Friday, September 27, 2019

04.73 - பிரமபுரம் (சீர்காழி)


04.73 - பிரமபுரம் (சீர்காழி)

2014-08-16
பிரமபுரம் (சீகாழி) (இக்காலத்தில் 'சீர்காழி')
-----------------------
(அறுசீர்ச் சந்தவிருத்தம் - 'தானாதன தானன தானதனா தனதானன தானன தானதனா' என்ற சந்தம்.
எண்சீர்ச் சந்தவிருத்தமாகவும் கருதலாம் - 'தானா தனனா தனனா தனனா தனனா தனனா தனனா தனனா' என்ற சந்தம்);
(திருநாவுக்கரசர் தேவாரம் - 4.1.1 - "கூற்றாயின வாறு விலக்ககிலீர் கொடுமைபல செய்தன நான்அறியேன்");

1)
கட்டுண்டு கலங்கி வருந்தடியேன் .. கவலைத்தொடர் நீங்க அருள்புரியாய்
வெட்டுண்ட நிலாச்சடை வைத்தவனே .. விமலாதிரு வாசகம் என்றஅரும்
மட்டுண்டு மகிழ்ந்த திருச்செவியாய் .. மணிநீர்மலி வைகை நதிக்கரையிற்
பிட்டுண்டு பிரம்படி பெற்றவனே .. பிரமாபுர மேவிய பிஞ்ஞகனே.

கட்டு உண்டு கலங்கி வருந்து அடியேன் கவலைத்தொடர் நீங்க அருள்புரியாய் - பாசப் பிணிப்புற்றுக் கலங்கி வருந்திகின்ற அடியேனுடைய கவலைகள் எல்லாம் நீங்குமாறு அருள்புரிவாயாக; (கட்டு - பந்தம்);
வெட்டு உண்ட நிலாச் சடை வைத்தவனே - பிறைச்சந்திரனைச் சடையில் சூடியவனே;
விமலா, திருவாசகம் என்ற அரும் மட்டு உண்டு மகிழ்ந்த திருச்செவியாய் - விமலனே, திருவாசகம் அரிய தேனைச் செவிமடுத்தவனே; (மட்டு - தேன்);
மணி நீர் மலி வைகை நதிக்கரையில் பிட்டு உண்டு பிரம்படி பெற்றவனே - தெளிந்த நீர் பாயும் வைகை ஆற்றங்கரையில் பிட்டுக்கு மண் சுமந்து பாண்டியனால் பிரம்படி பெற்றவனே;
பிரமாபுரம் மேவிய பிஞ்ஞகனே - பிரமாபுரம் என்ற சீகாழியில் எழுந்தருளியிருக்கும், தலைக்கோலம் அணிந்த சிவபெருமானே. (பிஞ்ஞகன் - தலைக்கோலம் அணிந்தவன்);

குறிப்பு : "பிரமபுரம்" என்ற பெயர், சந்தம்நோக்கிப் "பிரமாபுரம்" என்று நீண்டு வந்தது. (சம்பந்தர் தேவாரம் - 1.1.1 - "தோடுடைய செவியன் ... பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே");

2)
பாதத்துணை யைத்தமிழ் மாலைகளாற் .. பரவிப்பணி யும்தமி யேற்கிரங்கி
வாதைத்தொடர் மாய அருள்புரியாய் .. மலர்தூவி வணங்கிய வானவர்க்கா
ஓதத்தெழு நஞ்சினை உண்டவனே .. ஒளியார்திரு நீறணி மேனியிலே
பேதைக்கொரு பாதி அளித்தவனே .. பிரமாபுர மேவிய பிஞ்ஞகனே.

பாதத்துணை - துணையடி - இரு திருவடிகள்;
வாதை - துன்பம்;
ஓதத்து எழு நஞ்சினை - கடலில் எழுந்த விடத்தை;

3)
பன்னும்தமிழ் மாலைக ளாலுனையே .. பரவிப்பணி வேன்இடர் தீர்த்தருளாய்
மன்னும்புகழ் உள்ள கருங்களனே .. மழவெள்விடை ஊர்திய னேஅரவம்
பின்னும்படி வெண்பிறை வைத்தவனே .. பிறதேவரை மாய்த்திடும் ஊழிகளின்
பின்னும்திகழ் கின்றப ரம்பரனே .. பிரமாபுர மேவிய பிஞ்ஞகனே.

