Sunday, October 6, 2019

P.246 - வேலூர் - அமரே புரிபுலன்கள்

2014-08-23

P.246 - வேலூர்

(வேலூர்க் கோட்டையில் உள்ள ஜலகண்டேசுவரர் கோயில்)

------------------------

(அறுசீர் விருத்தம் - மா காய் மா காய் மா தேமா - வாய்பாடு)

(சம்பந்தர் தேவாரம் - 2.72.1 - "பந்தார் விரன்மடவாள்")


1)
அமரே புரிபுலன்கள் ஐந்தும் அனுதினமும் அல்லல் ஆக்கி

இமையோர் தலைவாநின் இருதாள் தொழல்ஒட்டா என்செய் வேன்நான்

கமையே உருஆனாய் கரும்பார் மொழிமடவாள் கணவா காவாய்

விமலா மதில்புடைசூழ் வேலூர் இடமாக விரும்பி னாயே.


அமரே புரி- புலன்கள் ஐந்தும் அனுதினமும் அல்லல் ஆக்கி - ஓயாமல் போர்செய்யும் ஐம்புலன்கலும் தினந்தோறும் துன்பம் தந்து; (அமர் - போர்);

இமையோர் தலைவா, நின் இருதாள் தொழல் ஒட்டா - தேவர் தலைவனே, உன் இரு-திருவடிகளைப் பொருந்த விடமாட்டா; (ஒட்டுதல் - சார்தல்; சம்மதித்தல்); (சம்பந்தர் தேவாரம் 1.50.7 - "காயந்தன்னுள் ஐவர்நின்று ஒன்றலொட்டார்");

என் செய்வேன் நான் - நான் என்ன செய்வேன்?;

கமையே உரு ஆனாய் - பொறுமையின் வடிவம் ஆனவனே; (கமை - க்ஷமை - பொறுமை);

கரும்பு ஆர் மொழி மடவாள் கணவா காவாய் - கரும்பு போல் இனிய மொழி பேசும் உமைக்குக் கணவனே, காத்தருள்வாயாக; (ஆர்தல் - ஒத்தல்);

விமலா - தூயனே;

மதில் புடைசூழ் வேலூர் இடமாக விரும்பினாயே - மதிலால் சூழப்பட்ட வேலூர் ஜலகண்டேசுவரர் கோயிலில் விரும்பி எழுந்தருளியவனே; (விரும்பினாய் - விரும்பியவனே);


2)

படையாய்ப் புலனைந்தும் பரிவில் சமர்செய்துன் பாதம் போற்றத்

தடையா கிடக்கண்டாய் தமியேன் தனக்கிரங்காய் தழலை ஏந்தும்

உடையாய் ஒலிகங்கை உலவும் சடையானே ஒப்பில் லாத

விடையாய் மதில்புடைசூழ் வேலூர் இடமாக விரும்பி னாயே.


பதம் பிரித்து:

படையாய்ப் புலன் ஐந்தும் பரிவு இல் சமர் செய்து உன் பாதம் போற்றத்

தடை ஆகிடக் கண்டாய்; தமியேன்தனக்கு இரங்காய்; தழலை ஏந்தும்

உடையாய்; ஒலி-கங்கை உலவும் சடையானே; ஒப்பு இல்லாத

விடையாய்; மதில் புடை-சூழ்-வேலூர் இடமாக விரும்பினாயே.


பரிவு இல் சமர் செய்து - இரக்கம் இன்றிப் போர் புரிந்து;

தமியேன் தனக்கு - தனித்து இருக்கும் எனக்கு;

தழலை ஏந்தும் உடையாய் - கையில் தீயை ஏந்திய சுவாமியே;

ஒலி-கங்கை - ஒலிக்கின்ற கங்கை; முழங்குகின்ற கங்கை; ( சம்பந்தர் தேவாரம்- 2.18.4 - "ஒலிநீர் சடையிற் கரந்தாய்");


3)

சேர்ந்தா ரிடர்செய்யும் செவிமூக் குடல்வாய்கண் செருவி னாலே

சோர்ந்தேன் சுடுநீற்றாய் துணையார் உனையன்றித் தொழுவா னோர்க்கா

ஆர்ந்தாய் அருநஞ்சை அளித்தாய் அமுதத்தை அண்டங் கட்கோர்

வேந்தே மதில்புடைசூழ் வேலூர் இடமாக விரும்பி னாயே.


