Sunday, June 16, 2019

04.63 – தென்குரங்காடுதுறை ('ஆடுதுறை')


04.63தென்குரங்காடுதுறை ('ஆடுதுறை')


2014-05-22
தென்குரங்காடுதுறை (இக்காலத்தில் 'ஆடுதுறை')
----------------------------------
(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா. )
(சம்பந்தர் தேவாரம் - 2.48.1 - "கண்காட்டு நுதலானுங் கனல்காட்டுங் கையானும்")
(திருநாவுக்கரசர் தேவாரம் - 4.12.1 - "சொன்மாலை பயில்கின்ற குயிலினங்காள் சொல்லீரே");



1)
பிளிறிமிகு சினத்தோடு வந்துபொரு பெருமலைபோற்
களிறுதனை உரித்தவனே கரைசேரக் கனிந்தருளாய்
நளிர்மதியம் திகழ்முடியாய் நச்சரவ நாணுடையாய்
குளிர்புனலார் காவிரித்தென் குரங்காடு துறையரனே.

பிளிறி மிகு சினத்தோடு வந்து - பிளிறிக்கொண்டு மிகுந்த கோபத்தோடு வந்து;
பொரு பெருமலைபோல் களிறுதனை உரித்தவனே - போர்செய்த பெரிய மலை போன்ற யானையை வென்று அதன் தோலை உரித்தவனே; (பொருதல் - போர்செய்தல்);
கரைசேரக் கனிந்து அருளாய் - பிறவிக்கடலைக் கடந்து கரையேற அடியேனுக்கு இரங்கி அருள்வாயாக; (கரை - பிறவிக் கடலின் கரை; முத்தி);
நளிர்மதியம் திகழ் முடியாய் - குளிர்ச்சி பொருந்திய சந்திரன் ஒளிவீச அதனைத் திருமுடிமேல் அணிந்தவனே;
நச்சரவ நாண் உடையாய் - விஷப்பாம்பை அரைநாணாகக் கட்டியவனே;
குளிர் புனல் ஆர் காவிரித் தென் குரங்காடுதுறை அரனே - குளிர்ந்த நீர் நிறைந்த காவிரியின் தென்கரையில் உள்ள குரங்காடுதுறை என்ற தலத்தில் எழுந்தருளிய ஹரனே;
குறிப்பு : 'கரைசேரக் கனிந்து அருளாய்' என்பதைப் பாடலின் ஈற்றில் கொண்டு பொருள்கொள்க.

2)
இடும்பலியை விரும்பிப்பல் இல்லங்கள் சென்றிரப்பாய்
கடும்பரவை நஞ்சுண்டாய் கரைசேரக் கனிந்தருளாய்
உடம்பிலுமை ஒருபாகம் உடையானே உலகத்தின்
கொடும்பசிதீர் காவிரித்தென் குரங்காடு துறையரனே.

இடும் பலியை விரும்பிப் பல் இல்லங்கள் சென்று இரப்பாய் - இடுகின்ற பிச்சையை விரும்பிப் பல வீடுகளுக்குச் சென்று யாசிப்பவனே ; (பலி - பிச்சை);
கடும் பரவை நஞ்சு உண்டாய் - கொடிய கடல்விடத்தை உண்டவனே; (பரவை - கடல்);
கரைசேரக் கனிந்து அருளாய் - பிறவிக்கடலைக் கடந்து கரையேற அடியேனுக்கு இரங்கி அருள்வாயாக;
உடம்பில் உமை ஒரு பாகம் உடையானே - உமையைத் திருமேனியில் ஒரு பாகமாக உடையவனே;
உலகத்தின் கொடும் பசி தீர் - உலகத்தின் பசியைத் தீர்க்கின்ற ;
காவிரித் தென் குரங்காடுதுறை அரனே - காவிரியின் தென்கரையில் உள்ள குரங்காடுதுறை என்ற தலத்தில் எழுந்தருளிய ஹரனே;


3)
புயலாரும் கண்டத்தாய் பொற்சடைமேற் புற்றரவா
கயிலாய மலையானே கரைசேரக் கனிந்தருளாய்
மயிலாரும் மடவாளை வாமத்தில் மகிழ்ந்தவனே
குயிலாலும் பொழில்சூழ்தென் குரங்காடு துறையரனே.

