Friday, October 4, 2019

P.245 - திருந்துதேவன்குடி - புவனம் படைத்த

2014-08-19

P.245 - திருந்துதேவன்குடி

(கற்கடேஸ்வரர் கோயில் - திருவிசநல்லூர் அருகுள்ளது)

----------------------

(கலிவிருத்தம் - மா மா மா மாங்கனி - வாய்பாடு)


1)
புவனம் படைத்த புராணன் பொருவெள்விடை

இவரும் இறைவன் ஏழை இடமுள்ளவன்

சிவனல் வயல்சூழ் திருந்து தேவன்குடி

நவனை நண்ண நாளும் நலமாகுமே.


புவனம் படைத்த புராணன் - உலகங்களைப் படைத்த பழையவன்;

பொரு வெள் விடை இவரும் இறைவன் - போர் செய்யும் வெள்ளை இடபத்தை வாகனமாக உடையவன்; (இவர்தல் - ஏறிச் செலுத்துதல்);

ஏழை இடம் உள்ளவன் - உமையை இடப்பக்கம் உடையவன்;

சிவன் - சிவபெருமான்;

நல்-வயல் சூழ் திருந்துதேவன்குடி - நன்செய் சூழ்ந்த திருந்துதேவன்குடியில் உறைகின்ற;

நவனை நண்ண நாளும் நலம் ஆகுமே - என்றும் புதுமையுள்ளவனான ஈசனை அடைந்தால் எந்நாளும் நன்மையே உண்டாகும்; (நவம் - புதுமை; நவன் - புதுமையுடையவன்); (நண்ணுதல் - அடைதல்); (சுந்தரர் தேவாரம் - 7.72.2 - "புரமவை எரிதர வளைந்தவில்லினனவன்" - வில்லினன் நவன் - எனப் பிரிக்க); (அப்பர் தேவாரம் - 6.69.9 - "கலந்துருகி நைவார்தம் நெஞ்சினுள்ளே பானவனை" - பால் நவன் - எனப் பிரித்து உரைத்தலுமாம்); (கி.வா.ஜகந்நாதன் - மருதமலை முருகன் அந்தாதி - 79 - "பவனை .. .. அருட்கடலை நவனைக் குளிர்மருதாசல ஏந்தலை" - நவனை - புதுமையுடையவனை);


2)

கொன்றை கோங்கம் குரவம் குளிர்கூவிளம்

துன்று சடையன் தூயன் சுடுநீற்றினன்

தென்றல் உலவும் திருந்து தேவன்குடி

நின்ற வன்பேர் நினைய வினைநீங்குமே.


கொன்றை கோங்கம் குரவம் குளிர்-கூவிளம் துன்று சடையன் - கொன்றை, கோங்கம், குரவம் முதலிய மலர்களையும் குளிர்ந்த வில்வத்தையும் சூடிய சடையினன்; (கூவிளம் - வில்வம்); (துன்றுதல் - செறிதல்; பொருந்துதல்); (சம்பந்தர் தேவாரம் - 2.6.1 - "கோடல் கோங்கங் குளிர்கூவிள மாலை .... சூடும் ஒருவனார்);

தூயன் - பரிசுத்தன்;

சுடுநீற்றினன் - வெந்த திருநீற்றைப் பூசியவன்;

தென்றல் உலவும் திருந்துதேவன்குடி நின்றவன் - தென்றல் உலவும் திருந்துதேவன்குடியில் நீங்காது உறைகின்றவன்;

பேர் நினைய வினை நீங்குமே - அப்பெருமானது திருநாமத்தைத் தியானித்தால் வினைகள் அழியும்;


3)

சாந்த நீற்றன் தலைவன் தடவெற்புறை

ஏந்தல் இமையோர் ஏத்தும் எருதூர்தியான்

சேந்தன் தாதை திருந்து தேவன்குடி

வேந்தன் பாதம் தொழுவார் வினைவீடுமே.


