Friday, October 11, 2019

P.247 - கற்குடி - நார்மலி நெஞ்சினர்

2014-08-24

P.247 - கற்குடி (உய்யக்கொண்டான்மலை)

------------------

(அறுசீர் விருத்தம் - தானன தானன தானா x2)

(சம்பந்தர் தேவாரம் - 2.67.1 - "மண்ணுமோர் பாகம் உடையார்");

(அப்பர் தேவாரம் - 4.2.1 - "சுண்ணவெண் சந்தனச் சாந்தும்");


1)
நார்மலி நெஞ்சினர் நாளும் நாவினில் நாமம் அணிந்து

நீர்மலர் கொண்டடி போற்ற நினைவரம் தந்தருள் செய்வான்

கூர்மழு ஏந்திய கையன் கூவிள மாலையன் நஞ்சால்

கார்முகில் போல்திகழ் கண்டன் கற்குடி மேய பிரானே.


நார் மலி நெஞ்சினர் நாளும் நாவினில் நாமம் அணிந்து - அன்புடைய பக்தர்கள் தினமும் திருவைந்தெழுத்தை ஓதி; (நார் - அன்பு); (சம்பந்தர் தேவாரம் - 4.41.11 - "நார்மலிந்தோங்கு நான்மறைஞான சம்பந்தன்"); (திருவெம்பாவை - 8.7.2 - "பாசம் பரஞ்சோதிக்கு என்பாய்" என்ற இடத்தில் பாசம் என்ற சொல்லும் இதே போல் அன்பு என்ற பொருளில் வரக்காணலாம்);

நீர் மலர்கொண்டு அடி போற்ற நினை-வரம் தந்தருள் செய்வான் - நீராலும் பூவாலும் வழிபாடு செய்ய, அவர்கள் விரும்பிய வரங்களைத் தருபவன்;

கூர்மழு ஏந்திய கையன் - கையில் கூரிய மழுப்படையை ஏந்தியவன்;

கூவிள-மாலையன் - வில்வமாலை அணிந்தவன்; (கூவிளம் - வில்வம்);

நஞ்சால் கார்முகில் போல் திகழ்-கண்டன் - ஆலகாலத்தால் கரிய மேகம் போல் திகழ்கின்ற கண்டத்தை உடையவன்; (கார்முகில் - கார்காலத்து மேகம்);

கற்குடி மேய பிரானே - திருக்கற்குடியில் எழுந்தருளிய பெருமான்; (பிரான் - தலைவன்; கடவுள்);


2)

படபடெ னத்துடி ஆர்த்துப் பல்கணம் சூழ்ந்திசை பாட

நடுவிருள் மாநடம் ஆடும் நாயகன் நான்மறை நாவன்

நடுநடுத் தோடிய தேவர் நனிமகிழ் வெய்திடு மாறு

கடுவிடம் உண்டருள் கண்டன் கற்குடி மேய பிரானே.


படபடெனத் துடி ஆர்த்துப் பல்கணம் சூழ்ந்து இசை பாட நடுவிருள் மாநடம் ஆடும் நாயகன் - படபடவென்று உடுக்குகள் ஒலித்துப் பல பூதகணங்கள் சுற்றி நின்று இசை பாட நள்ளிருளில் கூத்து ஆடும் தலைவன்; (துடி - உடுக்கை); (ஆர்த்தல் - ஒலித்தல்); (நடுவிருள் - நள்ளிருள்); (சம்பந்தர் தேவாரம் - 2.84.11 - "நடுவிருள் ஆடும் எந்தை");

நான்மறை நாவன் - நால்வேதங்களைப் பாடியருளியவன்;

நடுநடுத்து ஓடிய தேவர் நனி-மகிழ்வெய்திடுமாறு கடுவிடம் உண்டருள் கண்டன் - அஞ்சி ஓடிய தேவர்கள் மிகவும் மகிழும்படி கொடிய நஞ்சை உண்டருளிய கண்டன்; (நடுநடுத்தல் - நடுங்குதல்; மிக அஞ்சுதல்); (நனி - மிக); (கடுவிடம் - கொடிய நஞ்சு);

கற்குடி மேய பிரானே - திருக்கற்குடியில் எழுந்தருளிய பெருமான்; (பிரான் - தலைவன்; கடவுள்);


3)

பருமணி ஆர்முடி போலப் பன்னகம் ஆர்சடை அண்ணல்

அருமணி மாணியைக் காத்த அரண்அவன் ஈரிரு வர்க்குக்

குருமணி யாய்அறம் சொன்ன குழகன் அணங்கொரு கூறன்

கருமணி காட்டிய கண்டன் கற்குடி மேய பிரானே.


