Sunday, June 16, 2019

04.64 – துருத்தி (குத்தாலம்)


04.64துருத்தி (குத்தாலம்)

2014-05-22
துருத்தி (திருத்துருத்தி - இக்கால வழக்கில் 'குத்தாலம்'. இத்தலம் கும்பகோணம் - மயிலாடுதுறை இடையே உள்ளது)
----------------------------------
(வஞ்சித்துறை - 'மா விளம்' என்ற வாய்பாடு)
(சம்பந்தர் தேவாரம் - 1.92.1 - "வாசி தீரவே");

1)
நிழலார் மழுவினர்
பொழிலார் துருத்தியைத்
தொழவல் வினைத்தொடர்
கழலும் திண்ணமே.

நிழல் ஆர் மழுவினர் - ஒளி பொருந்திய மழுவை ஏந்திய சிவபெருமானார் உறைகின்ற; (நிழல் - ஒளி);
பொழில் ஆர் துருத்தியைத் தொழ - சோலை நிறைந்த திருத்துருத்தியைத் தொழுதால்;
வல்வினைத்தொடர் கழலும் திண்ணமே - நம் வலிய வினைத்தொடர் நீங்குவது உறுதி; (கழலுதல் - விலகுதல்);

2)
மங்கை பங்கினர்
தங்கும் துருத்தியை
அங்கை யால்தொழப்
பொங்கும் இன்பமே.

மங்கை பங்கினர் தங்கும் துருத்தியை - உமைபங்கனார் உறைகின்ற திருத்துருத்தியை;
அங்கையால் தொழப் பொங்கும் இன்பமே - கைகூப்பித் தொழுதால் இன்பம் மிகும்;

3)
சிவனார் மேவிய
கவினார் துருத்தியைக்
குவிகை யால்தொழ
அவியும் வினைகளே.

சிவனார் மேவிய கவின் ஆர் துருத்தியைக் - சிவபெருமானார் உறைகின்ற அழகிய திருத்துருத்தியை; (கவின் ஆர் - அழகு பொருந்திய);
குவி கையால் தொழ அவியும் வினைகளே - குவிந்த கைகளால் தொழுதால் வினைகள் அழியும்; (அவிதல் - அழிதல்; வேதல்);

4)
கண்ணார் நுதலினர்
தண்ணார் துருத்தியை
எண்ணா ஏத்திட
நண்ணா நடலையே.

கண் ஆர் நுதலினர் - நெற்றிக்கண்ணர் உறைகின்ற;
தண் ஆர் துருத்தியை - குளிர்ச்சி பொருந்திய திருத்துருத்தியை;
எண்ணா ஏத்திட - எண்ணி ஏத்தினால்; (எண்ணா - செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்);
நண்ணா நடலை - துன்பம் அணுகமாட்டா;

5)
இமையோர் தலைவனார்
உமைகோன் துருத்தியை
அமர்வோ டடைந்திடக்
குமையும் வினைகளே.

இமையோர் தலைவனார் - தேவர்கள் தலைவர்;
உமைகோன் துருத்தியை - உமைமணாளன் உறைகின்ற திருத்துருத்தியை;
அமர்வோடு அடைந்திடக் குமையும் வினைகளே - விரும்பி அடைந்து வழிபட்டால் வினைகள் அழியும்; (அமர்வு - விருப்பம்); (குமைதல் - அழிதல்);

6)
சூலப் படையினர்
சோலைத் துருத்தியைக்
கோலத் தாற்சொல
ஞாலத் தின்பமே.

சூலப் படையினர் சோலைத் துருத்தியைக் - சூலாயுதத்தை ஏந்திய சிவபெருமானார் உறைகின்ற சோலை சூழ்ந்த திருத்துருத்தியை;
கோலத்தால் சொல – பக்திப்பாமாலைகளை அழகுறச் சொல்லி வழிபட்டால்;
ஞாலத்து இன்பமே - இவ்வுலக வாழ்வில் இன்பம் எய்தும்;

7)
நீரார் சடையினர்
ஊராம் துருத்தியை
ஆரா அன்பினால்
ஓர்வார் உய்வரே.

நீர் ஆர் சடையினர் ஊர் ஆம் துருத்தியை - கங்கையைச் சடையில் உடைய சிவபெருமானார் உறைகின்ற திருத்துருத்தியை;
ஆரா அன்பினால் ஓர்வார் உய்வரே - மிக்க பக்தியோடு எண்ணுபவர்கள் உய்வார்கள்; (ஓர்வார் - எண்ணுவார்);

8)
பத்துத் தலைநெரி
அத்தன் துருத்தியைப்
பத்தி செய்திடச்
சித்தம் தெளியுமே.

பத்துத்தலை நெரி அத்தன் துருத்தியைப் -இராவணனுடைய பத்துத்தலைகளை நசுக்கிய நம் தந்தையான சிவபெருமான் உறைகின்ற திருத்துருத்தியை;
பத்தி செய்திடச் சித்தம் தெளியுமே - பக்தியோடு வணங்கினால் தெளிந்த அறிவு கிட்டும்;

9)
கரியான் அயன்தொழும்
எரியான் துருத்தியைப்
பரிவோ டேத்திடப்
பிரிவாம் பிணிகளே.

கரியான் அயன் தொழும் எரியான் துருத்தியைப் - திருமால் பிரமன் இவர்கள் தொழும் சோதி உருவினனான சிவபெருமான் உறைகின்ற திருத்துருத்தியை;
பரிவோடு ஏத்திடப் பிரிவு ஆம் பிணிகளே - அன்போடு துதித்தால் பந்தங்களும் நோய்களும் நீங்கும்; (பரிவு - அன்பு; பக்தி); (பிணிகள் - பந்தங்கள்; நோய்கள்);

10)
நீற்றைப் பூசிடார்
கூற்றைப் பேணிடேல்
ஏற்றன் துருத்தியைப்
போற்ற இன்பமே.

நீற்றைப் பூசிடார் கூற்றைப் பேணிடேல் - திருநீற்றைப் பூசாதவர்கள் சொல்லும் வார்த்தைகளை மதிக்கவேண்டா;
ஏற்றன் துருத்தியைப் போற்ற இன்பமே - இடப வாகனனான சிவபெருமான் உறைகின்ற திருத்துருத்தியைப் போற்றினால் இன்பம் கிட்டும்;

11)
கேழில் சுந்தரர்
தோழன் துருத்தியைச்
சூழ வல்லவர்
வாழ வல்லரே.

கேழ் இல் சுந்தரர் தோழன் துருத்தியைச் - ஒப்பற்ற சுந்தரமூர்த்தி நாயனாருக்குத் தோழனான சிவபெருமான் உறைகின்ற திருத்துருத்தியை; (கேழ் இல் - ஒப்பு இல்லாத); (திருவெம்பாவை - 8.7.8 - “கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ”);
சூழ வல்லவர் வாழ வல்லரே - வலம் செய்து வழிபடுபவர்கள் சிறந்து வாழ்வார்கள்;

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு :
1) திருத்துருத்தி - குத்தாலம் - சொன்னவாறு அறிவார் கோயில் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=213
திருத்துருத்தி - தேவாரம் தளத்தில்: http://www.thevaaram.org/thirumurai_1/koil_view.php?koil_idField=149
----------- --------------

No comments:

Post a Comment