Sunday, September 1, 2019

03.05.052 – பொது - மனனிடை அவாவு(ம்) மிக்கு - (வண்ணம்)

03.05.052 – பொது - மனனிடை அவாவு(ம்) மிக்கு - (வண்ணம்)

2007-08-28

3.5.52) மனனிடை அவாவு(ம்) மிக்கு - (பொது)

----------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தனதனன தான தத்த

தனதனன தான தத்த

தனதனன தான தத்த .. தனதான )

(சரணகம லால யத்தை - திருப்புகழ் - திருவேரகம் - சுவாமிமலை)


மனனிடைய வாவு(ம்) மிக்கு .... மதியையழி மோகம் உற்று

.... மலவிருளு(ம்) மூட அற்ப .... ருடனாடி

.. மனிதனெனு(ம்) மேனி பெற்றும் .... வனமிருக மேநி கர்த்து

.... வலியவினை யேபெ ருக்கி .... உழலாமல்

உனதுதிரு நாம(ம்) நித்தல் .... உரைசெயநன் மாலை கட்டி

.... உபயகழ லேது திக்க .... அடியார்கள்

.. உறவுதனை யேந யக்க .... உறுபிறவி தோறு(ம்) முக்க

.... ணுடையவுனை யேநி னைக்க .... வரமீயாய்

முனமரிய தேரின் அச்சு .... முரியவொரு பாதம் இட்டு

.... முறுவலத னால ரக்கர் .... புர(ம்)நீறாய்

.. முடிய,அவண் மூவர் பத்தி .... முறுகியவர் வாழ வைத்த

.... முதல்வமணி யாவி டத்தை .... அணிவோனே

நினதடியை மாணி பற்ற .... நெடியதொரு வாழ்வ ளித்து

.... நிலமியமன் வீழ அற்றை .… உதைபாதா

.. நிமல;அயன் மாலி வர்க்கு .... நிழல்மலியு(ம்) மாநெ ருப்பு

.... நிலையினுரு வாய்ம றைத்த .... பெருமானே.


பதம் பிரித்து:

மனனிடை அவாவு(ம்) மிக்கு, .... மதியை அழி மோகம் உற்று,

.... மலவிருளு(ம்) மூட, அற்பருடன் ஆடி,

.. மனிதன் எனு(ம்) மேனி பெற்றும் .... வன-மிருகமே நிகர்த்து,

.... வலிய வினையே பெருக்கி .... உழலாமல்

உனது திருநாம(ம்) நித்தல் .... உரைசெய, நன்-மாலை கட்டி

.... உபய-கழலே துதிக்க, .... அடியார்கள்

.. உறவுதனையே நயக்க, .... உறு-பிறவி தோறு(ம்) முக்கண்

.... உடைய உனையே நினைக்க .... வரம் ஈயாய்;

முனம் அரிய தேரின் அச்சு .... முரிய ஒரு பாதம் இட்டு,

.... முறுவல்-அதனால் அரக்கர் .... புர(ம்) நீறாய்

.. முடிய, அவண் மூவர் பத்தி .... முறுகியவர் வாழ வைத்த

.... முதல்வ; மணியா விடத்தை .... அணிவோனே;

நினது அடியை மாணி பற்ற, .... நெடியதொரு வாழ்வு அளித்து,

.... நிலம் இயமன் வீழ அற்றை .… உதை-பாதா;

.. நிமல!அயன் மாலி வர்க்கு .... நிழல்மலியு மாநெ ருப்பு

.... நிலையினுரு வாய்ம றைத்த .... பெருமானே.