பதம் பிரித்து:

சேர்ந்து ஆர்-இடர் செய்யும் செவி மூக்கு உடல் வாய் கண் செருவினாலே

சோர்ந்தேன்; சுடு-நீற்றாய்; துணை யார் உனை அன்றித்; தொழு-வானோர்க்கா

ஆர்ந்தாய் அரு-நஞ்சை; அளித்தாய் அமுதத்தை; அண்டங்கட்கு ஓர்

வேந்தே; மதில் புடை-சூழ்-வேலூர் இடம் ஆக விரும்பினாயே.


ஆர்-இடர் - பொறுத்தற்கு அரிய துன்பம்;

செரு - போர்;

ஆர்ந்தாய் அரு-நஞ்சை - கொடிய விடத்தை உண்டவனே; (ஆர்தல் - உண்ணுதல்);

அண்டங்கட்கு ஓர் வேந்தே - விசுவநாதனே; விசுவேசுவரனே;


4)

போரே புரிகின்ற புலன்கள் இவையைந்தும் போற்றல் ஒட்டா

நீரார் சடையானே நீயென் நிலைதன்னை நினைந்தி ரங்காய்

ஏரார் மதிசூடி எரியார் கணையேந்தி எயில்மூன் றட்ட

வீரா மதில்புடைசூழ் வேலூர் இடமாக விரும்பி னாயே.


பதம் பிரித்து:

போரே புரிகின்ற புலன்கள் இவை ஐந்தும் போற்றல் ஒட்டா;

நீர் ஆர் சடையானே; நீ என் நிலைதன்னை நினைந்து இரங்காய்;

ஏர் ஆர் மதிசூடி, எரி ஆர் கணை ஏந்தி, எயில் மூன்று அட்ட

வீரா; மதில் புடை-சூழ்-வேலூர் இடமாக விரும்பினாயே.


நீர் ஆர் சடையானே - கங்கைச்-சடையனே;

ஏர் ஆர் மதி சூடி - அழகு மிகுந்த திங்களை அணிந்து;

எரி ஆர் கணை ஏந்தி - தீப் பொருந்திய அம்பைக் கையில் எடுத்து;

எயில் மூன்று அட்ட வீரா - முப்புரங்கள் எரித்த வீரனே;


5)

கூடார் உளர்ஐவர் கும்பிட் டுனையோதக் குறுக்கே நிற்பார்

வாடா முலையாளை வாமம் மகிழ்கின்ற மைந்த காவாய்

ஓடேந் தியசெல்வா ஒருகா னிடைஏனம் ஒன்றின் பின்செல்

வேடா மதில்புடைசூழ் வேலூர் இடமாக விரும்பி னாயே.


கூடார் உளர் ஐவர் - ஐந்து பகைவர்கள் உள்ளனர்; (கூடார் - பகைவர்);

கும்பிட்டுனைதக் குறுக்கே நிற்பார் - உன்னை வழிபட விடாமல் என்னைத் தடுப்பார்கள்;

வாடா-முலையாளை வாமம் மகிழ்கின்ற மைந்த, காவாய் - தளராத ஸ்தனங்களை உடைய உமாதேவியை இடப்பாகமாக விரும்பிய அழகனே, என்னைக் காத்தருள்வாயாக; (வாமம் - இடப்பக்கம்);

டு ஏந்திய செல்வா - (பிச்சையேற்கக்) கையில் பிரமனது மண்டையோட்டை ஏந்திய செல்வனே;

ஒரு கானிடை ஏனம் ஒன்றின்பின் செல் வேடா - (அர்ஜுனனுக்குப் பாசுபதாஸ்திரம் அளிப்பதற்காக) ஒரு காட்டில் ஒரு பன்றியைத் துரத்திக்கொண்டு சென்ற வேடனே;

மதில் புடை சூழ் வேலூர் இடமாக விரும்பினாயே - மதிலால் சூழப்பட்ட வேலூர் ஜலகண்டேசுவரர் கோயிலில் விரும்பி எழுந்தருளியவனே; (விரும்பினாய் - விரும்பியவனே);


6)

ஆட்டா அலைக்கின்ற ஐவர் தளைநீக்கி அருளாய் அண்ணா

பாட்டால் பணிந்தேத்து பத்தர் தமைக்கொல்லப் பாய்ந்தான் மாளத்

தாட்டா மரையோச்சு தாதாய் தடவெற்பன் தனயை தன்னை

வேட்டாய் மதில்புடைசூழ் வேலூர் இடமாக விரும்பி னாயே.