சாந்த-நீற்றன் - திருநீற்றையே சந்தனமாகப் பூசியவன்; (சாந்தம் - சந்தனம்);

தடவெற்பு உறை ஏந்தல் - பெரிய கயிலைமலையில் உறையும் தலைவன்; (தடம் - பெரிய); (ஏந்தல் - பெருமையிற் சிறந்தோன்);

இமையோர் ஏத்தும் எருது-ஊர்தியான் - தேவர்கள் துதிக்கும் இடபவாகனன்;

சேந்தன் தாதை - முருகனுக்குத் தந்தை; (சேந்தன் - முருகன்); (தாதை - தந்தை);

திருந்துதேவன்குடி வேந்தன் - திருந்துதேவன்குடியில் உறைகின்ற அரசன்;

பாதம் தொழுவார் வினை வீடுமே - அப்பெருமானது திருப்பாதத்தை வணங்கும் பக்தர்களது வினை அழியும்; (வீடுதல் - அழிதல்);


4)

விழுங்கி விடத்தை மிடற்றில் மிளிர்வித்தவன்

விழுந்த மதியை வேணி மிசைவைத்தவன்

செழுந்தண் வயல்சூழ் திருந்து தேவன்குடிக்

கொழுந்தைக் குறுகி னார்க்குக் குறையில்லையே.


விழுங்கி விடத்தை மிடற்றில் மிளிர்வித்தவன் - ஆலகாலத்தை உண்டு கண்டத்தில் ஒளிரச்செய்தவன்; (மிடறு - கண்டம்); (மிளிர்வித்தல் - மிளிரச்செய்தல்);

விழுந்த மதியை வேணிமிசை வைத்தவன் - தேய்ந்து அழியவிருந்தபொழுது திருவடியில் விழுந்து இறைஞ்சிய சந்திரனைச் சடையின்மேல் அணிந்தவன்; (விழுதல் - சோர்ந்துவீழ்தல்; கெடுதல்);

செழும்-தண்-வயல் சூழ் திருந்துதேவன்குடிக் கொழுந்தை - செழுமையான குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருந்துதேவன்குடியில் உறைகின்ற தலைவனை; (கொழுந்து - இளந்தளிர்; தலையாயவன்); (சுந்தரர் தேவாரம் - 7.47.1 - "கோட்டூர்க் கொழுந்தே"); (சுந்தரர் தேவாரம் - 7.26.8 - "கொழுந்தே என் குணக்கடலே" - கொழுந்து, உச்சிக்கண் நிற்பதாகலின், உயர்ந்த பொருளைக், கொழுந்து என உவமம் பற்றிக் கூறல் வழக்கு);

குறுகினார்க்குக் குறை இல்லையே - அடைந்தவர்களது குறைகள் தீரும்; (குறுகுதல் - அணுகுதல்; அடைதல்);


5)

வரையின் மகளை வாமம் மகிழுஞ்சிவன்

புரையில் புகழான் மதியைப் புனைவேணியில்

திரையன் வயல்சூழ் திருந்து தேவன்குடி

அரையன் அடியை அடைய அறுமேதமே.


வரையின் மகளை வாமம் மகிழும் சிவன் - மலைமகளைத் தன் இடப்பாகமாக விரும்பும் சிவன்; (சுந்தரர் தேவாரம் - 7.73.1 - "வரையின் மடமகள் கேள்வன்");

புரை இல் புகழான் - ஒப்பற்ற புகழை உடையன் / குற்றமற்ற புகழை உடையவன்; (புரை - ஒப்பு; குற்றம்);

மதியைப் புனை வேணியில் திரையன் - சந்திரனை அணிந்த சடையில் கங்கையை உடையவன்; (வேணி - சடை); (திரை - நதி);

வயல்சூழ் திருந்துதேவன்குடி - வயல்கள் சூழ்ந்த திருந்துதேவன்குடியில் உறைகின்ற

அரையன் அடியை அடைய அறும் ஏதமே - அரசன் திருவடியை அடைந்தால் பாவம், துன்பம் எல்லாம் நீங்கும்; (அரையன் - அரசன்); (ஏதம் - குற்றம், கேடு, துன்பம்);


6)

பூவிட் டடியைப் போற்றிப் புகழ்வானவர்

ஆவி காத்தின் னமுதம் அருள்செய்தவன்

தேவி பங்கன் திருந்து தேவன்குடிக்

கோவின் நாமம் கூறக் குறைவில்லையே.


பூ இட்டு அடியைப் போற்றிப் புகழ் வானவர் ஆவி காத்து இன் அமுதம் அருள்செய்தவன் - மலர் தூவித் திருவடியை வழிபட்ட தேவர்களது உயிரைக் காத்து இனிய அமுதை அருளியவன்;

தேவி பங்கன் - உமைபங்கன்;

திருந்துதேவன்குடிக் கோவின் நாமம் கூறக் குறைவு இல்லையே - திருந்துதேவன்குடியில் உறையும் அரசனது திருநாமத்தைக் கூறினால் குறை தீரும்; (கோ - அரசன்);


7)

அட்ட மூர்த்தி அரையில் அரவொன்றினைக்

கட்டும் அழகன் கண்டம் கறையாகிய

சிட்டன் வயல்சூழ் திருந்து தேவன்குடி

நட்டன் நாமம் கூற நலிவில்லையே.


அட்டமூர்த்தி - ஐம்பூதங்கள், சூரியன், சந்திரன், ஆன்மா என்ற எட்டுப்பொருள்களைத் தன் வடிவமாக உடையவன்;

அரையில் அரவு ஒன்றினைக் கட்டும் அழகன் - அரையில் ஒரு பாம்பை அரைநாணாகக் கட்டியவன்;

கண்டம் கறையாகிய சிட்டன் - நீலகண்டம் உடைய பெரியோன்; ( சிட்டன் - சிஷ்டன் - சிஷ்டாசாரமுடையவன் - உயர்ந்தவன்); (शिष्टः 1 An eminent or distinguished person. -2 A wise man);

திருந்துதேவன்குடி நட்டன் நாமம் கூற நலிவு இல்லையே - திருந்துதேவன்குடியில் உறையும் கூத்தனது திருநாமத்தைக் கூறினால் துன்பம் தீரும்; (நட்டன் - கூத்தன்); (நலிவு - துன்பம்);


8)

தென்னி லங்கைக் கோன்றன் திரள்தோள்களும்

சென்னி பத்தும் சிதைத்த சிவனெம்மிறை

செந்நெல் வயல்சூழ் திருந்து தேவன்குடி

மன்னன் பாதம் வாழ்த்த வருமின்பமே.


தென்-லங்கைக்கோன்-ன் திரள்-தோள்களும் சென்னி பத்தும் சிதைத்த சிவன் - அழகிய இலங்கைக்கு மன்னனான இராவணனது திரண்ட புஜங்களையும் பத்துத்தலைகளையும் நசுக்கி அழித்த சிவன்; (தென் - அழகிய); (சிதைத்தல் - அழித்தல்; குலைத்தல்);

எம் இறை - எம் கடவுள்;

செந்நெல் வயல் சூழ் திருந்துதேவன்குடி மன்னன் - சிறந்த நெல் விளையும் வயல் சூழ்ந்த திருந்துதேவன்குடியில் உறைகின்ற அரசன்; (செந்நெல் - செஞ்சாலிநெல் - உயர்ந்தவகை நெல்);

பாதம் வாழ்த்த வரும் இன்பமே - அப்பெருமானது திருவடியை வாழ்த்தினால் இன்பம் வந்தடையும்;


9)

செய்ய மலர்மேல் திகழ்வான் திகிரிப்படைக்

கையன் இவர்கள் காணாக் கனலானவன்

செய்ய ணிந்த திருந்து தேவன்குடி

ஐயன் அடியை அடைவார்க் கழகாகுமே.


செய்ய மலர்மேல் திகழ்வான் - சிவந்த தாமரைமலர்மேல் இருக்கும் பிரமன்; (செய்ய - சிவந்த);

திகிரிப்படைக் கையன் - சக்கராயுதத்தை ஏந்திய திருமால்; (திகிரி - சக்கரம்);

இவர்கள் காணாக் கனல் ஆனவன் - இவ்விருவரால் அடிமுடியைக் காண இயலாத ஜோதி; (சம்பந்தர் தேவாரம் - 1.80.9 - "கோணாகணையானும் குளிர்தாமரையானும் காணார் கழலேத்தக் கனலாய் ஓங்கினான்");

செய் அணிந்த திருந்துதேவன்குடி ஐயன் - வயல்கள் சூழ்ந்த திருந்துதேவன்குடியில் உறைகின்ற தலைவன்; (செய் - வயல்);

