Saturday, November 23, 2019

04.78 – மூவலூர்


04.78மூவலூர்

2014-09-13
மூவலூர் (மயிலாடுதுறையை அடுத்து உள்ள தலம்)
----------------------------------
(அறுசீர் விருத்தம் - 'விளம் விளம் விளம் விளம் மா தேமா' என்ற வாய்பாடு)

(சம்பந்தர் தேவாரம் - 3.91.1 - "கோங்கமே குரவமே கொழுமலர்ப் புன்னையே கொகுடிமுல்லை");
(சம்பந்தர் தேவாரம் - 2.79.1 - "பவனமாய்ச் சோடையாய் நாவெழாப் பஞ்சுதோய்ச் சட்ட வுண்டு");

1)
மகிழ்வென நாடொறும் வஞ்சவைம் புலன்களின் வழியில் ஏகி
அகழ்குழி விழுந்திடர் அடைவது தீர்ந்திட அடையென் நெஞ்சே
புகழ்மிகு திருப்பெயர் புகல்பவர் வழித்துணை புனலி னோடு
முகிழ்மதி சூடிய முக்கணன் மேவிய மூவ லூரே.

மகிழ்வு என நாள்தொறும் வஞ்ச ஐம்புலன்களின் வழியில் ஏகி - இன்பம் என்று எண்ணித் தினமும் வஞ்சமுடைய ஐம்புலன்களின் வழியிலேயே சென்று;
அகழ்குழி விழுந்து இடர் அடைவது தீர்ந்திட அடையென் நெஞ்சே - அகழ்ந்த குழியில் விழுந்து அல்லல் அடைவது நீங்கிட, என் நெஞ்சமே (மூவலூரை) அடைவாயாக;
புகழ்மிகு திருப்பெயர் புகல்பவர் வழித்துணை - புகழ்மிக்க திருநாமத்தைச் சொல்பவர்க்கு வழித்துணை ஆனவன்;
புனலினோடு முகிழ்மதி சூடிய முக்கணன் மேவிய மூவலூரே - கங்கையோடு இளநிலாவைச் சூடிய முக்கண்ணன் எழுந்தருளியிருக்கும் மூவலூரை;

அகழ்தல் - தோண்டுதல்;
முகிழ்த்தல் - அரும்புதல்; தோன்றுதல்;

* மூவலூரில் ஈசன் திருநாமம் - மார்க்கசகாயேஸ்வரர்;

2)
தளைவினை தருதுயர் தானழி வெய்திடச் சாரென் நெஞ்சே
வெளைவிடை ஊர்தியன் வெம்புலித் தோலினன் மேரு வில்லி
வளையணி மாதிடம் மகிழ்பரன் கூவிளம் வன்னி மத்தம்
முளைமதி சூடிய முக்கணன் மேவிய மூவ லூரே.

தளைவினை - பந்தித்த வினைகள்;
சார்தல் - அடைதல்;
வெளைவிடை - வெள்ளைவிடை;
வெம்புலித் தோலினன் - கொடிய புலியின் தோலை அணிந்தவன்;
மேரு வில்லி - மேருமலையை வில்லாக ஏந்தியவன்;
வளை அணி மாது இடம் மகிழ் பரன் - வளையலை அணியும் உமையை இடப்பக்கம் விரும்பிய பரமன்;
கூவிளம் - வில்வம்;

3)
இப்படி இகல்வினை எப்படி நீங்குமென் றெண்ணு நெஞ்சே
செப்பிடு வேன்வழி சென்றடி போற்றிடாய் சேவ தேறும்
ஒப்பிலன் வெங்கரி உரியினைப் போர்த்தவன் உரம லிந்த
முப்புரம் எய்தவன் முக்கணன் மேவிய மூவ லூரே.

இகல்வினை - பகைக்கின்ற / பொருதுகின்ற வினைகள்;
சேஅது ஏறும் ஒப்பிலன் - இடபவாகனத்தை உடைய ஒப்பற்றவன்;
வெங்கரி உரியினைப் போர்த்தவன் - கொடிய யானையின் தோலைப் போர்த்தவன்;
உரம் மலிந்த முப்புரம் எய்தவன் - வலிய முப்புரங்களை ஓர் அம்பினை ஏவி அழித்தவன்;

4)
வந்திடர் செய்திடு வல்வினை ஆயின மாய வேண்டில்
செந்தமிழ் மாலைகள் செப்பிய நாவொடு சேரென் நெஞ்சே
வெந்தவெண் பொடியணி மேனியன் வேணியன் மேரு வில்லால்
முந்தரண் மூன்றெரி முக்கணன் மேவிய மூவ லூரே.

செந்தமிழ் மலைகள் - செம்மை பொருந்திய தமிழான தேவாரப் பதிகங்கள் ;
வேணியன் - சடையினன்;
முந்து அரண் மூன்று எரி - முன்பு முப்புரங்களை எரித்த;

5)
மரணமும் பிறவியும் வருநிலை மாய்ந்திட வாழ்த்து நெஞ்சே
பிரமனின் தலையினில் பிச்சையை ஏற்றுழல் பித்தன் அத்தன்
சரணமென் றடிதொழும் தன்னடி யார்க்கரண் சாம வேதன்
முரணெயில் மூன்றெரி முக்கணன் மேவிய மூவ லூரே.

மரணமும் பிறவியும் வரும் நிலை மாய்ந்திட, வாழ்த்து நெஞ்சே - இறப்பும் பிறப்பும் தொடர்ந்து வரும் நிலையானது அழிய, மனமே, நீ வாழ்த்துவாயாக;
பிரமனின் தலையினில் பிச்சையை ஏற்று உழல் பித்தன், அத்தன் - பிரமனது மண்டையோட்டில் பிச்சை ஏற்றுத் திரியும் பேரருளாளன், நம் தந்தை;
சரணம் என்று அடிதொழும் தன் அடியார்க்கு அரண், சாம வேதன் - திருவடியில் சரண்புகுந்த அடியவர்களுக்குக் காவல் ஆனவன், சாமவேதத்தைப் பாடியவன் (சாமகானப் பிரியன்);
முரண் எயில் மூன்று எரி முக்கணன் மேவிய மூவலூரே - பகைத்த முப்புரங்களையும் எரித்தவன், நெற்றிக்கண்ணன் உறைகின்ற மூவலூரை;

6)
காவலிங் காரெனக் கவல்வது நீங்கிடக் கருது நெஞ்சே
சேவலங் கொடியுடைச் சேந்தனைப் பெற்றவன் செருந்தி கொக்கின்
தூவலும் சூடிய தூயவன் இமையவர் துயர மாற
மூவரண் எய்தவன் முக்கணன் மேவிய மூவ லூரே.

காவல் இங்கு ஆர் எனக் கவல்வது நீங்கிடக் கருது நெஞ்சே - இங்கே நமக்குப் பாதுகாவல் யார் என்று கவலைப்படுவது ஒழிய, மனமே, நீ எண்ணுவாயாக;
சேவல் அம் கொடியுடைச் சேந்தனைப் பெற்றவன் - அழகிய சேவற்கொடியை உடைய முருகனுக்குத் தந்தை;;
செருந்தி கொக்கின் தூவலும் சூடிய தூயவன் - செருந்தி மலரையும் கொக்கிறகையும் முடிமேல் சூடிய தூயன்; (செருந்தி - ஒரு மலரின் பெயர்); (தூவல் - இறகு); (சம்பந்தர் தேவாரம் - 1.24.6 - "கொங்கு செருந்தி கொன்றை மலர்கூடக் கங்கை புனைந்த சடையார் காழியார்"); (அப்பர் தேவாரம் - 5.55.4 - "கொக்கின் தூவலுங் கூவிளங் கண்ணியும்" - கொக்கின் வடிவமாய் வந்த அசுரனை அழித்து அவன் இறகைச் சூடியவன் இறைவன்);
இமையவர் துயரம் மாற மூ அரண் எய்தவன் - தேவர்களது துன்பம் தீர முப்புரங்களையும் ஓரம்பால் எய்தவன்; (மாறுதல் - நீங்குதல்; இல்லையாதல்); (அரண் - கோட்டை);
முக்கணன் மேவிய மூவலூரே - நெற்றிக்கண்ணன் உறைகின்ற மூவலூரை;

7)
படிமிசைப் பல்லிடர் படுவது நீங்கிடப் பணியென் நெஞ்சே
அடிதொழு வானவர்க் கருளிய அங்கணன் அண்ட வாணன்
கொடியிடை மாதொரு கூறினன் குளிர்மதி கொன்றை யோடு
முடிமிசைக் கங்கையன் முக்கணன் மேவிய மூவ லூரே.

