் கண்டத்தினன் பொடிபூசிய மார்பன்

கயிலைக்கிறை உறையும்பதி கடம்பந்துறை கருதாய்

வெயிலொத்தெரி வினையாயின விடுமேசுக(ம்) மிகுமே.


மயலுற்று இருநில(ம்)மேல் மிக வாடும் மடநெஞ்சே - மயங்கிப் பூமியில் மிகவும் வருந்தும் பேதைமனமே; (மயல் - மயக்கம்; அறியாமை); (இருமை - பெருமை; இருநிலம் - பெரிய பூமி); (வாடும்மடநெஞ்சே - யாப்பு நோக்கி மகர-ஒற்று விரித்தல்-விகாரம்);

புயல் ஒத்து இருள்-கண்டத்தினன் - மேகம் போல் இருண்ட கண்டம் உடையவனும்; (புயல் - மேகம்);

பொடி பூசிய மார்பன் - திருநீற்றை மார்பில் பூசியவனும்; (பொடி - திருநீறு);

கயிலைக்கு இறை உறையும் பதி கடம்பந்துறை கருதாய் - கயிலைநாதனுமான ஈசன் உறையும் தலமான கடம்பந்துறையை நினைவாயாக; (அப்பர் தேவாரம் - 5.66.1 - "பொற்கயிலைக்கிறை"); (கருதுதல் - எண்ணுதல்; மதித்தல்; விரும்புதல்);

வெயில் ஒத்து எரி- வினை-யின விடுமே - வெயில் போலச் சுட்டெரிக்கும் தீவினைகள் நீங்கும்;

சுக(ம்) மிகுமே - இன்பம் மிகும்;


2)

எண்மீறிய நசையால்தினம் இடருற்றிடு(ம்) நெஞ்சே

தண்மாநதி வெண்மாமதி சடைமேலணி தலைவன்

கண்மூன்றினன் உறையும்பதி கடம்பந்துறை கருதாய்

மண்மீதினி வாராநிலை வந்தெய்திடும் திடனே.


எண் மீறிய நசையால் தினம் இடர் உற்றிடும் நெஞ்சே - எண்ணற்ற, அளவு கடந்த ஆசைகளால் என்றும் துன்பம் அடையும் நெஞ்சமே; (எண் - வரையறை); (மீறுதல் - மேற்போதல்); (நசை - ஆசை);

தண்-மா-நதி, வெண்-மா-மதி சடைமேல் அணி தலைவன் - குளிர்ந்த பெரிய கங்கையையும், வெண்மையான அழகிய சந்திரனையும் சடைமேல் அணிந்த தலைவனும்;

கண்-மூன்றினன் உறையும் பதி கடம்பந்துறை கருதாய் - முக்கண்ணனுமான ஈசன் உறையும் தலமான கடம்பந்துறையை நினைவாயாக;

மண்மீது இனி வாரா-நிலை வந்து-எய்திடும் திடனே - பூமியில் மீண்டும் பிறத்தல் இல்லாத நற்கதி வந்தடையும்; இது நிச்சயமே; (திடன் - திடம் - உறுதி; நிச்சயம்); (சம்பந்தர் தேவாரம் - 1.125.2 - "உயர்கதி பெறுவது திடனே");


3)

துணையற்றிடர்த் தொடரால்மிகத் துவளும்மட நெஞ்சே

இணையற்றவன் எங்குந்திரி எயில்மூன்றவை எரியக்

கணைதொட்டவன் உறையும்பதி கடம்பந்துறை கருதாய்

விணையெட்டிய மலைபோல்வினை விடுமேசுக(ம்) மிகுமே.


இடர்த்தொடர் - துன்பத்தொடர்;

துவளுதல் - வாடுதல்; வருந்துதல்;

இணையற்றவன் - ஒப்பில்லாதவன்;

எயில் மூன்று - முப்புரங்கள்;

விணை எட்டிய - விண்ணை எட்டிய - வானளாவிய; (விணை - விண்ணை; இடைக்குறை-விகாரம்);


4)

இறையேனுமென் உரைகேள்மட நெஞ்சேஎதிர் இல்லான்

நறையார்மலர்க் கொன்றைச்சடை நம்பன்கடல் நஞ்சுண்

கறையார்மிட றுடையான்பதி கடம்பந்துறை கருதாய்

பறையாவினை பகலோன்வரப் பனிபோல்விடும் திடனே.