பருமணி ஆர் முடி போலப் பன்னகம் ஆர் சடை அண்ணல் - பெரிய மணிகள் பொருந்திய கிரீடம் போலப் பாம்பைச் சடைமேல் அணிந்த கடவுள்; (பன்னகம் - பாம்பு);

அருமணி மாணியைக் காத்த அரண் அவன் - அரிய மணி போன்ற மார்க்கண்டேயரைக் காத்த அரண் போன்றவன்; (மாணி - மார்க்கண்டேயர்);

ஈரிருவர்க்குக் குருமணியாய் அறம் சொன்ன குழகன் - முனிவர்கள் நால்வர்க்குக் குருவாகி மறைப்பொருளை உபதேசித்த இளைஞன்;

அணங்கு ஒரு கூறன் - அர்த்தநாரீஸ்வரன்;

கருமணி காட்டிய கண்டன் - நீலகண்டன்;

கற்குடி மேய பிரானே - திருக்கற்குடியில் எழுந்தருளிய பெருமான்;


4)

குடமுழ வம்பறை கொட்டிக் கூளிகள் சூழ்ந்திசை பாட

உடல்சுடு கானிடை அல்லில் ஒள்ளெரி ஏந்தி நடிப்பான்

அடல்விடை ஒன்றுடை அண்ணல் அடிதொழு வானவர் உய்யக்

கடல்விடம் உண்டருள் கண்டன் கற்குடி மேய பிரானே.


பதம் பிரித்து:

குடமுழவம் பறை கொட்டிக் கூளிகள் சூழ்ந்து இசை பாட,

உடல் சுடு-கானிடை அல்லில் ஒள்-எரி ஏந்தி நடிப்பான்;

அடல்-விடை ஒன்றுடை அண்ணல்; அடிதொழு வானவர் உய்யக்

கடல்விடம் உண்டருள் கண்டன்; கற்குடி மேய பிரானே.


குடமுழவம் - குடமுழா என்ற வாத்தியம்; (Large hemispherical loud-sounding drum);

கூளி - பூதகணங்கள்;

உடல்சுடுகான் - உடலை எரிக்கின்ற சுடுகாடு;

அல் - இரவு;

ஒள் எரி - ஒளி வீசும் தீ;

நடித்தல் - ஆடுதல்;

அடல்-விடை - வலிய இடபம்;


5)

மறையணி நாவினர் என்றும் வாழ்த்தி வணங்கிடும் நாதன்

நறையணி நற்றமிழ்ப் பித்தன் நம்பிய வர்க்கருள் அத்தன்

சிறையணி வண்டினம் நாடும் தேன்திகழ் கொன்றை அணிந்தான்

கறையணி கின்ற மிடற்றன் கற்குடி மேய பிரானே.


மறை - வேதம்;

நறைணி நற்றமிழ்ப் பித்தன் - மணம் மிக்க தமிழ்ப்பாமாலைகளை விரும்புபவன்; (நறை - தேன்; வாசனை);

நம்பியவர்க்கு அருள் அத்தன் - விரும்பிப் பக்தியோடு வணங்கும் பக்தர்களுக்கு அருள்கின்ற தந்தை; (நம்புதல் - விரும்புதல்);

சிறை - இறகு;

மிடற்றன் - கண்டன்; (மிடறு - கண்டம்);


6)

ஆவினில் ஐந்துகந் தாடி அங்கமும் வேதமும் ஓதி

சேவினை ஏறிவந் தையம் தேர்ந்துழல் கின்றவன் அங்கை

மூவிலை வேலினன் நக்கு முப்புரம் தீப்புகச் செய்தான்

காவியங் கண்ணியொர் பங்கன் கற்குடி மேய பிரானே.


ஆடி, ஓதி, செய்தான் - ஆடியவன், ஓதியவன், செய்தவன்;

ஆவினில் ஐந்து - ஆனஞ்சு - பால், தயிர், நெய் முதலியன;

அங்கமும் வேதமும் - நான்மறையும் ஆறங்கமும்;

சேவினை ஏறி - இடபவாகனத்தின்மேல் ஏறி; (சே - எருது); (சேவின்மேல் என்னாமல் சேவினை என்று வந்ததை உருபு மயக்கமாகக் கொள்ளல் ஆம்); (அப்பர் தேவாரம் - 4.89.6 - "விடையினை ஏறிப் பல்பூதப் படைநடுவே போந்தார்");

ஐயம் தேர்தல் - பிச்சை ஏற்றல்;

