Saturday, October 26, 2019

04.77 – கலயநல்லூர் - (திருக்கலயநல்லூர்) ('சாக்கோட்டை')


04.77 – கலயநல்லூர் - (திருக்கலயநல்லூர்) ('சாக்கோட்டை')

2014-08-29
கலயநல்லூர் - (திருக்கலயநல்லூர்) (கும்பகோணம் அருகுள்ள 'சாக்கோட்டை')
----------------------------------
( 12 பாடல்கள் )
(அறுசீர் விருத்தம் - பெரும்பாலும் 'கூவிளம் கூவிளம் தேமா' என்ற அரையடி வாய்பாடு; அரையடியுள் வெண்டளை பயிலும்);
(சம்பந்தர் தேவாரம் - 2.67.1 - "மண்ணுமோர் பாக முடையார் மாலுமோர் பாக முடையார்");
(அப்பர் தேவாரம் - 4.2.1 - "சுண்ணவெண் சந்தனச் சாந்துஞ் சுடர்த்திங்கட் சூளா மணியும்");

1)
சேர்வினை தீர்வழி என்று தேடிவந் துன்னை அடைந்தேன்
ஆர்விடம் தன்னை மிடற்றில் அடைத்தவ னேஅருள் நல்காய்
ஊர்விடை யின்மிசை ஏறி ஊரிடும் உண்பலி கொள்வாய்
கார்வயல் சூழ்ந்தழ காரும் கலயநல் லூர்ப்பெரு மானே.

சேர்வினை - வினைத்தொகை - பல பிறவிகளிற் சேர்த்த வினைகள்;
உன்னை அடைந்தேன் - உன்னைச் சரணடைந்தேன்;
ஆர் விடம்தன்னை - உண்ட விடத்தை; பரவிய நஞ்சை; (ஆர்தல் - உண்ணுதல்; பரவுதல்);
மிடற்றில் - கண்டத்தில்;
ஊர்விடையின்மிசை ஏறி ஊரிடும் உண்பலி கொள்வாய் - இடபவாகனத்தின்மேல் ஏறிச்சென்று ஊரர் இடும் பிச்சையை ஏற்பவனே; (ஊர்தல் - ஏறிச் செலுத்துதல்); (விடை - இடபம்);
கார்வயல் சூழ்ந்து அழகு ஆரும் கலயநல்லூர்ப் பெருமானே - நீர் நிரம்பிய வயல் சூழ்ந்த அழகிய திருக்கலயநல்லூரில் உறைகின்ற பெருமானே; (கார் - நீர்);

2)
பழவினை தீர்வழி என்று பாடிவந் துன்னை அடைந்தேன்
மழவிடை ஒன்றை நயந்த மன்னவ னேஅருள் நல்காய்
கழலினிற் கண்மலர் இட்ட கரியவற் காழியை ஈந்தாய்
கழனிகள் சூழ்ந்தழ காரும் கலயநல் லூர்ப்பெரு மானே.

பழவினை தீர்வழி என்று பாடிவந்து உன்னை அடைந்தேன் - என் பழவினைகள் தீரும் வழி என்று உன் புகழைப் பாடிவந்து உன்னைச் சரணடைந்தேன்;
மழ விடை ஒன்றை நயந்த மன்னவனே அருள் நல்காய் - ஓர் இளைய எருதினை வாகனமாக விரும்பிய அரசனே, அருள்வாயாக;
கழலினிற் கண்மலர் இட்ட கரியவற்கு ஆழியை ஈந்தாய் - உன் திருவடியில் தன் மலர்க்கண்ணை மலராக இட்டு வழிபட்ட திருமாலுக்குச் சக்கராயுதத்தை அளித்தவனே; (இது திருவீழிமிழலை வரலாறு);
கழனிகள் சூழ்ந்து அழகு ஆரும் கலயநல்லூர்ப் பெருமானே - வயல் சூழ்ந்த அழகிய திருக்கலயநல்லூரில் உறைகின்ற பெருமானே; (கழனி - வயல்);

3)
அரும்பிணி ஆயின தீர அன்பொடு நின்னை அடைந்தேன்
கரும்பினை ஏந்திய வேளைக் காய்ந்தவ னேஅருள் நல்காய்
சுரும்பமர் கொன்றை அரவம் தூமதி சேர்செஞ் சடையாய்
கரும்பொழில் சூழ்ந்தழ காரும் கலயநல் லூர்ப்பெரு மானே.