ஆட்டா அலைக்கின்ற - ஆட்டி அலைக்கின்ற; மிகவும் வருத்துகின்ற; (ஆட்டுதல் - ஆடச்செய்தல்; அலைத்தல்/வருத்துதல்); (ஆட்டா - ஆட்டி; செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம் செய்து என்று பொருள்படும்); (ஆட்டா அலைக்கின்ற - ஒருபொருட்பன்மொழி);

ஐவர்-தளை நீக்கி அருளாய் - ஐம்புலன்களின் கட்டை அறுத்து அருள்வாயாக;

அண்ணா - அண்ணலே; (அண்ணா - அண்ணல் என்பதன் விளியான அண்ணால் என்பது, அண்ணா என மருவிற்று; தேவாரத்தில் பல பாடல்களில் காணலாம்);

பாட்டால் பணிந்து ஏத்து பத்தர்தமைக் கொல்லப் பாய்ந்தான் மாளத் தாட்டாமரைச்சு தாதாய் - பாடி வழிபாடு செய்த மார்க்கண்டேயரைக் கொல்ல விரைந்துவந்த காலனே மாளும்படி திருவடித்தாமரையை உயர்த்திய தந்தையே; (தாட்டாமரை - தாள்+தாமரை - பாதத்தாமரை); (ஓச்சுதல் - உயர்த்துதல்); (தாதை - தந்தை; தாதாய் - தந்தையே);

தடவெற்பன் தனயை-தன்னை வேட்டாய் - இமவான்-மகளை மணம்புரிந்தவனே; (வேட்டல் - விரும்புதல்; மணம்புரிதல்);

மதில் புடை சூழ் வேலூர் இடமாக விரும்பினாயே - மதிலால் சூழப்பட்ட வேலூர் ஜலகண்டேசுவரர் கோயிலில் விரும்பி எழுந்தருளியவனே; (விரும்பினாய் - விரும்பியவனே);


7)

அரித்தா ரிடர்செய்யும் ஐவர் தமைவெல்லும் ஆற்றல் இல்லேன்

தரித்தாய் மதிதன்னைத் தமியேன் தனக்கிரங்காய் தழலம் பொன்றால்

எரித்தாய் எயில்மூன்றை ஏரார் வடவால்கீழ் எழுதா வேதம்

விரித்தாய் மதில்புடைசூழ் வேலூர் இடமாக விரும்பி னாயே.


பதம் பிரித்து:

அரித்து ஆர்-இடர் செய்யும் ஐவர்தமை வெல்லும் ஆற்றல் இல்லேன்;

தரித்தாய் மதிதன்னைத்; தமியேன்தனக்கு இரங்காய்; தழல்-அம்பு ஒன்றால்

எரித்தாய் எயில் மூன்றை; ஏர் ஆர் வடவால்கீழ் எழுதா வேதம்

விரித்தாய்; மதில் புடை-சூழ்-வேலூர் இடமாக விரும்பினாயே.


அரித்தல் - வருத்துதல்; இமிசித்தல்;

ஆர்-இடர் - பொறுத்தற்கு அரிய துன்பம்;

தரித்தல் - தாங்குதல்;

தழல்-அம்பு ஒன்றால் எரித்தாய் எயில் மூன்றை - தீக்கணை ஒன்றால் முப்புரங்களை எரித்தவனே;

ஏர் ஆர் வடவால்கீழ் எழுதா வேதம் விரித்தாய் - அழகிய கல்லாலமரத்தின்கீழ், எழுதாமறை நாலின் பொருளை உபதேசித்தவனே; (சம்பந்தர் தேவாரம் - 1.132.1 - "ஏரிசையும் வடவாலின் கீழிருந்தங் கீரிருவர்க் கிரங்கிநின்று நேரிய நான்மறைப்பொருளை உரைத்தொளிசேர் நெறியளித்தோன்"); (அபிராமி அந்தாதி - 10 - "எழுதாமறையின் ஒன்றும் அரும்பொருளே");


8)

விடங்கார் முகில்போல மிளிரும் மணிகண்டா வெற்பி டந்த

அடங்கா அரக்கன்கை ஐந்நான் கடர்த்துப்பின் அருள்கள் செய்தாய்

நடங்கா னிடையாடும் நம்பா அரவொன்றை நாணா வீக்கும்

விடங்கா மதில்புடைசூழ் வேலூர் இடமாக விரும்பி னாயே.