இறையேனும் - சற்றேனும்;

எதிர் இல்லான் - ஒப்பற்றவன்; (எதிர் - ஒப்பு );

நறை ஆர் மலர்க்கொன்றை - தேன் பொருந்திய கொன்றைமலர்;

நம்பன் - சிவன் திருநாமம் - விரும்பத்தக்கவன்;

கடல் நஞ்சு உண் கறை ஆர் மிடறு உடையான் - கடல்விஷத்தை உண்ட கறை பொருந்திய கண்டத்தை உடையவன்;

பறையா வினை பகலோன் வரப் பனிபோல் விடும் - அழியாத வினைகள் எல்லாம் சூரியனைக் கண்ட பனிபோல் ஒழியும். (பறைதல் - அழிதல்);


5)

நிலையாததை நேசித்திடும் நெஞ்சேநிழல் மழுவன்

மலையான்மகள் ஒருபங்கினன் மணிமார்பினில் நூலன்

கலைமான்கரன் உறையும்பதி கடம்பந்துறை கருதாய்

மலைபோலுள பழவல்வினை மாயும்திரு வருமே.


நிலையாததை நேசித்திடும் நெஞ்சே - நிலையற்றதையே மிகவும் ஓம்புகின்ற மனமே; (நிலையாதது = அநித்தியமானது - உடல், பொருள், உலகவாழ்வு இத்யாதி);

நிழல்-மழுவன் - ஒளி திகழும் மழுவை ஏந்தியவன்;

மணி-மார்பினில் நூலன் - அழகிய பவளம் போன்ற மார்பில் முப்புரிநூல் அணிந்தவன்;

கலைமான் கரன் - கலைமானைக் கையில் ஏந்தியவன்;

திரு - செல்வம்; நன்மை;


6)

சுற்றத்தினர் காவும்படி துஞ்சாமுன(ம்) நெஞ்சே

ஒற்றைச்சின விடையூர்தியன் உமைகோன்நதி உலவும்

கற்றைச்சடை உடையான்பதி கடம்பந்துறை கருதாய்

பற்றித்தொடர் பழவல்வினை பறையும்திரு வருமே.


சுற்றத்தினர் காவும்படி துஞ்சாமுனம் - உறவினர்கள் தோளில் சுமந்துசெல்லும்படி உயிர்போவதன் முன்னமே; (காவுதல் - தோளிற் சுமத்தல்); (துஞ்சுதல் - இறத்தல்);

ஒற்றைச் சின விடை ஊர்தியன் - ஒப்பற்ற, சினக்கின்ற இடபத்தை வாகனமாக உடையவன்;

பறையும் - அழியும்;


7)

உண்டிங்குய ஒருநல்வழி உணரென்மட நெஞ்சே

பெண்டங்கிய பாகத்தினன் பிறைசூடிய பெருமான்

கண்டங்கிய நுதலான்பதி கடம்பந்துறை கருதாய்

மண்டங்கிட வைக்கும்வினை மாயும்திரு வருமே.


பதம் பிரித்து:

உண்டு இங்கு உ[ய்]ய ஒரு நல்வழி; உணர் என் மட-நெஞ்சே;

பெண் தங்கிய பாகத்தினன், பிறை சூடிய பெருமான்,

கண் தங்கிய நுதலான் பதி கடம்பந்துறை கருதாய்;

மண் தங்கிட வைக்கும் வினை மாயும்; திரு வருமே.


மண் தங்கிட வைக்கும் வினை மாயும் - இப்பூமியில் ஓயாமல் பிறவிகளைத் தரும் வினை அழியும்;


8)

முனிவால்மிகு நசையால்இடர் மூழ்கும்மட நெஞ்சே

பனியார்மலை எறிமூடனைப் பாடும்படி ஊன்றிக்

கனிவோடருள் செய்தான்பதி கடம்பந்துறை கருதாய்

இனிவாடுதல் செய்யும்வினை இல்லாநிலை தானே.


முனிவால் மிகு-நசையால் இடர் மூழ்கும் மடநெஞ்சே - கோபத்தாலும் மிகுந்த ஆசைகளாலும் துன்பத்தில் ஆழ்கின்ற பேதைமனமே; (முனிவு - கோபம்); (நசை - ஆசை); (மூழ்கும்மடநெஞ்சே - யாப்புக் கருதி மகர-ஒற்று விரித்தல்-விகாரம்);

பனிர் மலை எறி-மூடனைப் பாடும்படி ஊன்றிக், கனிவோடு அருள்செய்தான் பதி கடம்பந்துறை கருதாய் - பனி பொருந்திய கயிலைமலையைப் பெயர்த்து எறிய முயன்ற அறிவிலியான இராவணனை நசுக்கித் திருவடியைப் போற்றிப் பாடும்படி செய்து, அவனுக்கும் இரங்கி அருள்செய்த பெருமான் உறையும் தலமான கடம்பந்துறையை எண்ணுவாயாக;

இனி வாடுதல் செய்யும் வினை இல்லா நிலைதானே - இனி நம்மை வாடச்செய்கின்ற வினையெல்லாம் இல்லாதொழியும் இன்பநிலை வரும்;


9)

சும்மாநிதம் துரிசேநினை தொழில்மேவிய நெஞ்சே

அம்மாலயன் அறியாவணம் அழலாகிய ஐயன்

கைம்மாவுரி போர்த்தான்பதி கடம்பந்துறை கருதாய்

வெம்மாவினைப் பகையாயின விடுமேதிரு வருமே.