அரும் பிணி ஆயின தீர அன்பொடு நின்னை அடைந்தேன் - நீக்குதற்கு அரிய பிறவிப்பிணி தீரவேண்டிப் பக்தியோடு உன்னைச் சரணடைந்தேன்;
கரும்பினை ஏந்திய வேளைக் காய்ந்தவனே அருள் நல்காய் - கரும்பை வில்லாக ஏந்திய மன்மதனை எரித்தவனே, அருள்வாயாக; (வேள் - மன்மதன்);
சுரும்பு அமர் கொன்றை அரவம் தூ மதி சேர் செஞ்சடையாய் - வண்டுகள் விரும்பும் கொன்றைமலர், பாம்பு, தூய திங்கள் இவற்றையெல்லாம் செஞ்சடையில் அணிந்தவனே; (அமர்தல் - விரும்புதல்);
கரும் பொழில் சூழ்ந்து அழகு ஆரும் கலயநல்லூர்ப் பெருமானே - அடர்ந்த சோலை சூழ்ந்த அழகிய திருக்கலயநல்லூரில் உறைகின்ற பெருமானே; (கருமை - கறுப்பு; பெருமை; பசுமை);
(சம்பந்தர் தேவாரம் - 2.47.10 - "உரிஞ்சாய வாழ்க்கை ... கருஞ்சோலை சூழ்ந்த கபாலீச் சரத்தான்...");

4)
வந்தடை வல்வினை தீர வண்டமிழ் பாடி அடைந்தேன்
சந்திர னைச்சடை வைத்த சங்கர னேஅருள் நல்காய்
வந்தனை செய்யிமை யோர்கள் மகிழ்வுற முப்புரம் அட்டாய்
கந்த மலர்ப்பொழில் சூழ்ந்த கலயநல் லூர்ப்பெரு மானே.

வண்டமிழ் - வண் தமிழ் - வளப்பமான தமிழ் - தேவாரம் திருவாசகம் முதலியன;
வந்தனை செய் இமையோர்கள் மகிழ்வுற முப்புரம் அட்டாய் - வந்தித்த தேவர்கள் மகிழும்படி முப்புரங்களை அழித்தவனே; (அடுதல் - அழித்தல்);
கந்த மலர்ப்பொழில் - வாசமலர்கள் நிறைந்த சோலை;

5)
ஒளிவிடம் இன்றித் துரத்தும் உறுவினைக் கஞ்சி அடைந்தேன்
அளிவிடம் தன்னை அயின்ற அணிமிடற் றாய்அருள் நல்காய்
தளியென அன்பர் அகத்தில் தங்கிடு வாய்நறை உண்டு
களியளி ஆர்பொழில் சூழ்ந்த கலயநல் லூர்ப்பெரு மானே.

ஒளிவு இடம் இன்றித் துரத்தும் உறுவினைக்கு அஞ்சி அடைந்தேன் - தப்பி ஒளித்துக்கொள்ள எவ்விடமும் இல்லாதபடி என்னைத் துரத்தும் மிக்க தீவினைக்கு அஞ்சி உன்னைச் சரணடைந்தேன்;
அளி விடம் தன்னை அயின்ற அணிமிடற்றாய் அருள் நல்காய் - அள்ளி நஞ்சை உண்ட அழகிய நீலகண்டத்தை உடையவனே, அருள்வாயாக; (அளி விடம்தன்னை - விடத்தை அள்ளி; "அள்ளி" என்பது எதுகைநோக்கி இடைக்குறையாக அளி என்று வந்தது; அள்ளுதல் - கையால் முகத்தல்; "அளிவிடம்" என்பதை வினைத்தொகையாகக் கொண்டு, "கடல் அளித்த நஞ்சை" என்றும் பொருள்கொள்ளல் ஆம்); (அயில்தல் - உண்ணுதல்);
தளி என அன்பர் அகத்தில் தங்கிடுவாய் - அன்பர் நெஞ்சே கோயிலாகக் கொண்டவனே; (தளி - கோயில்);
நறை உண்டு களி அளி ஆர் பொழில் சூழ்ந்த கலயநல்லூர்ப் பெருமானே - தேனை உண்டு களிக்கின்ற வண்டுகள் ஒலிக்கின்ற சோலை சூழ்ந்த திருக்கலயநல்லூரில் உறைகின்ற பெருமானே;
(நறை - தேன்); (அளி - வண்டு); (ஆர்த்தல் - ஒலித்தல்);

6)
தீவினை ஆயின தீரச் செந்தமிழ் பாடி அடைந்தேன்
சேவினை ஊர்திந யந்த செஞ்சடை யாய்அருள் நல்காய்
நாவினில் நாமம தோதும் நற்றவர்க் காநமற் செற்றாய்
காவிடை வண்டறை கின்ற கலயநல் லூர்ப்பெரு மானே.