மனனிடைவாவும் மிக்கு, மதியை அழி மோகம் உற்று, மலருளும் மூட அற்பருடன் ஆடி - மனத்தில் ஆசைகள் மிகுந்து, மதிய அழிக்கும் மோகம் அடைந்து, மும்மல இருளும் மூட, இவற்றின் காரணமாகக் கீழோர்களுடன் கூடித் திரிந்து; (மனன் - மனம்; ம் வரும் இடத்தில் ன் போலியெழுத்து); (கருவூர்த் தேவர் - திருவிசைப்பா - 9.17.3 - "மனனிடை அணுகி நுணுகியுள் கலந்தோன்"); (அவா - ஆசை); (மலவிருள் - மும்மலம் என்ற இருள்);

மனிதன் எனும் மேனி பெற்றும் வனமிருகமே நிகர்த்து வலிய வினையே பெருக்கி உழலாமல் - மனிதப்பிறவியின் பயனை உணராமல் காட்டுவிலங்குபோல் வாழ்ந்து, வலிய வினைகளையே பெருக்கி உழலாமல்;

உனது திருநாமம் நித்தல் உரைசெய, - உன் திருப்பெயரைத் தினமும் ஓதவும்; (நித்தல் - நித்தலும் - தினமும்; எந்நாளும்);

நன் மாலை கட்டி உபயகழலே துதிக்க, - நல்ல மாலைகள் தொடுத்து இருதிருவடிகளைத் துதிக்கவும்; (உபயம் - இரண்டு);

அடியார்கள் உறவுதனையே நயக்க – அடியார்கள் நட்பையே விரும்பவும்;

உறு பிறவிதோறும் முக்கண் உடைய உனையே நினைக்க வரம் ஈயாய் - வரும் பிறவிதோறும் முக்கண்ணனான உன்னையே நினைக்கவும் வரம் அருள்வாயாக; (உறுதல் - சம்பவித்தல்; நிகழ்தல்); (முக்கணுடைய – முக்கண்ணுடைய என்பது ஓசை கருதி ண் தொக்கு வந்தது);

முனம் அரிய தேரின் அச்சு முரிய ஒரு பாதம் இட்டு, முறுவல் அதனால் அரக்கர் புரம் நீறாய் முடிய - முன்பு தேவர்கள் செய்த அரிய தேரின் அச்சு முரியும்படி ஒரு தாளை வைத்து ஏறிச், சிரிப்பினால் அசுரர்களது முப்புரங்களும் சாம்பலாகி அழிய; (முனம் - முன்னம் - முன்பு); (முரிதல் - ஒடிதல்); (முடிதல் - அழிதல்); (சம்பந்தர் தேவாரம் - 1.24.6 - "செங்க ணரக்கர் புரத்தை எரித்தாரே");

அவண் மூவர் பத்தி முறுகியவர் வாழ வைத்த முதல்வ - அச்சமயம் அங்கிருந்த சிவபக்தர்கள் மூவரது ஆழ்ந்த பக்தியை மெச்சி அவர்களைக் காத்து வரமளித்த முதல்வனே; (அவண் - அவ்விடம்); (முறுகுதல் - முதிர்தல்; மிகுதல்); (சம்பந்தர் தேவாரம் - 1.69.1 - "மூவார் புரங்கள் எரித்த அன்று மூவர்க் கருள்செய்தார்");

மணியா விடத்தை அணிவோனே - நீலமணியாக ஆலகால நஞ்சை அணிபவனே; (மணியா - மணியாக – கடைக்குறை விகாரம்);

நினது அடியை மாணி பற்ற நெடியதொரு வாழ்வு அளித்து, நிலம் இயமன் வீழ அற்றை உதை-பாதா - உன் திருவடியைப் பற்றிக்கொண்ட மார்க்கண்டேயருக்குச் சாவாத பெருவாழ்வை அளித்து, இயமன் நிலத்தில் வீழுமாறு அன்று கூற்றுவனைத் திருவடியால் உதைத்தவனே; (மாணி - பிரமசாரி); (வீழ்தல் - விழுதல்); (அற்றை - அன்று; அந்நாளில்);

நிமல - தூயவனே;

அயன் மால் இவர்க்கு நிழல் மலியும் மா நெருப்பு நிலையின் உருவாய் மறைத்த பெருமானே -பிரமன் திருமால் இவர்களுக்கு ஒளி மிகுந்த பெரிய நெருப்புத்தூணின் உருக்கொண்டு நின்று அவர்களுக்கு உன்னை மறைத்துக்கொண்ட பெருமானே; (நிழல் - ஒளி); (நிலை - தூண்);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment