Friday, September 6, 2019

03.05.053 – பொது - அளிப்பார் அளிப்பார் எனப்போய் - (வண்ணம்)

03.05.053 – பொது - அளிப்பார் அளிப்பார் எனப்போய் - (வண்ணம்)

2007-08-29

3.5.53) அளிப்பார் அளிப்பார் எனப்போய் - (பொது)

----------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தனத்தா தனத்தா தனத்தா தனத்தா

தனத்தா தனத்தா .. தனதான )

(சரத்தே உதித்தாய் - திருப்புகழ் - கதிர்காமம்)


அளிப்பார் அளிப்பார் எனப்போய் அடுத்தார்

.. .. அவர்க்கே ஒளிப்பார் .. அவர்வாயில்

.. அதற்கே நடப்பாய் மனத்தே மிகத்தான்

.. .. அலைப்பாய் மரித்தே .. கழியாமல்

களிப்போ டிசைப்பா வினைத்தா ளிணைக்கே

.. .. கருத்தால் அமைத்தே .. பணிவேனே

.. கழிப்பா லையிற்கா ழியிற்பூ வணத்தே

.. .. கழற்றாள் நிலத்தோர் .. தொழமேயாய்

குளிப்பார் வினைக்கே டகற்றா றடைத்தோர்

.. .. குலப்பா வையைக்கூ .. றுடையானே!

.. குறப்பா வையைத்தோள் அணைத்தான் முனர்ச்சூர்

.. .. கொலற்கோர் நுனைக்கூர் .. அயிலீவாய்

விளித்தோ லமிட்டார் இடர்ப்பா டறத்தான்

.. .. மிடற்றே கறுத்தாய் .. மலர்தூவி

.. விருப்பால் அழைப்பார் அகத்தே இருப்பாய்

.. .. விருத்தா நமற்காய் .. பெருமானே.


பதம் பிரித்து:

அளிப்பார் அளிப்பார் எனப்போய் அடுத்தார்

.. .. அவர்க்கே ஒளிப்பார் .. அவர் வாயில்

.. அதற்கே நடப்பாய் மனத்தே மிகத்தான்

.. .. அலைப்பாய் மரித்தே .. கழியாமல்,


களிப்போடு இசைப்பாவினைத் தாளிணைக்கே

.. .. கருத்தால் அமைத்தே .. பணிவேனே;

.. கழிப்பாலையிற் காழியிற் பூவணத்தே

.. .. கழற்றாள் நிலத்தோர் .. தொழ மேயாய்;


குளிப்பார் வினைக்கேடு அகற்று ஆறு அடைத்து, ஓர்

.. .. குலப்பாவையைக் கூறு உடையானே;

.. குறப்பாவையைத் தோள் அணைத்தான் முனர்ச் சூர்

.. .. கொலற்கு ஓர் நுனைக்கூர் .. அயில் ஈவாய்;


விளித்து ஓலமிட்டார் இடர்ப்பாடு அறத்தான்

.. .. மிடற்றே கறுத்தாய்; .. மலர் தூவி

.. விருப்பால் அழைப்பார் அகத்தே இருப்பாய்;

.. .. விருத்தா; நமற் காய் .. பெருமானே.


அளிப்பார் அளிப்பார் னப்போய் அடுத்தார் அவர்க்கே ளிப்பார் - கொடுப்பார் கொடுப்பார் என்று எண்ணித் தம்மை அடைந்தவர்களுக்கே ஒன்று கொடாமல் ஒளிக்கின்றவர்கள்; (அடுத்தல் - நெருங்குதல்; சார்தல்);

அவர் வாயில் அதற்கே நடப்பாய் மனத்தே மிகத்தான் அலைப்பாய் மரித்தே கழியாமல் - அத்தகையவர்களது வீட்டுவாயிலுக்கே பலமுறை நடப்பதாகி மனத்தில் மிகவும் வருத்தமடைந்து இறந்து ஒழியாமல்; (நடப்பு - போக்கு வரவு); (அலைப்பு - வருத்தம்); (மரித்தல் - சாதல்);


களிப்போடு இசைப்பாவினைத் தாளிணைக்கே கருத்தால் அமைத்தே பணிவேனே - மகிழ்ந்து இசைப்பாடல்களைத் திருவடிக்கே விரும்பி அமைத்து வணங்குவேன்; (சுந்தரர் தேவாரம் - 7.34.1 - "தம்மையே புகழ்ந்திச்சை பேசினும் சார்கினுந் தொண்டர் தருகிலாப் பொய்ம்மையாளரைப் பாடாதே யெந்தை புகலூர் பாடுமின் புலவீர்காள்");

கழிப்பாலையில் காழியில் பூவணத்தே கழற்றாள் நிலத்தோர் தொழ மேயாய் - திருக்கழிப்பாலை, சீகாழி, திருப்பூவணம் முதலிய பல தலங்களில் கழல் அணிந்த திருவடியை மண்ணோர் தொழ எழுந்தருளியவனே; (கழற்றாள் - கழல் + தாள் - கழலை அணிந்த திருவடி);


குளிப்பார் வினைக்கேடு அகற்று ஆறு அடைத்து, ர் குலப்பாவையைக் கூறுடையானே - குளித்தவர்களுடைய பாவங்களைப் போக்கும் தீர்த்தமான கங்கையைச் சடையில் அடைத்து, உமையை ஒரு கூறாக உடையவனே; (காரைக்கால் அம்மையார் - அற்புதத் திருவந்தாதி - 11.4.50 - "முடிமேல் வலப்பால்அக் கோலமதி வைத்தான் தன்பங்கின் குலப்பாவை நீலக் குழல்");

குறப்பாவையைத் தோள் அணைத்தான் முனர்ச் சூர் கொலற்கு ஓர் நுனைக்கூர் அயில் ஈவாய் - வள்ளிக்குறத்திக்கு நாயகனான முருகனுக்குச் சூரனைக் கொல்வதற்காக முன்பு ஒப்பற்ற கூரிய நுனியையுடைய வேலைத் தந்தவனே; (சூர் - சூரபதுமன்); (நுனை - முனை); (அயில் - வேல்)


விளித்து ஓலமிட்டார் இடர்ப்பாடு அறத்தான் மிடற்றே கறுத்தாய் - உன் திருப்பெயரை அழைத்து ஓலமிட்ட தேவர்களுடைய துன்பம் தீரும்படி கண்டத்தில் கருமையை ஏற்றவனே; (விளித்தல் - கூப்பிடுதல்); (இடர்ப்பாடு - துன்புறுதல்); (மிடறு - கண்டம்); (கறுத்தல் - கருமையாதல்);

மலர் தூவி விருப்பால் ழைப்பார் அகத்தே இருப்பாய் - பூக்களைத் தூவி அன்போடு அழைக்கும் பக்தர்களது நெஞ்சில் குடிகொள்பவனே; (அகம் - மனம்);

விருத்தா - பழையவனே; முதியவனே;

நமற் காய் பெருமானே - காலனைச் சினந்து உதைத்த பெருமானே; (காய்தல் - கோபித்தல்; அழித்தல்); (நமற்காய் - நமன் + காய்; இரண்டாம் வேற்றுமைத்தொகையில் உயர்திணையில் பொருள்தெளிவு கருதி முதற்சொல்லின் ஈற்றிலுள்ள னகர ஒற்று றகர ஒற்றாகத் திரியும்);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment