Sunday, September 1, 2019

03.08.001 - நீரார் சடையரே (வக்கிரோக்தி)

03.08 – பலவகை

2007-07-27

3.8.1 - நீரார் சடையரே (வக்கிரோக்தி)

----------------------------------------

(கலி விருத்தம் - "மா விளம் காய் காய்" என்ற வாய்பாடு)


நீரார் சடையரே என்றால்ஆம் என்றாரே

வாரார் மங்கையோர் பாலென்றார் வந்தாரே

தாரார் செல்வரே என்றேநான் எண்ணுங்கால்

ஊரா அமர்ந்திருந் துள்ளத்தைக் கொண்டாரே!


நீரார் சடையரே - நீர் ஆர் சடையரே - 1. சடை உடையவரே! நீங்கள் யார்? 2. கங்கை பொருந்திய சடை உடையவரே! (நீர் - 1. நீங்கள்; 2. கங்கை); (ஆர் - 1. யார்; 2. ஆர்தல் - பொருந்துதல்; நிறைதல்);

என்றால் ஆம் என்றாரே - என்று நான் கேட்டால், "ஆம்" என்றார்;

வாரார் மங்கையோர் பால் - 1. பெண்கள் பக்கத்தில் வரமாட்டார்; 2. கச்சு அணிந்த பார்வதி ஒரு-பக்கத்தில்; (வார் - முலைக்கச்சு); (பால் - பக்கம்);

ன்றார் வந்தாரே - என்று சொன்னார்; ஆனால் அருகே வந்தார்;

தாரார் செல்வரே - 1. ஒன்றும் தரமாட்டார்; போவார்; 2. (தார் ஆர் செல்வர்) மாலை அணிந்த செல்வர்;

என்றே நான் எண்ணுங்கால் - என்றே நான் எண்ணியபொழுது;

ஊரா அமர்ந்திருந்து - 1. (இங்கேயே தம்) ஊராகத் தங்கியிருந்து; 2. ஊர் ஆ அமர்ந்திருந்து - ஊர்கின்ற இடபத்தின்மேல் வீற்றிருந்து;

ள்ளத்தைக் கொண்டாரே - என் உள்ளத்தைக் கவர்ந்துவிட்டார்;


வி. சுப்பிரமணியன்


பிற்குறிப்புகள் :

1. ஈசன்மேல் அன்புற்ற ஒரு பெண்ணின் கூற்றாக அமைந்த பாடல். (அகத்துறைப் பாடல்)


2. வக்கிரோக்தி - A figure of speech in which a repartee is based on a double entendre; சொன்ன சொற்களுக்கு வெவ்வேறு பொருள்கொண்டு மறுமொழி உரைப்பதாகிய அணி.


3. சேரமான் பெருமாள் நாயனார் அருளிய பொன்வண்ணத்தந்தாதியில் ஒரு பாடல் - 11.6.46 -

அந்தண ராமிவர் ஆரூர் உறைவதென் றேனதுவே

சந்தணை தோளியென் றார்தலை யாயசலவர் என்றேன்

பந்தணை கையாய் அதுவுமுண் டென்றார் உமையறியக்

கொந்தணை தாரீர் உரைமினென் றேன்துடி கொட்டினரே.

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment