03.04 – சிவன் சிலேடைகள்
2008-01-16
03.04.74 - சிவன் - பழைய தமிழ் இலக்கிய நூல் - சிலேடை
-------------------------------------------------------
பாவையும் பக்கத்தில் கொண்டிருக்கும் அஞ்செழுத்துக்
கோவை அதுஎன்றும் கூறுவர் - சேவை
புரிவதென்றோ என்றும் புகல்வர் பழைய
அரிய தமிழ்நூல் அரன்!
சொற்பொருள்:
பா - பாட்டு;
பாவை - பெண் - பார்வதி;
பாவையும் - 1. பாடலையும்; / 2. பார்வதியையும் (வேற்றுமைத்தொகை - 'ஐ' உருபு தொக்கு நிற்கின்றது);
பக்கம் - 1. புத்தகத்தின் பக்கம்; / 2. அருகு; உடலின் ஒரு பக்கம்;
கோ - தலைவன்;
கோவை - கோக்கப்பட்டது; தொடுக்கப்பட்டது;
அஞ்செழுத்துக்கோவை - 1. அஞ்சு + எழுத்து + கோவை - வினைத்தொகை - அஞ்சுகின்ற எழுத்துக் கோவை (செய்யுள்); / 2. நமச்சிவாய என்ற பஞ்சாட்சரத் தலைவனை;
சேவை - 1. சே! வை! / 2. தொண்டு;
புரிவது - 1. பொருள் விளங்குவது; / 2. செய்வது;
அரிய - அருமையான;
தமிழ் இலக்கிய நூல்:
பாவையும் பக்கத்தில் கொண்டிருக்கும் - (அதன்) பக்கங்களில் பாடல்கள் இருக்கும்;
"அஞ்சு எழுத்துக் கோவை அது" என்றும் கூறுவர் - அஞ்சுகின்ற, எழுத்துகளால் கோக்கப்பட்டது அது என்றும் (சிலர்) சொல்வார்கள்; (- 'அது மிகவும் கடினமான நூல்' என்பார்கள்).
"சே! வை! புரிவது என்றோ" என்றும் புகல்வர் - (அதனைப் படிப்பதற்காக எடுக்கப் போகும் நண்பரிடம்) "சே! வை! (இது எல்லாம்) நமக்கு எப்பொழுது புரியப்போகின்றது!" என்றும் சொல்வார்கள்;
பழைய அரிய தமிழ் நூல் - (அத்தகையது) பழைய அருமையான தமிழ் இலக்கியப் புத்தகம்;
சிவன்:
பாவையும் பக்கத்தில் கொண்டிருக்கும் அஞ்செழுத்துக் கோவை - பார்வதியையும் தன் உடலில் ஒரு புறம் கொண்டு இருக்கின்றவனும், 'நமச்சிவாய' என்ற அஞ்சு எழுத்துத் தலைவனும் ஆன சிவனை;
"அது" என்றும் கூறுவர் - (வட மொழியில்) 'அது' என்றும் சொல்வார்கள்; (தமிழிலும் 'மெய்ப்பொருள்' என்பார்கள்). (வடமொழியில் பரம்பொருளை "அது" என்றும் சொல்வது உண்டு. "தத்துவமஸி" என்ற மஹாவாக்கியத்தில்: தத் - அது. த்வம் - நீ, அஸி - ஆகின்றாய்);
"சேவை புரிவது என்றோ" என்றும் புகல்வர் - (பக்தர்கள்) 'தொண்டு செய்வது எந்நாளோ' என்று சொல்லித் தொழுவார்கள்;
பழைய அரிய அரன் - அனைத்திற்கும் முற்பட்ட தொன்மையான, அருமையான, ஹரன்;
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
No comments:
Post a Comment