படிமிசைப் பல்லிடர் படுவது நீங்கிடப் பணி என் நெஞ்சே - பூமியில் பல துன்பங்களை அனுபவிப்பது ஒழிய, என் மனமே, நீ தொழுவாயாக;
அடிதொழு வானவர்க்கு அருளிய அங்கணன் - வழிபட்ட தேவர்களுக்கு அருள்செய்த அருட்கண் உடையவன்;
அண்ட வாணன் - அண்ட முழுதும் வாழ்நன் (வாழ்பவன்). வாணன் மரூஉமொழி; (சம்பந்தர் தேவாரம் - 2.7.10 - "...திரு வாஞ்சியத் தண்ட வாணனடி கைதொழு வார்க்கில்லை யல்லலே");
கொடி இடை மாது ஒரு கூறினன் - கொடி போன்ற இடையை உடைய உமையை ஒரு கூறாக உடையவன்;
குளிர்மதி கொன்றையோடு முடிமிசைக் கங்கையன் - திருமுடிமேல் குளிர்ச்சி பொருந்திய சந்திரனையும் கொன்றைமலரையும் கங்கையையும் சூடியவன்;
முக்கணன் மேவிய மூவலூரே - நெற்றிக்கண்ணன் உறைகின்ற மூவலூரை;

8)
துன்னிய வினையவை தொலைவுற வேண்டிடில் துதிசெய் நெஞ்சே
தென்னிலங் கைக்கிறை சென்னிபத் தடர்வுசெய் தேவ தேவன்
பன்னரும் சீரினன் பாய்புலித் தோலினன் பாவ நாசன்
முன்னொடு பின்னவன் முக்கணன் மேவிய மூவ லூரே.

துன்னிய வினையவை தொலைவுற வேண்டிடில் துதிசெய் நெஞ்சே - நம்மைப் பொருந்திய வினைகள் எல்லாம் அழியவேண்டுமென்று நீ விரும்பினால், மனமே, துதிப்பாயாக; (துன்னுதல் - பொருந்துதல்; அடைதல்; செறிதல்); (வேண்டுதல் - விரும்புதல்);
தென் இலங்கைக்கு இறை சென்னி பத்து அடர்வுசெய் தேவதேவன் - அழகிய இலங்கைக்கு அரசனான இராவணனது பத்துத் தலைகளையும் நசுக்கிய தேவாதிதேவன்;
பன்னரும் சீரினன் - பேசுவதற்கு அரிய புகழை உடையவன்;
பாய்புலித் தோலினன் - பாயும் புலியின் தோலை அணிந்தவன்;
பாவ நாசன் - பாவங்களை அழிப்பவன்;
முன்னொடு பின்னவன் - ஆதியும் அந்தமும் ஆயவன்;
முக்கணன் மேவிய மூவலூரே - நெற்றிக்கண்ணன் உறைகின்ற மூவலூரை;

9)
வெம்மலை போல்வினை விலகியின் புற்றிட விரும்பு வாயேல்
கொய்ம்மலர் செந்தமிழ் கொண்டடி இணைதொழக் குறுகு நெஞ்சே
செம்மலர் மேலயன் திரைமிசைத் துயிலரி தேடு சோதி
மும்மலம் அற்றவன் முக்கணன் மேவிய மூவ லூரே.

வெம் மலைபோல் வினை விலகி இன்புற்றிட விரும்புவாயேல் - கொடிய, மலைபோல் உள்ள வினைகள் நீங்கி இன்பம் பெற விரும்பினால்; (வெம்மை - கடுமை);
கொய்ம்மலர் செந்தமிழ் கொண்டு அடி இணை தொழக் குறுகு நெஞ்சே - பறித்த பூக்களாலும் செந்தமிழான தேவாரப் பாமாலைகளாலும் இரு திருவடிகளை வழிபட, நெஞ்சே, அடைவாயாக; (குறுகுதல் - அணுகுதல்);
செம்மலர் மேலயன் திரைமிசைத் துயில் அரி தேடு சோதி - தாமரை மலர்மேல் உறையும் பிரமனும் கடல்மேல் துயிலும் திருமாலும் தேடிய தழற்பிழம்பு ;
மும்மலம் அற்றவன் - தூயவன்;
முக்கணன் மேவிய மூவலூரே - நெற்றிக்கண்ணன் உறைகின்ற மூவலூரை;

10)
கிறித்தவம் செய்பவர் கேப்பையில் நெய்யெனல் கேட்க வேண்டா
பறித்தநன் மலர்களைப் பத்தர்கள் இட்டடி பரவும் ஊராம்
எறித்திடு பிறையினன் இமையவர் தேரினில் ஏறி அச்சை
முறித்தெயில் படநகு முக்கணன் மேவிய மூவ லூரே.

