03.07.004 – சுந்தரர் துதி - அந்தமி லாதிடர் - (வண்ணம்)
2007-07-22
3.7.4 - சுந்தரர் குருபூஜை - 2007-07-22 (ஆடிச் சுவாதி)
----------------------------------------------------------------------------
(வண்ணவிருத்தம்;
தந்தன தானன .. தனதான)
(அஞ்சன வேல்விழி மடமாதர் - திருப்புகழ் - தஞ்சை)
அந்தமி லாதிடர் .. வருமாறே
.. ஐம்புல னாசைகள் .. அவையாலே
சிந்தையி லாயிர(ம்) .. நினைவாகிச்
.. சென்றிடு வாழ்வினில் .. விழலாமோ
சுந்தரர் பாடிய .. தமிழ்கூறித்
.. துஞ்சிரு ளாடிடு .. கணநாதன்
அந்தரர் கோனடி .. தொழுவோமே
.. அஞ்சிடு தீவினை .. இலையாமே.
பதம் பிரித்து:
அந்தம் இலாது இடர் .. வருமாறே
.. ஐம்புலன் ஆசைகள் .. அவையாலே
சிந்தையில் ஆயிர(ம்) .. நினைவு ஆகிச்
.. சென்றிடு வாழ்வினில் .. விழலாமோ?
சுந்தரர் பாடிய .. தமிழ் கூறித்,
.. துஞ்சிருள் ஆடிடு .. கணநாதன்,
அந்தரர்-கோன் அடி .. தொழுவோமே;
.. அஞ்சிடு தீவினை .. இலையாமே.
அந்தம் இலாது இடர் வருமாறே - முடிவின்றித் துன்பம் வரும்படி;
ஐம்புலன் ஆசைகள் அவையாலே - ஐம்புலன் இன்ப ஆசைகளால்;
சிந்தையில் ஆயிரம் நினைவாகிச் - மனத்தில் ஆயிரக்கணக்கான எண்ணங்கள் அலைமோத;
சென்றிடு வாழ்வினில் விழலாமோ - நாள் சென்று அழிகின்ற வாழ்வில் விழலாமா?
சுந்தரர் பாடிய தமிழ் கூறித் - சுந்தரமூர்த்தி நாயனார் பாடியருளிய தேவாரத்தைப் பாடி;
துஞ்சு-இருள் ஆடிடு கணநாதன் - செறிந்த இருளில் கூத்தாடும் பூதகணத் தலைவனும்;
அந்தரர்-கோன் அடி தொழுவோமே - தேவர்கள் தலைவனுமான சிவபெருமான் திருவடியை வணங்குவோம்;
அஞ்சிடு தீவினை இலையாமே - நாம் அஞ்சுகின்ற தீவினைகளெல்லாம் அழியும்;
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
அருமையான பதிவு வாழ்க நீங்கள் வளர்க
ReplyDeleteThank You.
Delete