புயல் ஆரும் கண்டத்தாய் - மேகத்தைப் போன்ற கரிய கண்டத்தை உடையவனே; (ஆர்தல் - ஒத்தல்);
பொற்சடைமேல் புற்றரவா - பொன் போன்ற சடையின்மேல் புற்றில் வாழும் இயல்பை உடைய பாம்பை அணிந்தவனே;
கயிலாய மலையானே - கயிலைமலையானே;
கரைசேரக் கனிந்து அருளாய் - பிறவிக்கடலைக் கடந்து கரையேற அடியேனுக்கு இரங்கி அருள்வாயாக;
மயில் ஆரும் மடவாளை வாமத்தில் மகிழ்ந்தவனே - மயில் போன்ற சாயலை உடைய உமையை இடப்பக்கத்தில் பாகமாக விரும்பியவனே; (வாமம் - இடப்பக்கம்);
குயில் ஆலும் பொழில்சூழ் - குயில்கள் ஒலிக்கின்ற சோலை சூழ்ந்த; (ஆலுதல் - ஒலித்தல்);
தென் குரங்காடு துறையரனே - காவிரியின் தென்கரையில் உள்ள அழகிய குரங்காடுதுறை என்ற தலத்தில் எழுந்தருளிய ஹரனே; (தென் - அழகு; தெற்கு);

4)
பெருகுவிடம் கண்டிமையோர் பெருமானோ எனவுண்டு
கருமணியார் கண்டத்தாய் கரைசேரக் கனிந்தருளாய்
உருகடியார் பருகமுதே ஒருபங்கில் உமையுடையாய்
குருகினமார் பொழில்சூழ்தென் குரங்காடு துறையரனே.

பெருகு விடம் கண்டு இமையோர், "பெருமான்! !" என, - பெருகிய ஆலகால விஷத்தைக் கண்டு தேவெர்களெல்லாம், "பெருமானே! ஓலம்!" என்று இறைஞ்ச; (- ஓலம்; அபயம் வேண்டும் குறிப்பு);
உண்டு கரு மணி ஆர் கண்டத்தாய் - அந்த விடத்தை உண்டு கரிய மணி பொருந்தும் கண்டத்தை உடையவனே;
கரைசேரக் கனிந்து அருளாய் - பிறவிக்கடலைக் கடந்து கரையேற அடியேனுக்கு இரங்கி அருள்வாயாக;
உருகு அடியார் பருகு அமுதே - உருகி வழிபடும் பக்தர்கள் உண்ணும் அமுதம் போன்றவனே
(உருகடியார் - வினைத்தொகை - உருகு + அடியார்; இதனை ஒத்த ஒரு பிரயோகம்: "விரும்படியார் = விரும்பு + அடியார்". திருவாசகம் - திருப்பள்ளியெழுச்சி - 9 - "கடலமுதே கரும்பே விரும்படியார் எண்ணகத்தாய்");
ஒரு பங்கில் உமை உடையாய் - உமையை ஒரு பாகமாக உடையவனே;
குருகு இனம் ஆர் பொழில் சூழ் - பறவைகள் ஒலிக்கும் சோலை சூழ்ந்த; (ஆர்த்தல் - ஒலித்தல்);
தென் குரங்காடு துறையரனே - காவிரியின் தென்கரையில் உள்ள அழகிய குரங்காடுதுறை என்ற தலத்தில் எழுந்தருளிய ஹரனே; (தென் - அழகு; தெற்கு);

5)
வண்டறையும் கொன்றையினாய் மன்மதனைக் கண்ணுதலாற்
கண்டுபொடி செய்தவனே கரைசேரக் கனிந்தருளாய்
வெண்டலையைக் கையேந்தி வெள்விடைமேற் பலிதிரிவாய்
கொண்டலடை பொழில்சூழ்தென் குரங்காடு துறையரனே.

வண்டு அறையும் கொன்றையினாய் - வண்டுகள் ஒலிக்கின்ற கொன்றைமலரை அணிந்தவனே; (அறைதல் - ஒலித்தல்);
மன்மதனைக் கண்ணுதலால் கண்டு பொடி செய்தவனே - காமனை நெற்றிக்கண்ணால் பார்த்துச் சாம்பலாக்கியவனே; (கண்ணுதல் - நெற்றிக்கண்); (பொடி - சாம்பல்);
கரைசேரக் கனிந்து அருளாய் - பிறவிக்கடலைக் கடந்து கரையேற அடியேனுக்கு இரங்கி அருள்வாயாக;
வெண்தலையைக் கை ஏந்தி வெள்விடைமேல் பலி திரிவாய் - பிரமனது மண்டையோட்டைக் கயில் ஏந்திப் பிச்சைக்கு உழல்பவனே;
கொண்டல் அடை பொழில்சூழ் - மேகம் அடைகின்ற சோலை சூழ்ந்த; (கொண்டல் - மேகம்);
தென் குரங்காடு துறையரனே - காவிரியின் தென்கரையில் உள்ள அழகிய குரங்காடுதுறை என்ற தலத்தில் எழுந்தருளிய ஹரனே; (தென் - அழகு; தெற்கு);

6)
மூவிலைய வேலுடையாய் மூவாத முக்கண்ணா
காவியங்கண் உமைபங்கா கரைசேரக் கனிந்தருளாய்
மாவிடைமேல் வருவோனே வளர்மதியம் வாளரவம்
கூவிளஞ்சேர் சடையானே குரங்காடு துறையரனே.