அடியை அடைவார்க்கு அழகு ஆகுமே - அப்பெருமானது திருவடியைச் சரணடைந்தவர்களுக்கு சுகம் உண்டாகும்; (அழகு - சுகம்); (சம்பந்தர் தேவாரம் - 2.10.10 - "ஐயன் சேவடி ஏத்தவல் லார்க்கழ காகுமே" - அழகு - பேரின்ப வாழ்வு);


10)

தூறே சொல்லும் துரிசர் சொலைநீங்குமின்

ஆறோ டரவம் முடிமேல் அணியும்பரன்

சேறார் வயல்சூழ் திருந்து தேவன்குடி

ஏறூர் இறையை ஏத்த இடரில்லையே.


தூறே சொல்லும் துரிசர் சொலை நீங்குமின் - பழித்துப் பேசும் வஞ்சகர்களது வார்த்தைகளை நீங்குங்கள்; (தூறு - பழிச்சொல்); (துரிசர் - குற்றம் உடையவர்); (சொலை - சொல்லை; இடைக்குறை விகாரம்);

றோடு அரவம் முடிமேல் அணியும் பரன் - திருமுடிமேல் கங்கையையும் பாம்பையும் அணிந்த பரமன்; (ஆறோடரவம் - 1. ஆற்றையும் பாம்பையும்; 2. ஆறு ஓடு அரவம்; ஓடு - மண்டையோடு);

சேறு ஆர் வயல் சூழ் திருந்துதேவன்குடி - சேறு மிக்க வயல் சூழ்ந்த திருந்துதேவன்குடியில் உறைகின்ற;

ஏறு ஊர்- இறையை ஏத்த இடர் இல்லையே - இடபவாகனம் உடைய இறைவனை வாழ்த்தினால் துன்பம் தீரும்; (ஊர்தல் - ஏறுதல்); (இறை - இறைவன்);



11)

மாயான் பிறவான் அங்கம் மறையோதிய

வாயான் மணமார் வாளி மதனைச்சுடு

தீயான் வயல்சூழ் திருந்து தேவன்குடி

மேயான் நாமம் சொல்வார் வினைவீடுமே.


மாயான் பிறவான் - இறப்பும் பிறப்பும் இல்லாதவன்; (மாய்தல் - இறத்தல்);

அங்கம் மறை ஓதிய வாயான் - நால்வேதமும் ஆறங்கமும் ஓதியவன்; (அங்கம் - ஆறங்கம் / வேதாங்கம் - சிட்சை வியாகரணம் சந்தசு நிருத்தம் சோதிடம் கற்பம் என ஆறுவகைப்பட்ட வேதப்பொருளை உணர்தற்குரிய கருவி); (சம்பந்தர் தேவாரம் - 2.12.8 - "மறை ஓதிய வாயானை");

மணம் ஆர் வாளி மதனைச் சுடு தீயான் - மணம் பொருந்திய அம்புகளை (மலர்க்கணைகளை) உடைய மன்மதனை எரித்த நெருப்பாக இருப்பவன்; (வாளி - அம்பு); (தீயான் - 1. தீ ஆனவன்; 2. தீயை ஏந்தியவன்);

திருந்துதேவன்குடி மேயான் - திருந்துதேவன்குடியில் எழுந்தருளியிருப்பவன்;

நாமம் சொல்வார் வினை வீடுமே - அப்பெருமானது திருநாமத்தை சொல்பவர்களது வினை அழியும்;


பிற்குறிப்பு : யாப்புக்குறிப்பு :

சம்பந்தர் தேவாரத்தில் சில பதிகங்களில் அடியீற்றுச்சீர் மாங்கனிச்சீராகக் கருதுமாறும் வரக்காணலாம். உதாரணம்: 2.118.1 - "பொடிகள்பூசிப் பலதொண்டர் கூடிப் புலர்காலையே". சம்பந்தரின் இப்பதிகத்தை வேறுவிதமாகச் சீர்பிரித்து ஈற்றுச் சீரை விளச்சீராகவும் கருதலாம்.


வி. சுப்பிரமணியன்

-------------- --------------

No comments:

Post a Comment