விடம் கார்-முகில் போல மிளிரும் மணிகண்டா - நஞ்சு கரிய மேகம் போல மிளிர்கின்ற நீலமணி பொருந்திய கண்டம் உடையவனே;

வெற்பு இடந்த அடங்கா அரக்கன் கை ஐந்நான்கு அடர்த்துப் பின் அருள்கள் செய்தாய் - கயிலையைப் பெயர்த்த அடங்காத இராவணனின் இருபது கைகளையும் நசுக்கிப் பின் (இசைகேட்டு) வரங்கள் தந்தவனே; (சம்பந்தர் தேவாரம் - 2.104.8 - "எடுத்தலும் முடி தோள் கர(ம்) நெரிந்திற இறையவன் விரலூன்ற");

நடம் கானிடை ஆடும் நம்பா - சுடுகாட்டில் நடம்செய்யும் நம்பனே; (நம்பன் - சிவன் திருநாமம் - விரும்பத் தக்கவன்);

அரவு ஒன்றை நாணா வீக்கும் விடங்கா - ஒரு பாம்பை அரைநாணாகக் கட்டும் அழகனே; (வீக்குதல் - கட்டுதல்); (விடங்கன் - அழகன்); (அப்பர் தேவாரம் - 6.57.3 - "கையார் தழலார் விடங்கா போற்றி");

மதில் புடை சூழ் வேலூர் இடமாக விரும்பினாயே - மதிலால் சூழப்பட்ட வேலூர் ஜலகண்டேசுவரர் கோயிலில் விரும்பி எழுந்தருளியவனே; (விரும்பினாய் - விரும்பியவனே);

* இப்பதிகத்தின் மற்றப் பாடல்களில் உள்ள வேண்டுகோளை இப்பாடலிலும் இயைத்துக்கொள்க;


9)

மாலால் அயனோடு மாலும் மிகநேடி வாடிக் காண

ஏலா தடிபோற்ற எரியாய் எழுந்தோனே ஏரார் மார்பில்

நூலா மடமான்போல் நோக்கி ஒருகூறா நுனைகள் மூன்றார்

வேலா மதில்புடைசூழ் வேலூர் இடமாக விரும்பி னாயே.


பதம் பிரித்து:

மாலால் அயனோடு மாலும் மிக நேடி வாடிக் காண

ஏலாது, அடிபோற்ற எரியாய் எழுந்தோனே; ஏர் ஆர் மார்பில்

நூலா; மடமான் போல் நோக்கி ஒரு கூறா; நுனைகள் மூன்று ஆர்

வேலா; மதில் புடைசூழ் வேலூர் இடமாக விரும்பினாயே.


மாலால் - மயக்கத்தால்; அறியாமையால்;

நேடி - தேடி;

ஏலாது - இயலாது - இயலாமல்;

ஏர் ஆர் மார்பில் நூலா - அழகிய மார்பில் முப்புரிநூல் அணிந்தவனே; (ஏர் - அழகு);

மடமான் போல் நோக்கி ஒரு கூறா - இளமான் போல் நோக்கு உடைய உமையை ஒரு கூறாக உடையவனே;

நுனைகள் மூன்று ஆர் வேலா - மூன்று முனைகளை உடைய சூலத்தை உடையவனே; (நுனை - முனை);

* இப்பதிகத்தின் மற்றப் பாடல்களில் உள்ள வேண்டுகோளை இப்பாடலிலும் இயைத்துக்கொள்க;


10)

பழித்தே பலநாளும் பாழுக் குழல்கின்ற பதர்கள் சொல்லை

ஒழித்தே எழுத்தஞ்சை ஓதும் அடியார்கள் உவக்கப் பாவம்

அழித்தே உயர்வானம் ஆள அருள்செய்வாய் அனங்கன் வேவ

விழித்தாய் மதில்புடைசூழ் வேலூர் இடமாக விரும்பி னாயே.


பதம் பிரித்து:

பழித்தே பலநாளும் பாழுக்கு உழல்கின்ற பதர்கள் சொல்லை

ஒழித்தே எழுத்தஞ்சை ஓதும் அடியார்கள் உவக்கப், பாவம்

அழித்தே, உயர்-வானம் ஆள அருள்செய்வாய்; அனங்கன் வேவ

விழித்தாய்; மதில் புடைசூழ் வேலூர் இடமாக விரும்பினாயே.