சேவினை ஊர்தி நயந்த செஞ்சடையாய் - இடபத்தை வாகனமாக விரும்பிய, செஞ்சடையினனே; (சே - இடபம்);
நாவினில் நாமமதோதும் - நாவினால் திருப்பெயறை ஓதும்; ('ஆல்' என்னாமல் 'இல்' என்றது உருபுமயக்கம் ); (அப்பர் தேவாரம் - 6.62.9 - "எண்ணாரும் புகழானே உன்னை யெம்மான் என்றென்றே நாவினில்எப் பொழுதும் உன்னி" - உன்னை என் தலைவன் என்று நாவினால் எப்பொழுதும் கூறி மனத்தால் நினைத்து);
நற்றவர்க்கா நமற் செற்றாய் - நல்ல தவமுடைய மார்க்கண்டேயருக்காகக் காலனை அழித்தவனே;
(நமற் செற்றாய் - நமனைச் செற்றாய்); (செறுதல் - அழித்தல்);
(இலக்கணக் குறிப்பு: பொருள் மயங்காதிருக்கும் பொருட்டுச் செய்யுளில் இரண்டாம் வேற்றுமைத் தொகையில் நிலைமொழி உயர்திணையாயின் வலி மிகுவதுண்டு. அதுபோல், முதற்சொல்லின் கடைசியில் 'ன்' இருக்கின் அது 'ற்' என்று திரியவும் செய்யும்);
காவிடை வண்டு அறைகின்ற - சோலையில் வண்டுகள் ஒலிக்கின்ற;

7)
மாமலை போலுள பாவம் மாய்வுற உன்னை அடைந்தேன்
கோமள வல்லியை வாமம் கொண்டவ னேஅருள் நல்காய்
தூமதி யத்தினை நாகம் சுற்றிடச் செஞ்சடை வைத்தாய்
காமரு சோலைகள் சூழ்ந்த கலயநல் லூர்ப்பெரு மானே.

மா மலைபோல் உள பாவம் மாய்வு உற உன்னை அடைந்தேன் - பெரிய மலைபோல் உள்ள தீவினை அழியவேண்டி உன்னைச் சரணடைந்தேன்;
கோமளவல்லியை வாமம் கொண்டவனே அருள் நல்காய் - மென்கொடி போன்ற உமையை இடப்பக்கம் பாகமாகக் கொண்டவனே, அருள்வாயாக; (கோமளம் - மென்மை; அழகு; இளமை); (வல்லி - கொடி);
தூ மதியத்தினை நாகம் சுற்றிடச் செஞ்சடை வைத்தாய் - தூய திங்களைப் பாம்பு சுற்றிக்கொள்ளும்படி அவற்றைச் சிவந்த சடையில் அணிந்தவனே;
காமரு சோலைகள் சூழ்ந்த கலயநல்லூர்ப் பெருமானே - அழகிய சோலை சூழ்ந்த திருக்கலயநல்லூரில் உறைகின்ற பெருமானே; (காமரு - அழகிய);

8)
நெடிய வினைத்தொடர் நீங்க நின்கழல் போற்றி அடைந்தேன்
முடியினிற் கங்கையைத் தாங்கும் முக்கண னேஅருள் நல்காய்
கொடிய அரக்கனும் பாடிக் கும்பிடக் கண்டு மகிழ்ந்தாய்
கடிமலர் ஆர்பொழில் சூழ்ந்த கலயநல் லூர்ப்பெரு மானே.

கொடிய அரக்கனும் பாடிக் கும்பிடக் கண்டு மகிழ்ந்தாய் - இராவணனை நசுக்கிப் பின் அவன் அழுது இசைபாடி வழிபடக் கண்டு இரங்கி அருளியவனே;
கடி மலர் ஆர் பொழில் - வாச மலர்கள் நிறைந்த சோலை;

9)
பண்ணிய வல்வினை தீரப் பைந்தமிழ் பாடி அடைந்தேன்
தண்ணில வைச்சடை மீது தாங்கிறை யேஅருள் நல்காய்
மண்ணகழ் மாலொடு வேதன் வாழ்த்திடு மாறுயர் சோதீ
கண்ணிறை பூமலி சோலைக் கலயநல் லூர்ப்பெரு மானே.