மூ இலைய வேல் உடையாய் - மூன்று இலை போன்ற நுனியுடைய சூலத்தை ஏந்தியவனே;
மூவாத முக்கண்ணா - மூப்பில்லாத முக்கண்ணனே;
காவி அம் கண் உமை பங்கா - குவளை மலர் போன்ற அழகிய கண்களையுடைய உமாதேவியை பங்கில் உடையவனே; (காவி - கருங்குவளை);
கரைசேரக் கனிந்து அருளாய் - பிறவிக்கடலைக் கடந்து கரையேற அடியேனுக்கு இரங்கி அருள்வாயாக;
மா விடைமேல் வருவோனே - பெரிய இடபத்தை வாகனமாக உடையவனே
வளர் மதியம் வாள் அரவம் கூவிளம் சேர் சடையானே- பிறைச்சந்திரன், கொடிய பாம்பு, வில்வம் இவற்றையெல்லாம் சடைமேல் அணிந்தவனே; (வாள் - ஒளி; கொடிய); (கூவிளம் - வில்வம்);
குரங்காடுதுறை அரனே - குரங்காடுதுறை என்ற தலத்தில் எழுந்தருளிய ஹரனே;

7)
பம்பரம்போல் சுழன்றாடும் பரம்பரனே பால்நீற்றாய்
கம்பமத கரியுரியாய் கரைசேரக் கனிந்தருளாய்
அம்பவளக் கொடிகூறா அடியிணையை அகத்திருத்திக்
கும்பிடுவார் குறைதீர்க்கும் குரங்காடு துறையரனே.

* பவளக்கொடியம்மை - இத்தலத்து இறைவி நாமம்;

பம்பரம்போல் சுழன்று ஆடும் பரம்பரனே - பம்பரத்தைப் போலச் சுழன்று ஆடுபவனே;
பால் நீற்றாய் - பால் போன்ற திருநீற்றை அணிந்தவனே;
கம்ப மத கரி உரியாய் - அசையும் இயல்பினை உடைய மதயானையின் தோலை அணிந்தவனே;
கரைசேரக் கனிந்து அருளாய் - பிறவிக்கடலைக் கடந்து கரையேற அடியேனுக்கு இரங்கி அருள்வாயாக;
அம் பவளக்கொடி ஒரு கூறா - அழகிய பவளக்கொடி அம்மையை ஒரு கூறாக உடையவனே;
அடியிணையை அகத்து இருத்திக் கும்பிடுவார் குறை தீர்க்கும் - உன் இரு திருவடிகளை உள்ளத்தில் வைத்து வழிபடுபவர்களது குறைகளைத் தீர்க்கின்ற;
குரங்காடுதுறை அரனே - குரங்காடுதுறை என்ற தலத்தில் எழுந்தருளிய ஹரனே;

8)
வலங்கருதிக் கயிலாய மலையசைத்த அரக்கனுளம்
கலங்கவிரல் இட்டவனே கரைசேரக் கனிந்தருளாய்
சலங்கரந்த சடையினனே சங்கரனே மலர்பூத்துக்
குலுங்குகின்ற பொழில்சூழ்தென் குரங்காடு துறையரனே.

வலம் கருதிக் கயிலாய மலை அசைத்த அரக்கன் உளம் கலங்க விரல் இட்டவனே - தன் புஜபலத்தை எண்ணிக் கயிலைமலையைப் பெயர்த்த இராவணனது உள்ளம் கலங்கும்படி திருப்பாத விரலை ஊன்றியவனே; (வலம் - வலிமை);
கரைசேரக் கனிந்து அருளாய் - பிறவிக்கடலைக் கடந்து கரையேற அடியேனுக்கு இரங்கி அருள்வாயாக;
சலம் கரந்த சடையினனே - கங்கையைத் தன்னுள் மறைத்த சடையை உடையவனே;
சங்கரனே - நன்மையைச் செய்பவனே;
மலர் பூத்துக் குலுங்குகின்ற பொழில் சூழ் - மலர்கள் பூத்துத் திகழும் சோலை சூழ்ந்த;
தென் குரங்காடு துறையரனே - காவிரியின் தென்கரையில் உள்ள அழகிய குரங்காடுதுறை என்ற தலத்தில் எழுந்தருளிய ஹரனே; (தென் - அழகு; தெற்கு);

9)
அடியுமுடி அன்றிருவர் அடையாத அழல்வண்ணா
கடியவிடை ஊர்தியினாய் கரைசேரக் கனிந்தருளாய்
அடியவர்பால் வருகூற்றை ஆர்கழலால் உதைத்தவனே
கொடியிடையாள் ஒருகூறா குரங்காடு துறையரனே.