மூவிலைவேல் - திரிசூலம்;

நக்கு - சிரித்து;

காவியங்-கண்ணி - குவளைப்பூப் போலும் கண்களை உடையவளாகிய உமையம்மை; (காவி - கருங்குவளை); (சுந்தரர் தேவாரம் - 7.68.3 - "காவியங் கண்ணி பங்கனை");


7)

அந்தம் இலாவொரு தேவன் ஆனையின் ஈருரி போர்த்தான்

முந்தெயில் மூன்றெரி செய்த மொய்ம்பினன் நான்மறை நாவன்

ஐந்தொழில் செய்திடும் ஐயன் ஆறுமு கந்திகழ் கின்ற

கந்தனைப் பெற்றவள் பங்கன் கற்குடி மேய பிரானே.


* 1 முதல் 6 வரை எண்ணலங்காரம் அமைந்த பாடல்;

ஈருரி - உரித்த தோல்; ஈரம் பொருந்திய தோல்;

முந்து எயில் மூன்று எரிசெய்த மொய்ம்பினன் - முன்னம் முப்புரங்களை எரித்த வீரன்; (மொய்ம்பு - வலிமை; தோள்);

ஐந்தொழில் - பஞ்சகிருத்தியம் - சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம், திரோபவம், அனுக்கிரஹம் என்ற கடவுளின் ஐந்தொழில்;

கந்தனைப் பெற்றவள் பங்கன் - அப்பர் தேவாரம் - 5.19.9 - "நங்கடம்பனைப் பெற்றவள் பங்கினன்";


8)

மெய்வலி தன்னை நினைந்து வெற்பை இடந்த அரக்கன்

நைவுற ஓர்விரல் ஊன்றி நல்லிசை கேட்டருள் நாதன்

நெய்யணி மூவிலை வேலன் நீறணி மேனியன் ஓர்பால்

கையினில் சங்கணி கோலன் கற்குடி மேய பிரானே.


மெய்வலி தன்னை நினைந்து வெற்பை இடந்த அரக்கன் - தன் உடல் வலிமையை எண்ணிக் கயிலைமலையைப் பெயர்த்த இராவணனை;

நைவுற - வருந்தும்படி; (நைவு - வருந்துகை - Suffering);

நெய் அணி மூவிலை வேலன் - நெய் (எண்ணெய்) தடவப்பெற்ற திரிசூலத்தை ஏந்தியவன்; (ஆயுதங்களுக்கு எண்ணெய் பூசி வைத்தல் வழக்கம்);

நீறு அணி மேனியன் - திருநீற்றை மேனியில் பூசியவன்;

ஓர்பால் கையினில் சங்கு அணி-கோலன் - ஒரு பக்கம் வளையல் அணிந்த கோலத்தை உடையவன்; (சங்கு - வளையல்); (சூலம்-சூலன், சீலம்-சீலன், வேடம்-வேடன், என்பன போல், கோலம்-கோலன்); (சம்பந்தர் தேவாரம் - 3.81.1 - "சங்கமரு முன்கை மடமாதை ஒருபால் உடன் விரும்பி");


9)

விண்ணுயர் அன்னம தாகி மேலினை நேடிய வேதன்

மண்ணை இடந்தடி நேடு மாலறி யாஅழல் வண்ணன்

பண்ணமர் செந்தமிழ் பாடும் பத்தருக் கின்னருள் செய்வான்

கண்ணொரு மூன்றுடை அண்ணல் கற்குடி மேய பிரானே.


விண் உயர் அன்னம்அது ஆகி மேலினை நேடிய வேதன் - வானில் உயர்ந்த அன்னப்பறவை ஆகி திருமுடியைத் தேடிய பிரமன்; (நேடுதல் - தேடுதல்); (வேதன் - பிரமன்);

மண்ணை இடந்து அடி நேடு மால் அறியா அழல்வண்ணன் - நிலத்தை அகழ்ந்து திருவடியைத் தேடிய திருமால் இவர்களால் அறியப்படாத ஜோதிவடிவினன்;

பண் அமர் செந்தமிழ் பாடும் பத்தருக்கு இன்னருள் செய்வான் - பண் பொருந்திய தமிழ்ப்பாமாலைகளைப் பாடும் பக்தர்களுக்கு இனிய அருள் செய்பவன்;

கண்ணொரு மூன்றுடை அண்ணல் - முக்கட் பரமன்;

கற்குடி மேய பிரானே - திருக்கற்குடியில் எழுந்தருளிய பெருமான்;


10)

பற்பல பொய்களைப் பேசிப் பாழ்ங்குழிக் கேஅழைக் கின்ற

அற்பர்கள் சொல்மதி யேன்மின் அஞ்செழுத் தோதி வணங்கில்

நற்பதம் நல்கிடும் நம்பன் நாவின் தனியர சர்க்குக்

கற்புணை தந்துயிர் காத்த கற்குடி மேய பிரானே.