பன்னுதல் - பாடுதல்;
மன்னுதல் - நிலைபெறுதல்;
அரவம் பின்னும்படி வெண்பிறை வைத்தவனே - பாம்பு சுற்றிப் பின்னியிருக்குமாறு சந்திரனைத் திருமுடிமேல் அணிந்தவனே; (பின்னுதல் - தழுவுதல்; entwine;); (அப்பர் தேவாரம் - 4.86.1 - "செற்றுக் களிற்றுரி கொள்கின்ற ஞான்றுசெருவெண் கொம்பொன் றிற்றுக் கிடந்தது போலு மிளம்பிறை பாம்பதனைச் சுற்றிக் கிடந்தது கிம்புரி போல..."); (சுந்தரர் தேவாரம் - 7.91.10 - "ஒற்றி யூரும் அரவும் பிறையும் பற்றி யூரும் பவளச் சடையான்");
பின்னும் - பிறகும்; (After, afterwards);

4)
வாசத்தமிழ் மாலைக ளாலுனையே .. வழிபாடுசெய் என்னிடர் தீர்த்தருளாய்
பூசைக்குரி யாய்இகழ் தக்கனவன் .. புரிவேள்வி அழித்தவ னேமறவா
நேசர்க்கெளி யாய்ஒளி நீற்றினனே .. நிழலார்மழு வாநிக ரின்மையினாற்
பேசற்கரி யாய்வள மார்வயல்சூழ் .. பிரமாபுர மேவிய பிஞ்ஞகனே.

நிழல் ஆர் மழுவா - ஒளி திகழும் மழுவை ஏந்தியவனே; (சம்பந்தர் தேவாரம் - 2.23.8 - "மலையன் றெடுத்த அரக்கன் முடிதோள் தொலையவ் விரலூன் றியதூ மழுவா..."); (அப்பர் தேவாரம் - 6.56.6 - "ஆறேறு சென்னி முடியாய் போற்றி ..... கூறேறு மங்கை மழுவா போற்றி ...");

5)
நச்சித்தமிழ் நாளும் நவிற்றுமெனை .. நலிதீவினை வந்தடை யாதவணம்
பச்சத்தொடு காத்தரு ளாய்பரமா .. பலதேவர்கள் சேர்ந்தமை ஓர்இரதம்
அச்சிற்றிட ஏறி நகைத்தெயில்கள் .. அழல்வாய்விழ வைத்தவ னேமடவார்
பிச்சைக்கய னார்சிரம் ஏந்திறையே .. பிரமாபுர மேவிய பிஞ்ஞகனே.

நச்சுதல் - விரும்புதல்;
நவிற்றுதல் - சொல்லுதல்;
பச்சம் - பக்ஷம் - அன்பு; இரக்கம்; (சம்பந்தர் தேவாரம் - 1.18.2 - "அச்சம்மிலர் பாவம்மிலர் ... நின்றி யூரில் ... பச்சம்முடை யடிகள்திருப் பாதம்பணி வாரே.");
பல தேவர்கள் சேர்ந்து அமை ஓர் இரதம் அச்சு இற்றிட ஏறி - பல தேவர்கள் சேர்ந்து செய்த ஒப்பற்ற தேரினுடைய அச்சு முரியும்படி அத்தேரில் ஏறி;
மடவார் பிச்சைக்கு அயனார் சிரம் ஏந்து இறையே - பெண்கள் இடும் பிச்சையை ஏற்கப் பிரமன் மண்டையோட்டை ஏந்திய இறைவனே;

6)
கள்ளைச்சொரி நாண்மலர் தூவியுனைக் .. கருதித்தொழு தேன்வினை தீர்த்தருளாய்
வெள்ளத்தினை வேணியில் ஏற்றவனே .. விரையார்திரு நீறணி மேனியினாய்
உள்ளத்தினில் உன்னடி உன்னிமகிழ் .. உலவாப்புக ழார்சிறுத் தொண்டரிடம்
பிள்ளைக்கறி கேட்டருள் செய்தவனே .. பிரமாபுர மேவிய பிஞ்ஞகனே.