பைந்தமிழ் - பசிய தமிழ் - தேவாரம் திருவாசகம் முதலியன; (பைம்மை - பசுமை; பசுமை - குளிர்ச்சி; அழகு;.... );
தண் நிலவைச் சடைமீது தாங்கு இறையே அருள் நல்காய் - குளிர்ந்த திங்களைச் சடையின்மேல் தாங்கிய இறைவனே, அருள்வாயாக;
மண் அகழ் மாலொடு வேதன் வாழ்த்திடுமாறு உயர் சோதீ - மண்ணை அகழ்ந்த திருமாலும் பிரமனும் போற்றும்படி ஓங்கிய சோதியே; (வேதன் - பிரமன்); (சோதீ - சோதியே);
கள் நிறை பூ மலி சோலைக் கலயநல்லூர்ப் பெருமானே - தேன் நிறைந்த பூக்கள் மிக்க சோலை சூழ்ந்த திருக்கலயநல்லூரில் உறைகின்ற பெருமானே; (கண்ணிறை - கள் நிறை); (மலிதல் - மிகுதல்);

10)
அவிவழி கட்கழைக் கின்ற அறிவிலர் சொற்களை நீங்கும்
புவியினில் பெற்றஇவ் வாழ்வின் பொருளென அஞ்செழுத் தோதிச்
செவியினிற் சீரினைக் கேட்கும் சிந்தையர்க் கின்பம் அளிப்பான்
கவினுறு சோலைகள் சூழ்ந்த கலயநல் லூர்ப்பெரு மானே.

அவி வழிகட்கு அழைக்கின்ற அறிவிலர் சொற்களை நீங்கும் - அழிகின்ற மார்க்கங்களுக்கு வாரும் என்று அழைக்கின்ற அறிவிலிகளது பேச்சை மதிக்கவேண்ட; (அவிதல் - அழிதல்); (அவித்தல் - கெடுத்தல்); (நீங்கும் - நீங்குங்கள்);
புவியினில் பெற்ற இவ் வாழ்வின் பொருள் என அஞ்செழுத்து ஓதிச் - மனிதப்பிறவியின் பயன் என்று திருவைந்தெழுத்தை ஓதி; (பொருள் - பயன்);
செவியினிற் சீரினைக் கேட்கும் சிந்தையர்க்கு இன்பம் அளிப்பான் - காதால் சிவனது திருப்புகழைக் கேட்கும் விருப்பம் உடையவர்களுக்கு இன்பத்தை அளிப்பவன்; (செவியினில் - செவியினால் - உருபு மயக்கம்);
கவினுறு - அழகிய;

11)
சிலந்தியின் தொண்டினைக் கண்டு செகந்தனை ஆள்நிலை தந்தான்
சலந்தரி செஞ்சடை ஈசன் தரைமிசை ஆழியைக் கீறிச்
சலந்தரன் தன்னை அழித்த சதுரினன் பூதங்கள் தம்மைக்
கலந்தவன் நங்கையொர் பங்கன் கலயநல் லூர்ப்பெரு மானே.

* அடி-1 - திருவானைக்கா வரலாறு - சிலந்தியைக் கோச்செங்கட்சோழனாகப் பிறப்பித்தது;
* அடி-2, 3 - சலந்தராசுரனை அழித்த வரலாறு;

சிலந்தியின் தொண்டினைக் கண்டு செகந்தனை ஆள் நிலை தந்தான் - திருவானைக்காவில் சிலந்தி செய்த திருத்தொண்டைக் கண்டு மகிழ்ந்து அச்சிலந்தியை உலகை ஆளும் கோச்செங்கட்சோழ அரசனாகப் பிறப்பித்தவன்; (செகம் - உலகம்);
சலம் தரி செஞ்சடை ஈசன் - கங்கையைச் சிவந்த சடையில் தரித்த ஈசன்;
தரைமிசை ஆழியைக் கீறிச் சலந்தரன் தன்னை அழித்த சதுரினன் - நிலத்தில் ஒரு வட்டத்தை வரைந்து அதனைக்கொண்டு சலந்தராசுரனை அழித்த வல்லவன்; (ஆழி - சக்கரம்); (சதுர் - சாமர்த்தியம்; ஆற்றல்; (சதுர்+இன்+அன் = சதுரினன் = சதுரன் = சமர்த்தன்);
பூதங்கள் தம்மைக் கலந்தவன் - ஐம்பூதங்களாகிக் கலந்து நின்றவன்; பூதகணங்களொடு இருப்பவன்; (திருவாசகம் - 8.31.10 - "பூதங்கள் ஐந்தாகிப் புலனாகிப் பொருளாகிப் பேதங்கள் அனைத்துமாய்"); (அப்பர் தேவாரம் - 6.1.1 - "அரியானை ... கனலைக் காற்றைக் கனைகடலைக் குலவரையைக் கலந்து நின்ற பெரியானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே");
நங்கை ஒர் பங்கன் - உமை ஒரு பங்கன்; (ஒர் - ஓர் என்பதன் குறுக்கல் விகாரம்);
கலயநல்லூர்ப் பெருமானே - திருக்கலயநல்லூரில் உறைகின்ற பெருமான்;