பதர்கள் - வீணர்கள்; அறிவற்றவர்கள்;

உவத்தல் - மகிழ்தல்;

அனங்கன் வேவ விழித்தாய் - மன்மதன் சாம்பலாகும்படி நெற்றிக்கண்ணால் பார்த்தவனே; (அப்பர் தேவாரம் - 4.80.8 - "செற்றங் கநங்கனைத் தீவிழித்தான் தில்லையம்பலவன்");

* இப்பதிகத்தின் மற்றப் பாடல்களில் உள்ள வேண்டுகோளை இப்பாடலிலும் இயைத்துக்கொள்க;


11)

சொல்லார் தமிழ்பாடித் தொழுவார் வினைதீர்த்துச் சுகம ளிக்கும்

நல்லாய் நளிர்திங்கள் நாகம் நதிகொன்றை நயந்த ணிந்தாய்

பொல்லார் புரமூன்றும் பொடியாய் விழுமாறு போர்செய் வெற்பு

வில்லாய் மதில்புடைசூழ் வேலூர் இடமாக விரும்பி னாயே.


சொல் ஆர் தமிழ் பாடி - சொல்மாலையாகிய தேவாரம் திருவாசகம் முதலியவற்றைப் பாடி;

சொல்ர் தமிழ் தொழுவார் வினை தீர்த்துச் சுகம் அளிக்கும் நல்லாய் - பல்வகையான இனிய அரிய தமிழ்ச்சொற்களால் அமைந்த திருப்பதிகங்கள் பாடி வணங்கும் பக்தர்களது வினை தீர்த்து இன்பம் அளிக்கும் நல்லவனே; (அப்பர் தேவாரம் - 6.38.6 - "பெற்றிருந்த தாயவளின் நல்லாய் நீயே");

நளிர்-திங்கள் நாகம் நதி கொன்றை நயந்து அணிந்தாய் - குளிர்மதியையும், பாம்பையும், கங்கையையும், கொன்றைமலரையும் விரும்பி அணிந்தவனே;

பொல்லார் புரம் மூன்றும் பொடியாய் விழுமாறு போர்செய் வெற்பு-வில்லாய் - பொல்லா அசுரர்களின் முப்புரங்களும் சாம்பலாகி விழும்படி போர்செய்த, மேருமலையை வில்லாக ஏந்தியவனே;

மதில் புடை சூழ் வேலூர் இடமாக விரும்பினாயே - மதிலால் சூழப்பட்ட வேலூர் ஜலகண்டேசுவரர் கோயிலில் விரும்பி எழுந்தருளியவனே; (விரும்பினாய் - விரும்பியவனே);

* இப்பதிகத்தின் மற்றப் பாடல்களில் உள்ள வேண்டுகோளை இப்பாடலிலும் இயைத்துக்கொள்க;


பிற்குறிப்புகள் :

* பாடல்கள் 1 - 7 : ஐம்புலன்களை வெல்ல அருள்வேண்டியது வெளிப்படை;

பாடல்கள் 8-11 : வெளிப்படையாக வேண்டுகோள் எதுவும் இன்றி இறைவனைப் போற்றிய பாடல்கள்;


யாப்புக் குறிப்பு :

அறுசீர் விருத்தம் - மா காய் மா காய் மா தேமா - என்ற வாய்பாடு.

இதனில் 2-ஆம், 4-ஆம் சீர்கள் புளிமாங்காய் / கருவிளங்காய்.

இது - காய் காய் காய் காய் மா தேமா - என்ற அறுசீர் விருத்த அமைப்பை ஒட்டியது. ஆனால், அதனில் காய்ச்சீர் வரும் இடங்களுள், 1-ஆம், 3-ஆம் சீர்களில் பெரும்பாலும் மாச்சீர்கள் அமைய வருவது. அவ்வாய்பாட்டில் காய்ச்சீர் வரும் இடத்தில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையசையில் தொடங்கும். அப்படி அமைந்தது இப்பதிகம்.

உதாரணம்-1: சம்பந்தர் தேவாரம் - 2.72.1 -

"பந்தார் விரன்மடவாள் பாகமா நாகம்பூண் டேறதேறி"

உதாரணம்-2: சம்பந்தர் தேவாரம் - 1.130.1 -

"புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி யறிவழிந்திட் டைம்மே லுந்தி"


வி. சுப்பிரமணியன்

-------------- --------------

No comments:

Post a Comment