உன்னுதல் - தியானித்தல்; எண்ணுதல்;
உலவாப் புகழார் - அழியாப்புகழ் உடையவர் / அழியாப்புகழ் பொருந்திய;

7)
சீரார்தமிழ் செப்பி உனைத்தொழுதேன் .. சிவனேபிற வாநிலை தந்தருளாய்
காரார்கடல் நஞ்சினை உண்டவனே .. கழலால்நமன் மாள உதைத்தவனே
வாரார்முலை மங்கையொர் பங்குடையாய் .. மலர்தூவி வணங்கிடும் அன்பர்கள்தம்
பேராவினை தீர்த்திட வல்லவனே .. பிரமாபுர மேவிய பிஞ்ஞகனே.

பேரா வினை - நீங்காத வினை; (பேர்தல் - பிரிதல்; அழிதல்);

8)
தண்ணார்தமிழ் மாலை புனைந்தடியேன் .. தருவேஉனை யேதொழு தேன்அருளாய்
எண்ணாதரு வெற்பை இடந்தவனை .. எழிலார்விரல் ஒன்றினை இட்டடர்த்துப்
பண்ணாரிசை கேட்டருள் செய்தவனே .. படர்புன்சடை யாய்தலை மாலையினாய்
பெண்ணாணென நின்ற பெருந்தகையே .. பிரமாபுர மேவிய பிஞ்ஞகனே.

தரு - கற்பகமரம்;

9)
சுற்றம்துணை என்ற நினைப்பினிலே .. சுழலும்தமி யேன்மயல் தீர்த்தருளாய்
பற்றொன்றில ராகி அடைந்தவர்தம் .. பவநோயை அறுத்திட வல்லவனே
சுற்றும்திகி ரிப்படை யான்பிரமன் .. தொழுதேத்திட ஓங்கிய சோதியனே
பெற்றம்திக ழும்கொடி ஒன்றுடையாய் .. பிரமாபுர மேவிய பிஞ்ஞகனே.

சுழலுதல் - சஞ்சலப்படுதல்;
மயல் - மயக்கம்;
திகிரிப் படை - சக்கராயுதம்;
பெற்றம் - இடபம்;

10)
மெய்த்தேவினை நண்ணகி லாதவர்கள் .. வினைதீர்திரு நீறணி யாக்கலர்கள்
பொய்த்தேஉழல் கின்றவர் சொல்கருதேல் .. புகழும்திரு வும்மிக நல்கிடுவான்
சித்தாசின வெள்விடை ஊர்தியினாய் .. சிவனேசிரம் ஒன்றினில் ஊணிரக்கும்
பித்தாஎன ஏத்தடி யார்களுக்குப் .. பிரமாபுர மேவிய பிஞ்ஞகனே.

பதம் பிரித்து:
மெய்த்-தேவினை நண்ண-கிலாதவர்கள், வினை-தீர் திருநீறு அணியாக் கலர்கள்,
பொய்த்தே உழல்கின்றவர் சொல் கருதேல்; புகழும் திருவும் மிக நல்கிடுவான்,
"சித்தா! சின வெள்விடை ஊர்தியினாய்! சிவனே! சிரம் ஒன்றினில் ஊண் இரக்கும்
பித்தா!" என ஏத்து அடியார்களுக்குப், பிரமாபுரம் மேவிய பிஞ்ஞகனே.

வினை தீர் திருநீறு - பாவங்களைப் போக்குகின்ற திருநீற்றை; (சம்பந்தர் தேவாரம் - 2.66.8 - "பராவண மாவது நீறு பாவ மறுப்பது நீறு");
கலர்கள் - கீழோர்கள்; தீயவர்கள்;
பொய்த்தல் - பொய்யாகப் பேசுதல்; வஞ்சித்தல்;
சொல் கருதேல் - (அவர்கள் சொல்லும்) சொற்களை மதிக்கவேண்டா ; (ஏல் - எதிர்மறை ஏவல் ஒருமை விகுதி);
சித்தா - சித்தனே - (சித்தன் - எல்லாம் வல்லவன். சித்திகளை எல்லாம் உடையவன். சித்தன் - தன் அடியை வழிபடுவோரது சித்தத்தில் இருப்பன். சித்தன் - அறிவுக்கறிவாயிருப்பவன்.)
ஊண் - உணவு;

"சித்தா! சின வெள்விடை ஊர்தியினாய்! சிவனே! சிரம் ஒன்றினில் ஊண் இரக்கும் பித்தா!" என ஏத்து அடியார்களுக்குப், பிரமாபுரம் மேவிய பிஞ்ஞகன் புகழும் திருவும் மிக நல்கிடுவான்.