அடியும் முடி அன்று இருவர் அடையாத அழல்வண்ணா - அரியும் பிரமனும் அடிமுடி அடையாதவாறு ஓங்கிய சோதியே;
கடிய விடை ஊர்தியினாய் - விரைந்து செல்லும் இடபத்தை வாகனமாக உடையவனே;
கரைசேரக் கனிந்து அருளாய் - பிறவிக்கடலைக் கடந்து கரையேற அடியேனுக்கு இரங்கி அருள்வாயாக;
அடியவர்பால் வரு கூற்றை ஆர் கழலால் உதைத்தவனே - மார்க்கண்டேயரிடம் வந்த நமனை ஒலிக்கும் கழல் அணிந்த திருவடியால் உதைத்தவனே; (ஆர்த்தல் - அணிதல்; ஒலித்தல்);
கொடியிடையாள் ஒரு கூறா - கொடி போன்ற இடையை உடைய உமையை ஒரு கூறாக உடையவனே;
குரங்காடுதுறை அரனே - குரங்காடுதுறை என்ற தலத்தில் எழுந்தருளிய ஹரனே;

10)
சேராத சிறுநெறியார் தேராத தத்துவனே
காராரும் கண்டத்தாய் கரைசேரக் கனிந்தருளாய்
நீராரும் சடைமீது நிலவணிந்தாய் கையிலொரு
கூராரும் மழுவுடையாய் குரங்காடு துறையரனே.

சேராத சிறுநெறியார் தேராத தத்துவனே - நன்னெறியைச் சேராத புன்னெறியாளர்களால் அறியப்படாத மெய்ப்பொருளே; (தேர்தல் - அறிதல்);
கார் ஆரும் கண்டத்தாய் - கருமை பொருந்திய கண்டத்தை உடையவனே;
கரைசேரக் கனிந்து அருளாய் - பிறவிக்கடலைக் கடந்து கரையேற அடியேனுக்கு இரங்கி அருள்வாயாக;
நீர் ஆரும் சடைமீது நிலவு அணிந்தாய் - கங்கை பொருந்திய சடையின்மேல் சந்திரனை அணிந்தவனே;
கையில் ஒரு கூர் ஆரும் மழு உடையாய் - கையில் கூரிய மழுவாயுதத்தை ஏந்தியவனே;
குரங்காடுதுறை அரனே - குரங்காடுதுறை என்ற தலத்தில் எழுந்தருளிய ஹரனே;

11)
பூத்தொடுத்தும் பாத்தொடுத்தும் பொன்னடியைப் பணிவாரைக்
காத்துநின்று வினைக்கடலைக் கடப்பிக்கும் கருணையினாய்
மூத்தவனே முடிமீது முளைமதியாய் முடிவில்லாக்
கூத்தினனே காவிரித்தென் குரங்காடு துறையரனே.

பூத் தொடுத்தும் பாத் தொடுத்தும் பொன் அடியைப் பணிவாரைக் - பூமாலைகளையும் பாமாலைகளையும் தொடுத்துப் ப்பொன் போன்ற திருவடியை வழிபடும் பக்தர்களைக்;
காத்துநின்று வினைக்கடலைக் கடப்பிக்கும் கருணையினாய் - காத்து அவர்களை வினைக்கடலைக் கடக்கச்செய்து அருள்பவனே; (கடப்பித்தல் - தாண்டச்செய்தல்); (கடத்தல் --> கடப்பித்தல்); (அப்பர் தேவாரம் - 4.27.6 - "... அள்ளலைக் கடப்பித் தாளு மதிகைவீ ரட்ட னாரே");
மூத்தவனே - மிகவும் பழமையானவனே;
முடிமீது முளைமதியாய் - திருமுடிமேல் பிறைச்சந்திரனை அணிந்தவனே;
முடிவு இல்லாக் கூத்தினனே - முடிவின்றித் திருநடம் செய்பவனே;
காவிரித் தென் குரங்காடுதுறை அரனே - காவிரியின் தென்கரையில் உள்ள அழகிய குரங்காடுதுறை என்ற தலத்தில் எழுந்தருளிய ஹரனே; (தென் - அழகு; தெற்கு);

அன்பொடு,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்புகள் :
1) தென்குரங்காடுதுறை ('ஆடுதுறை') - ஆபத்சகாயேஸ்வரர் கோயில் - தினமலர் தளத்தில் : https://temple.dinamalar.com/New.php?id=1046
தேவாரம் ஆர்க் தளத்தில்: http://www.thevaaram.org/thirumurai_1/koil_view.php?koil_idField=100
----------- --------------

No comments:

Post a Comment