பற்பல பொய்களைப் பேசிப் பாழ்ங்குழிக்கே அழைக்கின்ற அற்பர்கள் சொல் மதியேன்மின் - எண்ணற்ற பொய்களைப் பேசி படுகுழிக்கே அழைக்கும் கீழோர்களது பேச்சை நீங்கள் மதிக்கவேண்டா; (பாழ்ங்குழி - நாசக்குழி); (திருமந்திரம் - ஏழாம் தந்திரம் - அசற்குரு நெறி - 10.7.34.5 - "குருடர்க்குக் கோல்காட்டிச் செல்லுங் குருடர் மருளுற்றுப் பாழ்ங்குழி வீழ்வர்முன் பின்அக் குருடரும் வீழ்வர்கள்"); (மின் - ஏவற்பன்மை விகுதி);

அஞ்செழுத்து ஓதி வணங்கில் நற்பதம் நல்கிடும் நம்பன் - திருவைந்தெழுத்தை ஓதி வணங்கும் அடியவர்களுக்கு நற்கதியை அருளும் சிவபெருமான்; (நம்பன் - விரும்பத்தக்கவன் - சிவன் திருநாமம்);

நாவின் தனி அரசர்க்குக் கற்புணை தந்து உயிர் காத்த - ஒப்பற்ற திருநாவுக்கரசருக்குக் கடலில் கல்லையே தெப்பமாக்கி அருளி அவர் உயிரைக் காப்பாற்றிய; (புணை - தெப்பம்);

கற்குடி மேய பிரானே - திருக்கற்குடியில் எழுந்தருளிய பெருமான்;


11)

சொற்சுவை மிக்கு விளங்கும் தூய தமிழ்த்தொடை பாடும்

நற்சுவை தன்னை உணர்ந்த நாவினர் தீவினை தீர்ப்பான்

பொற்சபை நாடகன் நாகம் பூணிறை முப்புரம் செற்ற

கற்சிலை ஏந்திய கையன் கற்குடி மேய பிரானே.


சொற்சுவை மிக்கு விளங்கும் தூய தமிழ்த்தொடை பாடும் நற்சுவை-தன்னை உணர்ந்த நாவினர் தீவினை தீர்ப்பான் - தேவாரம், திருவாசகம் முதலிய தமிழ்ப்பாமாலைகளைப் பாடுகின்ற நல்ல சுவையை உணர்ந்த நாவினை உடையவர்களது தீவினைய்த் தீர்ப்பவன்;

பொற்சபை நாடகன் - பொன்னம்பலத்தில் ஆடும் கூத்தன்;

நாகம் பூண் இறை - நாகாபரணம் அணிந்த இறைவன்;

முப்புரம் செற்ற கற்சிலை ஏந்திய கையன் - மேருமலையை வில்லாகக் கையில் ஏந்தி முப்புரங்களை அழித்தவன்; (செறுதல் - அழித்தல்); (கல் - மலை); (சிலை - வில்);

கற்குடி மேய பிரானே - திருக்கற்குடியில் எழுந்தருளிய பெருமான்;


பிற்குறிப்பு : யாப்புக்குறிப்பு :

அறுசீர் விருத்தம் - தானன தானன தான x2.

  • அரையடியில் சீர்களிடையே வெண்டளை பயிலும்.

  • அடிகளில் 3-ஆம் 4-ஆம் சீர்களிடையே வெண்டளைக் கட்டுப்பாடு இல்லை.

  • தானன என்ற விளச்சீர்கள் வெண்டளைக் கட்டுப்பாட்டை மீறாதபடி தனதன, தான, தனன, என்றெல்லாம் வரலாம். ஒரோவழி மாங்காய்ச்சீரும் வரலாம்.

  • தான என்ற மாச்சீர் தனன என்றும் வரலாம்.

  • அரையடிகள்தோறும் ஈற்றுச்சீர் மாச்சீராகவே அமையும். (அதாவது, 3, 6-ஆம் சீர்கள் மாச்சீர்).

  • அரையடி நேரசையில் தொடங்கினால் 8 எழுத்து; அரையடி நிரையசையில் தொடங்கினால் 9 எழுத்து.


வி. சுப்பிரமணியன்

----------- --------------

No comments:

Post a Comment