சும்மா நிதம் துரிசே நினை- தொழில் மேவிய நெஞ்சே - வீணே தினமும் குற்றங்களையே செய்ய எண்ணும் தொழிலை விரும்பிய மனமே; (சும்மா - பயனின்றி); அடிக்கடி; (நிதம் - தினமும்); (துரிசு - குற்றம்); (மேவிய - விரும்பிய);

அம்-மால்-அயன் அறியாவணம் அழலாகிய ஐயன் - அந்தத் திருமால் பிரமன் இவர்களால் அறிய இயலாதபடி ஜோதியாகி நீண்ட தலைவன்;

கைம்மா-ரி போர்த்தான் பதி கடம்பந்துறை கருதாய் - யானைத்தோலைப் போர்த்த பெருமான் உறையும் தலமான கடம்பந்துறையை எண்ணுவாயாக; (கைம்மா - யானை); (உரி - தோல்);

வெம்-மா-வினைப்-பகையாயின விடுமே - கொடிய பெரிய வினைப்பகையெல்லாம் நீங்கும்;

திரு வருமே - செல்வம்/நன்மை வந்தடையும்;


10)

நட்டப்பெரு மானைத்தொழ நண்ணாதவர் சொல்லும்

வெட்டிச்சொலை விட்டுத்தினம் மிகவேத்திடு வார்க்குக்

கட்டிக்கரும் பொத்தான்பதி கடம்பந்துறை கருதாய்

ஒட்டித்தொடர் உறுதீவினை ஓயும்திரு உறுமே.


நட்டப்-பெருமானைத் தொழ நண்ணாதவர் சொல்லும் வெட்டிச்சொலை விட்டுத் - கூத்தப்பெருமானை வணங்க அடையாதவர்கள் சொல்லும் வெட்டிப்பேச்சை மதியாமல் நீங்கி; (நட்டம் - கூத்து); (நண்ணுதல் - அடைதல்); (சொலை - சொல்லை; இடைக்குறை-விகாரம்);

தினம் மிக ஏத்திடுவார்க்குக் - தினமும் மிகவும் துதிக்கும் அன்பர்களுக்கு;

கட்டிக்கரும்பு ஒத்தான் பதி கடம்பந்துறை கருதாய் - வெல்லம் போல் இனிமை பயக்கின்ற பெருமான் உறையும் தலமான கடம்பந்துறையை எண்ணுவாயாக; (கட்டிக்கரும்பு - கருப்பங்கட்டி / கருப்புக்கட்டி - வெல்லம்); (அப்பர் தேவாரம் - 4.31.4 - "கரும்பினிற் கட்டி போல்வார் கடவூர் வீரட்டனாரே");

ஒட்டித் தொடர்-உறுதீவினை ஓயும் - உயிரைப் பிணித்துத் தொடர்கின்ற தீவினை அழியும்; (உறுதீவினை - மிகுந்த பாவங்கள்);

திரு உறுமே - செல்வம்/நன்மை வந்தடையும்;


11)

அருமாமணி மார்க்கண்டரை அடைகூற்றினைச் செற்ற

பெருமானணி யாகப்பணி பிறைசூடிய இறைவன்

கருமாமணி கண்டன்பதி கடம்பந்துறை கருதாய்

மருவாமுனை வினையாயின மறையாப்புகழ் வருமே.


அரு-மா-மணி மார்க்கண்டரை அடை-கூற்றினைச் செற்ற பெருமான் - அரிய சிறந்த மணி போன்ற மார்க்கண்டேயரை நெருங்கிய காலனை அழித்த பெருமான்; (செறுதல் - அழித்தல்);

அணியாகப் பணி பிறை சூடிய இறைவன் - ஆபரணமாகப் பாம்பையும் பிறையையும் அணிந்த கடவுள்; (பணி - நாகம்);

கரு-மா-மணிகண்டன் பதி கடம்பந்துறை கருதாய் - கரிய அழகிய மணியைக் கண்டத்தில் உடைய சிவபெருமான் உறையும் தலமான திருக்கடம்பந்துறையைக் கருதுவாயாக;

மருவா முனை-வினை ஆயின - பழவினைகளெல்லாம் நெருங்கமாட்டா (= பழவினை அழியும்); (முனை - முன்னை; இடைக்குறை-விகாரம்); (மருவுதல் - நெருங்குதல்);

மறையாப் புகழ் வருமே - அழியாத புகழ் வரும்;


வி. சுப்பிரமணியன்

-------------------  

No comments:

Post a Comment