(திருவாசகம் - திருக்கோத்தும்பி - 8.10.5 -
அத்தேவர் தேவர் அவர்தேவர் என்றிங்ஙன்
பொய்த்தேவு பேசிப் புலம்புகின்ற பூதலத்தே
பத்தேதும் இல்லாதென் பற்றறநான் பற்றிநின்ற
மெய்த்தேவர் தேவற்கே சென்றூதாய் கோத்தும்பீ.)

11)
ஆய்வார்அகம் ஆலய மாமகிழ்வான் .. அலரைங்கணை யான்றனை ஆகமறக்
காய்வான்கழ லேநினை மாணியுயிர் .. கவரற்கடை கூற்றை உதைத்தருள்வான்
தேய்வான்மதி செஞ்சடை ஏற்றியவன் .. சிறுமான்றரி கையினன் நள்ளிருளில்
பேய்வாழிடு கானிடை ஆடுமரன் .. பிரமாபுர மேவிய பிஞ்ஞகனே.


ஆய்வார் அகம் ஆலயமா மகிழ்வான் - ஈசனையே ஆய்ந்து உணரும் ஞானியர்களுடைய மனமே கோயிலாக விரும்பி உறைபவன்; (ஆய்வார் - ஆய்ந்து உணரும் ஞானியர்); (ஆலயமா = ஆலயமாக);
அலர் ஐங்கணையான்தனை ஆகம் அறக் காய்வான் - ஐந்து மலர்க்கணைகளை உடைய மன்மதனை உடலற்றவனாக நெற்றிக்கண்ணால் எரிப்பவன்; (ஆகம் - உடல்);
கழலே நினை மாணி உயிர் கவரற்கு அடை கூற்றை உதைத்து அருள்வான் - திருவடியையே சிந்திக்கும் மார்க்கண்டேயர் உயிரைக் கவர்வதற்காக நெருங்கிய காலனை உதைத்தவன்;
தேய் வான் மதி செஞ்சடை ஏற்றியவன் - தேய்ந்த, வானத்தில் ஊரும், வெண்பிறைச்சந்திரனைச் செஞ்சடைமேல் ஏற்றி வைத்தவன்; (வான்மதி - வான் மதி / வால் மதி); (வான் - வானம்); (வால் - வெண்மை);
சிறுமான் தரி கையினன் - சிறுமானை ஏந்திய கையை உடையவன்;
நள்ளிருளில் பேய் வாழ் இடுகானிடை ஆடும் அரன் - பேய்கள் வாழும் சுடுகாட்டில் நள்ளிருளில் ஆடுகின்ற அரன்;
பிரமாபுரம் மேவிய பிஞ்ஞகனே - அவன், பிரமாபுரம் என்ற சீகாழியில் எழுந்தருளியிருக்கும், தலைக்கோலம் அணிந்த சிவபெருமான்.

அன்பொடு,
வி. சுப்பிரமணியன்

பிற்குறிப்பு :
1) யாப்புக் குறிப்பு:
அறுசீர்ச் சந்தவிருத்தம் - 'தானாதன தானன தானதனா தனதானன தானன தானதனா' என்ற சந்தம்.
எண்சீர்ச் சந்தவிருத்தம் என்றும் கருதலாம் - 'தானா தனனா தனனா தனனா தனனா தனனா தனனா தனனா' என்ற சந்தம்;
இது திருநாவுக்கரசரின் முதற்பதிகமான 'கூற்றாயினவாறு" என்ற பதிகத்தின் அமைப்பை ஒட்டி அமைந்துள்ளது;
பெரியபுராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 70 - "நீற்றால்நிறை வாகிய மேனியுடன் நிறையன்புறு சிந்தையில் நேசமிக");
2) இப்பதிகத்தில் முதல் 9 பாடல்கள் ஈசனை முன்னிலையிலும், கடைசி 2 பாடல்கள் ஈசனைப் படர்க்கையிலும் பாடுவன.

3) பிரமபுரம் - சீகாழியின் 12 பெயர்களுள் ஒன்று. பிரமபுரம் - சீகாழி - சீர்காழி - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=495
பிரமபுரம் - சீகாழி - சீர்காழி - தேவாரம் தளத்தில்: http://www.thevaaram.org/thirumurai_1/koil_view.php?koil_idField=87
----------- --------------


No comments:

Post a Comment