கிறித்தவம் - ("கிறி + தவம்" / "கிறித்து + அவம்");
கிறித்தவம் செய்பவர்கள் - 1. பொய்த்தவம் செய்பவர்கள்; (கிறி - பொய்); 2. வஞ்சித்துக் கேடு செய்பவர்கள் ; (கிறித்தல் - வஞ்சித்தல்); (அவம் - கேடு);
(சம்பந்தர் தேவாரம் - 2.23.10 - "புத்தர் பலரோ டமண்பொய்த் தவர்கள் ஒத்தவ் வுரைசொல்...");
(அப்பர் தேவாரம் - 6.67.10 - "...பொய்யர்களைப் பொய்செய்து போது போக்கிக் கிறிப்பானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக் கேடிலியை நாடுமவர் கேடி லாரே");
கேப்பையில் நெய் எனல் - கேழ்வரகில் நெய் ஒழுகுகின்றது என்று சொல்வதை;
கேட்க வேண்டா - அப்பேச்சைப் பொருளாகக் கொள்ளாதீர்கள்;
பறித்த நன் மலர்களைப் பத்தர்கள் இட்டு அடி பரவும் ஊர் ஆம் - புதுமலர்களைத் தூவிய அடியவர்கள் போற்றுகின்ற ஊர் ஆவது; (பரவுதல் - துதித்தல்);
எறித்திடு பிறையினன் - ஒளிவீசும் பிறைச்சந்திரனை அணிந்தவன்; (எறித்தல் - ஒளிவீசுதல்); (அப்பர் தேவாரம் - 4.22.1 - "செஞ்சடைக் கற்றை முற்றத் திளநிலா வெறிக்குஞ் சென்னி");
இமையவர் தேரினில் ஏறி அச்சை முறித்து எயில் பட நகு - தேவர்கள் செய்த தேரில் ( / தேவர்களே பாகங்களாக அமைந்த தேரில்) ஏறி, அதன் அச்சை முறித்து, முப்புரங்களும் அழியும்படி சிரித்த; (எயில் - கோட்டை); (படுதல் - அழிதல்); (நகுதல் - சிரித்தல்);
முக்கணன் மேவிய மூவலூரே - நெற்றிக்கண்ணன் உறைகின்ற மூவலூர்;
"அப்பெருமானைத் தொழுது உய்க" என்பது குறிப்பு ;

11)
நாவினில் நாடொறும் நற்பெயர் தாங்கினார் நலிவ றுக்கும்
காவலன் கணைதொடு காமனைக் காய்ந்தவன் கடல்நஞ் சுண்டும்
சாவிலன் தண்மதிச் சடையினன் அந்தகன் தனைய ழித்த
மூவிலை வேலினன் முக்கணன் மேவிடம் மூவ லூரே.

நாவினில் நாடொறும் நற்பெயர் தாங்கினார் நலிவு அறுக்கும் காவலன் - தினமும் ஈசன் நாமத்தைச் சொல்லும் பக்தர்களது துன்பத்தைத் தீர்த்துக் காப்பவன்; (நலிவு - துன்பம்); (அறுத்தல் - இல்லாமற் செய்தல்);
கணைதொடு காமனைக் காய்ந்தவன் - மலர்க்கணை தொடுத்த மன்மதனைச் சாம்பலாக்கியவன்;
கடல்நஞ்சு உண்டும் சாவு இலன் - ஆலகால விடத்தை உண்டும் இறவாதவன்;
தண்மதிச் சடையினன் - சடையில் குளிர்ந்த சந்திரனைச் சூடியவன்;
அந்தகன்தனை அழித்த மூவிலை வேலினன் - அந்தகாசுரனைச் சூலத்தால் குத்தி அழித்தவன்; (மூவிலை வேல் - திரிசூலம்);
முக்கணன் மேவிடம் மூவலூரே - நெற்றிக்கண்ணனான அப்பெருமான் உறைகின்ற இடம் மூவலூர்;. "அத்தலத்தைச் சென்றடைந்து தொழுது உய்க" என்பது குறிப்பு ;

அன்பொடு,
வி. சுப்பிரமணியன்

பிற்குறிப்புகள் :
1) மூவலூர் - மார்க்கசகாயேஸ்வரர் கோயில் : http://www.shaivam.org/siddhanta/sp/spt_v_moovalur.htm

2) இத்தலத்தில் (மூவலூரில்) சம்பந்தர் பதிகம் பாடியுள்ளார். ஆனால் அப்பதிகம் கிடைத்திலது. (பெரியபுராணத்தில் சம்பந்தர் புராணத்தில் 437-ஆம் பாடல் காண்க: "மூவ லூருறை முதல்வரைப் பரவிய மொழியால்...");
----------- --------------

No comments:

Post a Comment