12)
நெய்தழு வுந்திரி சூலன் நீர்தழு வுஞ்சடை அண்ணல்
மைதழு வும்மணி கண்டன் மான்மறி ஏந்திய கையன்
பொய்தழு வாமனத் தோடு புதுமலர் தூவிநின் றேத்திக்
கைதொழு வார்துயர் தீர்க்கும் கலயநல் லூர்ப்பெரு மானே.

நெய் தழுவும் திரிசூலன் - நெய் பூசப்பெற்ற திரிசூலத்தை ஏந்தியவன்; (தழுவுதல் - சூழ்தல்; பூசுதல்; பொருந்துதல்); (சம்பந்தர் தேவாரம் - 1.106.4 - "நெய்யணி மூவிலை வேல்..." - ஆயுதங்கள் துருப்பிடியாவாறு நெய் பூசிவைத்தல் மரபு);
நீர் தழுவும் சடை அண்ணல் - சடையில் கங்கையைத் தாங்கிய தலைவன்;
மை தழுவும் மணிகண்டன் - கரிய மணி திகழும் கண்டத்தை உடையவன்; (மை - கறுப்பு );
மான்மறி ஏந்திய கையன் - கையில் மான்கன்றை ஏந்தியவன்;
பொய் தழுவா மனத்தோடு புதுமலர் தூவிநின்று ஏத்திக் கைதொழுவார் துயர் தீர்க்கும் - வஞ்சம் அற்ற மனத்தர் ஆகிப் புதிய பூக்களைத் தூவி வாழ்த்திக் கைகூப்பி வணங்கும் பக்தர்களது துயரைத் தீர்ப்பவன்;
கலயநல்லூர்ப் பெருமானே - திருக்கலயநல்லூரில் உறைகின்ற பெருமான்;

அன்பொடு,
வி. சுப்பிரமணியன்

பிற்குறிப்பு :

 1) யாப்புக் குறிப்பு :

  • அறுசீர் விருத்தம் - பெரும்பாலும் "கூவிளம் கூவிளம் தேமா" என்ற அரையடி வாய்பாடு;

  • அரையடியுள் வெண்டளை பயிலும்;

  • 3-ஆம் சீர் 4-ஆம் சீர் இடையே வெண்டளை இருக்கவேண்டியது இல்லை.

  • அரையடியின் ஈற்றுச் சீர் (3,6-ஆம் சீர்கள்) மாச்சீராகவே அமையும்.

  • விளச்சீர் வரும் இடத்தில் (1,2, 4,5-ஆம் சீர்கள்) ஒரோவழி மாங்காய்ச்சீர் வரக்கூடும்.

  • விளச்சீர் வரும் இடத்தில் (1,2, 4,5-ஆம் சீர்கள்) மாச்சீர் வரலாம். அப்படி அவ்விடத்தில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையசையில் தொடங்கும்.

  • அரையடி நேரசையில் தொடங்கினால் 8 எழுத்து; அரையடி நிரையசையில் தொடங்கினால் 9 எழுத்து.


2) உதாரணம்:

சம்பந்தர் தேவாரம் - 2.67.1 -

மண்ணுமோர் பாக முடையார் மாலுமோர் பாக முடையார்

விண்ணுமோர் பாக முடையார் வேத முடைய விமலர்

கண்ணுமோர் பாக முடையார் கங்கை சடையிற் கரந்தார்

பெண்ணுமோர் பாக முடையார் பெரும்புலி யூர்பிரி யாரே


3) கலயநல்லூர் - திருக்கலயநல்லூர் - இக்காலத்தில் 'சாக்கோட்டை' என்ற பெயரில் வழங்குகின்றது. இத்தலம் கும்பகோணம் அருகே உள்ளது.
கலயநல்லூர் ('சாக்கோட்டை') - அமிர்தகடேஸ்வரர் கோயில் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=379
திருக்கலயநல்லூர் - தேவாரம் தளத்தில்: http://www.thevaaram.org/thirumurai_1/koil_view.php?koil_idField=76
----------- --------------

No comments:

Post a Comment